நூலகம் -20.2

அவன் மிரட்டலில் அவனை ஒட்டி அமர்ந்தாலும், அந்த மிரட்டலுக்குப் பின்னே உள்ள, அவள் மீதான அன்பையும் அக்கறையும் உணர்ந்தே இருந்தவள், நிமிடங்கள் செல்லச் செல்ல, பெயருக்கு பற்றி இருந்த கணவனின் இடையை, அழுத்தமாக இறுக்கிக் கொண்டு, அவன் முதுகிலும் உரிமையாகவே சாய்ந்து கொண்டாள்.


கூடவே ஆறடி உயரத்தில், அவனுக்கே உரிய பிரத்தியேக வாசத்தோடு, சாலை விதிகளையும் சரியாக கடைபிடித்தபடி, அவ்வப்போது கண்ணாடியூடு அவளைப் பார்த்து, புருவத்தையும் ஏற்றி இறக்கி, மிதமான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தியவனை விட்டு, அவள் விழிகளை விலக்காமலே அமர்ந்திருக்க,


மனைவியின் அந்தப் பார்வையில்,  இதழ் மலர்ந்த புன்னகையோடே, வாகனத்தை விரட்டியவன், ஒரு பிரபலமான உணவு விடுதிக்குத்தான் அவளை அழைத்து வந்து நிறுத்தி இருந்தான்.


மேல்தட்டு மக்கள் பலரும் விரும்பி வரக்கூடிய, கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த அந்த உணவுவிடுதியைக் கண்டதுமே நெஞ்சுக்குள் என்னவோ செய்தது சிற்பிக்கு.


அர்ஜுனை சந்திக்கும் முன், அவள் அப்பாவின் செல்ல மகளாய் இருந்த காலங்களில், மாதத்திற்கு ஒருமுறையாவது மனைவி, மகளை அங்கே அழைத்து வந்து விடுவார் அவளின் அப்பா வேதாச்சலம்.


அழைத்து வருவதோடு நில்லாது, அவளுக்குப் பிடித்த உணவு வகையும் வரவழைத்து, அவரே அவளுக்கு ஊட்டி விட்டு அழகு பார்க்கும் தந்தையின் நினைவிலும், அர்ஜுன் என்ற ஒருவனின் அறிமுகத்தால் அதெல்லாம் கானல் நீராகிப் போன நிதர்சனத்திலும், கண்கள் கலங்க, "ட்ரைனர்" என்று அவனை ஏறிட்டுப் பார்த்தாள் சிற்பி.


அவ்வழைப்பிலே அவள் உணர்வுகளை உணர்ந்தார் போல் சட்டென்று அவள் கரத்தைப் பற்றியவன், "நோ கேர்ள், கொஞ்சம் முன்ன ரொம்பவே கஷ்டப்பட்டு உன் கண்ணீரை நிறுத்தி இருக்கேன். திரும்ப அழுது முகத்தை அசிங்கம் ஆக்காத. என்னால பப்ளிக் நியூசன்ஸ் எல்லாம் பண்ண முடியாது" என்று தீவிரமாக முகத்தை வைத்துச் சொன்னவனின் பேச்சு, முதலில் புரிபடாது விழித்தவள் பின் புரிந்து, "என்னங்க" என்று முகமெல்லாம் சிவந்து, சிணுங்கத் தொடங்கினாள் சிற்பி.


அதை ரசனையாகப் பார்த்துக் கொண்டவனும், "பின்ன என்னடி. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உன்னோட சேர்த்து, உன் மாமியாரையும் சமாளிச்சு, மேடத்தை வெளிய கூட்டி வந்தா, நீ பிளானையே சொதப்பிடுவ போலயே. கிட்டத்தட்ட மேரேஜ் முடிஞ்சு டூ இயர்ஸ் கழிச்சு பொண்டாட்டியோட வெளிய வந்துருக்கேன். என்ன பாத்தா பாவமா இல்லையாடி?" என்று சிறுபிள்ளையாய் குறை படித்தவனைப் பார்த்து அவளின் கவலைகள் எல்லாம் எங்கோ சென்று ஒளிந்து கொள்ள, "என்னங்க, இப்டி எல்லாம் பேசறீங்க?" என்று வாய்விட்டே சிரிக்கத் தொடங்கினாள் சிற்பி.


மனைவியின் அந்த என்னங்கவில் அவள் கரத்தை ஆசையாகப் பற்றிக் கொண்டவன், "சீக்கிரம் எல்லாம் சரியாப் போயிடும்டா. நடந்ததை நினைச்சு ஃபீல் பண்ணாம, ஹாப்பியா இரு!" என்றான் அவள் விழிகளையே ஆழ்ந்து பார்த்து.


அவன் கூறியது போல், அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் எல்லாம் அவளை விட்டுப் போகுமா, என்றெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் ஆடவனின் அந்த வாய்மொழியே அப்போதைக்கு அவளுக்குப் போதுமானதாக இருக்க, "இல்லங்க. இனிமேல் நா அழமாட்டேன்!" என்று அவளும் கணவனின் கண்களைப் பார்த்துச் சொன்னாள் சிற்பி.


அதில் இன்னுமே மகிழ்ச்சியாகி, "தட்ஸ் மை கேர்ள்!" என்று அவள் விரல்களோடு விரல்களை கோர்த்துக் கொண்டவன், அவர்களுக்கென்று பதிவு செய்திருந்த இருக்கையிலும் அவளை கூட்டி வந்து அமர வைத்தான்.


அவர்கள் அமர்ந்த மறு நிமிடமே, "சார் ஆடர் ப்ளீஸ்" என்று கையில் டேபோடு சீருடை அணிந்த சிப்பந்தி ஒருவர் வந்து நிற்க, அவளிடம் கேளாமலே, இருவருக்குமான உணவு வகைகளை எல்லாம் சொல்லியவன், "வேற ஏதும் சொல்லணுமா தேவி?" என்று அவளிடம் கேட்டான்.


தனக்குப் பிடித்தமான உணவு வகைகள் எல்லாமே, தன்னை ஒரு வார்த்தையும் கேளாமலே ஆடர் கொடுத்து இருந்தவனின் செயலில்,
"ம்ஹும்" என்று தலையாட்டியவளின் விழிகள் இரண்டும் ஆச்சர்யமாக விரிந்து கொண்டது.


'அழுதுட்டிருக்க மனைவியை சமாதானம் பண்ண, அவளுக்கு பிடிச்ச ஹொட்டலுக்கு கூட்டி வர்றவரை கூட ஓகே. ஆனா, புட் ஆடர்கூட, அச்சு பிசகாம எனக்கு பிடிச்ச எல்லாம் சொல்லி இருக்காரே! இவருக்கு எப்டி என்னோட பேவரிட் புட் எல்லாம் தெரிஞ்சு இருக்கு? ஒருவேளை யாழிகிட்ட கேட்டு வந்திருப்பாரா? இல்ல அப்பாக்கு போன் பண்ணி கேட்டு இருப்பாரா?' என்றெல்லாம் ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவள்,


"தேவி..." என்று அவன் அவள் முன்னே கையாட்டி அழைக்கவும் தான், "என்னங்க?" என்று அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.


"என்னன்னு நீதான்மா சொல்லணும். நீதான் ரொம்ப நேரமா, என்னையே பார்த்துட்டு இருக்க. என்ன விஷயம்?" என்று கேட்டுச் சிரித்தவனைக்கண்டு,
"இல்ல, இதுவரை நாம தனியா எங்கையும் போனது இல்லை. ஆனா எனக்கு என்ன ஃபுட் பிடிக்கும்னுலாம் தெரிஞ்சி வச்சுருக்கீங்க. அதான் எப்படின்னு?" என்று இழுத்து நிறுத்திய சிற்பி, "யாழி சொன்னாளா?" என்றும் சிறு தயக்கத்தினூடே கேட்க,


இல்லை என்பது போல் இடம் வலமாக தலையை ஆட்டினான் கணவன்.


அதில் குழப்பமாக விழி விரித்தவளைக் கண்டு, "ஆனா ஊன்னா இப்படி கண்ண விரிச்சு, என்ன நியூசன்ஸ் கேஸ்ல மாட்டி விட்டுராதடி" என்று அவள் செவியோரம் கூறியவன், "த்ரீ இயர்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன். நீயும் யாழியும் பஸ்ட் இயர் படிச்சுட்டு இருக்கப்போ, உனக்கு எய்ட்டீன் ஏஜ் தொடங்குது. உன்னோட ஃபாவரிட் ஹொட்டல்ல பர்த்டேக்கு ட்ரீட் வைக்கணும்னு, யாழி என்கிட்ட பணம் கேட்டிருந்தா, நா கார்டாவே கொடுத்ததால, நீங்க சாப்ட ஃபுட், அதுக்கான பில், எல்லாம் எனக்கு மெசேஜா வந்தது. அதை ஞாபகம் வச்சிதான் இப்போ ஆடர் கொடுத்திருக்கேன்."என்று நிறுத்தியவன், "எல்லாம் சரியா கொடுத்திருக்கேனா?" என்றும் கேட்க,


"த்ரீ இயர்ஸ் முன்ன சும்மா ஒரு மெசேஜ்ல பார்த்த விஷயம் எப்படிங்க இவ்ளோ நாளா உங்களுக்கு மறக்காம இருக்கு?" என்று பதிலுக்கு கேட்டாள் மனைவி.


இரவும் பகலும் விழுந்து விழுந்து படிக்கும் கல்லூரிப் பாடங்கள் கூட, அவளுக்கெல்லாம் மறந்து விடுகிறதே!


அதில் சிறு புன்னகையை உதிர்த்தவனும், "நம்ம வாழ்க்கைல ஒருசிலர் இருப்பாங்க சிற்பி. அவங்க சம்பந்தபட்ட விஷயங்கள் எல்லாம் நமக்கு எவ்ளோ வருஷம் ஆனாலும் மறக்காது. அதுல நீ ரொம்பவே முக்கியமானவ!" என்று மனதில் இருப்பதை மனைவியிடம் கொட்டினான் கணவன்.


வருடங்கள் பல உயிருக்கு உயிராய் காதலித்து, பல தடைகளையும் மீறி, மணம் புரிந்து, ஈறுடல் ஒருயிராய், இனிமையான தாம்பத்திய வாழ்வு வாழும் கணவன் கூட, தன் மனைவியிடம் இப்படி ஒரு வார்த்தையை கூறுவானா?
தன் மனைவிக்காக இத்தனை மெனக்கெடல்கள் செய்வானா? என்று தெரியவில்லை அவளுக்கு.


'ஆனால் இவனானால், தன் பெற்றோரிடம் கூட தன்னை விட்டுக் கொடுக்க மறுக்கின்றான். எச்சூழலிலும் உனக்காக நான் நிற்பேன் என்கின்றான். என் முகம் சற்று சுணங்கினாலும், அதற்கு மிரட்டலாகவேணும் அன்பு செலுத்தி, என்னை என்னென்னவோ செய்து கொண்டிருக்கின்றானே?' என்று அவனையே வைத்த கண் வாங்காது பார்த்தவள், "அப்போ, அப்போ, என்ன உங்களுக்கு பிடிக்குமா ட்ரைனர்?" என்று உள்ளே போன குரலில் கேட்டாள் சிற்பி.


அதைக்கேட்டு, "ம்ம்ம்ம் ரொம்ப" என்று சிரித்தவனும், "வேதா சார் பொண்ணுனு சின்ன பிள்ளைலயே உன்ன பிடிக்கும் கேர்ள். நீ காலேஜ் சேர்ந்த அப்றம், என்னப்போலவே, தமிழ் மொழிமேல நீ காட்டுற ஆர்வம் பார்த்து, ஒரு மாணவியாவும் ரொம்ப பிடிச்சுது. ஆஃப்டர் மேரேஜ் என் மனைவியாவும்" என்று நிறுத்தி அவள் இதழ்களையே ஆழ்ந்து பார்த்தவன், "என் மனைவியாவும் உன்னோட பரிமாணங்கள் எல்லாம் இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்குது பொண்ணே" என்றான் ஒரு மாதிரியான குரலில்.


அவன் பார்வை கூறிய செய்தியிலும், அவன் குரலில் இருந்த கிறக்கத்திலும், கன்னங்கள் இரண்டும் சிவப்பேறிப் போக, "அய்யோ ஹொட்டல்ல வச்சி என்ன இப்டி எல்லாம் பேசறீங்க?" என்று மெலிதாக சிணுங்கியவள், தலை குனிந்து தன் வெட்கத்தையும் மறைக்க முயன்றாள்.


மனைவியின் அந்த சிணுங்கலை வெகுவாக ரசித்தவனும், "ஐ ந்நோ கேர்ள். இது ஹொட்டல்னு தெரிஞ்சிதால தான் வெறும் பேச்சோட நிறுத்தி இருக்கேன்" என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.


அதைக்கேட்டு, 'அய்யோ, இல்லன்னா என்ன பண்ணி இருப்பாங்கலாம்?' என்று அவனைப் பார்த்தவளுக்கு, வீட்டில் நடந்தவை எல்லாம் ஞாபகம் வந்து, அவள் நெஞ்சமதை தடதடக்கச் செய்ய, அச்சமயம் சரியாக, அவர்கள் ஆடர் செய்திருந்த உணவு வகைகளும் வந்து பெண்ணவளை காப்பாற்றி விட்டது.


அதில் அவன் கவனம் உணவில் திரும்ப, அவளுக்கு பிடித்தமான உணவு வகைகளை எல்லாம் பரிமாறி முடித்தவன், "ம்ம்ம் சாப்பிடு கேர்ள்!" என்று ஒரு தட்டை அவள் புறம் நகர்த்தி வைத்தான்.


ஆனால் அவன் பார்வையில் இருந்தும், பேச்சுக்களில் இருந்தும் இன்னுமே வெளிவந்து இராதவள், உணவுத் தட்டையும் கவனியாது
"எத எத சாப்பிடணும்?" என்று திக்கித் திணறினாள் சிற்பி.


அவள் திணறலைக் கண்டு இதழ்களுக்குள் சிரித்தபடியே சிறு ஸ்பூனினால் உணவை அள்ளி அவள் வாயருகில் கொண்டு சென்றவன், "நா சொன்னது இது இது இதை தான் கேர்ள். நீ என்ன நினைச்ச?" என்று அவளைப்போலவே பேசிக்காட்டி புருவத்தையும் ஏற்ற,


அப்பொழுதுதான் உணவை கவனித்தவள், "இல்ல இல்லை நா ஒன்னும் நினைக்கல" என்று மென்மேலும் திணறி, அவன் கொடுத்த உணவையும் வாங்கி வேகவேகமாக உண்ணத் தொடங்கினாள் சிற்பி.


அதில் சப்தமிட்டே சிரித்துக் கொண்டவன், "ஹேய் பாத்து பாத்து. மெதுவா!" என்று சொல்லிவிட்டு அதே கரண்டியினாலே அவன் அவனது உணவை எடுத்து வாயில் வைக்கப்போக, "ட்ரைனர் அது நா சாப்பிட்ட ஸ்பூன்." என்று வேறு ஒரு கரண்டியை எடுத்து அவன் முன்னே நீட்டினாள் சிற்பி.


அதில் சற்றே அவளை முறைத்து விட்டு, அவள் நீட்டிய கரண்டியையும் பார்த்தவன், "எனக்கு அந்த ஸ்பூன் வேணாம் தேவி. இந்த அழகான ஸ்பூன்ல நீங்களே ஊட்டி விடுங்க" என்று கரண்டியை வாங்கிக் கீழே வைத்து, அவள் கரத்தைத் தொட்டுக் காட்டினான் கள்வன்.


அதில் அதிர்ந்து போய் அவனை ஏறிட்டுப் பார்த்தவளைக் கண்டு, ஒற்றைக் கண்ணைச் சிமிட்டியவன்,
"ஊட்டு தேவிமா" என்று வாயையும் திறக்க,


மகிழ்ச்சியும், தயக்கமும் கலந்து கட்டிய உணர்வோடு தான், உணவை அவனுக்கு ஊட்டி விட்டாள் சிற்பி.


அவள் ஊட்டிய உணவை வாயிலும், பெண்ணவளின் வடிவான வதனத்தை விழியிலும், நிரப்பியபடியே, அவனும் அவளுக்கு ஊட்டி விட்டு, "ஃபுட் செம்ம டேஸ்ட்ல கேர்ள்?" என்று அவளுக்கு ஊட்டிய தன் விரல்களையும் வாயில் வைத்துச் சுவைக்க,


அதைப் பார்த்தவளுக்கோ சற்று முன்னர் ஏன்தான் கரண்டியை நீட்டினோமோ என்று எண்ணுமளவு வெட்கம் பிடுங்கித் தின்றது.


திருமணத்திற்கு முன்பு தங்களுக்குள் இருந்த ஆசிரியன் மாணவி உறவு நிலையாலும், அவளுக்கு அர்ஜுன் பற்றிய நினைவுகள் இருக்குமோ என்ற குழப்பத்தினாலும், இத்தனை தினங்கள் அவளிடம் நேசத்தை வெளிப்படுத்த தயங்கிக் கொண்டிருந்தவன், சமீபகால நிகழ்வுகளில், அவளுக்கும் தன்மேல் ஈர்ப்பு உள்ளது என்று உணர்ந்து, அவளை ஆராதிக்கத் துவங்கி இருந்தான்.


சிலமணி நேரங்கள் முன்பு, அப்படி அழுதவளா இவள் என்று எண்ணுமளவு, தன் பார்வையாலும், வார்த்தையாலும், அவள் உள்ளம் முழுதும் இன்பப்பூக்களை மலரச் செய்து இருப்பவன், சிறிதொரு நாட்களில், தானே அதில் வெந்நீர் ஊற்றப் போவதை அக்கணம் அறிந்திருக்கவில்லை போல.


அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தபடியும், ரசித்தபடியும், மீதி உணவையும் உண்டு முடித்தவர்கள், ஒருவிதமான மோன நிலையில் தான், வேறு சில இடங்களுக்கும் சுற்றிவிட்டு இறுதியாக வீட்டையும் அடைந்திருக்க,


அங்கோ முக்கியமான விஷயம் ஒன்றை வைத்துக் கொண்டு அவர்களுக்காக காத்து இருந்தனர் வேதாச்சலமும், சுசீலாவும்.


Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️