நூலகம் -19.1
மனைவி ஓடி வந்து அணைத்துக் கொண்ட வேகத்திலே, ஏதோ விபரீதம் என்று கண்டு கொண்டவன், தாங்கள் இருக்கும் இடத்தை எண்ணி நொடி நேரம் தயங்கினாலும், அடுத்த நொடி தன் மார்பில் புகுந்தவளை இறுக அணைத்திருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
அதில் இன்னுமே அவன் மார்போடு ஒன்றிக் கொண்டவள், "ட்ரைனர் ட்ரைனர்," என்று வார்த்தைகள் வராது தேம்ப,
"ரிலாக்ஸ்மா ரிலாக்ஸ்" என்று ஒரு கையால் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தவன், "ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல" என்று மறு கையால் அவள் விழி நீரையும் துடைத்து விட்டான்.
ஆணின் அந்த அரவணைப்பில் அவள் விழியில் மென்மேலும் நீர்க் கசிய, "ட்ரைனர் ட்ரைனர், அங்க ரெஸ்ட்ரூம்ல, என்ன பத்தி, தப்பா" என்று அவள் சற்று முன்னர், சுவரில் படித்த வார்த்தைகளின் தாக்கத்தால் அவள் வார்த்தைகள் திக்கித் திணறியது.
திணறலாகச் சொன்னாலும், ஓரளவு அவள் கூற வருவதைப் புரிந்து கொண்டவனுக்கு, கை முஷ்டிகள் இறுக, "அங்க என்னவா இருந்தாலும் நா பாத்துக்குறேன் கேர்ள். முதல்ல நீ அமைதியா இரு. ஒன்னும் பிரச்சனை இல்ல. ரிலாக்ஸ்" என்று அவளை அங்கிருந்த திண்டில் அமர்த்தி, அவள் தோழிகள் தந்த நீரையும் கொடுத்து அருந்தச் செய்தான்.
அச்சமயம் அவர்களை நெருங்கிய யாழினியும், "அங்க பாத்ரூம் சுவத்துல, யாரோ சிற்பியை
அர்ஜு, அர்ஜுனோடவும், அப்றம் உங்களோடவும் சேர்த்து தப்பு தப்பா எழுதி இருக்காங்க ண்ணா" என்று கவலையாக கூறிக்கொண்டிருக்க,
அத்தனை நேரம் விழிகள் விரிய செழியனையும் சிற்பியையும் தான் பார்த்துக் கொண்டிருந்த ராம்சரணோ, யாழினி கூறியதைக் கேட்டு மென்மேலும் அதிர்ச்சியானான்.
ஏற்கனவே செழியனும், சிற்பியும் காதலிப்பதாக யாழினி கூறி இருந்ததால், இப்போதைய அவர்களின் நெருக்கத்தில், அது உண்மைதான் போலும் என்று எண்ணிக் கொண்டவன், "கேர்ள்ஸ் எல்லாம் கொஞ்சம் வெளிய வாங்க" என்றுவிட்டு வேகவேகமாக குளியலறைக்குள் சென்றான்.
அங்கோ இரண்டு மூன்று இடங்களில் சிற்பியும் அர்ஜுனும் காதலித்துச் சுற்றியதாகவும், அவர்கள் காதல் பிடிக்காது, அர்ஜுனின் தந்தை அவனை கல்லூரி மாற்றிவிட்டார் என்றும், அதை எல்லாம் மறந்து, அவள் இப்பொழுது செழியன் பின்னே சுற்றிக் கொண்டிருக்கிறாள் என்றெல்லாம் இன்னும் மோசமாக எழுதப்பட்டு இருந்ததை வாசித்து வந்தவன், "ரொம்ப வொர்ஸ்ட் பிகேவியர் ட்ரைனர். கண்டபடி எழுதி இருக்காங்க. சேர்மன் பொண்ணைப் பத்தியே இப்டி எழுதி இருக்காங்கன்னா எவ்ளோ தைரியம் இருக்கணும். இதை சும்மா விடக்கூடாது" என்று சினக் குரலில் சீறினான்.
அதற்குள் விஷயம் கல்லூரி முழுதும் பரவி, சிற்பி பயிலும் டிபார்மென்ட் மாணவ, மாணவிகளும் கல்லூரி விரிவுரையாளர்களும், மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும், அங்கு கூடிவிட்டு இருக்க, "சிற்பி என்னடி ஆச்சு? செழியா, பியூன் என்னென்னவோ சொல்றானே. என்னப்பா?" என்று அடித்துப் பிடித்து அங்கு வந்து சேர்ந்தனர் வேதாச்சலமும், கூடவே அவர் மனைவி சுசீலாவும். அவரும் கல்லூரியில் ஒரு பங்குதாரர் என்பதால், அவ்வப்போது கல்லூரிக்கு வருபவர் இன்றும் அங்கு தான் இருந்தார் சுசீலா.
ஏற்கனவே அர்ஜுன் பரிசு அனுப்பிய விஷயத்திலே, சில வாரங்கள் முன்பு தான் பெற்றோரின் அதிருப்தியை சந்தித்து இருந்தவளுக்கு இக்கணம் அவர்களின் கேள்வியில், மென்மேலும் கரங்கள் நடுங்க, தன் முன்னே நின்றவனின் கரத்தை இறுகப் பற்றினாள் சிற்பி.
மனைவியின் அந்தப் பற்றலிலே, அவள் தவிப்பை தன்னுள் உணர்ந்தவன், சட்டென அவள் அருகில் அமர்ந்து, "தேவிமா, அதான் ஒன்னுமில்லைனு சொல்றேன்ல. ரிலாக்ஸ் பண்ணு" என்று அவள் தோளை அணைத்து, ஆசுவாசம் செய்தான்.
பின், சரேலென்று எழுந்து நின்று, "இந்த ஈன வேலையைப் பண்ணுனவங்க யாருன்னு அவங்களே ஒத்துக்கிட்டா பனிஷ்மென்ட் கம்மியா இருக்கும். இல்லன்னா நா போலீல் வர ஆக்சன் எடுப்பேன்" என்று அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து கடுமையாக எச்சரித்தான் செழியன்.
அதில் எச்சில் கூட்டி விழுங்கிய மாணவர்கள், "நாங்க யாரும் இதை பண்ணல சார். எங்களை தப்பா நினைக்காதீங்க!" என்று அச்சக்குரலில் சொல்ல,
"நீங்க பண்ணலைன்னா அப்றம் வேற யாரு பண்ணிருப்பா? நாங்க எல்லாரும் உங்களுக்கு இதை தான் சொல்லிக் கொடுத்தோமா? நீங்க எல்லாம் ஸ்டுடென்ட்ஸ் தானா? உங்ககிட்ட இருந்து இப்டி ஒரு வொர்ஸ்ட் பிகேவியரை நாங்க எதிர்பாக்கவே இல்ல.உங்களை எல்லாம் ஹெவியா பனிஷ் பண்ணாதான் அடங்குவீங்க" என்று ராம்சரணும், கூடவே வேறு சில விரிவுரையாளர்களும் கூட மாணவர்களை திட்டித் தீர்த்தனர்.
அதில் மென்மேலும் மிரண்டு விழித்தவர்கள், "இல்ல சார், இல்ல மேம். ட்ரைனர் மேல எங்களுக்கு பெரிய மரியாதை இருக்கு. சிற்பியும் சேர்மன் பொண்ணா இருந்தாலும், எங்களோட நல்ல ஒரு பிரண்ட், அவங்களைப் போய் சேர்த்து வச்சி நாங்க யாரும் இப்டி எழுத மாட்டோம் சார். எங்களை நம்புங்க" என்று அழுகுரலிலே கூறத் தொடங்கினர்.
அதைக்கேட்டு அனைவரின் முகமும் குழப்பத்தைத் தத்தெடுக்க, வேதாச்சலமும் சுசீலாவும் கூட, "ஸ்டுடென்ட்ஸ் பண்ணலைன்னா இப்டி ஒரு வேலையை யாரு பண்ணிருப்பா?" என்று செழியனிடம் தான் கேட்டு வைத்தனர்.
"அதை இப்போ கண்டுபிடிச்சிடலாம்!" என்று இன்னும் அழுது கொண்டிருந்த சிற்பியை தோழிகளிடம் விட்டுவிட்டு, மாணவர்களின் முன்னால் வந்து நின்றவன், "ராம், எல்லா ஸ்டுடன்ட்சோட நோட்புக்கும் இன்னும் பத்து நிமிசத்துல இங்க இருக்கணும். அங்க ரெஸ்ட்ரூம்ல இருக்க கையெழுத்தோட, எந்த ஸ்டுடென்ட்டோட கையெழுத்து ஒத்துப் போகுதோ, அவங்க இனிமேல் இன்ஜினியராகறதைப் பத்தி நினைச்சு கூடப் பாக்க முடியாது" என்று அவன் கர்ஜனைக் குரலில் கூறியதைக் கேட்டு, அனைத்து மாணவர்களும், அடித்துப் பிடித்து ஓடி, தத்தம் குறிப்பேட்டை எடுத்து வந்து அங்கிருந்த மேசையில் அடுக்கினர்.
அதில் ஒரு மாணவன் மட்டும், பீதியாக விழித்தபடி, எங்கும் செல்லாமல் அங்கேயே நின்று இருக்க, அவன் விழித்த விழியிலே அவனைக் கண்டுகொண்ட செழியனும், நிதானமான நடையோடே அவனை நெருங்கியவன், "நீ மட்டும் ஏன் நோட் புக் எடுத்துட்டு வராம இங்கயே நிக்கிற?" என்று கேட்டான்.
அதில் இன்னுமே அரண்டு விழித்த மாணவனும், "அது சார், வந்து சார்" என்று மட்டும் சொல்லிக்கொண்டே, அங்கு ஓரமாய் நின்றிருந்த சீனியர் விரிவுரைவுரையாளர் ஒருவரைதான் பார்த்து வைத்தான்.
மாணவனின் அந்தத் தடுமாற்றத்திலே அவன் சட்டையைப் பற்றிவிட்ட ராம்சரணும், "நீதான் இந்த பொறுக்கி வேலையை செஞ்சதா? உனக்கு எவ்ளோ தைரியம்டா?" என்று கையையும் ஓங்கி இருக்க,
"என்ன சார் இது அராஜகமா இருக்கு. யாரோ ஒருத்தன், சேர்மன் பொண்ணோட உங்களை சேர்த்து வச்சி தப்பா எழுதினதுக்காக இப்படித்தான் ஸ்டுடென்ட்ஸ போட்டு அடிக்க போவீங்களா?" என்று அந்த மாணவனுக்குப் பரிந்து முன்னே வந்தார் அந்த சீனியர் விரிவுரையாளர்.
அதில் அனைவரின் கவனமும் அவர் புறம் திரும்ப, "இப்டி ஒரு கேவலமான வேலை பாத்தவனை அடிக்க போகாம, என்ன செய்யனும் சொல்றீங்க சார்?" என்று கேட்ட மற்ற விரிவுரையாளர்களும், "இன்னிக்கு இவனை சும்மா விட்டா, நாளைக்கே இன்னொருத்தர் பத்தி இப்படித்தான் எழுதி வைப்பான்!" என்று சிற்பிக்கு ஏற்றுப்பேச,
"அப்டி என்ன இல்லாததையா எழுதிருக்கான் அந்தப் பையன். இந்த சிற்பி பொண்ணு கொஞ்சம் நாள் முன்ன அந்த எம் பி பையனோட சுத்தினது நானே பல தரம் பார்த்து இருக்கேன். அப்றம் இப்போ ரீசண்டா அதே பொண்ணு ட்ரைனர், ட்ரைனர்ணு செழியன் சார்கிட்ட போய் வழியிறதும், அவங்க பேமிலி பிரண்டுன்னு சாக்கை வச்சி, இவரும், கேர்ள்ணு குழையிறதயும் பாத்துட்டு தான இருக்கேன். இது காலேஜா, இல்ல வேறமாறி இடமான்னே இப்போல்லாம் எனக்கு சந்தேகமா இருக்கு. சேர்மனோட பொண்ணே இப்டி வரைமுறை இல்லாமத் திரிஞ்சா, அதை பாக்குற மத்த மாணவிகளும் கெட்டுப் போக மாட்டாங்களா?" என்று வார்த்தைகள் மொத்தம், வன்மங்களாக்கி, இருவரின் மேலும் சேரை வாரிப் பூசியவரின் பேச்சில், "கடவுளே" என்று சிற்பியிடமிருந்து, பலத்த கேவல் ஒன்று வெளியேறி, அவள் கன்னங்களை மீண்டும் கண்ணீருக்கு இரையாக்கியது.
'பருவத்திற்கே உரிய, இளமையின் துடிப்பில், வனப்பும், வாலிபமுமாக, தன் பின்னால் சுற்றியவனிடம், தானும் சற்றே சறுக்கி விழத் தெரிந்தவள் தான் சிற்பி. ஆனால் அறியா வயதில் தெரியாத் தனமாய் செய்த அந்த ஒற்றைத் தவருக்காக அவள் எத்தனை முறை தான் சிலுவை சுமப்பது??? ஒரு ஆண் என்ன செய்தாலும் மூடிப் பாதுகாக்கும் இந்த உலகம், பெண் என்றதுமே, பறையடிக்கத் துடிப்பதேன்??? சொல்லப்போனால் காதல் என்று எதுவும் செய்யாமலே, அர்ஜுனாலும், அவன் தந்தையாலும், பாதிக்கப்பட்டவள் அல்லவா அவள். அவளைப் பார்த்து பரிதாபப்படவில்லை யானாலும், தூற்றாமலாவது இருக்கக் கூடாதா?
கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். என்று புரியாமல் தன்னைப் பெற்றவர்களே தன்னை நம்பாமல் பேசும் போது, மற்றவர்களிடம் மட்டும் எங்கணம் புரிதலை எதிர்பார்ப்பது???
அன்று சீதா பிராட்டி, இன்று சிற்பிகா தேவி என்று பெயர்கள் தான் மாறி இருந்தாலும், எந்த தவறும் செய்யாது சோதனைக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்த பாடில்லையே? யாரோ ஒரு ஆண் அவள் பின்னால் சுற்றியதற்காக, அவளை அல்லவா தீக்குண்டத்தில் இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
என்று அவள் மனமே ஊமையாய் கதறிக் கொண்டிருக்க,
"நீங்க ரொம்ப லிமிட் தாண்டிப் பேசறீங்க சபரிவாசன்!" என்று அங்கிருந்த ராம்சரணோடு, மற்றவர்களும் சேர்ந்தே அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.
ஆனால் தன்னை விடவும் பல வருடங்கள், வயதிலும் அனுபவத்திலும் குறைந்திருக்கும் செழியனுக்கு, இப்பொழுதெல்லாம் வேதாச்சலம் கொடுக்கும் முன்னுரிமையில், இருவர் மேலும் பெரும் குரோதத்தை வளர்த்து வைத்திருந்தவர், எதையுமே செவியில் ஏற்றவில்லை.
"லிமிட்டைத் தாண்டி நடக்குறது நானா இல்ல அவங்களா சார்? இதோ இப்பக்கூடப் பாருங்க, இவ்ளோ பேர் முன்னயும் கொஞ்சம் கூட கூச்சமில்லாம சேர்மன் பொண்ணு அவரு கையை தான் பிடிச்சிட்டு இருக்கு. அவரும் ஏதோ கட்டுன பொண்டாட்டிய சமாதானம் செய்ற போல, கொஞ்சிட்டு இருக்காரு" என்று வார்த்தைகளை கத்தி போல வீசியவரின் வார்த்தையில் சிற்பியின் கரம் சட்டென்று கணவனின் கரத்தை விட்டு விட, அதைவிட வேகமாக பெண்ணவளின் தோள் அணைத்து, அவளை நடு நாயகமாகக் கூட்டி வந்து நிறுத்தினான் கணவன்.
பின் அங்கிருந்த சீனியர் விரிவுரையாளரை, சலனமே இன்றி ஏறிட்டுப் பார்த்தவன், "பொண்டாட்டி மாதிரி இல்ல சார். பொண்டாட்டியே தான்." என்று அழுத்தம் திருத்தமாக உரைத்து, அவள் கழுத்தில் மறைந்து கிடந்த தாலியை வெளியே எடுத்து விட்டவன், "தவிர்க்க முடியாத ஒரு சூழல்ல, எனக்கும் சிற்பிக்கும் ரெண்டு வருஷம் முன்னவே மேரேஜ் நடந்துருச்சு. அவ படிப்பு காரணமா, அதை வெளிய சொல்லாம நான்தான் ஹைட் பண்ணி வச்சிருக்கேன். நா அவளோட கணவன்கிற முறையில தான், என் மனைவி என்கிட்ட நெருக்கமா நின்னுருக்கா. அவ என்னோட மனைவின்கிற முறையில தான், நா அவளை அணைச்சு ஆசுவாசம் செஞ்சிருக்கேன்.
என் மனைவி என்கிட்ட வந்து பேசுறதாலயோ, நா அவகிட்ட நெருக்கமா இருக்கிறதாலயோ, உங்க யாருக்காச்சும் ஏதாவது பிரச்சனை இருக்கா?" என்று அங்கிருந்த அனைவரையுமே பார்த்து புருவத்தைத் தூக்கினான் செழியன்.
தன் மனைவியை பேசி விட்டார்கள் என்ற சினத்தில், விழிகள் சிவந்து, குரல் கடினமுற்று இருந்தாலும், ஒரு ஆசிரியரின் நிதானத்தோடு, தவறு செய்திடாத நேர்மையும் சேர்ந்து, நெஞ்சை நிமிர்த்திதான் அக்கேள்வியைக் கேட்டிருந்தான் செழியன்.
அதில் அனைவரின் தலையுமே இல்லை என்பது போல் வேகமாக அசைய, "இனி ஒரு வார்த்தை ஒரு வார்த்தை, யாரும் என்னைப் பத்தியோ, என் மனைவி பத்தியோ தப்பா பேசினாலோ, எழுதினாலோ, அவங்க வேற ஒரு செழியனைப் பாப்பாங்க" என்றும் கர்ஜனையாய்க் கூறியவன், "நாங்க கபில்ஸாவே இருந்தாலும், காலேஜ்ங்கற கண்ணியத்தை மீறி எதுவும் தப்பா நடந்திருந்தா, எங்க மேலயும் நிர்வாகம் என்ன ஆக்சன் வேணா எடுக்கட்டும். நீங்க என்ன ஆக்சன் எடுத்தாலும் நானும் என் வொயிஃப்பும் முழுசா கட்டுப்படுவோம் வேதா சார். இப்போதைக்கு நா என் வொயிஃப கூட்டிட்டு வீட்டுக்குப் போறேன். ரெண்டு பேத்துக்கும் பர்மிசன் லெட்டர் நாளைக்கு கொடுத்தர்றேன்" என்றும் அங்கிருந்த நிர்வாகத்தினரையும் பார்த்துக் கூறிவிட்டு, "வா கேர்ள்" என்று மனைவியின் கையையும் இன்னும் இறுகப்பற்றியவாறே இழுத்துக் சென்றிருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
அவர்கள் அங்கிருந்து செல்லவும், மற்ற விரிவுரையாளர்கள் எல்லாம், தங்களுக்குள் சலசலத்தபடியே, மாணவர்களையும் அவரவர் வகுப்பிற்கு அனுப்பி இருக்க, சிற்பியின் பெற்றவரான தன்னிடமே, அவளை தன் மனைவி என்று விளித்து, அவன் அந்நியன் போல் பேசிச் செல்லவும் தான், அத்தனை நேரம் அந்த சபரிவாசனைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்த தன் மடத்தனத்தை உணர்ந்தார் வேதாச்சலம்.
சற்று முன்னர் அந்த சபரிவாசன் பேசிய பேச்சிலே, குளியலறையில் தன் மகளைப் பற்றி தப்பு தப்பாக எழுதிய ஈன வேலையையும், அந்த சீனியர் மாணவனை வைத்து, அவர்தான் பார்த்து இருக்கிறார் என்றும் புரிந்து கொண்டவர் அங்கிருந்த மற்ற நிர்வாகத்தினரைப் பார்த்து, "மிஸ்டர் சபரிவாசனுக்கு, இம்மிடியட்டா ரிஜிக்ரேசன் லெட்டர் ரெடி பண்ணுங்க" என்று அக்கல்லூரியின் சேர்மனாகக் கட்டளையும் இட்டுவிட்டு, தன் அறை நோக்கிச் செல்லத் துவங்கினார்.
இத்தனை வருடங்கள், அவர் அப்பிராணி என்று நினைத்துக் கொண்டிருந்த வேதாவிடம் இப்படி ஒரு அதிரடியை எதிர்பாராத சபரியும், "சார் சார், நா நம்ம காலேஜ் பேருக்கு ஏதும் பங்கம் வந்துடக் கூடாதுன்னும், உங்க பொண்ணு ஏதும் தப்பான வழில போய்டக் கூடாதுன்னு நல்ல எண்ணத்திலயும் தான் சார் அப்டி எல்லாம் பேசிட்டேன். சாரி சார்" என்று கெஞ்சிக்கொண்டே அவர் பின்னே ஓடியவரை, கடுமையாக முறைத்தவர், "ஆமா ரொம்ப நல்ல எண்ணத்தோட தான் என் பொண்ணைப் பத்தி தப்பு தப்பா ரெஸ்ட்ரூம்ல எழுதி இருக்கீங்க
சபரி. என் தயவுல, என் காலேஜ்லயே வேலை பாத்துகிட்டு, என் பொண்ணைப் பத்தியே இப்டி பேசுறீங்கன்னா, உங்களுக்கு எவ்ளோ தைரியம்? உங்க வயசுக்கும், அனுபவத்துக்கும் மதிப்பு கொடுத்து, உங்கமேல மான நஷ்ட வழக்கு ஏதும் போடாம சும்மா விடுறேன். ஜஸ்ட் செட்டப், அண்ட் கெட்டவுட்!" என்று கல்லூரியில் அனைவரின் முன்னிலும், மகளை விட்டுக் கொடுத்து விட்டோமே என்ற குற்ற உணர்வில் அளவுக்கு அதிகமாகவே சீறி, அந்த சபரிவாசனை வேலையை விட்டும் அனுப்பி இருந்தார் வேதாச்சலம்.
பின் செழியனிற்கும் அழைத்து, மன்னிப்புக் கேட்டவர், மகளிடம் பேச வேண்டும், வரவா என்றும் கேட்க,
அவர் மேல் மிகுந்த சினத்தில் இருந்தவனும், "ரெண்டு நாள் கழிச்சு, என் மனைவி கொஞ்சம் நார்மல் ஆகவும் சொல்றேன். அப்றம் வாங்க" என்று அலைபேசியையும் அணைத்து விட்டான்.
Comments
Post a Comment