நூலகம் -18.1

இன்னும் பிரிக்கப்படாத பார்சலுடன், கணவன் அறைக் கதவை தட்டியவளின் தட்டலை வைத்தே அது மனைவி தான் என்று புரிந்து கொண்டவன், "கமின் கேர்ள்" என்று மட்டும் சொல்ல, சொல்லொணாத தயக்கத்தினூடு தான், மெல்ல அடி வைத்து அவன் முன்னால் சென்று நின்றாள் சிற்பி.

ஏதோ கல்லூரி விஷயமாக  மடிக்கணினியில் பணி செய்து கொண்டிருந்தவன், ஒரு நொடி அவளை ஏறிட்டுப் பார்த்து,
"சொல்லு கேர்ள்? என்ன விஷயம்?" என்று கேட்டுவிட்டு, மீண்டும் மடிக்கணினியைப் பார்க்க,

"பிசியா இருக்கீங்கன்னா நா அப்றம் வரவா ட்ரைனர்?" என்று கேட்டாள் சிற்பி.

"நா எவ்ளோ பிசியா இருந்தாலும், உனக்கு தேவைப்படும் போது, நா
ஃப்ரீ தான் கேர்ள்." என்று சிறு புன்னகையை உதிர்த்தபடி, மடிக்கணினியை மூடி தள்ளி வைத்தவன், "இருந்து சொல்லுமா. என்ன விஷயம்?" என்று அவன் முன்னால் இருந்த படுக்கையை தட்டிக் காட்டினான்.

இப்பொழுதெல்லாம் அவன் சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள் கூட, அவள் மீது அவனுக்கு இருக்கும் அன்பை பறைசாற்றுவதாகவே இருக்க, இன்னுமின்னும் அவன் பால் நெஞ்சை பறிகொடுக்கத் துவங்கியவள், "நீங்க இதைப் பத்தி எதுவும் கேக்காட்டியும், இந்த பார்சல பாக்க பாக்க எனக்கு என்னவோ போல இருக்கு ட்ரைனர். இதை நா என்ன செய்யனும்னு கூட எனக்கு கொஞ்சமும் விளங்கல. இந்த பார்சல என்ன செய்யன்னு நீங்களே சொல்லுறீங்களா?" என்று சிறு பிள்ளையாய் அவன் முகம் பார்த்தாள் சிற்பி.

அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்குமே அந்த பார்சல் வந்த நாளில் இருந்தே நிம்மதி என்பது சிறிதும் இல்லாமல் தானே சுற்றிக் கொண்டிருக்கிறான்.

ஆனாலும், அதைப்பற்றி அவனாக ஏதும் பேசி, அவள் மனது சங்கடப்பட்டு விட்டாலும் அவனால் சிறிதும் தாங்கிக் கொள்ள முடியாதே.

இப்பொழுது அவளாகவே வந்து கேட்கவும், நொடி நேரம் அவள் முகத்தை கூர்ந்து பார்த்து விட்டு, "முதல்ல அந்த பாக்ஸ்ல என்ன இருக்குன்னு ஓபன் பண்ணி பாரு கேர்ள். அப்றம் அதை என்ன செய்யலாம்னு யோசிப்போம்" என்று மட்டும் சொன்னான் செழியன்.

அதைக்கேட்டு, "நிஜமாதான் சொல்றீங்களா ட்ரைனர்? அவசியம் அதை பிரிக்கணுமா? பேசாம தூக்கிப் 
போட்டுடலாமா?" என்று தான் கேட்டாள் சிற்பி.

"அட" என்று அவளை முறைத்தவனும், "உனக்கு பிடிக்குதோ, பிடிக்கலியோ, ஒருத்தர் உனக்காக பரிசுன்னு ஒன்னு அனுப்பி இருக்கப்போ, அதை பிரிச்சு கூட பாக்காம தூக்கி போடுறது, குட் மேனர்ஸ் இல்ல கேர்ள். அதுவும் இல்லாம அர்ஜுன் மனசுல என்ன இருக்கு, இவ்ளோ நாளா அவன் எங்க போனான். இப்போ எதுக்கு திடீர்னு இதை அனுப்பி இருக்கான், இதெல்லாம் நமக்கு தெரியனும்னா இதை பிரிச்சு பாக்குறது தான் நமக்கு இருக்க ஒரே வழி" என்று சொன்னவனின் பேச்சில்,

'இவரால் மட்டும் எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது? அவனவன், தான் காதலிக்கும் பெண்ணிடமே, நீ அவனைப் பாராதே, அவனோடு பேசாதே, யாரையும் பார்த்து சிரிக்காதே, அவனோடு உனக்கென்ன பேச்சு, என்றெல்லாம் கட்டுபாடுகள் விதிக்கும் ஆண்கள் மத்தியில், தான் தாலி கட்டி கரம் பிடித்த மனைவிக்கு, அவளது முந்தைய காதலன் அனுப்பிய பரிசை பிரித்துப் பார்க்கச் சொல்கிறானே தன் கணவன்!' என்று மிதமிஞ்சிய ஆச்சர்யம் தான் மனைவிக்கு.

அதில் அவனையே விழி எடுக்காது பார்த்துக் கொண்டு இருந்தவளைக் கண்டு, "ஹேய் தேவி..." என்று அவள் முன்னே கையை ஆட்டியவன்,
"பார்சல பிரிக்க சொன்னா, பார்வையாலே என்ன பிரிச்சு மேஞ்சிட்டு இருக்கீங்களே இது நியாயமா?" என்று கேட்டான்.

"இல்ல, அது அது வந்து" என்று திணறியவளைக் கண்டு வாய்விட்டே நகைத்து, "சும்மா பிரி கேர்ள். உள்ள என்ன இருந்தாலும், நா எதுவும் நினைக்க மாட்டேன்" என்று அவள் கேளாமலே அவளுக்கு வாக்குறுதியும் கொடுத்தான்.

அதில், ம்ம்ம் என்று தலையை ஆட்டியவள் சுரத்தே இல்லாது, அந்த பார்சலைப் பிரிக்க, அதனுள் இருந்தது என்னவோ, அழகான பட்டுப் புடவையும், வெள்ளியில் கொலுசுகளும் தான்.

கூடவே வெள்ளை நிற காகிதத்தில் சில வரிகளோடு  i love you வும் எழுதி, நெகிழி ரோஜாவோடு சுற்றப்பட்டு இருக்க, 

அதைக் கண்டு சற்று முன்னர், எதுவும் நினைக்க மாட்டேன் என்றவனின் கை முஷ்டிகளே பலமாக இறுகியது. இன்னும் தன் மனைவிக்கு தானே ஒன்றும் வாங்கிக் கொடுத்து இராத நிலையில், ஏதோ பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் இணைக்கு அனுப்புவது போல்  புடவையும், கொலுசும் அல்லவா அனுப்பி இருக்கின்றான் இந்த அர்ஜுன். கூடவே காதல் கடிதமும் வேறு.

இருந்தும், சிற்பிக்காக இழுத்துப் பிடித்த பொறுமையோடு அமர்ந்து இருந்தவன், "அது என்ன லெட்டர் கேர்ள். பிரிச்சுப் படி" என்று மட்டும் சொன்னான். வருவிக்க முயன்ற இலகுக் குரலில். 

அவன் என்ன தான் அடக்கி வைத்தாலும், அவன் உடல் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டே, அவனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்று உணர்ந்து கொண்டவளுக்கு, அந்த கடிதத்தை படிக்கத் தான் வேண்டுமா என்று தான் இருந்தது.

அதை அவள் வாய் வார்த்தையாகக் கூறியும், "கண்டிப்பா கேர்ள். அப்போ தான அர்ஜுனப் பத்தி நமக்கும் ஏதாவது தெரியும். பின்னாடி ஏதும் பிரச்சனை வந்தாக் கூட நம்மளால சமாளிக்க முடியும்" என்று மிகவும் சரியான காரணங்களைக் கூறியவன் கூற்றில், விருப்பமே இல்லாமல் அந்த கடிதத்தை படிக்கத் துவங்கியவளுக்கு, அதை படித்து முடித்த பொழுது, "கடவுளே இது என்ன சோதனை?" என்று தான் எண்ணத் தோன்றியது.

ஆம் அன்று அர்ஜுனை சமாதானம் செய்து அனுப்பி வைத்த அவன் தந்தை, சிற்பியை பெண் கேட்டு பேசி முடித்தாயிற்று என்றும், ஆனால் அவள் படித்துக் கொண்டிருப்பதால் படிப்பு முடியும் வரை, அவளுடன் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், இன்னும் ஏதேதோ கூறி ஏமாற்றித்தான், அவனை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பி வைத்திருந்தார். அவனும் தந்தை சொல்லியது அனைத்தும் உண்மை என்று நம்பி, மும்முரமாக படித்துக் கொண்டிருப்பவன், சிற்பி மாநில அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதாய் வந்த செய்தியை அறிந்து தான், அதைப் பாராட்டும் விதமாய், பழைய கல்லூரி நண்பன் மூலம் இந்த பரிசை அனுப்பி இருந்தான்.

'உன்னைச் சேரும் சொர்க்க நேரங்களுக்காய் தான் இப்போதைய நரக நிமிடங்களை நான் கடந்து கொண்டிருக்கிறேன்' என்றெல்லாம் உருகி உருகி கடிதம் எழுதி இருந்தவன், 'ஐ லவ் யூ ஸ்வீர்ட் ஹார்ட்' என்றும் முடித்திருக்க, அதை வாசித்தவளுக்கு மட்டுமல்லாது, கேட்டு இருந்தவனுக்கும், என்ன எதிர்வினை ஆற்றுவது என்று கூடத் தெரியவே இல்லை.

அதிலும் அர்ஜுன் தன் மனைவியை, ஸ்வீட் ஹார்ட் என்றும், பேபி என்றும், கொஞ்சல் மொழிகளில் விளித்து எழுதி இருப்பது வேறு, செழியனுக்கே உரிய பெருந்தன்மை குணத்தையே வெகுவாக சோதித்துப் பார்க்க, இறுக்க மூடிய அதரங்களில் இருந்து ஒரு வார்த்தை கூட வெளியேற மறுத்தது ஆடவனிற்கு.

கணவன் அமர்ந்து இருக்கும் நிலையைக் கண்டே, அவன் மனவோட்டத்தை புரிந்து கொண்டவளுக்கு, அத்தனை நேரம் அர்ஜுன் மேல் இருந்த பரிதாபம் கூட இக்கணம் காணாமல் போயிருக்க, அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்தவள், "இதுக்கு தான் இந்த பார்சலையே தூக்கி போட்டுடலாம்னு சொன்னேன். இப்போ பாத்திங்களா, தேவையில்லாத சங்கடம்" என்று அவஸ்தையாய் கையைப் பிசைந்தவள், "என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்ல ட்ரைனர்? என்ன மன்னிச்சுடுங்க" என்று குற்றம் செய்தவளாய் அவன் முகம் பார்த்தாள் சிற்பி.

அதில் ஓரளவு இயல்பிற்குத் திரும்பியவனும், "ஹேய், நீ
என்ன தப்பு பண்ண, மன்னிப்பு கேக்குறதுக்கு. நா ஒன்னும் நினைக்கலமா" என்று தன் முகம் பார்த்து இருந்தவளின் தலையைப் பற்றி கலைத்து விட்டவன், "சொல்லப்போனா இந்த லட்டர் படிச்ச பின்னாடி அர்ஜுன் மேல கூட எந்தத் தப்பும் இல்லன்னு தான் தோணுது. உன்னைப்போல தான் அவனும் அவங்கப்பாவால பாதிக்கப்பட்டிருக்கான். இன்னமும் அதை உணரக்கூட இல்லை அவன். உங்க காதல் விஷயத்துல, அந்த எம்பியோட சேர்ந்து, காலமும்
உங்க ரெண்டு பேரையும் வஞ்சிசிடுச்சின்னு நினைக்கிறேன். நம்ம கல்யாணமும் கூட இவ்ளோ அவசரமா நடந்து இருக்க வேணாம். இல்ல?" என்றெல்லாம் செழியன் தன் மனதில் இருப்பதைப் பேசவும், "ட்ரைனர்" என்ற பலமான ஒரு அதட்டல் சிற்பியிடமிருந்து.

கூடவே, "என்ன பேசுறீங்க நீங்க?
ஏன் இப்டி எல்லாம் பேசுறீங்க? நம்ம கல்யாணம் இவ்ளோ அவசரமா நடந்துருக்க வேணாம்னா, என்ன அர்த்தம் ட்ரைனர்? என்ன மேரேஜ் பண்ணது தப்புன்னு சொல்றீங்களா? நம்ம கல்யாணம் அவசர அவசரமா நடந்து இருந்தாலும், நம்ம ரெண்டு பேரோட முழு சம்மதத்தோட தான நடந்துச்சு. அர்ஜுன ஏமாத்துன போல, நம்மள யாரும் ஏமாத்தலையே. அப்றம் ஏன் இப்டி எல்லாம் பேசறீங்க? உங்களுக்கு எப்டியோ எனக்குத் தெரியாது. ஆனா, நம்ம மேரேஜ் முடிஞ்ச இந்த ஒன்ற வருஷ காலமும், நா என் பேரண்ட்ஸ் வீட்ல இருந்தத விட, இங்க ரொம்ப ரொம்ப ஹாப்பியா தான் இருக்கேன். நிம்மதியா தான் இருக்கேன்" என்று அவள் பாட்டில் படபட பட்டாசாய் பொரிந்து தள்ளியவள், பெரிய பெரிய மூச்சுக்களையும் எடுத்து விட்டாள் சிற்பிகா தேவி.

ஏதோ ஒரு குழப்பத்தில், அப்படி சொல்லிவிட்டவன், அதற்கு எதிர்வினையாக, மனைவியிடமிருந்து இப்படி ஒரு சினத்தை எதிர்பார்க்கவே இல்லை செழியன்.

அவனது மாணவியாகவும், சரி, மனைவியான பின்னும் சரி, இதுவரை அவன் முன்னால் அதிர்ந்து கூடப் பேசியதில்லை அல்லவா பெண்ணவள்.

ஆனால் இப்பொழுதோ இன்னுமே அவனை முறைத்துக் கொண்டு நின்றவள், "சும்மா வாய் புளிச்சதோ, மாங்கா புளிச்சதோன்னு கண்டதையும் உளறிட்டு இருக்காம, பேசாம போய் படுங்க ட்ரைனர். காலைல காலேஜ் இருக்கு" என்று அதட்டல் குரலில் கூறிவிட்டு எழுந்து நின்றவளைப் பார்த்து, விழிகளை அங்குமிங்கும் நகர்த்தவே இயலவில்லை செழியனால்.

கூடவே, 'தங்கள் திருமணம் நடந்து முடிந்த இந்த ஒன்னரை வருட காலமும், பெற்றோருடன் இருந்ததை விடவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்றால், தங்கள் திருமணத்தையும் அவள் ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று தானே அர்த்தம்? அப்படி என்றால், அந்த திருமணம் மூலம் அவளுக்குக் கிடைத்த தன்னையும், அவள் கணவனாகப் பார்க்கின்றாளா? என்னைப்போலவே அவளும் என்னை நேசிக்கின்றாளா?' என்றெல்லாம் மனம் கொள்ளா பரவசத்தில் மூழ்கித் திளைத்தவன்,
சொல்லொணாத உணர்வுகளோடு தான் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

ஆனால் அவன் உணர்வுகள் எதையும் அறியாமல், "பேச வந்துட்டாரு பேச்சு. ஏதோ நம்ம ட்ரைனராச்சேன்னு, சொல்லியூசன் கேக்க வந்தா, மேரேஜ் நடந்தது தப்பாமே" என்று இன்னுமே முணுமுணுத்தபடி, அந்த பார்சலை தூக்கிக் கொண்டு அறை வாயில் நோக்கி எட்டு வைத்தவளைக் கண்டு மென்மேலும் இதழ்கள் மலர்ந்து விரிந்தது விரிவுரையாளனுக்கு.

அதில் சட்டென்று எழுந்து, "ஹேய் கேர்ள், நா சும்மா தான் அப்டி சொன்னேன்மா. அதுக்கு எதுக்கு இவ்ளோ கோவம்?" என்று அவள் கையைப் பற்றி நிறுத்தியவனை,
"பின்ன, நீங்க பேசுன பேச்சுக்கு கோவப்படாம கொஞ்ச சொல்றீங்களா?." என்று மென்மேலும் முறைத்தாள் சிற்பி.

அதில் இன்னுமே உள்ளம் குளிர்ந்து அட்டகாசமாகச் சிரித்தவன், "நோ அப்ஜக்சன் கேர்ள். என் தேவி திட்டினாலே கொஞ்சுற போல இருக்கப்போ, கொஞ்சுறது எப்டி இருக்கும்னு, நானும் பாக்கிறேனே" என்று அவளையே விழுங்கி விடுவது போல் பார்த்து வைத்தான் விரிவுரையாளன்.

ஆணின் அந்த பேச்சில் தான், தான் கூறிய வார்த்தையின் பொருளையே உணர்ந்து கொண்டவளுக்கு நொடியில் முகமெல்லாம் சிவந்து போக, சட்டென தலையைக் குனிந்து கொண்டவள், "விடுங்க ட்ரைனர். நா போகணும்" என்று சிணுங்கி கையையும் உருவ முயன்றாள்.

அவன் கேட்டது போல், அவள் கொஞ்சி இருந்தால் கூட, அவனுக்கு இத்தனை கிறக்கம் எழுந்திருக்குமோ என்னவோ, தன் பேச்சினால் அவளிடம் உண்டான, நாணமும், வெட்கமும் அவனை என்னென்னவோ செய்தது மட்டுமில்லாமல், என்னவெல்லாமோ செய்யும் ஆசையும் தூண்டி விட்டது.

இருந்தும், அவளின் படிப்பு, வயது, என்று அனைத்தும் எண்ணி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்,
"ம்ம்ம் விடுறேன். ஆனா, இந்த பார்சல்ல இருக்க பொருளை என்ன செய்யப்போறன்னு மட்டும் சொல்லிட்டுப் போ கேர்ள்" என்றான். அது தான் முக்கியம் போல.

அவன் கேட்ட அந்தக் கேள்வியில் பெண்ணின் நாணம் எல்லாம் நாலா புறமும் ஓடி, அவன் சற்று முன்னர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் ஞாபகம் வந்து விட, "எனக்கு வந்த கிப்ட் அது,
நா அந்த சேலையை உடுத்த கூட செய்வேன். கொலுசை கால்ல போட்டுட்டு அங்கயும் இங்கயும் நடந்து, உங்களை தொல்லை கூட பண்ணுவேன். அதை கேக்க நீங்க யாரு சார்? அது எதுக்கு உங்களுக்கு?" என்றெல்லாம் என்னென்னவோ பேசியவள், "என்ன கல்யாணம் பண்ணிருக்க கூடாதாம். ஆனா நா அந்த பொருளை என்ன செய்ய போறேன்னு மட்டும் தெரியணுமாம். சொல்ல மாட்டேன் போங்க" என்று தலையையும் சிலுப்பிக் கொண்டு அறையை விட்டு வெளியேறி இருந்தாள் சிற்பிகா தேவி.

அவள் பேசிய வார்த்தைகள் காட்டமாய் இருந்தாலும், அது வெளிப்பட்ட காரணம் என்னவோ, வேறாக இருக்க, இன்னுமே சப்தம் போட்டுச் சிரித்து, அவள் சென்ற திசையையே ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான் செந்தமிழ்ச் செழியன்.

பின், அப்படியே கட்டிலின் குறுக்காக மல்லாக்க விழுந்து விட்டவனுக்கு அவள் சென்று வெகுநேரம் கழித்தும் கூட, பெண்ணவள் பேசிச் சென்ற வார்த்தைகளும், அதில் இருந்த மறைபொருளும், அவனது உறக்கம் மொத்தம் வாங்கிக் கொள்ள, கைபேசியில் இருக்கும் சிற்பியின் படங்களைப் பார்த்து, ரசித்து, "நாட்டி கேர்ள்." என்று சிரித்து, வாலிபப் பையன் போல் கட்டில் முழுதும் உருளத் தொடங்கினான்.




Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️