நூலகம் -17.2
அவன் வார்த்தையில் இருந்த நேசம் அவளுக்குப் புரிந்ததா, அவனது மென்மையான அணைப்பில் கொட்டிக் கிடக்கும் காதலை பெண்ணவள் உணர்ந்தாளா. எதுவும் தெரியவில்லை. ஆனால், இக்கணம், இந்த நிமிடம், கணவனின் அந்த இதமான அணைப்பே தன் துயரம் துடைக்கும் மருந்து போல் அவன் நெஞ்சோடு ஒண்டிக் கொண்டவள், அடுத்த கால்மணி நேரத்தில் தனை மறந்து உறங்கியும் போனாள்.
உடலும் மனமும் ஓய்ந்து போய் இருந்ததாலோ என்னவோ, பெண்ணவள் படுத்த உடன் உறங்கிப் போனாலும், சற்று முன்னர் அந்த பார்சலின் மீது படித்த வாசகமானது, அவள் கணவனின் உறக்கத்தை மட்டுமல்லாது, நிம்மதியைக் கூட பறித்து விட்டு இருந்தது.
"அன்புள்ள ஸ்வீர்ட் ஹாட்டிற்கு, உன் அர்ஜுனரின் அன்புப் பரிசு" ஒரு காதலிக்கு, அவள் காதலன் எழுதி இருந்த சாதாரண காதல் வார்த்தைகள் தான்.
பல மாதங்கள் முன்பு, அவளை கரம் பிடிக்கும் சமயம் இருந்த மனநிலையோடே, அவன் இப்பொழுதும் இருந்திருந்தால் கூட, அவனால் அந்த வாசகத்தை சாதாரணம் போல் ஒதுக்கி இருக்க முடியுமோ என்னவோ, ஆனால் மாதங்களின் ஓட்டத்தில், அவளை தன் உயிரானவளாய் ஏற்று, அவள் நலனே தன் செயலாய் மாற்றி, அவள் மனமும் தன்னை ஏற்பதற்காய் காதல் வைத்துக் காத்திருக்கும், அவள் கணவனாகிப் போனவனுக்கு, திடீரென்ற அர்ஜுனின் இந்தப் பரிசு, 'ஏன்? எதற்கு? இத்தனை தினங்கள் எங்கே சென்று இருந்தான் இந்த அர்ஜுன்? இப்பொழுது எதற்காக திடீரென பரிசை அனுப்பி இருக்கிறான்? இதனால் தங்களுக்கு பிரச்சனைகள் ஏதும் வருமா?' என்று அவன் மனதில் சிறு அச்சத்தையும் உற்பத்தி செய்தது.
அவன் உள்ளம் எங்கெங்கோ பயணித்து, என்னவெல்லாமோ யோசித்துக் கொண்டிருந்தாலும், மனைவியை அணைத்திருந்த கரம் மட்டும் அவள் முதுகை ஆதரவாய் நீவிவிட்டபடியே இருக்க, பயணக் களைப்பில் அவனும் மெல்ல மெல்ல உறக்கத்தைத் தழுவினான்.
அவன் மீண்டும் கண் விழித்த சமயம், சரியாக இரண்டு மணி நேரங்கள் கடந்து விட்டிருக்க, சட்டென்று எழுந்து அமர்ந்தவன், மனைவியைப் பார்க்க, அவள் படுத்து இருந்த இடமோ காலியாக இருந்தது.
"அதுக்குள்ள எந்திரிச்சி போயிட்டாளா?" என்று சிறிதான பதட்டத்துடனே, அறைக் கதவைப் பார்த்து, அது இன்னும் திறக்கப்படாததை அறிந்தவனுக்கு, நான் இங்கு இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியது, குளியலறைக்குள் இருந்து வந்த நீரின் சப்தம்.
அதில் சற்றே ஆசுவாசம் கிடைக்க, நீரின் சப்தம் அதிகமாகக் கேட்கவும், "குளிக்கிறாளா என்ன? கதவு கூட திறக்கவே இல்ல. டிரஸ், டவல்லாம் எப்டி எடுத்தா?" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
பின் மெல்ல எழுந்து குளியலறை பக்கம் சென்றவன், "சிற்பி, குளிக்கிறியா? சோப், டவல், எல்லாம் வச்சிருக்கியா?" என்று மெலிதாக கதவைத் தட்டிக் கேட்க,
அதில் சவரை அடைத்து விட்டு, அவன் கேள்வியை உள் வாங்கியவளுக்கு அப்பொழுது தான், தான் குளித்துக் கொண்டிருப்பது, கணவனின் குளியலறை என்றும், அவன் கேட்டது போல், சோப்போ, துண்டோ, உடையோ எதுவுமே எடுக்காமல், நீருக்கடியில் நின்று விட்டதும், அவள் புத்திக்கு எட்டியது.
ஏதோ ஒரு சிந்தனையிலும், கல்லூரிக்குக் கிளம்பும் அவசரத்திலும், தான் செய்து வைத்த மடத்தனத்தை எண்ணி, கடவுளே என்று தலையில் கைவைத்து நின்று விட்டவள், "சிற்பி, என்னம்மா, தூங்கிட்டியா?" என்ற கணவனின் இன்னொரு தட்டலில், "ஹான் சார். அது அது, ப்ளீஸ் யாழியை மட்டும் கொஞ்சம் கூப்பிடுறீங்களா?" என்று திக்கித் திணறிக் கேட்டாள்.
திருமணம் முடிந்த தினத்தில் இருந்தே, சிற்பி யாழினியோடு தான் தங்கி இருப்பதால், அவளது உடமைகள் எல்லாம், யாழினியின் அறையில் தான் வைக்கப்பட்டு இருந்தது.
மனைவியின் அந்தத் திணறலிலே, அவள் எதையும் எடுக்கவில்லை என்று அறிந்து கொண்டவன்,
"நா போய் யாழிய அனுப்புறேன் கேர்ள். ஆனா யாழியோட சோப் கூட அங்க கப்போர்ட்ல இருக்கும். யூஸ் பண்ணிக்கோ" என்று மட்டும் சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியேறினான் செந்தமிழ்ச் செழியன்.
"யாழி யாழி" என்று அழைத்தபடி நேராக தங்கையின் அறைக்குச் சென்றவன், அங்கு அவளும் குளித்துக் கொண்டிருப்பதை அறிந்து, "சிட்" என்று அன்னையை அழைக்க, சமையலில் மும்முரமாக இருந்தவரோ சிறிது நேரம் பொறுக்குமாறு கூற, அங்கே குளித்துக் கொண்டிருக்கும் மனைவியை எண்ணி, சில நொடிகளுக்குக் கூட பொறுமையில்லை விரிவுரையாளனுக்கு.
அவனே அங்கிருந்த சிற்பியின் அலுமாரியைத் திறந்தவன், அவளுக்கு உடையும், துண்டும், இன்னும் சில ஒப்பனைப் பொருட்களும் சேர்த்தே எடுத்துச் சென்று, தன் அறைக்குள் வைத்து விட்டு, துவாலையை மட்டும் குளியலறைக் கதவில் மாட்டி, கதவையும் லேசாகத் தட்டிவிட்டுச் சென்றான்.
சில நொடிகள் கழித்தே குளித்து முடித்து கதவைத் திறந்தவளும், தோழிதான் அனைத்தும் எடுத்து வைத்ததாக எண்ணி, "இன்னிக்கு என்ன எள்ளுன்னா எண்ணெயா நின்னுருக்கா அரிசி மூட்டை. பார்ரா என் டிரஸ்ஸ அயர்ன்லாம் பண்ணி இருக்கா? ஒருவேளை அவ அண்ணா சொன்னதால பண்ணிருப்பாளோ?" என்று தோழியை நினைத்துச் சிரித்தபடியே, கல்லூரிக்குச் செல்ல ஆயத்தமாகி வெளியே வர,
"அண்ணா ரூம்லயே குளிச்சிட்டியாடி?" என்று வினவிக் கொண்டே, யாழினியும் அப்பொழுது தான் தலையை துவட்டியபடி, சிற்பியை நெருங்கி வந்தாள்.
அதில் அவளைக் குழப்பமாகப் பார்த்து, "இவ்ளோ நேரம் நீ குளிச்சுட்டா இருந்த?" என்று கேட்டவளுக்கு, அவளும், "ம்ம்ம்"
என்று தலையாட்டினாள்.
'அப்டின்னா என்னோட டிரஸ் எல்லாம் யாரு அயர்ன் பண்ணி எடுத்து வச்சா?' என்ற கேள்விக்கு மீனாட்சியை பதிலாய் எண்ண முடியாதபடி, அவருக்கு இஸ்திரி சரியாக செய்யத் தெரியாது என்ற விடயமும் ஞாபகம் வர,
"அப்போ ட்ரைனர்? ட்ரைனரா என்னோட டிரஸ் எல்லாம் அயர்ன் பண்ணி வச்சது? ஆனா ஏன்?" என்று அவள் விழிகளில் நின்று சட்டென்று நீரும் துளிர்த்து விட்டு இருந்தது.
என்ன தான் வசதியான வீட்டில்,
ஒரே செல்ல மகளாய் பிறந்து வளர்ந்தாலும், கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரர்களும் இருந்தாலும், சற்று மாடர்ன் அன்னையான சுசீலாவின், மேல் வளையாத வளர்ப்பில் பள்ளி படிப்பு முடிவடைந்த காலங்களிலே, அவள் வேலைகளை அவளே செய்து பழகிக் கொண்டிருந்தாள் சிற்பிகா தேவி.
திருமணம் முடிந்த பின்னரும் கூட, யாழி ஒரு நாளைக்கு அவளுக்குச் செய்தால், அடுத்த நாள் அவளுக்கு இவள் திருப்பிச் செய்து விடுபவள், யாரிடமும் பெரிதாக உதவி பெற்றுப் பழக்கம் கூட இல்லை.
ஆனால் அவள் கணவனோ, அவளை கரம் பிடித்த நாளில் இருந்தே, அவளுக்கு செய்து கொண்டிருப்பவை எல்லாம் சாதாரண உதவிகள் அல்லவே.
எந்த பெரிய கல்லூரியில் எத்தனை பெரிய விரிவுரையாளன் அவன். வீட்டிலேயும் தாய்க்குத் தலைமகனாய் அனைத்து பொறுப்புகளும் கொண்டு, இருப்பவனுக்கு தினம் தினம் சேவகம் செய்ய, அவன் அன்னையும் தங்கையும் சித்தமாக இருக்க, அவனோ என் உடைகளை அல்லவா தேய்த்து வைத்து இருக்கின்றான்.
'காலை அர்ஜுன் அனுப்பிய பரிசு பற்றிக்கூட இன்னும் அவளிடம் எதுவும் கேட்டு இராதவன், அவளுக்காக அவள் பெற்றோரிடமே சண்டை கூட பிடித்தானே.
எந்தப் பெண்ணிற்குக் கிடைப்பான்
இதுபோலான ஒரு கணவன்?' என்று அவள் உள்ளமெங்கும் விவரிக்க இயலாத சிலிர்ப்பு ஒன்று பரவ, அவன் அறையை ஏறிட்டுப் பார்த்தபடியே யாழினியோடு உணவுன்ன அமர்ந்தாள் சிற்பி.
"நல்லா தூங்கிட்ட போலம்மா" என்றபடியே மீனாட்சி பரிமாறிய உணவில் கை வைத்தவளுக்கு, கணவன் இன்னும் வராததாலோ என்னவோ, அந்த உணவு வாய்க்குச் செல்லவே மறுக்க, "ஹான்த்தை" என்று எழுந்து கொண்டவள்,
"நா போய் ட்ரைனர் ரெடியான்னு பாத்துட்டு வர்றேன்" என்று மீனாட்சியின் பதிலுக்குக் கூடக் காத்திராமல், செழியனின் அறைக்குள் நுழைந்து இருந்தாள்.
அங்கோ அப்பொழுது தான் குளித்து விட்டு வந்தவன், இடையில் கட்டிய வேஷ்டியும் வெற்று மேனியுமாய் நின்று இருக்க, அதைக் கண்டதும் பக்கென்று திரும்பிக் கொண்டவள்,
"சாரி சாரி சாரி சார்" என்று படபடத்து சென்ற வேகத்திலே வெளியேற முனைந்தாள்.
அதற்குள், "ஹேய் கேர்ள்" என்று அவள் கையைப் பற்றி நிற்க வைத்தவன், "என்ன விஷயம்னு சொல்லிட்டுப் போ" என்று அவள் முன்னே வந்து நிற்க,
இப்படி ஒரு கோலத்தில் இத்தனை அருகில் அவனை இன்று தான் முதன்முறை பார்ப்பவளுக்கு, தான் எதற்கு அவனைத் தேடி வந்தோம் என்ற விஷயமே மறந்து விட்டு இருந்தது.
"அது அது அது" என்று திணறியவள், "ஹான், அத்தை உங்களை சாப்பிட கூப்ட்டாங்க" என்று தலையை குனிந்தவாறே சொல்ல,
அவளின் உணவுகள் ஒட்டி இருந்த கரத்தைப் பார்த்தபடியே, "அத்தை மட்டும் தான் கூப்பிடறாங்களா? என்ன நிமிந்து பார்த்து சொல்லுங்க தேவி" என்று அவளை நெருங்கி வந்து கேட்டான் கணவன்.
ஆடவன் நின்று இருந்த கோலத்திலும், தங்கள் இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்திலும்,
இமைகளை படபடவென்று அடித்து, அவன் விழிகளை ஏறிட்டுப் பார்த்தவள், "நானும் தான்" என்று மெல்லிய குரலில் சொல்லி,
"ஆனா நீங்க ஏன், என்னோட டிரஸ் எல்லாம் அயர்ன் பண்ணி வச்சீங்க?" என்று அவள் கேட்க வந்த கேள்வியும் கேட்டு இருந்தாள்.
பெண்ணின் அந்தப் பார்வையில் கரையத் தொடங்கியவனும்,
"நீங்க ஏன்னா, என்ன அர்த்தம் கேர்ள். நா உன்னோட கணவன். நீ என்னோட மனைவி, நா உனக்கு செய்யாம, வேற யாரு செய்வா?" என்று கேட்டிருக்க,
அதில் முற்றும் முழுதாய் உருகிப் போனவளும், "உங்களோட இந்த அன்புக்கு, நா என்ன கைமாறு செய்ய போறேன்னே தெரியல ட்ரைனர்" என்று அழும் நிலைக்கே சென்று இருந்தாள்.
"அடடா இதுதானே வேணாம்னு சொல்றது. ஆனா ஊன்னா டேமை தொறந்துர்ரிங்களே தேவி மேடம்" என்று அவளை இன்னும் கொஞ்சம் தன்னருகில் இழுத்து, அவள் கண்களை மெல்லத் துடைத்து விட்டான்.
அதில் இன்னுமே இதம் கூட, இமைகளை மூடித் திறந்தவளைக் கண்டு, அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த இயலாதவன்,
"டோன்ட் க்ரை தேவிமா" என்று அவள் பிறை நெற்றியில் சிறு முத்தமும் பதித்தான்.
இருவருக்கும் இடையிலான முதல் முதல் முத்தம் அது. ஆடவனுக்கு இன்பத்தின் நுழைவாயிலாய் இன்னுமின்னும் தேட, பெண்ணுக்கோ இமைகள் இரண்டும் பட்சியின் சிறகாய் மாறியது.
அதில் இன்னுமே விழிகளை விரித்துப் பார்த்தவளிடம், "நீதான என்ன கைமாறு செய்யன்னு கேட்ட, அதுக்கான டெமோ தான் இது" என்று கண்களைச் சிமிட்டிச் சொன்னவன், அவளை தலையூடு பாதம் ரசனையாகப் பார்த்து, "சரி சொல்லு கேர்ள், அக்சசரீஸ் எல்லாம் சரியா, மேட்சிங்கா எடுத்து வச்சிருந்தேனா?" என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான்.
அதில் சற்று முன்னர், அவன், அவளுடைய உள்ளாடைகள் தொடக்கம், அனைத்தும் ஒரே போல நிறத்தில் எடுத்து வைத்திருந்தது சிந்தையில் உதிக்க, இக்கணம் அவன் பார்வையும், வார்த்தையும் வேறு என்னென்னவோ செய்ய, "என்ன, என்ன, என்ன மேட்சிங்? என்ன கேக்குறீங்க நீங்க?" என்று வெகுவாகப் பதறினாள் பாவை. வெண்ணிலா முகமும் குங்குமமாய் நிறம் மாறிப் போனது.
மனைவியின் அந்த பதட்டத்தில், "என்ன கேட்டுட்டேனாம்?" என்று வாய்விட்டே சிரிக்கத் தொடங்கியவன், "பொட்டு, கம்மல், ரப்பர்பேண்ட் இதெல்லாம் டிரஸ்கு மேட்சா இருந்ததான்னு கேட்டேன்.
நீ என்ன நினைச்ச கேர்ள்?" என்று புருவத்தையும் ஏற்றி இறக்க,
'கடவுளே, செத்த நேரத்தில எப்டி எல்லாம் பதற வச்சிட்டாங்க. ட்ரைனர் பொல்லாத ட்ரைனர்!' என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டவள், "நீங்க முதல்ல சாப்பிட வாங்க. காலேஜ்க்கு டைம் ஆச்சு!" என்று மட்டும் சொல்லிவிட்டு, சிட்டாக ஓடி மறைந்தாள் சிற்பிகா தேவி.
அன்று மட்டுமல்லாது, அடுத்து வந்த நாட்களும், தம்பதியர் இருவருக்குமே ஒருவிதமான, இனிமையான மனநிலையிலே நாளும் பொழுதும் கழிய, அவர்களையும் அறியாமலே, இருவருள்ளும் நேசப் பூக்களும் மலர்ந்து மணம் பரப்பத் தொடங்கியது.
என்னதான் மனைவி மீது இருக்கும் நம்பிக்கையில், செழியன், அர்ஜுன் அனுப்பிய பரிசு பற்றி ஒன்றுமே கேட்டுக்கொள்ள வில்லையானாலும், அங்கே வரவேற்பரையின் அலுமாரியில், ஒய்யாரமாக அமர்ந்து இருந்த பார்சலைப் பார்க்கப் பார்க்க, சிற்பிக்குத் தான் உள்ளுக்குள் வெகுவாக உறுத்தியது.
இதைப்பற்றி கணவனிடம் பேசித் தீர்க்காவிட்டால், நிச்சயம் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்று தோன்றியதில், அங்கிருந்த பார்சலை கையில் எடுத்துக் கொண்டவள், கணவனின் அறைக் கதவையும் தட்டி இருந்தாள் சிற்பி.
Comments
Post a Comment