நூலகம் -17.1

இருவரும் எண்ணிக்கூடப் பார்த்திடாத நெருக்கமான அந்த பேருந்துப் பயணமானது, வீட்டிற்கு வந்தும் கூட அவர்களை கிறக்கத்திலே ஆழ்த்தி இருக்க, இன்னமும் ஒருவரை ஒருவர் பார்வையாலே பருகியபடி தான் தங்களை வரவேற்ற மீனாட்சிக்கு பதில் கூறினர் சிற்பியும் செழியனும்.

இரவு சென்னையில் இருந்து கிளம்பியவர்கள், அதிகாலை நேரம் தான் வீட்டை வந்து அடைந்ததால், 
மீனாட்சி சுடச்சுடக் கொடுத்த குளம்பியோடு, நீள்விருக்கையில் அமர்ந்து, தங்கள் இணையின் அருகண்மையும் ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்க, பயண விபரம் எல்லாம் கேட்டு விசாரித்துக் கொண்ட மீனாட்சியும் "சிற்பிமாக்கு யாரோ பிரண்ட் கிப்ட் அனுப்பி இருப்பாங்க போலப்பா, காலேஜ் அட்ரஸ்கு. நேத்து நைட்டு தான் வாட்ச்மேன் வந்து கொடுத்துட்டுப் போனாரு" என்று சிறிதான பார்சல் ஒன்றை எடுத்து வந்து அங்கிருந்த மேசையில் வைத்தார் மீனாட்சி.

எப்படியும் கடைநிலை ஊழியர்களிடம் உண்மையை மறைக்க முடியாது என்று புரிந்ததால், கல்லூரி காவலாளி, மற்றும் சிற்றூழியம் செய்யும் சில நபர்களிடம் மட்டும், தங்கள் திருமண விஷயத்தை, முன்பே கூறி இருந்தான் செழியன்.
அதனால் தான் நேற்று 
கல்லூரிக்கு வந்த பார்சல் நேராக செழியனின் வீட்டிற்கே வந்து இருந்தது.

மீனாட்சியின் கூற்றில் இருவரின் பார்வையும் இருவரையும் விட்டு விலகி, அந்த பார்சலின் மேல் படிந்தாலும், அதை எடுத்து பிரித்து பார்க்கும் அவசரமெல்லாம் இருவருக்குமே இருக்கவில்லை. இன்னுமே ஒருவித மோனநிலையில் தான் ஆட்கொள்ளப்பட்டு இருந்தனர் செழியனும் சிற்பியும்.

ஆனால் 'சிற்பியோட பிரண்ட்டு' என்று அன்னை சொன்னதைக் கேட்டு, "அது யாருடி எனக்குத் தெரியாத பிரண்டு?" என்று வேகமாக பார்சலைக் கைப்பற்றி, அனுப்பியவரின் பெயரை வாசித்தவள், அதில் இருந்த அர்ஜுன் என்ற பெயரைக் கண்டு அண்ணா என்று அலறி இருந்தாள் யாழினி.

அதில் அனைவரின் கவனமும் அவள் மீது திரும்ப, அவள் அதிர்ந்த முகத்தைக் கண்டு, சிற்பியும் குழப்பமாகப் பார்க்க, "பார்சல் எங்கிருந்து வந்திருக்கு யாழி?" என்ற செழியனின் கேள்வியில், "அர்ஜு, அர்ஜுன், அர்ஜுன்கிட்ட இருந்து வந்திருக்குண்ணா" என்று சிற்பியையும் பார்த்தபடியே எச்சில் கூட்டி விழுங்கினாள் யாழினி.

அர்ஜுன் என்ற பெயரைக் கேட்டதும், அத்தனை நேரம் இருந்த மனநிலை மாறி யாரோ காலில் சுடுநீரை கொட்டியதைப் போல், பெண்ணவள் சட்டென்று எழுந்து நின்றிருக்க, மனைவியவளின் மயக்கத்தில் இருந்து வெளிவரவே விரும்பாதவனோ, அந்த அர்ஜுன் யார் என்று யோசிக்கக் கூடத் தோணாமல் தான் அமர்ந்திருந்தான்.

"அர்ஜுன் னா உங்க கூடப் படிக்கிற பையனா யாழி? அவன் எதுக்கு திடு திப்புன்னு கிப்ட் எல்லாம் அனுப்பி இருக்கான். சிற்பிமாக்கு பிறந்தநாள் கூட இல்லையே இப்போ?" என்று மீனாட்சிதான் மகளை நெருங்கிக் கேட்டார். அவருக்கும் அவன் பெயர் எல்லாம் தெரிந்திருக்கவில்லை

அதே கேள்வி பாவனையோடே செழியனும், தங்கையை ஏறிட்டுப் பார்க்க, "அர்ஜுன், அர்ஜுன் தான் மா சிற்பி, சிற்பியோட... அந்த எம் பி  பையன். காலேஜ் சீனியர்" என்று ஒருவழியாக சொல்ல வந்ததை சொல்லி முடித்தவள் தோழியைதான் தான் கலக்கமாகப் பார்த்து நிற்க, அத்தோழியோ, கணவனைதான்
விழி எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது தான் மகனோடு சேர்த்து அன்னைக்குமே அர்ஜுன் யாரென்று புரிய, "என்னடி யாழி கொடுமை இது? நிஜமாவே அந்தப் பையன் தான் இந்த பார்சல அனுப்பி இருக்கானா? இவ்ளோ நாளா இல்லாம இப்ப எதுக்குடி இதெல்லாம் அனுப்பி இருக்கான்?. வன பத்ரகாளி என்னம்மா இது சோதனை? செழியா என்னப்பா இது புது பிரச்சனை?" என்று அவர் பாட்டில் படபடக்கவே துவங்கி விட்டார் மீனாட்சி.

அர்ஜுன் என்ற பெயரைக் கேட்டே ஏற்கனவே அதீத அதிர்ச்சியில் இருந்தவளுக்கு, மீனாட்சியின் படபடப்பு வேறு மென்மேலும் கலக்கத்தைக் கொடுக்க, தலையும் புரியாது வாலும் புரியாது, கணவனைத் தான் பார்த்து கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள் சிற்பி.

ஆனால் அவனோ, முகத்தில் எந்த உணர்வும் காட்டாது, யாழினியிடம் இருந்த அந்த பார்சலை வாங்கிப் பார்க்க, "அன்புள்ள ஸ்வீர்ட் ஹாட்டிற்கு, உன் அர்ச்சுனரின் அன்புப் பரிசு" என்று கொட்டை எழுத்துக்களில் இருந்த ஆங்கில வார்த்தைகள், அவன் கைகளையும் தாடையையும் ஏகத்துக்கும் இறுகச் செய்தது.

அதைப் பார்த்திருந்த சிற்பிக்கோ இதயம் தொண்டை குழியில் வந்து துடிப்பது போல் இருக்க, செய்வதறியாது கலங்கி நின்றவள், "ட்ரைனர், நா" என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.

அச்சமயம் சரியாக, "என்ன சொல்றீங்க சம்பந்தி? எந்த பையன் பார்சல் அனுப்பி இருக்கான். அந்த எம் பி பையனா? என்ன இருக்கு அந்த பார்சல்ல?" என்று கேள்விகளை அடுக்கியபடி, வீட்டிற்குள் விரைந்தனர் சிற்பியின் பெற்றோர்.

என்னதான் மகளை சென்னைக்கு அழைத்துப் போக வேண்டாம் என்று சொல்லி இருந்தாலும், அங்கு நடந்த போட்டியில் மகள் இரண்டாவது பரிசு பெற்றதில், அகம் மகிழ்ந்து போனவர்கள், மகளையும் மருமகனையும் பாராட்ட வென்றே அதிகாலையே கிளம்பி வந்திருந்தனர்.

ஆனால் அவர்கள் செவியில் விழுந்த செய்தியதோ, அவர்கள் வந்த காரணத்தைக் கூட, முற்றிலும் மறக்க வைக்க, வேகவேகமாக மகளிடம் ஓடி, "என்ன சிற்பி இதெல்லாம்? இவ்ளோ நாளா இல்லாம அந்த பையன் இப்ப எதுக்கு இதெல்லாம் அனுப்பி இருக்கான்? நேத்து சென்னைல ஏதும் நீ அவனை போய் பாத்தியா? இல்ல அவனோட பேசினியா?" என்றெல்லாம் பதட்டத்தில் கண்டபடி கேள்விகளை அடுக்கியவர்களைப் பார்த்து அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்று விட்டாள் சிற்பிகா தேவி.

படிக்கும் காலத்தில், அழகிலும், ஆண்மையிலும் சிறந்தவனாய் தோன்றியவன் மீது சிறிதாக ஈர்ப்புக் கொண்டு, சில நாட்களே ஆகினும், அவனை தன் பின்னால் சுற்ற அனுமதித்து, அவளும் வயதிற்கே உரிய அறியாமையில் சில பல தவறுகளை செய்து விட்டாள் தான். ஆனால் அதற்காக எல்லாம் தன் மகள் என்றும் பாராமல், தன்னை பெற்றவர்களே இப்படி எல்லாம் சந்தேகிக்கலாமா என்னை?' என்று அவள் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகளும் கன்னத்தில் இறங்கியது.

தன்னைப் பெற்றவர்களே இப்படிப் பேசினால், கணவனிடமும், அவன் அன்னையிடமும், எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் என்ன சொல்லி நிரூபிப்பேன் என்று அவள் உள்ளமும் ஊமையாய்க் கதறியது.

ஆனால் மகளின் அந்த உள்ளக் குமுறல் எதுவும் அவள் பெற்றோருக்கு இம்மியும் புரியவில்லை போல.

"இவ்ளோ கேக்குறோமே, எதுக்காச்சும் பதில் சொல்றாளா பாரு. நீதான் அந்த அர்ஜுன கிப்ட் அனுப்ப சொன்னியா? உனக்கு ஏன்டி புத்தி இப்டி போகுது. எங்கள நிம்மதியாவே இருக்க விடமாட்டியா? உன்னால, ஒருதடவை இந்த மனுஷன் சாக பொழைக்க விழுந்து எழுந்தது பத்தலியா?" என்று அர்ஜுன் பரிசு அனுப்பியதற்கு அவள் தான் முற்றிலும் காரணம் என்பது போல், இருவரும் மாறி மாறிப்  பேசியவர்களைக் கண்டு, "சம்பந்தி போதும் சம்பந்தி. சிற்பிமா அப்டி எல்லாம் பண்ணி இருக்காது. நம்ம புள்ளய நாமே இப்படி பேசினா எப்படி சம்பந்தி?" என்று மீனாட்சி தான் முன்னே வந்து தடுக்க முனைந்தார்.

அதில் சிற்பியின் விழிகள் மென்மேலும் கண்ணீரைச் சொரிய,
"சிற்பி அழாதடி. ஆன்டி ஏதோ பதட்டத்துல பேசுறாங்க" என்ற யாழினியும் தோழியைத் தேற்ற,

"எங்களுக்கு என்னமோ நம்பிக்கை இல்ல சம்பந்தி. அன்னிக்கு கோவில்ல அவ்ளோ பேர் முன்னாடி, அவன் கையை பிடிச்சி நின்னவ தானே இவ. இப்ப மட்டும் இதை பண்ணிருக்க மாட்டான்னு என்ன நிச்சயம். இன்னும் அந்த பையன் கூட காண்டாக்ட்ல ஏதும் இருக்காளோ என்னவோ யாருக்குத் தெரியும்!" என்று அவள் தங்களின் செல்ல மகள் என்றும் பாராமல் வாய்க்கு வந்ததை பேசியவர்களின் பேச்சில், சிற்பி அப்படியே சுவரோடு சரிந்து, அழத் தொடங்க,

"ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா!" என்ற கர்ஜனையோடு மனைவியின் பெற்றோரை நெருங்கி இருந்தான் செந்தமிழ்ச் செழியன்.

தொடர்ந்து, "இன்னும் ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை என் மனைவியை பத்தி பேசுனீங்கன்னா, அவளை பெத்தவங்கன்னு கூட பாக்க மாட்டேன்." என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன், "எவனோ ஒருத்தன் என் சிற்பி பேருக்கு பார்சல் அனுப்புனா, அதுக்கு அவதான் பொறுப்பா? இவ்ளோ வருசமா அவளை பெத்து வளர்த்து ஆளாக்கி இருக்க உங்களுக்கு, அவ இப்டிலாம் பண்ணிருக்க மாட்டான்னு கொஞ்சமும் தோணலியா? இப்டி அவளை அவமானப் படுத்துறீங்க. பெத்த மகமேல கூட துளி நம்பிக்கை இல்லாம, நீங்கல்லாம் என்ன பெரிய காலேஜ் சேர்மன். ச்சீ ச்சீ, உங்கமேல இருந்த மரியாதையே சுத்தமா போயிடுச்சு சார் எனக்கு" என்று ஆத்திரம் தலைக்கேறி அவனும் என்னென்னவோ பேசிக்கொண்டு செல்ல,

"செழியா என்னப்பா இது. என்ன இருந்தாலும், அவரு உங்க மாமனாருப்பா. கொஞ்சம் பொறுமையாப் பேசு" என்று மீனாட்சி தான் மகனின் கையைப்பற்றி அமைதி படுத்த முயன்றார்.

அதில் சற்றே இயல்பிற்குத் திரும்பியவனும், "பின்ன என்னம்மா, நானும் ஆரம்பத்தில இருந்தே பாக்குறேன். அவ ஏதோ கொலை குத்தம் பண்ணிட்ட போல, அவளை வார்த்தையாலே நோகடிக்கிறாங்க" என்று சீறியவன், "என் பொண்டாட்டிய தப்பா பேசுற நோக்கத்தோட, அவங்களை இங்க வரவேண்டாம்னு சொல்லுங்கம்மா" என்று மட்டும் கூறிவிட்டு விறுவிறுவென்று மனைவியை நோக்கிச் சென்று இருந்தான்.

சென்ற வேகத்திலே,  "தொட்டதுக்கெல்லாம் இப்படித்தான்  உக்காந்து அழுவாங்களா கேர்ள்?.
நீ எந்தத் தப்பு பண்ணாதப்போ எதையும் தைரியமா நின்னு ஃபேஸ் பண்ண வேண்டாமா? உனக்காக எந்நேரமும் ஒருத்தன் உன் கூடவே இருந்து உன்ன பாதுகாக்க, இது ஒன்னும் சினிமா இல்ல கேர்ள். வாழ்க்கை. இங்க நமக்காக நாமளே தான் போராடணும். நம்மளை நோக்கி வீசப்படுற குற்றச்சாட்டுக்கு, நாமதான் எதிர்த்து நின்னு பதில் கொடுக்கணும். புரிஞ்சுதா?" என்று அதட்டியவன், அங்கு தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த மனைவியின் தோளைப்பற்றித் தூக்கி, "வா என்கூட" என்று அவளை கையோடு இழுத்துக் கொண்டு தன் அறைக்குள்ளும் சென்று மறைந்தான்.

அவன் சென்ற சிறிது நேரத்தில், யாழினியின் எண்ணிற்கு, தானும், மனைவியும், சில மணி நேரங்கள் ஓய்வு எடுத்துவிட்டு கல்லூரிக்குக் கிளம்பி விடுவதாகவும், பெரியவர்கள் மூவரையும் பார்த்து கொள்ளுமாறும் ஒரு குறுஞ்செய்தி தான் வந்து சேர்ந்தது.

மகள் படித்துச் சொன்ன குறுஞ்செய்தியை விடவும், மகன்
தன் மனைவிக்காக அவளை பெற்றவர்களிடமே சண்டையிட்டு, என்றுமில்லா திருநாளாய் அவளை தன் அறைக்குள் வேறு அழைத்துச் சென்றதில், அத்தனை ரணகளத்திலும் சிறு குதூகலமும் பிறந்தது மீனாட்சிக்கு.

அதில், சம்பந்திகள் இருவரையும்
அவர்களுக்கு ஏற்றபோல பேசி, சமாதானம் செய்து, குடிப்பதற்கும் கொடுத்து அனுப்பி வைத்தவர், 

"ரொம்ப நாள்ளாம் இல்ல யாழி. கூடிய சீக்கிரமே எனக்கு, இந்த யோகா, டயட், எக்ஸசைர்ஸ் ல எல்லாம் விடுதலை கிடைக்கப் போகுது. உன் அண்ணன் அவன் பொண்டாட்டிய, பொண்டாட்டின்னு சொல்ல ஆரம்பிச்சுட்டான். ரூம்குள்ள வேற கூட்டிப் போயிட்டான்" என்று மகளிடம் வாயெல்லாம் பல்லாகக் கூறிவிட்டு அவர்களுக்கான காலை, மதிய உணவுகளையும் மகிழ்ச்சியாகவே தயாரிக்கச் சென்றார் மீனாட்சி.

அதைப்பார்த்து, "இந்த அம்மாவோட!" என்று தலையில் அடித்துக் கொண்ட யாழினியும், 'ராம் சார் இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பாரா?' என்று தனக்குத்தானே பேசியபடி கைபேசியோடு தனதறைக்குள் புகுந்து கொண்டாள்.

அங்கோ கணவனின் இழுவைக்கு கட்டுப்பட்டு, அவன் அறைக்குள் வந்தும் கூட, இன்னும் தேம்பிக் கொண்டே கதவோரத்தில் நின்றிருந்தவளைப் பார்த்து, தலையை இருபுறமும் ஆட்டிச் சலித்தவன், "தேவிமா..." என்று சற்று உரக்கவே விளித்து, அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்று தன் படுக்கையில் அமர வைத்தான் செழியன்.

பின் கலைந்து கிடந்த அவள் முடிக்கற்றைகளை எல்லாம் காதோரம் ஒதுக்கி விட்டு, கண்ணீரையும் துடைத்து விட்டவன், அப்படியே கைகளை விலக்காமல், அவள் கன்னங்களைத் தாங்கி, "என் தேவி நான் சொன்னா கேப்பாங்களா மாட்டாங்களா?" என்று அழுத்தமான குரலில் கேட்டான்.

ஆடவனின் அந்தச் செய்கைகளே பெண்ணின் அழுகையை ஓரளவு நிறுத்தி இருக்க, "கே கே கேப்பேன்" என்று திக்கி திணறி பதில் கூறியவளை, "குட் கேர்ள்" என்று தலையில் கை வைத்து ஆட்டி விட்டவன், "ஸ்டேட் லெவல் போட்டில 2ன்ட் ப்ரைஸ் வின் பண்ணதால, நமக்கு சின்ன செலிப்ரேசன்க்கு ஏற்பாடு பண்ணிருக்காங்க நம்ம காலேஜ்ல. அதனால இன்னிக்கு லீவுகூட போட முடியாது. நாம காலேஜ் கிளம்புறதுக்கு, இன்னும் மூனு மணி நேரம் தான் இருக்கு கேர்ள். பஸ்ல வந்தது வேற ஒரே டயர்டா இருக்கு. இப்ப நீ என்ன செய்றன்னா கொஞ்சம் முன்ன நடந்த எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு, அமைதியா படுத்து கொஞ்சம் நேரம் தூங்கி எழும்புற. மத்த எல்லாம் அப்றம் பேசிக்கலாம். ஓகே" என்று மென்மையான குரலில் அவள் விழிகளைப் பார்த்துச் சொன்ன கணவனின் கரிசனையில் அவளுக்கோ மென்மேலும் கண்ணீர் துளிகள் பொங்கிப் பெறுக,  "சார் நா நா, எந்த தப்பும்" என்று ஏதோ சொல்ல முயன்றாள் சிற்பி.

அதற்குள், "ஷ் ஷ், அதான் அப்றம் பேசிக்கலாம் சொல்றேன்ல தேவி" என்று அவள் வாயில் விரல் வைத்துத் தடுத்தவன், "யார், என்ன சொன்னாலும், உன்மேல எந்த தப்பும் இல்லைன்னு எனக்குத் தெரியும் கேர்ள். நிம்மதியா தூங்கு" என்று மீண்டும் அவள் தலை தடவிச் சொன்னவன், அவனே அவள் தோளைப் பற்றி தலையணையிலும் படுக்க வைத்தான்.

ஆசையாசையாய் தன்னை பெற்று வளர்த்த பெற்றோரே தன் பேச்சை நம்பாத ஒரு விசயத்தில், நீ எந்த தவறும் செய்து இருக்க மாட்டாய் என்ற கணவனின் அந்த வார்த்தைகள், அவள் மனதில் அவனுக்கான இடத்தை பல மடங்கு உயர்த்தி இருந்தது.

அதில், அவன் கரத்தை வேகமாகப் பற்றிக் கொண்டவள், "கொஞ்சம் நேரம் உங்க கையை பிடிச்சிக்கட்டுமா ட்ரைனர்?" என்று கரகரத்த குரலில் கேட்டிருக்க,

சிறு புன்னகையை உதிர்த்தபடி,
"நீ காலம் முழுசும் புடிச்சிக்கிறதுக்காகவே காத்திட்டு இருக்க கை தேவிமா இது." என்று குரலில் நேசம் வழியச் சொன்னவன், அவளை லேசாக இழுத்து தன் நெஞ்சில் சாய்த்தபடியே அவனும் படுத்து, விழிகளை இறுக்கமாக மூடிக் கொண்டான்.

Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️