நூலகம் -16.1
சற்று முன்னர் பெண்ணின் கால்கள் தான் கணவன் அறையில் இருந்து வந்ததே ஒழிய, அவள் மனம் முழுதும், அவன் கூறிய வார்த்தைகளிலும், தன் கன்னம் தீண்டிய அவன் ஸ்பரிசத்திலுமே சிக்கிக் கொண்டு தவிக்க, 'இப்ப என்ன சொல்ல வர்றாங்க ட்ரைனர்? வீட்லயும் ஹஸ்பண்ட்ன்னு ஞாபகம் வச்சுக்கோன்னா என்ன அர்த்தம்?' என்று அடுத்தடுத்த நாட்களும் அதே நினைவாகவே சுற்றிக் கொண்டு இருந்தாள் சிற்பி.
தோழியின் காதலுக்காக ஆரம்பித்து வைத்த கணவனுடனான நெருக்கம், தற்சமயம் அவனை தன்னவன் என்று எண்ணும் அளவிற்கு வளர்ந்து விட்டு இருக்க, இப்பொழுது எல்லாம் மீனாட்சியின் உந்துதல் இல்லாமலே அவன் மனைவி என்ற முறையில் அவனுக்குத் தேவையானவற்றை கவனிக்கத் துவங்கி இருந்தாள்.
அவள் ஓடி ஓடி அனைத்தும் செய்வதை கவனித்து இருந்த மீனாட்சியும், "சீக்கிரம் நான் பாட்டி ஆயிடுவேனாடி?" என்று வாயெல்லாம் பல்லாக மகளைப் பார்த்துக் கேட்க,
"நானும் அப்டித்தான்மா நினைக்கிறேன்" என்று பதில் சொன்னாள் யாழினி.
"புள்ளை குட்டின்னு ஒன்னு பெத்த அப்றமாச்சும் உன் அண்ணனோட யோகா அலப்பறைல இருந்து தப்பிப்பேன்னு கனவு கண்டு கெடக்கேன். நீதேன்மா வன பத்ரகாளி என் வேண்டுதலை நிறை வேத்தனும். உனக்கு எலுமிச்சை மாலை போடுறேன்மா.' என்று மகளிடம் தொடங்கி, தெய்வத்திடம் முடித்தார் மீனாட்சி.
அடுத்தடுத்த நாட்களும் அப்படியே நகர, கல்லூரி வகுப்பிலும் கூட, அவன் பாடம் எடுக்கும் சமயம், இவள் அவ்வப்போது அவனை ரசனையாகப் பார்ப்பதும், அதைக் கண்டு கொள்ளும் அவன் என்னவென்று புருவம் தூக்கிக் கேட்பதும், அதில் இவள் சட்டென தலை குனிந்து கொள்வதும், அச்செயலில் அவன் உள்ளம் கடிவாளம் தாண்டத் துடிப்பதும் என்று, நாளோரு கண்ணாமூச்சி தான் ஆடிக் கொண்டிருந்தனர் செழியன் சிற்பிகா தம்பதி.
அப்படியொரு நாளில் தான், கையில் ஒரு வெள்ளைநிற படிவத்தோடு, சிற்பியின் வகுப்பைத் தேடி வந்திருந்தான் செழியன்.
அந்த நேரம் வேறு ஒரு விரிவுரையாளரின் வகுப்பாக இருந்ததால், அவனை அங்கு எதிர்பாராத மாணவர்கள், "ஹேய் ட்ரைனர்டி. ட்ரைனர் வர்றாரு" என்று முணுமுணுத்தபடி அவரவர் இருக்கையில் வந்து அமர,
"ஹாய், பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ், ப்ளீஸ் லிசன் டூ மீ" என்று விட்டு கையில் இருந்த படிவத்தை அங்கிருந்த தாள்கள் ஒட்ட வைக்கும் பலகையிலும் ஒட்ட வைத்தான்.
பின், மாநில அளவிலான தமிழ் கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் இன்னும் பத்து தினங்களில், சென்னையில் நடக்க இருப்பதாகவும், அதில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும், விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அவனே அனைத்து உதவிகளும் செய்வதாகவும் அறிவித்தான்.
அதில் மாணவர்கள் எல்லாம், "சூப்பர் சார். செம்ம சார். எப்போ சார் போட்டி?" என்று ஆர்ப்பரிப்புச் செய்தவர்கள், போட்டி பற்றிய விபரங்களையும் ஆர்வத்துடன் கேட்கத் துவங்கினர்.
அனைவருக்கும் உரிய பதில்களைக் கொடுத்தாலும், அவன் விழிகள் என்னவோ, போட்டி என்று அறிவித்தும் அமைதியாகவே அமர்ந்து இருந்த மனைவியின் மீது தான் படிந்து படிந்து மீண்டது.
தமிழ் கதை, கட்டுரை, பேச்சு, எழுத்து என்று தமிழ் மொழிக்கான போட்டிகள் எங்கு நடந்தாலும், நான் நான் என்று முந்திக் கொண்டு பெயர் கொடுப்பவள் அல்லவா அவன் மாணவி சிற்பிகா.
அண்ணனின் பார்வை உணர்ந்த யாழினி தான், "டீ சிற்பி, தமிழ் கட்டுரைப் போட்டியாம்டி. எல்லாரும் பேர் குடுக்குறாங்க பாரு. நீ போய் கொடுக்கலியா?" என்று கேட்க,
"இல்லடி வேண்டாம். நா எதுலயும் கலந்துக்கிற மூடுல இல்ல!" என்று மட்டும் சொன்னாள் சிற்பி.
அதில் அவளை குழப்பமாகப் பார்த்தவளும், "ஏன் டி இப்டி சொல்லுற? அண்ணா சொல்றதப் பாக்குறப்போ, இது ரொம்பப் பெரிய காம்பிடேசனா தெரியுது. உனக்கு இருக்க திறமைக்கு, இது நல்ல வாய்ப்புடி" என்று யாழினியும் ஏதேதோ எடுத்துச் சொல்ல,
ஏனோ சிற்பிக்கு, இது போன்ற விஷயங்களில் எல்லாம் முன்பிருந்த ஆர்வமும், ஈடுபாடும் இப்பொழுது சுத்தமாக இருக்கவில்லை. முன்பு அர்ஜுனாலும், அவன் தந்தையாலும் அவள் வாழ்க்கையில் நடந்தேறிய, அனர்த்தங்களின் பலனாகவோ என்னவோ, அவளின் இயல்பான பிடித்தங்கள் கூட அவளுள் புதையத் தொடங்கி இருந்தது.
"இல்லடி, சென்னைலாம் எனக்கு செட் ஆகாது. நீ வேணா ட்ரை பண்ணு." என்று மட்டும் சொல்லிவிட்டு பாட புத்தகம் ஒன்றை திறந்து வைத்து அமர்ந்து கொண்டாள் சிற்பி.
போட்டியைப் பற்றிய விபரங்கள் எல்லாம் கூறிக்கொண்டிருந்ததில், மற்ற மாணவர்களிடம் கவனம் இருந்தாலும், மனைவியின் சோர்ந்த முகத்திலும் ஒரு கண்ணை வைத்தே இருந்தவன், அனைத்தும் முடித்து கிளம்பும் சமயம், "சிற்பிகா, லன்ச் பிரேக்ல ஸ்டாப் ரூம் வந்துட்டு போ!" என்று மட்டும் சொல்லிவிட்டு, வகுப்பில் இருந்து வெளியேறினான் செழியன்.
அதில் முகத்தை கேள்வியாய் சுருக்கியவளும், "இப்ப எதுக்குடி ட்ரைனர் ஸ்டாப் ரூம்க்கு வரச் சொல்றாங்க? ஏன் போட்டியில் கலக்கலன்னு திட்டுவாங்களோ?" என்று ஏதேதோ கேட்டு மதிய இடைவேளை வரை யாழினியையும் ஒரு வழி செய்தவள், தன் உணவையும் முடித்துக் கொண்டே, விரிவுரையாளர்கள் அறைக்குச் சென்றாள்.
அவள் சென்ற சமயம், அப்பொழுது தான் அவனும் உணவை உண்டு எழுந்தவன், "ஒன் மினிட் கேர்ள்" என்று சொல்லியபடியே கை கழுவி வந்தான்.
"குட் ஆப்டர்னூன் சார்!" என்ற சிற்பியின் கூற்றில், செழியனோடு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த ராமும், 'இப்ப எதுக்கு வந்திருக்காம் இந்தப் பொண்ணு? ஒன் மினிட்னு சொல்லிட்டுப் போறதைப் பார்த்தா, ட்ரைனர் தான் வரச்சொல்லிருப்பாரு போலவே? இவங்களுக்குள்ள அப்டி என்னதான் விஷயம்?' என்ற ஆராய்ச்சிப் பார்வையோடே, பதில் வணக்கம் சொல்லிவிட்டு, அவனும் எழுந்து கைகழுவச் சென்றான்.
அதற்குள், "லன்ச் முடிஞ்சதா கேர்ள்?" என்று கேட்டபடியே தன் உணவுப் பையில் இருந்த தேன்நெல்லிக்காய் ஒன்றை எடுத்து, பாதியை பிய்த்து தன் வாயில் போட்டுக் கொண்டு, மீதியை அவளிடம் நீட்டினான் செழியன்.
"ம்ம்ம், ஆச்சு சார்" என்று மெலிதாக புன்னகைத்தவளும், மிக மிக இயல்பாகவே அவன் கொடுத்த நெல்லியை வாங்கி தன் வாயில் போட்டு சுவைக்கத் துவங்க, அதை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, 'இங்க என்ன நடக்குதுன்னே தெரியல? இத்தனை வருசமா கூடவே இருந்து சாப்பிடுறேன். ஒரு நாள் ஒரு பொழுது, அந்த தேன்நெல்லில சின்ன பைட் கொடுத்திருப்பாரா இவரு?. இந்த சிற்பி பொண்ண பாத்தா மட்டும், ட்ரைனர் ட்ரைன் பண்ணாத இன்ஜின் போல ஆகிடுராரு. ஏதேதோ பேசராரு, செய்யுராரு. அப்டின்னா யாழி சொன்னது உண்மையாதான் இருக்குமோ?' என்று ஏதேதோ சிந்தித்தபடியே, தன் உணவுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றான் ராம்சரண்.
அக் கல்லூரியில் பணிபுரியும் மற்ற பேராசிரியர்களும், அந்த விரிவுரையாளர்கள் அறைக்கு வருவதும் போவதுமாக இருந்தாலும், செழியனுக்கென்று தனியான தடுப்புடன் கூடிய பகுதி தான் கொடுக்கப்பட்டிருக்க, தடுப்பிற்கு அந்தப்புறம் இருந்த நாற்காலியில் சாய்வாக அமர்ந்து கொண்டு, அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "என்னவாம் தேவிக்கு?" என்று புருவத்தை ஏற்றி இறக்கினான்.
அவன் எதைக் கேட்கிறான் என்று புரிந்து கொண்டவளுக்கு, அவனின் தேவி என்ற அழைப்பு வேறு, ஒரு மாதிரி சொல்லொணாத உணர்வினைக் கொடுத்திருக்க, "இல்ல ட்ரைனர், நா, நா முன்ன போல இல்ல. என்னால இந்த போட்டில எல்லாம் கலந்து, ஜெயிக்க முடியும்னு தோணல. என்ன விட்டுடுங்க" என்று மட்டும் சொன்னாள்.
அதில், "ஏனாம்? முன்ன போல இல்லாம இப்ப எப்டி இருக்கீங்களாம் தேவி மேடம்? அதே அஞ்சரை அடி ஆளு. அழகான கண்ணு, அமைதியான பொண்ணுன்னு என் கண்ணுக்கு எப்பவும் ஒரே மாதிரிதான் தெரியறீங்க தேவி!" என்று குறும்புக் குரலில் சொன்னவன், சட்டென்று குரலை மாற்றி, "நா உன்கிட்ட எப்பவும் சொல்றது தான் கேர்ள். போட்டில ஜெயிக்கறோம் தோக்குறோம்
அது வேற விஷயம். முதல்ல கலந்துக்கணும். எந்த தயக்கமும் இல்லாம கலந்துக்கணும். நீ கலந்துக்குற!" என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறி முடித்தான்.
அதற்கு அவள் பதில் கூறும் முன்னரே அச்சமயம், அவன் அலைபேசிக்கு அவள் தந்தையிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது.
அதைப்பார்த்த இருவருக்குமே, அவர் எதற்கு அழைக்கிறார் என்ற யூகம் இருந்தாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல், "ம்ம்ம் சொல்லுங்க சார்?" என்று கைபேசியை செவியில் வைத்தான் செழியன்.
அந்தப்புறம், "செழியா, எங்கப்பா இருக்க? சிற்பியை பத்தி கொஞ்சம் பேசணும்பா" என்று படபடப்பாகவே ஆரம்பித்த வேதாச்சலம், "ஏதோ தமிழ் எஸ்ஸே காம்பிடேசன் சென்னைல நடக்குதாமே. நம்ம காலேஜ்கும் இன்வைட் வந்துருக்காமே. இப்ப தான் பிரின்சி சொன்னாரு." என்று நிறுத்தியவர், "எந்த டிப்பார்மெண்ட்ல இருந்தும், எத்தனை ஸ்டுடென்ட வேனா காம்பிடேசன்கு அழைச்சிட்டுப் போப்பா. ஆனா சிற்பி, சிற்பியை மட்டும் அழைச்சு போக வேணாம்" என்று சொன்னார் அவள் தந்தை.
அவர் கூறக்கூறவே, 'என்னாச்சு இந்த வேதா சார்க்கு?' என்று பல்லைக் கடித்தவன், "மகளிடம் போலவே,
"ஏன் சார்?" என்று ஒற்றை கேள்வி தான் கேட்டான்.
"பின்ன என்னப்பா. அவ செஞ்ச வேலைக்கி இப்பவர படிக்க அனுப்புறதே பெரிய விஷயம். அதுவுமே நீ சொன்னதால தான். அதனால இதெல்லாம் வேண்டாம்ப்பா. இன்னும் ஒரு வருஷம் இப்ப போலவே ஒழுங்கா படிச்சான்னா, டிகிரிய வாங்கி கைல கொடுத்துட்டு, அவளை மனைவியா ஏத்து வாழ்க்கையை தொடங்குப்பா. அது போதும். அதவிட்டு இந்த சென்னை கின்னைனு எதுவும் வேண்டாம்ப்பா. அந்த அந்த, எம் பி பையனோட சொந்த ஊரும் அதுதானாமே. அங்க எதுக்கு இவளைப் போய் கூட்டிட்டு போய்கிட்டு?" என்று சற்றே உள்ளே போன குரலில் சொல்லி முடித்தார் வேதாச்சலம்.
அவர் பேசியதை எல்லாம் பொறுமையாகவே கேட்டு இருந்தவனுக்கு, அவரின் இறுதிக் கூற்றில் மட்டும், எங்கிருந்து தான் அப்படி ஒரு ஆவேசம் தோன்றியதோ தெரியவில்லை.
"அப்டி சிற்பிய சென்னை கூட்டிப் போனா, என்ன ஆகும்னு நினைக்கிறீங்க சார்?" என்று இறுகிய குரலில் கேட்டவன், "படிப்பு சம்பந்தமாக்கூட அவளை வெளியூர் அனுப்ப யோசிக்கிற அளவு அப்டி அவ என்ன தப்பு பண்ணினா?. அவளை நா சென்னைக்கு கூப்பிட்டுப் போகத் தான் போறேன். அவ இந்த காம்பிடேசன்ல கலந்துக்க தான் போறா. கலந்துக்குறது மட்டும் இல்ல, வின் பண்ணவும் போறா. டாட் இட்." என்று கைபேசியை அணைத்தான் செழியன்.
அவள் தந்தையே ஆகினும் ஏனோ தன் மனைவியை நம்பாது போல் பேசியதில், கடும் சினமே மூண்டது விரிவுரையாளனுக்கு.
மாமனாரின் அழைப்பை துண்டித்தது மட்டுமல்லாது, செவியில் விழுந்த வார்த்தைகளை வைத்தே தந்தை என்ன கூறி இருக்கக் கூடும் என்று புரிந்து போனதில், கண்ணில் நிறைந்து விட்ட நீர்மணிகளோடு தன்னையே பார்த்து நின்ற மனைவியிடமும் திரும்பியவன்,
"நோ கேர்ள், அழுகை எப்போதும் வெற்றியின் மொழி ஆகாது!" என்று சொல்லிவிட்டு, "வின் பண்ணிடுவ தானே?" என்று சிறு அதட்டல் குரலிலும் கேட்க,
அதில், கண்ணீரையும் மீறிக் கொண்டு, "ம்ம்ம், சார்!" என்று பெண்ணின் தலையும் வேகமாக அசைந்தாடியது.
அதைப்பார்த்து சிறு புன்னகையோடு "குட், நாளையிலிருந்து காம்பிடேசன்குண்டான வொர்க் பாக்கலாம். இப்ப கிளாஸ்கு போ" என்று தலையசைத்து அவளை அனுப்பி வைத்தான்.
சென்னை தான் அர்ஜுன் மற்றும், அவன் தந்தையின் வசிப்பிடம், என்ற ஒரு விடயமே, வேதாவைப் போல சுசீலா மற்றும் மீனாட்சிக்கும் கூட சற்று அச்சத்தைக் கொடுத்திருக்க, "இப்ப இவ போய் கட்டுரை போட்டில கலந்து என்ன ஆகப் போகுது தம்பி?" என்று சுசீலாவும், "சம்பந்தி பயப்புடறதுலையும் ஒரு நியாயம் இருக்குல்ல செழியா?" என்று மீனாட்சியும் கூட எதிர்ப்புத் தெரிவிக்க,
"அவ என் பொண்டாட்டிம்மா. உங்க எல்லாரையும் விட ஒரு படி அக்கறை அதிகமாவே இருக்கு எனக்கு. நா பாத்துக்கறேன்" என்று அனைவரின் வாயுமே அடைத்து இருந்தான் செழியன்.
அதன் பின்னான ஒரு வார காலமும் அவளோடு சேர்த்து மற்ற மாணவர்களையும் கட்டுரை போட்டிக்கும், இன்னும் பிற போட்டிகளுக்கும் ஆயத்தம் செய்தவன், சிற்பி மற்றும் யாழினியோடு, பத்து மாணவ மாணவிகள் கொண்ட குழுவையும் அழைத்துக் கொண்டு, சென்னையில் போட்டி நடக்கவிருக்கும் கல்லூரிக்குப் பயணமானான்.
என்னதான் செழியன் மனைவிக்காக என்று அனைத்திலும் முன் நின்று பேசினாலும், தன்னைப் பெற்றவர்களே, தன்னை நம்பி சென்னைக்கு அனுப்ப இத்தனை யோசிப்பதில், சிற்பிக்கு இப்பயணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை.
இருந்தும் மணம் புரிந்த நாளில் இருந்தே, தனக்கே தனக்காக, ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்யும் கணவனின் அக்கறையில், ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டவள், அனைவருடனும் சேர்ந்து சென்னைக்கு வந்து சேர்ந்தாள் சிற்பிகா தேவி.
செழியனின் உந்துதலில் ஏதோ ஒரு தைரியத்தில் கிளம்பி வந்தவளுக்கு, அங்கு இருந்த மிகப்பெரிய கல்லூரியும், அங்கு நடக்கவிருக்கும் போட்டியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் மாணவ மணிகளின் கூட்டத்தையும் கண்டு, விழிகள் இரண்டும் மலைப்பாகத் தான் விரிந்தது.
கூடவே அர்ஜுனின் ஊரான இந்த பரந்து விரிந்த சென்னையில், இத்தனை பெரிய கல்லூரியில், தான் மேடையில் ஏறிப் பேசினால், அர்ஜுன் எங்கேயும் இருந்து, அவன் கண்ணில் தான் பட்டு விடுவோமோ, அல்லது, அவன் தந்தையும் இங்கே இருந்து, அவர் மீண்டும் தன்னைப் பார்த்து, அவமானம் ஏதும் செய்து விடுவாரோ என்றெல்லாம் ஏதேதோ சிந்தனைகள் ஓடியதில், "சார், ரெஸ்ட்ரூம் போகணும்!" என்று கணவனிடம் சென்று சிறு பிள்ளையாய் கேட்டு நின்றாள் சிற்பி.
அவர்களுக்கு திருமணம் ஆன புதிதில் கூட, அர்ஜுனுக்கு என்னானதோ? அவன் நலமாக இருக்கிறானா? அப்படி நலமாக இருந்தால் ஏன் அவன் என்னைத்
தேடி ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை? என்றெல்லாம் அவனைப் பற்றி அறிந்து கொள்ளத் துடித்த பெண்ணின் உள்ளம், இன்று இக்கணம், அவன் தன் கண்ணில் கூட பட்டுவிடக் கூடாது என்று தான் மனதார எண்ணியது.
அந்த அளவிற்கு, செழியனின் அன்பும், அக்கறையும், பெண்ணவளின் சின்னஞ்சிறு உள்ளத்தை, முற்றும் முழுதாக ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
Comments
Post a Comment