நூலகம் -15
இதுவே வேறு இடமாக இருந்திருந்தால், அந்த தந்தை மகளின் மோனநிலையை ரசித்தபடியே நின்றிருப்பானோ என்னவோ.
ஆனால், 'என்ன நடக்குது இங்க.? சேர்மன் பொண்ணு அப்பாவ பாக்க முடியலன்னு அழுதுச்சு. இவரு போய் உடனே அவங்கப்பாவை கூட்டிட்டு வர்றாரு. இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து, தப்பு பண்ணிட்டேன்னு அழுறாங்க. என்னதான் நடக்குது இங்க? அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இடையில் இவரு என்ன தூது? யாழி சொன்னப்போல ரெண்டு பேருக்கும் உண்மையிலேயே சம்திங் சம்திங் இருக்குமோ?' என்று மூவரையுமே மாறி மாறிப் பார்த்திருந்த ராமின் பார்வையில், லேசாக தொண்டையைச் செறுமி, வேதாவிடம் சென்றவன், "இன்னிக்கு சிற்பிக்கு முக்கியமான பரீட்சை சார். அவளுக்கு ப்ளெஸ் பண்ணி எக்ஸாம்கு அனுப்புங்க" என்று மட்டும் கூறினான் செழியன்.
அதில் தன்னை தேற்றிக் கொண்டவரும், "என்ன எக்ஸாம்டா? நல்லா படிச்சிருக்கியா?" என்று மகளின் தலை வருடிக் கேட்டவர், தன் சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டு எதையோ தேடினார்.
ஆனால் அவர் தேடிய அந்த பொருள் அவரிடம் இல்லாது போக, சட்டென்று தன் சட்டையில் இருந்த ஒரு பேனையை எடுத்து வேதாவிடம் கொடுத்தவன், "இதை கொடுத்து வாழ்த்துங்க சார்" என்றும் சொல்ல,
ஒரு நன்றியோடு அதை கையில் வாங்கியவரும், "எப்பவும் போல இப்பவும் எக்ஸாம் நல்லா எழுதி காலேஜ் டாப்பர் ஆகணும் கண்ணா. ஆல் தி பெஸ்ட்!" என்று மகளிடம் அந்த பேனையைக் கொடுத்தார் வேதாச்சலம்.
சற்று முன்னர் இருந்த மனநிலைக்கு முற்றிலும் மாறாக, முகம் கொள்ளாப் புன்னகையோடு, "தேங்க்ஸ்பா..." என்று அதை வாங்கி பத்திரப் படுத்தியவளின் பார்வை, இப்பொழுது தந்தையை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து, கணவன் மீது படிந்தது.
இக்கணம் அவள் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கும், முழுக் காரணம் அவன்தானே என்ற நினைவில் நன்றியோடும், அவனைப் பார்த்து தலையசைத்துக் கொண்டவளுக்கு, சிறு புன்னகையோடு கட்டை விரலைத் தூக்கிக் காட்டி, ஆல் தி பெஸ்ட் கூறி அனுப்பி வைத்தான் செழியன்.
தந்தை மூலம் கிடைத்த கணவனவனின் பேனை அவள் கையிலும், அவன் புன்னகை மாறா முகம் பெண்ணின் மனதிலும், அழகாக வீற்றிருக்க, மனமெல்லாம் மகிழ்வாக, நல் முறையில் பரீட்சை எழுதி முடித்தவள், "நீங்க செஞ்ச உதவிக்கு எல்லாம் எப்டி கைமாறு செய்ய போறேன்னு தெரியல. தங்க்யூ சோ சோ மச் ட்ரைனர்!" என்ற குறுஞ்செய்தி ஒன்றை கணவனுக்கு அனுப்பி வைத்தாள்.
பின், 'உங்களைப் போலவே உங்க பென் உம் சோ ஸ்வீட் மிஸ்டர் பர்ஃபி. எல்லாருக்கும் முதல், நான் தான் எக்ஸாம் எழுதி முடிச்சிருக்கேன்' என்று கையிலிருந்த பேனையையே திருப்பித் திருப்பிப் பார்த்து, அப்பேனையை தன் நெஞ்சோடு சேர்த்தபடியே, பரீட்சை ஹாலை விட்டு வெளியேறினாள் சிற்பி.
இக்கணம் அவன் பேனைக்குக் கொடுத்திருக்கும் இடத்தை, பெண்ணவள் அந்த பேராசிரியனுக்கும் கொடுப்பாளா?
அப்படியே மேலும் சில வாரங்கள் கடந்திருக்க, அவர்கள் அனைவரின் நாட்களும் அப்படியே நகர, ராம்சரணின் நாட்கள் மட்டும் ஒருவித குழப்பத்தோடே நகர்ந்து கொண்டிருந்தது.
என்னதான் செழியனுக்கும் சிற்பிக்கும் இடையில் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டிருப்பது அவனுக்கும் தெரிந்தாலும், அது யாழினி கூறியது போல் காதல் என்று அவனால் சிறிதும் ஏற்க முடியவில்லை. அந்த அளவிற்கு செழியன் மீது மதிப்பும் மரியாதையும் மித மிஞ்சி இருந்தது ராம்சரணிற்கு.
அந்த மதிப்பும் மரியாதையும் தான் அவன் தங்கையான யாழினியிடம் அவனை நெருங்க விடாமலும் தடுத்துப் பிடித்தது.
சிற்பிகாவின் குழுவிற்கு, இது கல்லூரிப் படிப்பில் மூன்றாம் வருடத்தின் இறுதிப் பகுதி ஆதலால் இன்டர்வியூ, வேலை சம்பந்தமான விஷயங்களிற்கெல்லாம் கல்லூரியின் முதன்மை ட்ரைனரான செழியனால் தான் வாரத்திற்கு நான்கு வகுப்புகள் எடுக்கப்பட, அன்றும் அப்படி ஒரு சூழலில் தான், ஆப்டிட்யூட்(aptitude) பற்றிய பாடங்களை சிற்பிகாவின் வகுப்பு மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
எப்பொழுதுமே கற்பித்தலை அதீத ஈடுபாட்டோடு செய்து வருபவன், அன்றும் மிக மிக நேர்த்தியாகவே பாடங்களை நடத்திக் கொண்டிருக்க, எள் விழுந்தால் கூட கேட்குமளவு அமைதியிலும் அமைதியாய், அவன் கற்பித்தலை கவனித்துக் கொண்டிருந்தனர் மாணவ மணிகள்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் சொல்லிக் கொடுக்கும் முறை எல்லாம் முடித்து விட்டு, மாணவர்களின் திறமையை சோதிக்கும் விதமாக ஒவ்வொருவரிடமும் பல்வேறு வகையில் வினாக்களும் தொடுத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, "சான்ஸே இல்லடி. ட்ரைனர்னா அது செழியன் சார் மட்டும் தான். என்னம்மா ட்ரைன் பண்றாரு? இன்டெர்வியூ அப்போ உனக்குலாம் கவலையேயில்ல" என்று சிற்பியின் அந்தப்புறம் இருந்த யாழினியைப் பார்த்து சிலாகித்துச் சொன்னாள் தோழி ஒருத்தி.
அதில் யாழினி பெருமையாக உணர்ந்தாளோ இல்லியோ, தோழிகள் கணவனின் திறமையை பாராட்டவும், சிற்பியின் முகம் அன்றலர்ந்த மலராய் அத்தனை மகிழ்ச்சியைக் காட்டியது.
கூடவே, 'இத்தனை திறமைகள் கொண்டவன் என் கணவன். அனைவரும் மதிக்கும் ஆசிரியன் எனக்கே எனக்கானவன்!' என்று அவளுள் இருந்த மனைவியும் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்க, ஆறடியை நெருங்கும் உயரத்தில், வழக்கமான கருப்பு வெள்ளையில் நேர்த்தியான உடை அணிந்து, கையில் எழுதுகோலும், கண்ணில் கண்டிப்பும் வைத்துக் கொண்டு, தன் முன்னே நின்று படிப்பித்துக் கொடுப்பவனை அவள் பார்வை ரசனையோடு தொட்டுத் தழுவியது.
இன்று மட்டுமல்ல, அன்று அவளுக்காக அவன் அவள் தந்தையை அழைத்து வந்த நாளில் இருந்தே, அவன் மீதான பார்வை, வேறொரு பரிணாமத்தை அவளுள் உண்டு பண்ணி இருந்தது.
அவளைப்போலவே அவள் தோழிகளும் அவனை ரசித்து இருந்தார்களா தெரியவில்லை.
"ட்ரைனர் கிளாஸ் எடுக்குறது மட்டுமில்ல. ட்ரைனர் நின்னா ஒரு அழகு. நடந்தா ஒரு அழகு. பேசினா அதைவிட அழகு. பேசும் போது சம் டைம்ஸ் தலையைக் கோதுவாரு பாரு அது பேரழகு. இல்லடி?" என்று ஒருவள் மற்றவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஏனோ அவன் கற்பித்தலை புகழ்ந்த பொழுது, பெருமை கொண்ட சிற்பியால், இப்பொழுது அவன் தோற்றத்தைப் புகழும் பொழுது ஏற்றுக் கொள்ள முடியாமல், ஒரு மாதிரி உரிமை உணர்ச்சி தோன்றி விட்டு இருக்க,
"ஹேய் உங்களுக்கெல்லாம் கொஞ்சமும் அறிவில்லையா? பேசாம பாடத்தை மட்டும் கவனிங்கடி" என்று தோழிகளை அதட்டினாள் சிற்பி.
"இதோடா... வந்துட்டாடி, நம்ம நவீன ஒளவையார். இவ்ளோ ஹெண்ட்சமா ஒரு அழகான ட்ரைனர் பாடம் எடுக்கும் போது, பாடத்தை மட்டும் கவனிக்க, நாங்க என்ன கண்ணில்லாதவங்களாடி?" என்று சலித்தனர் தோழிகள்.
"அழகா, ஹெண்ட்சமா இருந்தா உடனே ஈன்னு பாப்பீங்களாடி? எதுக்கும் ஒரு வரைமுறை இல்லியா? அவங்க நம்மளோட குரு" என்று பல்லைக் கடித்தாள் சிற்பி.
அதற்கும், "சோ வாட்?" என்று தோளை குலுக்கியவர்கள், "குருவை ரசிக்கக் கூடாதுன்னு நீ கொள்கை வச்சுருந்தா, அதை உன்னோட வச்சுக்கோ சிற்பி. நாங்க எப்பவும் போல ட்ரைனர பாத்து ரசிச்சுட்டுப் போறோம்." என்று அவர்களும் சளைக்காமல் பதில் கொடுத்தனர்.
அதைக்கேட்டு, 'அப்பவுமும், இப்பவும் ஒன்னா?' என்று தாடை இறுக அவர்களை முறைத்தவள், "இவ்ளோ நாள் ஏதோ புரியாம பண்ணிட்டிங்க. இனிமேலாவது திருந்துங்கடி. ட்ரைனரோட நிலைமை முன்னமாதிரி இல்ல இப்போ!" என்று ஒருமாதிரி கடினக் குரலில் சொன்னவளை குழப்பமாகப் பார்த்தவர்கள், "அப்டி என்னடி நிலைமை மாறி இருக்கு. ட்ரைனர் எப்பவும் போல தானே இப்பவும் இருக்கார். நீ என்ன இன்னிக்கு ஓவரா ரியாக்ட் பண்ற?" என்று அதிருப்தியுடன் கூறியவர்கள், "ஹேய் அங்க பாருங்கடி ட்ரைனர் சிரிக்கிறாரு. லிப்ஸ் கலர் சான்ஸே இல்லைல" என்று அவர்களையும் அறியாமல் சிற்பியின் உரிமை உணர்ச்சியை மென்மேலும் தூண்டி விட்டனர்.
அதில் தன் நிலையை சொல்லவும் முடியாமல், அவர்கள் பார்ப்பதை தடுக்கவும் இயலாமல் முகம் இறுகி அமர்ந்து இருந்தவளைப் பார்த்து, "என்னாச்சு சிற்பி?" என்று யாழினியும் வினவ,
"அவளுக்கு இன்னிக்கு என்னவோ ஆகிடுச்சுடி. ட்ரைனர் சாரை நாங்க எல்லாம் முன்ன போல சைட் அடிக்கக் கூடாதாம். இப்ப நிலைமை மாறிடுச்சுன்னு ஏதேதோ சொல்றா. செழியன் சாரோட சிஸ்டர் நீயே இதுவரை எங்களை எதுவும் சொன்னதில்லை. இவளுக்கென்னடி?" என்று அருகில் இருந்த தோழிகள், யாழினியிடம் குற்றப்பத்திரிக்கை வாசித்தனர்.
அதைக்கேட்ட யாழினிக்கும் அவள் நிலை புரிவது போல் இருக்க, "அவ சொல்றதும் சரிதான்டி. இனிமேல் அண்ணாவை அப்டிலாம் பாக்காதீங்க" என்றாள்.
அதில் இருவரையும் மாறி மாறிப் பார்த்த தோழிகள், "இது என்னடி புதுசா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சொல்றதைப் பார்த்தா, சிற்பிக்கும் ட்ரைனருக்கும் சம்திங் சம்திங்கா?" என்று கேட்டவர்கள், "ஹேய் சிற்பி சொல்லுடி. அது தான் விஷயமா? அதான் மேடம் ஆ ஊன்னா, ட்ரைனர் முன்ன போய் நிக்கிறியா? எப்ப இருந்துடி? இது தான் விஷயம்னு அவங்ககிட்ட சொல்லிட்டியா? அவங்க என்னடி சொன்னாங்க. உன் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கிட்டாங்களா?" என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.
தோழிகளின் காதல் என்ற வார்த்தையில் தான், என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறேன் நான்? தன் தோழிகள் எல்லாம் செழியனை பற்றிப் பேசுவது இன்று நேற்று நடப்பதில்லையே. ஆனால் இப்பொழுதெல்லாம் ஏன் அவர்கள் பேச்சு எனக்கு இத்தனை சினத்தை கொடுக்கிறது? அப்படியானால் அப்படியானால், அவர்கள் கூறியது போல், ட்ரைனரை நான் நேசிக்கிறேனா? ஆனால் இது எப்படி சாத்தியம்? அவர் எனக்கு பாடம் படிப்பிக்கும் குருவல்லவா? நான் இப்படி அவரை நினைப்பது தெரிந்தால் கூட அவர் என்னை தவறாக எண்ண மாட்டாரா?' என்று தனக்குத்தானே சுய அலசலில் ஈடுபட்டவளை, "ஹேய் நீயும் பெரிய ஆள் தாண்டி. இவ்ளோ நாளா ட்ரைனரை மனசுல வச்சுட்டு தான் சீனியருக்குக் கூட பிடி கொடுக்காம இருந்தியோ? அதான் சீனியர் காலேஜ விட்டே போய்ட்டார் போல" என்ற தோழிகளின் வார்த்தைகள், மிகவும் கலங்க வைத்தது.
அப்பொழுது தான் தங்கள் திருமணம் நடந்தேறிய சூழலும் அவளுக்கு ஞாபகம் வந்து, ஏதேதோ எண்ணி வருந்தியவள், 'இது வெறுமனே நன்றி உணர்வாகக் கூட இருக்கலாமே?' என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, முன்னே ஏறிட்டுப் பார்க்க, அச்சமயம் அவள் கணவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தவன், "என்ன?" என்பது போல் புருவத்தை ஏற்றி இறக்கினான்.
அதில், "அய்யோ இவ்ளோ நேரம் ட்ரைனர் நம்மள தான் பாத்துட்டு இருந்தாங்களா?" என்று அத்தனை நேரம் இருந்த கலக்கம் எல்லாம் சட்டென்று மறைய, 'ஒன்னுமில்லையே!' என்று விழிகளைக் கொட்டி, தலையை ஆட்டினாள் சிற்பி.
அதை அவன் விழிகள் நம்ப மறுத்தாலும், வகுப்பில் இத்தனை மாணவர்கள் முன்னில் அவளிடம் எதுவும் கேட்க இயலாதவன், பாடம் சம்பந்தமான அடுத்தடுத்த கேள்விகளை, "சிற்பிகா, டெல் மீ தி ஆன்சர்?" என்று அவளிடமே கேட்டு, அவள் சிந்தை வேறு எங்கும் செல்லாமல் பாடத்திலே இருக்கும்படி பார்த்துக் கொண்டான் செழியன்.
அதில், அவள் மனதும் இயல்பு நிலைக்குத் திரும்ப, அன்றைய வகுப்புகள் அனைத்தும் முடிந்து, வழக்கம் போல் யாழினியுடன் சலசலத்தபடியே வீடு வந்து சேர்ந்தாள் சிற்பி.
அங்கோ அவள் முகம் கழுவி தேநீர் அருந்தும் வரை மட்டுமே அவளுக்கு நேரம் கொடுத்தவன், தன் அறைக்குள் இருந்தே, "சிற்பிகா, இங்க கொஞ்சம் வா" என்று உரக்க அழைத்திருந்தான்.
இன்று தான் முதல் முறையாக அறைக்குள்ளேயே இருந்து கொண்டு இப்படி உரிமையாய் அழைப்பவனின் செயலில், என்னவோ ஏதோவென்று பதறியடித்து ஓடியவளிடம், "இன்று வகுப்பில் என்ன நடந்தது? மதியம் ஏன் டல்லா இருந்த?" என்று கேட்கவும் அவளுக்கு முதலில் ஒன்றுமே புலப்படவில்லை.
பின்னர்தான் மதியம் வகுப்பில், தோழிகள் அவனை ரசித்துப் புகழ்ந்ததும், அதைப் பார்த்து, தான் பொறாமை கொண்டதும் ஞாபகம் வர, இதை எப்படி கணவனிடம் கூறுவது, அப்படிக் கூறி, அவன் தன்னை தவறாக எண்ணி விட்டால் என்று மனம் சுணங்கியவள்,
"அது, அது, அது ஒன்னுமில்லை ட்ரைனர். சும்மா தான் பிரண்ட்சோட" என்று மழுப்பினாள் மனைவி.
அதில், "ம்ஹும்" என்று இடவலமாக தலையை ஆட்டியவன், "ஐ வாண்ட் தி ட்ரூலி ஆன்சர் கேர்ள்?" என்று அவளையே அழுத்தமாகப் பார்த்திருக்க,
அப்பார்வையிலே உடல் சில்லிட்டுப் போனவளும், தலையைக் குனிந்தபடி தோழிகளுடனான உரையாடல் எல்லாம் சொல்லத் தொடங்கியவள், "அது என்னமோ தெரியல சார். இப்போல்லாம் எந்த கேர்ள்ஸ் உங்களை சைட் அடிச்சாலும் என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியல. கோபம் கூட வருது!" என்றும் முடிக்க, விலுக்கென்று அவளை நிமிர்ந்து பார்த்தான் செழியன்.
கணவனின் அந்தப் பார்வையில் மென்மேலும் பீதியாகியவள், "அது அது, நீங்கதான அன்னிக்கு உனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கும் இல்லைன்னு சொன்னீங்கள்ள. அதான் அதான் உங்க மேல என்னையும் அறியாம ஒரு அட்வாண்டேஜ் தோணுது போல. தப்பா இருந்தா வெரி வெரி சாரி சார். இனிமேல் இப்டி எல்லாம் நடக்க மாட்டேன்." என்று அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி, கை இரண்டும் தூக்கி காதைப் பிடுத்து மன்னிப்புக் கேட்டாள் சிற்பி.
இருவரினது மூச்சுக் காற்றும் தொட்டுக் கொள்ளும் தூரத்தில், அவன் மார்பளவே உயரம் கொண்டு, அவனை அண்ணாந்து பார்த்து, பட்டாம் பூச்சியாய் படபடத்த இமைகளோடு நின்றிருந்தவளைக் கண்டு அவன் விழிகள் இரண்டும் ரசனையாக விரிய, ஆணின் அழுத்த அதரங்களும் பெரிதாக மலர்ந்தது.
அதை உணராத பெண்ணவள், "சாரி சார்" என்று மீண்டும் விழிகள் சுருக்கிக் கெஞ்ச,
தன் சின்னஞ்சிறு மனைவியின், சிறு பிள்ளைத் தனமான அச்செய்கையில், வாய் விட்டே நகைத்தவன், "சாரி கேக்குற அளவு நீ எந்த தப்பும் பண்ணல கேர்ள். ஜஸ்ட் சில்!" என்று கையிரண்டும் நீட்டி மன்னிப்பிற்காக அவள் காதை பற்றியிருந்த கரங்களை எடுத்து விட்டான்.
அதில் மென்மேலும் அதிர்ந்து விழித்தவளின் விழிகளையே நொடிகள் சில ஆழ்ந்து பார்த்து, "ஆனா காலேஜ்ல மட்டும் உங்களோட உரிமையை நிலை நாட்டுனா போதாது தேவியாரே. வீட்டுலயும் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்க, நமக்குள்ள இருக்க உறவை!" என்று இதழ் விரிந்த புன்னகை ஒன்றைச் சிந்தி, அவள் கன்னத்தையும் லேசாகத் தட்டியவன், "போய் படிங்க போங்க" என்றும் அனுப்பி வைக்க,
மந்திரித்து விட்ட ஆடு போல், மறு சொல் சொல்லாமல், தலையை மட்டும் ஆட்டிவிட்டு, தன் அறை நோக்கி ஓடிச் சென்றாள் செழியனின் சிற்பிகா தேவி.
Comments
Post a Comment