நூலகம் -14

செழியன் சிற்பியிடம் அன்று நடந்து கொண்ட விதத்தில்,  அடுத்தடுத்த நாட்களிலும் சிற்பியை ஏதோ ஒரு காரணத்தை சொல்லி ராம்சரணுடன் நிற்கும் செழியனிடம் பேச அனுப்பி வைத்தாள் அவன் தங்கை.


கல்லூரியில் மட்டும் அப்படிச் செய்தால் அண்ணன் விடாக்கண்டன் கண்டு பிடித்து விடுவான் என்று வீட்டிலும், தாய் அண்ணனுக்குச் செய்ய சொல்லும் வேலைகளை சிற்பியைத் தான் செய்ய வைத்தாள்.


அதைப்பார்த்து மீனாட்சி ஏன்டி என்று கேட்டதற்கும், "உனக்கு உன்னோட பேரப்புள்ளைய பாக்கலாம் ஆசை இல்லியாமா?" என்று அவர் வாயும் அடைத்து இருக்க, "இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகுமாடி உன் அண்ணன்கிட்ட?" என்று சந்தேகமாய்க் கேட்ட மீனாட்சியும், இத்தனை தினங்கள் அவர்களை எப்படி சேர்த்து வைப்பது என்ற யோசனையில் இருந்தவர், இப்பொழுது மகளின் வழியையே பிடித்துக் கொண்டு, இருவருக்குமான நெருக்கத்தை இன்னுமின்னும் அதிகப்படுத்த முயன்றார்.


யாழினியைப் பொருத்தவரையில், இந்த விளையாட்டு, ஒரு கல்லில் இரு மாங்காய் அடிப்பது போலத்தான்.
சிற்பியை வைத்து தன் காதல் நிறைவேறாது போனாலும், சிற்பிக்கும் செழியனுக்குமான  நெருக்கத்தில் அவர்களின் திருமண வாழ்வாவது அடுத்த கட்டத்திற்குச் செல்லட்டுமே என்ற அவர்கள் மீதான அக்கறையிலும் இதைச் செய்வதாய் தன்னை தானே தேற்றிக் கொண்டவள், அவ்விளையாட்டு  வினையாகப் போவதை அக்கணம் அறிந்து இருக்கவில்லை.


சிற்பிக்கும் முதல் நாள் இருந்த தயக்கமோ பதட்டமோ அடுத்தடுத்த நாட்களில் வெகுவாகக் குறைந்திருக்க, தான் எப்பொழும் முன்மாதிரியாகப் பார்க்கும் செழியனிடம் பேசுவதும், அவனுக்கு சிறு சிறு வேலைகள் செய்வதும், அவளுக்கும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டு இருந்தது.


ஆனால் செழியனுக்குதான் இத்தனை மாதங்கள் இல்லாது சிற்பியின் இந்த நடவடிக்கை அவன் புருவத்தை சுருங்கச் செய்ய, சில நாட்கள் பொறுத்திருந்து பார்த்தவன், அவளை வீட்டில் தனியே அழைத்து,
"அம்மா உன்கிட்ட ஏதாச்சும் சொன்னாங்களா கேர்ள்?" என்று கேட்டான்.


அவன் திடீரென அப்படிக் கேட்கவும்,
"எது பத்திங்க ட்ரைனர்?" என்று அவளும் பதிலுக்குக் கேட்க,


"இல்ல கொஞ்ச நாளாவே நீ, என்மேல கேர் பண்ற போல பீல் ஆகுது. அதான் அம்மா ஏதும் உன்ன கம்பல் பண்ணி செய்ய சொல்றாங்களான்னு கேட்டேன்?" என்று அவன் நேரடியாகவே கேட்டு இருந்தான்.


'அய்யயோ நாம யாரோ சொல்லி தான் இதெல்லாம் பண்றோம்னு கண்டு பிடிச்சிட்டாங்களோ மிஸ்டர் பர்ஃபி?' என்று மலங்க மலங்க விழித்தவளுக்கு, யாழினியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயமும் இருக்க, விழிகள் இரண்டையும் கோலி குண்டாய் உருட்டியவள், "ஏன் ட்ரைனர், நானா உங்கமேல அக்கறை எடுக்கக் கூடாதா? அதுக்கு எனக்கு உரிமை இல்லியா?" என்று பதட்டத்தில் பதில் கேள்விகளை அடுக்கினாள்.


ஆமாம் உன் அன்னையும், தங்கையும் சொல்லித்தான் எல்லாம் செய்கிறேன் என்று மனைவி கூறி இருந்தால், அவன் உடனே இதை எல்லாம் தடுத்து நிறுத்தி இருப்பானோ என்னவோ.


ஆனால் சிற்பி, அவளே விரும்பித்தான் அனைத்தும் செய்வது போல், உரிமைக் குரல் வேறு எழுப்பவும், அவள் கழுத்தில் மின்னிக் கிடந்த தாலிக் கொடியைப் பார்த்தவாறே, "உனக்கில்லாத உரிமை வேற யாருக்கும் இருக்க முடியாது கேர்ள்" என்று மட்டும் சொல்லிச் சென்றவனுக்கு, மனமெல்லாம் இனம் புரியா பரவசம் தான்.


அப்பரவச நிலையே அடுத்தடுத்த நாட்களும் நீடிக்க, வீட்டில் இருக்கும் சமயம் எல்லாம், மனைவியின் அண்மையை அவன் கட்டுப்பாட்டையும் மீறி வெகுவாக ரசிக்கத் தொடங்கியது ஆணின் உள்ளம்.


வீட்டை விட கல்லூரியில் தான் சிற்பியின் அருகாமை அவனுக்கு அதிகமாகக் கிடைத்தாலும், வீட்டில் போல் அதை அனுபவிக்க இயலாது, தங்களுக்குள் இருக்கும் ஆசிரியன் மாணவி உறவு நெருடலாக இருக்க,
"கடவுளே, இது என்ன சோதனை எனக்கு?" என்று தலையை உலுக்கி தன்னை மீட்டுக் கொண்டான் செந்தமிழ்ச் செழியன்.


அப்படியே மேலும் சில நாட்கள் கடந்திருக்க, அன்று மூன்றாம் வருடத்தின் முதல் செமஸ்டரின் முதல் பரீட்சை சிற்பிகா படிக்கும் பிரிவிற்குத் தொடங்கி இருக்க,  ஆசிரியர்களின் உதவியுடன், நன்றாகவே படித்து பரீட்சைக்கு ஆயத்தமாகி இருந்தார்கள் மாணவச் செல்வங்கள்.


அன்று காலையே மீனாட்சியும் குளித்து முடித்து கடவுளை வணங்கியவர், "பரீட்சைய நல்லா கவனமா எழுதணும், ரெண்டு பேரும்" என்று இளம் பெண்கள் இருவருக்கும், விபூதி வைத்து அனுப்பிவிட, குறிப்பேடும் பேனையுமாக கல்லூரிக்குள் நுழைந்த சிற்பிகாவிற்கோ, அவளையும் அறியாமல் தூரத்தில் தெரிந்த சேர்மன் அறையை நோக்கித் தான் பெண்ணின் விழிகள் ஒரு ஏக்கத்தோடு சென்று திரும்பியது.


தோழியின் ஏக்கத்தை உணர்ந்து கொண்ட யாழினியும், "என்ன சிற்பி, அங்கிள பாக்கணும் போல இருக்கா? எக்ஸாம்குதான் இன்னும் நிறைய டைம் இருக்கே, போய் பேசிட்டு வா" என்று சொன்னாள்.


"நா போய் பேசினா மட்டும் அப்பா முன்ன போல சிரிச்சா பேசிட போறாங்க? பழசெல்லாம் ஞாபகப்படுத்தி, மனசு கஷ்டப்படுற போல தான் ஏதாவது பேசுவாங்க" என்று விரக்தியாகச் சிரித்தாள் சிற்பி.


"அதுக்குன்னு நீயும் அவங்களைத் தேடி போகாமையே இருக்க போறியா? என்ன இருந்தாலும் அங்கிள்கு நீன்னா உயிர்னு உனக்கே தெரியும்தான?" என்று கேட்ட யாழினியின் வார்த்தையில், தந்தையுடனான மகிழ்ச்சிகரப் பொழுதுகள் எல்லாம் அவள் சிந்தையில் தோன்றியது.


அவர்கள் குடும்பத்திற்கே அவள் தான் ஒரே ஒரு செல்லப் பெண் என்பதால், பாசமும், அக்கறையும் கொட்டித்தான் வளர்த்து இருந்தார்கள் சிற்பியின் பெற்றோர். அதிலும் அவள் தந்தையான வேதாச்சலத்திற்கு, அவரின் இறந்து போன தாயின் ஜாடையைக் கொண்டிருக்கும், மகள் என்றால் அத்தனை உயிர் தான்.


ஆனால் அதெல்லாம் பல மாத காலங்கள் முன்பு வரை மட்டுமே. அர்ஜுன் என்ற ஒருவனோடு,
அவள் பெயர் கிசுகிசுக்கப்பட்டு,
தன் ஒட்டு மொத்த குடும்பமும் அவமானப்பட்டு நின்ற அன்றிலிருந்தே, மகளிடம் முன்போல் கொஞ்சல் மொழிகள் பேசுவது இல்லை வேதாச்சலம்.


சுசீலாகூட சினத்தை அடக்கி வைக்க இயலாமல், திட்டி, பேசி, சண்டை பிடித்து, இப்பொழுது மகளிடம் சுமூகமான உறவை மேற்கொண்டு இருக்க, தன் தொழில் தொடங்கி  அனைத்திற்கும் தன் ஒற்றை மகளைத்தான் வாரிசாய் எண்ணி இருந்தவர், முன்பு மகள் செய்த செயலால் மிகவுமே புண்பட்டுப் போனார்.


கேட்பதற்கும் அதிகமாகவே வாங்கிக் கொடுத்து, சீராட்டி பாராட்டி, அமுதூட்டி வளர்த்த மகள், அன்று அத்தனை பெரிய கோவில் திருவிழாவில், புடைசூழ இருந்த உறவுகள் மத்தியில், யாரோ ஒருவனின் கரம் பற்றி நின்றதை இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை வேதாச்சலத்தினால்.


இப்பொழுது அவள் வேறொருவரின் மனைவியாகி, மாதங்கள் பல கடந்து விட்ட போதும், நல்லதொரு ஆணின் கரத்தில் தன் பெண்ணை ஒப்படைத்து விட்டோம் என்று  நிம்மதியாக உலா வந்த போதும்,  மகளிடத்தில் மட்டும் அவரது ஒதுக்கம் இன்னும் அப்படியே தான் இருந்தது.


யாழினியின் கூற்றில் தந்தையின் அருகாமை இன்று அதிகமாகவே தேட, "ம்ம்ம், நீ சொல்றதும் சரிதான் யாழி. நா அப்பாவை போய் பாத்து பேசிட்டு வர்றேன். நீ கிளாஸ்கு போ!" என்று கூறி விட்டு, ஒருவித ஆவலோடு தந்தையின் அறை நோக்கி ஓடினாள் சிற்பிகா தேவி.


அங்கோ வெறுமனே சாத்தப்பட்டிருந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்த வேதாவின் சிற்றூழியன், சற்று முன்னர் தான் ஒரு மீட்டிங்கிற்காக அவர் வெளியே சென்றதாய்ச் சொல்ல, அதைக்கேட்டு மிகப்பெரிய ஏமாற்றத்தை உணர்ந்தவளின் முகம் நீரில்லா தாவரமாய் வாடி வதங்கியது.


முன்பெல்லாம் அவளுக்கு ஏதாவது சாதாரண பரீட்சை என்றாலே, இரவு முழுதும் மகளோடு அமர்ந்து, அவரும் சேர்ந்து படித்து, காலையில் பரீட்சைக்கு செல்லும் சமயம், புதிதான பேனை ஒன்றும் வாங்கிக் கொடுத்து, தலை தடவி அவளை ஆசி செய்து அனுப்பும் அவளின் அன்புத் தந்தை கண் முன்னே தோன்றி மறைந்தார்.


ஒரு நிகழ்வு. ஒரே ஒரு நிகழ்வு அவள் வாழ்வை தலைகீழாக மாற்றி விட்டு இருந்தது.


இப்படி எல்லாம் எதுவும் நடந்து விடக் கூடாது என்று தானே, அன்று செழியன் அவளுக்கு அத்தனை அறிவுரைகள் கூறினான். படிக்கும் வயதில் காதல் என்ற வார்த்தையே தவறு என்று சொன்னானே.


அதில் ஒன்றையாவது ஏற்று நடந்தாளா அவள்? இல்லையே அப்படி ஒன்றும் அவன் வார்த்தைகளை அவள் மீறி நடக்கவில்லையே? அர்ஜுனை அவள் ஒன்றும் காதல் செய்யவில்லையே? இல்லை, மீறித்தானே நடந்து இருக்கிறாள் படிக்க வேண்டிய வயதில், வெறுமனே ஒரு மாதம் என்னைப் பின்தொடர்ந்து காதல் கூறினான் என்பதற்காக, திருவிழா கூட்டத்தில் யாரோ ஒருவனோடு சுற்றித் திரிந்ததும், அவன் தன் கை பிடித்த பொழுது, அமைதியாக நின்றதும் என் தவறு தானே? என் தாயும் தந்தையும் இப்படியா எனக்கு ஒழுக்கம் போதித்தனர்? செய்யும் தவறெல்லாம் நான் செய்து, என்னை பெற்றோருக்கும் தீரா அவமானத்தை தேடி தந்துவிட்டு, இப்பொழுது அழுது என்ன பிரயோஜனம்?' என்று அவள் மனமே அவளை உலுக்கிய உலுக்கலில், அவள் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள், கன்னங்களை நனைத்தது.


தந்தையைப் பார்க்க வராமலே சென்றிருந்தால் கூட, நல்ல முறையில் பரீட்சை எழுத அமர்ந்திருப்பாளோ என்னவோ? பிறந்தநாள் தொட்டு, தன்னை இளவரசியாய் உணர வைத்த தந்தையின் அன்பு திடீரென நின்று போன ஏக்கத்தோடு, அதற்கு முற்றும் முழு காரணமும் தான் தானே என்பதுவும், அவள் திடத்தை எல்லாம் ஆட்டம் காண வைத்திருக்க, அழுத விழிகளை துடைத்தபடியே, "ஓகே அண்ணா. தேங்க்ஸ்" என்று விட்டு அங்கிருந்து செல்ல முயன்றாள் சிற்பி.


அச்சமயம் சரியாக கையில் சில படிவங்களை வைத்துக் கொண்டு, செழியனும் ராமும், ஏதோ அலுவல் விஷயமாக வேதாவைத் தேடி வந்திருக்க,


தன் ஆசான்கள் என்ற முறையில் இருவருக்கும் பொதுவாக, "குட் மார்னிங் சார்" என்று காலை வணக்கம் கூறியவளின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை.


அதில் புருவம் சுருங்க,
"ஹேய் கேர்ள் இன்னிக்கு உனக்கு எக்ஸாம் தானே? இங்க என்ன செய்ற?" என்று வினவினான் செழியன்.


அதில் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவளுக்கு, நெஞ்சில் இருந்த
துக்கம் பல மடங்காய் பெறுக, "எஸ் சார். எக்ஸாம்கு போறதுக்கு முன்ன அப்பாவை பாத்துட்டு போலாம்னு வந்தேன். ஆனா அப்பா ஏதோ மீட்டிங் போய்ட்டாங்களாம்." என்று பதில் கொடுத்து விட்டு, "வர்றேன் சார்" என்று தன் வகுப்பறை நோக்கி நடக்கத் தொடங்கியவளின் குரல், என்ன முயன்றும் கரகரத்துத்தான் வெளியேறியது.


பெண்ணின் அந்தக் குரலை இனம் கண்டு கொண்டவனுக்கு,  தந்தையின் அறையையே ஏக்கமாய்ப் பார்த்தபடி நடந்து சென்ற மனைவியின் செயலில் உள்ளமும் பிசைய, "என்னாச்சு இந்த பொண்ணுக்கு?" என்று சிந்திந்தவனுக்கு, பதிலாகக் கிடைத்தது, முற்பொழுதில் ஓரிரு முறை காண நேரிட்ட அவளின் பரீட்சை நேரங்களும், அப்பொழுதுகளில் வெளிப்பட்ட தந்தை மகளின் அன்யூன்யமும்.


'அவ அப்பாவை ரொம்ப மிஸ் பண்றா போல!' என்று அவன் முகமும் வாட்டத்தைத் தத்தெடுக்க, "இந்த வேதா சார் ஏன் இப்டி பண்றாங்க? அவ தப்பே பண்ணி இருந்தாலும், அதுக்காக இவ்ளோ ஒதுக்கணுமா அவளை?" என்று மாமனாரின் மேல் மிகுந்த சினமே எழுந்தது அந்த மருமகனுக்கு.


சில நொடிகள் மட்டும் என்ன செய்வது என்று யோசித்தவன்,
பின், "ஹேய் கேர்ள்.." என்று அவளை அழைத்து, "உனக்கு எத்தனை மணிக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது?" என்று கேட்டான்.


அவளும் இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதாக அறிவிக்க, "அதுவரை இங்க உன் அப்பா ரூம்லயே படிச்சிட்டு இரு கேர்ள். நா இப்ப வந்தர்றேன்" என்று சொல்லியவன், அங்கிருந்த ராமிடமும், "நீங்களும் கூட இருந்து வொர்க் பாருங்க ராம்." என்று வேகநடையூடே சொல்லி விட்டு, அலைபேசியையும் எடுத்து யாருக்கோ அழைத்தபடி தன் வாகனத்தை நோக்கி விரைந்தான் செந்தமிழ்ச் செழியன்.


அவன் எங்கு செல்கிறான், எதற்காக தந்தை அறையில் நிற்கச் சொன்னான் என்று எதுவும் தெரியாத போதும், இப்பொழுதெல்லாம் அவன் வார்த்தைகளை வேத வாக்காய் எண்ணி இருப்பவள், தந்தையின் அறைக்குள்ளே அமர்ந்து படித்துக் கொண்டிருக்க, சரியாக நாற்பத்தைந்து நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தவன் பின்னே, சற்றே தளர்ந்த நடையூடு வந்து கொண்டிருந்தார் அவளின் தந்தை வேதாச்சலம்.


சற்று முன்னர் மீட்டிங் நடக்கும் இடத்திற்கே வந்து, "உங்களைப் பாக்க வி ஐ பி ஒருத்தங்க காத்துட்டு இருக்காங்க. உடனே என்னோட  வாங்க சார், ப்ளீஸ்" என்று அழைத்தவனின் கூற்றில், அவரும் என்னவோ ஏதோவென்று பதறிக் கொண்டு வந்தவர், "யாருப்பா அந்த வி ஐ பி?" என்று அறைக்குள் நுழைய,
கணவனின் பின்னே வந்த தந்தையைக் கண்டதும் வேகமாக எழுந்து நின்றாள் சிற்பி.


அந்நேரம் மகளை அங்கு எதிர்பாராதவரும், என்னவோ ஏதோவென்று பதறி, "சிற்பிமா?" என்று மகளை நெருங்க, தந்தையின் அவ்வழைப்பில் "அப்பா" என்று உடைந்து விட்டவளும், வில்லில் புறப்பட்ட அம்பாய் பாய்ந்து வந்து தந்தையை கட்டிக் கொண்டாள்.


கூடவே, "அப்பா, ஐ மிஸ் யூ சோ மச் ப்பா. முன்ன மாதிரி என்கூட பேசுங்கப்பா" என்று அழுகுறலில் கதற, அப்பொழுது தான் வேதாவிற்கும் தான் இத்தனை தினங்களாய் செய்து கொண்டிருக்கும் தவறும் புத்திக்கு உரைத்தது.


நன்றாக சிந்தித்துப் பார்த்தால், காதல் கன்றாவி என்ற பெயரில் பெற்றோருக்குத் தெரியாமல் எத்தணையோ மாபாதகங்களை செய்து கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு மத்தியில், அர்ஜுனின் தந்தையால் ஏற்பட்ட அவமானத்தைத் தவிர, சிற்பியின் மேல் பெரிதான தவறு ஒன்றும் கூறிவிட முடியாதுதானே.


சொல்லப்போனால், அப்படி ஒரு அவமானம் நடந்ததை சுட்டிக்காட்டி, அவர் செழியனை மணந்து கொள்ளச் சொன்னதும், மறு பேச்சு பேசாது மணந்து, தந்தையின் நெஞ்சில் பாலை வார்த்தவள் தானே தன் செல்ல மகள். என்று அவள் பக்க தவறுகள், இன்று சிறிதாகவே தெரிய, "இல்ல கண்ணா, அழாத. அப்பா உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல. அப்பாவை மன்னிச்சுடு கண்ணா" என்று அவரும் மகளின் தோள் அணைத்து, அவள் நெற்றியில் சிறு முத்தமும் வைத்தார்.


அதில் மென்மேலும் நெகிழ்ந்து போனவளும், "இல்லப்பா தப்பு பண்ணது நான்தான். நீங்க தான் என்ன மன்னிக்கணும்ப்பா. இனிமேல் உங்களுக்கு கஷ்டம் கொடுக்குற போல எதுவும் பண்ண மாட்டேன் ப்பா." என்று தந்தையின் தோளில் சாய்ந்து, மென்மேலும் கலங்கினாள் சிற்பி.

Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️