நூலகம் -9.2

இத்தனை நேரம் கூட்டத்தினுள் இருந்ததில் பெரிதாகத் தெரியாத அவர்களின் நெருக்கம், இப்பொழுது அங்கிருந்த உறவுகள் சிலரின் கண்களை விரிய வைத்தது.


அச்சமயம் அவர்களைக் கடந்து சென்ற பெரியவர் ஒருவர், "என்ன சிப்பிமா. ஆரு இந்தப் புள்ள? ரெண்டு பேரும் சேர்ந்து எங்கடா போறீங்க?" என்று கேட்டதில் மிகவுமே பதறித்தான் போனாள் சிற்பிகா.


"அது, அது, அது வந்து பாட்டி. இவரு எங்க காலேஜ்ல படிக்கிற சீனியர் தான். திருவிழாக்கு வந்தவங்க, இங்க டீ கடை எங்க இருக்குன்னு கேட்டாங்க. அதான் கூட்டிப் போறேன்" என்று திணறியவாறு பதில் சொன்னாள்.


"டீ கடையா? நம்ம சண்முகம் கடை இருக்குல்ல. நான் வேணா அந்தத் தம்பிக்கு காட்டறேன்? நீ எதுக்கு இந்த வெயில்ல அலையிரவ?" என்று அந்த பாட்டி அர்ஜுனோடு செல்ல முயல,


"இல்ல, பரவாயில்லை பாட்டி. நானே காமிச்சுக் கொடுக்குறேன். உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் உங்களை கோவில்ல அத்தை வேற தேடிட்டு இருந்தாங்க" என்று ஏதேதோ சொல்லி அவரை அனுப்பி விட்டுத் திரும்பியவள், "அய்யோ சீனியர், சொன்னேனே கேட்டிங்களா? இப்ப பாருங்க சுந்தரி பாட்டியே ஒரு மாதிரி பாத்துட்டு போறாங்க. நம்மளை தப்பா நினைச்சுட்டாங்க போல. நீங்க மொதோ இங்க இருந்து கிளம்புங்க" என்று தரையில் காலை உதைத்து சிணுங்கினாள்.


நடு ரோட்டில் நின்று சிறு பிள்ளை போல் குதித்துக் கொண்டிருப்பவளைப் பார்த்து பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியவன், "ஹேய் ஸ்வீட் ஹார்ட். நீ இப்டி நடு ரோட்டுல நின்னு குதிச்சுட்டு இருக்கதைப் பாத்தா தான் எல்லாரும் தப்பா நினைப்பாங்க. அப்டி நினைக்காம இருக்க, என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. வா சொல்றேன்" என்று அந்த மரத்தின் பின்னால் அழைத்துச் சென்றவன், "ப்ளீஸ் வித் யுவர் பர்மிசன்" என்று மட்டும் சொல்லிவிட்டு, அவள் பின்னே வந்து நின்று, அவள் இடையைத் தாண்டி தொங்கிக் கொண்டிருந்த தாவணியின் முனையை மெல்லக் கைப்பற்றினான்.


அதில், "அய்யோ சீனியர் என்ன செய்றீங்க நீங்க?" என்று பதறி அடித்துத் திரும்பியவளை, "ஷ் ஷ் சிபி." என்று அவள் வாயில் விரல் வைத்துத் தடுத்தவன், "உன் அர்ஜுன், தப்பா ஏதும் பண்ண மாட்டான்னு நம்பிக்கை இருந்தா பைவ் மினிட்ஸ் பேசாம நில்லு" என்றவன் அதன் அடுக்கை விரித்து, அப்படியே தலைக்குக் கொண்டு வந்து, முக்காடு போல் இட்டு, அவளின் பாதி முகத்தை மறைத்து இருந்தான்.


"இனி யாரு பாத்தாலும் நோ டென்ஷன் பேபி" என்று அவன் முக்காடிட்டு நிமிர்ந்தப் பின்னும், அவன் முகத்தையே பார்த்து இருந்தவளின் பார்வையில், அவன் நேசமும் கட்டவிழ்ந்து கொள்ள, தைரியத்தைக் கூட்டி மெதுமெதுவாக அவள் கரத்தைப் பற்றியவன், இன்னும் சற்று மறைவாக அழைத்துச் சென்று அங்கிருந்த திண்டிலும் அமரச் செய்தான்.


அதில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், "சீனியர், யாராச்சும் வந்துடப் போறாங்க. சீக்கிரம் கிளம்புங்க" என்று சப்தமே வராமல் முணுமுணுத்தவளைப் பார்த்து,
"டென் மினிட்ஸ் பேபி." என்று
ஹஸ்கி குரலில் கூறியவன்,
சுற்றியும் முற்றியும் பார்த்து விட்டு, இடது புறம் ஓடினான்.


'பத்து நிமிடம் பேச வேண்டும் என்றானே. அதற்குள் செல்லப் போறானா?' என்று அவள் படபடப்பாக எழுந்து நிற்க,


அதற்குள் அங்கிருந்த செம்பருத்திச் செடியை நெருங்கி, அதில் பூத்திருந்த பூவை பறித்துக்கொண்டு திரும்பியவன், ஒரு காலை மட்டும் மடித்து தரையில் ஊன்றி, அவள் முன்னால் மண்டியிட்டான்.


அவன் செயலில் மென்மேலும் அதிர்ந்தவள், "சீனியர் என்ன செய்றீங்க?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே,
"இன்னிக்கு ஃபிப்ரரி எய்ட். ப்ரொபோஸல் டேவாம் ஸ்வீட் ஹார்ட். பசங்க எல்லாம் அவங்கவங்க ஆளுக்கு ப்ரொபோஸ் பண்ண போயிட்டாங்க. அதான் நானும் என் ஆளை பாக்க வந்தேன்." என்று வழக்கம் போல் கண்ணைச் சிமிட்டியவன், "ஐ லவ் யூ சோ மச் பேப். டூ யூ லவ் மீ?" என்று அவள் முன்னே அந்தப் பூவை நீட்டினான்.


ஆணின் அந்தச் செயலில், சில நொடிகள் பேச்சே வரவில்லை சிற்பிக்கு.


'என்ன மாதிரியான உணர்வு இது?. இந்த அர்ஜுன் என்னை என்ன செய்து கொண்டிருக்கின்றான்?' என்று கலக்கமும், குழப்பமும் கலந்து விழிகளை விரித்தவளுக்கு, சற்று முன்னர் யாழினி கூறியதும், அன்று செழியன் கூறிய அறிவுரைகளும் காரணமே இல்லாமல் அவள் சிந்தனையில் உதித்தது.


சட்டென முகம் கூம்பிவிட, அவன் நீட்டிய பூவை வாங்கவும் இயலாமல், தனக்காக உயிரையே தூசியென நினைத்தவனிடம், உன் காதல் எனக்கு வேண்டாம் என்று மறுக்கவும் முடியாமல் அவனை கலக்கமாகப் பார்த்தவளுக்கு, சுற்றுப்புறமும் கவனத்தில் பதிந்தது.


"சீனியர் ப்ளீஸ். இது கோவில். இங்க வச்சி இப்டி எல்லாம் செய்யாதீங்க. நாம இதைப்பத்தி இன்னொரு நாள் பேசுவோமே!" என்று கெஞ்சும் குரலில் கூறியவளைப் பார்த்து, பெருத்த ஏமாற்றமாகிப் போனது அர்ஜுனுக்கு.


"இட்ஸ் ஓகே பேப்." என்றபடியே எழுந்து நின்று கையில் இருந்த
பூவை கீழே போடப் போனவனை,
"அய்யோ, வைக்காத பூவ கீழ போடக் கூடாதுன்னு, மீனாட்சி ஆன்டி சொல்லி இருக்காங்க சீனியர்!" என்று வேகமாக அவன் கரத்தைப் பற்றி பூவை வாங்கியவள், அதை என்ன செய்வது என்று தெரியாமல் கையிலேயே வைத்துக் கொண்டாள்.


அவள் தன் காதலை இன்னும் ஏற்காவிடினும், உரிமையாகத் தன் கையைப் பற்றி பூவை வாங்கியதும், அதைக் கையிலே வைத்திருப்பதும், அவளுக்கும் தன் மீது ஈர்ப்பு உள்ளது, ஆனால் அதை வெளிக்காட்டத் தயங்குகிறாள் என்ற நம்பிக்கையை அவனுக்குக் கொடுத்தது.


அந்த நம்பிக்கை கொடுத்த பரவசத்தில் மீண்டும் முகம் முழுதும் புன்னகையை பூசிக் கொண்டவன், "கண்மணி நீ வரக் காத்திருப்பேன். ஜன்னலில் பாத்திருப்பேன். கண் விழித் தாமரை பூத்திருப்பேன் என்னுடல் வேர்த்திருப்பேன். ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே" என்ற பாடல் வரிகளை பாடத் துவங்கியவனாய் அவளையே பார்த்து இருந்தான் அர்ஜுன்.


பாடலோடு சேர்த்து, அவன் பார்வையும் அவளை அச்சம் கொள்ளச் செய்ய, அவன் அடுத்த வரியைப் பாடுவதற்குள்,
"சீனியர்." என்று தடுத்து நிறுத்தியவள், அவன் நெருங்கி வந்து, "என்ன பேப்?" என்று கேட்கவும், "அங்க பாருங்க ராட்டணம்.
சுத்தப் போலாமா?" என்றாள் அவனிடமிருந்து விலகியவளாய்.


அதில் சற்றே மனம் சுணங்கினாலும், அவள் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுத்தவனாய், "ம்ம்ம், போலாம் பேப்" என்று அவளோடு சேர்ந்து நடந்தவன், அவளை பார்வையால் பருகிக் கொண்டே, ராட்டினத்தில் ஏறுவதற்கு ஆயத்தம் ஆக, சிற்பியின் உள்ளமோ படபடவென்று அடிக்கத் துவங்கியது.


அவன் பார்வையை திசை திருப்ப வேண்டி ராட்டினத்தை கை காட்டி இருந்தாலும், சின்னஞ்சிறு பெட்டியதில் எங்கே அவனோடு சேர்ந்து அமர வேண்டி வருமோ என்று தவித்து நின்றவள், "அக்கா என்னையும் ராட்டணம் ஏத்தி விடுங்கக்கா" என்று வந்த சிறுமியைக் கண்டு ஆசுவாசமாக மூச்சு விட்டாள்.


அதன் பின் சிற்பி அந்த சிறுமியோடும், அர்ஜுன் மட்டும் தனியாகவும், ராட்டினம் ஆடி முடித்து இறங்கும் வரையிலுமே அவளையே பார்த்து இருந்தவன், "உன்னைப் பாக்கறதுக்காகவே அவ்ளோ ஆசையா ஓடி வந்தேன். ஆனா நீ என்ன ரொம்பவே ஏமாத்திட்ட. உனக்கு ஹார்ட்டே இல்ல ஸ்வீட் ஹார்ட்." என்று சோகம் போலச் சொல்லி தலையைக் கோதினான் அர்ஜுன்.


அவன் முகம் போன போக்கில், சட்டென்று சிரித்து விட்டவளும், விளையாட்டாக நாக்கையும் துருத்திக் காட்டி, "ஹார்ட்டே இல்லாதவகிட்ட அப்றம் ஏன் சீனியர் காதலை எதிர்பாக்கிறீங்க?" என்றாள் ஒற்றை புருவத்தைத் தூக்கி.


பெண்ணின் புருவத் தூக்கலிலும், எதிர் கேள்வியிலும் அவன் சுணக்கம் எல்லாம் மறைந்து, பார்வையில் ரசனையைச் சேர்த்தவன், "உன்கிட்ட ஹார்ட் இல்லன்னு தெரிஞ்சதால தான், நான் என் ஹார்ட்டையே கொடுக்கறேன் பேபி. வித் லவ்வோட" என்று வழக்கம் போல் கண்ணைச் சிமிட்டியவன், "எப்போ வாங்கிக்கப் போற?" என்றும் அவளை நெருங்கி நின்று கேட்டான்.


அதில் அத்தனை நேரம் இருந்த விளையாட்டுத் தனம் மறைந்து,
'இந்தக் காதலை இவன் விடவே மாட்டானா?' என்று அவள் அவஸ்தையாகத் தலை தாழ்த்த,
"ஹோ காட், நீ பேசும்போது விட, இப்டி வெக்கப்பட்டுக் குனியும் போது, சோ சோ கியூட் சிபி" என்று கூறியவன், அவள் இன்னுமே ஊமையாகி நிற்பதைக் கண்டு, "சரி, சரி, ஹார்ட்ட அப்றமா வாங்கிக்கோ. இப்ப என்னோட ஞாபகார்த்தமா, உனக்கு ஏதாவது கிப்ட் வாங்கித் தரணும் பேப். அதையாவது வேணான்னு சொல்லாத!" என்று கெஞ்சலாகக் கூறியவன், அவள் மறுப்பிற்குக் கூட இடம் கொடாமல், அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்றது என்னவோ, அங்கிருந்த வளையல் கடைக்குத்தான்.


அவனுக்கு இருக்கும் வசதிக்கும், பணத்துக்கும், கூடவே அவள் மேல் கொண்ட காதலுக்கும் வைர வளையல் கடையையே பரிசளிக்கக் கூடியவன் தான் அர்ஜுன். ஆனால் இச்சமயம் அவசரத்திற்கு, த்ரெட் வளையல்கள் தான் அவன் கண்ணைப் பறித்தன.


ஒரு இஞ்ச் அளவிற்கு பட்டையான வளையல்களில், பற்பல வண்ணங்களில் பட்டு நூல்கள் சுற்றப்பட்டு, அதன் மேலே கல் மற்றும் குந்தன் வேலைபாடுகளும் செய்து, அழகழகாய் அணிவகுத்திருந்த, வளையல்களில், அவள் உடுத்தி இருந்த தாவணி நிறத்திற்கே ஒரு ஜோடி வளையல்களை தேர்வு செய்தவன், "கையை குடு ஸ்வீட் ஹார்ட். சரியா இருக்கான்னு செக் பண்ணலாம்" என்று அவளை நோக்கிக் கையை நீட்டினான்.


அதில் இமைகள் இரண்டும் ஆழியாய் விரித்தவள், "இல்ல சீனியர். நானே!" என்று தயங்க, "அட, சும்மா வளையல் தானே போடப் போறேன் பேப். தாலியா கட்டப் போறேன். எதுக்கெடுத்தாலும் தயங்கிட்டு." என்று அத்தனை நேரம் அவள் கொடுக்காது கொடுத்த சலுகையில், உரிமையாய் அவள் கையைப் பற்றினான் அர்ஜுன்.


அச்சமயம் அவர்களை உரசிக் கொண்டு செல்வது போல் ஒன்றன் பின் ஒன்றாக வந்து, வரிசை கட்டி நின்ற அரசியல் கொடிகள் பறக்கவிட்டிருந்த வாகனங்களில் இருந்து, உணர்வுகள் துடைக்கப்பட்ட முகத்தோடு அமைதியாகவே இறங்கினார் அர்ஜுனின் தந்தை ஆவுடையப்பர். கூடவே அவரின் கையாள்கள் பலரும்.


Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️