நூலகம் -9.1
திருவிழாக் கூட்டத்தில் அர்ஜுனைப் பார்த்ததும், சிற்பிக்கு சில நொடிகள் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. 'அர்ஜுன் இங்கே எப்படி?' என்று திருவிழாவில் தொலைந்த சிறு பிள்ளையென மலங்க மலங்க விழித்து நின்றாள் சிற்பிகா தேவி.
கூடவே, 'உடல்நிலை வேறு சரியில்லாமல் இருந்ததே!' என்று அவன் மருத்துவமனையில் இருந்ததும் ஞாபகம் வந்து, "இப்பொழுது சரியாகி விட்டதா என்ன? இல்லையே இரண்டு தினங்கள் முன்னர் கூட, இரண்டு விரல்களும் மரத்துக் கிடப்பதாய் கீதா சொன்னாளே! அதற்குள் ஏன் இப்படிக் கிளம்பி வந்தான்? என்னை, என்னைப் பார்க்கவா?' என்றெல்லாம் அவள் சிந்தனையும், கேள்விகளும் எங்கெங்கோ சென்று கொண்டிருக்க, அங்கே கூட்டத்தில் இருந்த அர்ஜுனும் அதற்குள் மாயமாக மறைந்து இருந்தான்.
ஒரு கணம் அர்ஜுன் வந்தது கனவோ என்று எண்ணும் வண்ணம், அவன் நின்ற சுவடே இல்லாமல் போனதில் சுற்றியும் முற்றியும் தேடியவள், "நான் இங்க இருக்கேன் ஸ்வீட் ஹார்ட்" என்று காதோரம் கிசுகிசுத்த குரலில்
விதிர் விதிர்த்துத் திரும்பினாள்.
அவளைப் பார்த்து அழகாகக் கண்ணைச் சிமிட்டியவன்,
"நீ பாட்டுக்கு என்ன தனியா தவிக்க விட்டு இப்டி கோவில் திருவிழாக்கு கிளம்பி வந்துட்டியே. நான் உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா ஸ்வீட் ஹார்ட்?" என்றவன், "ஒவ்வொரு நாளும் என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என்ன பாக்க வர்றப்போ நீயும் வருவன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா நீ ஜாலியா திருவிழாக்கு கிளம்பி வந்துட்ட! இது நியாயமா ஹனி?" என்று பல வருடங்கள் உயிராய் நேசித்த காதலியிடம் போல் குழைந்த குரலில் குறைப்பட்டுக் கொண்டான் அர்ஜுன்.
ஏனோ அவன் குரலில் இருந்த குழைவு அதும், அவன் விழியில் வழிந்த நேசமதும், அவளுக்கும் ஒருவித மாயையைத் தோற்றுவிக்க,
"அது, அது, நான் நான் அப்பாக்காக தான்" என்று திணறியவளுக்கு, யாரேனும் தங்களைப் பார்க்கிறார்களா? என்ற பதட்டம் வேறு நெஞ்சைக் கவ்வியது.
சுற்றியும் முற்றியும் பார்த்து இல்லை என்று உறுதி செய்தவள் சட்டென்று ஞாபகம் வந்தவளாய், "உங்களுக்கு, உங்களுக்கு, கை சரியாகிடுச்சா சீனியர்? இப்ப விரல் எல்லாம் ஓகே தானே?" என்று அவன் கையைப் பார்த்தவளை இன்னும் சற்று நெருங்கி நின்றவன்,
"அதெல்லாம் என் சிபியைப் பாத்த நிமிஷமே சரியாகிடுச்சு. ஆனா உன்ன இப்டி பாவாடை தாவணில பாத்து மனசு தான் கெட்டுப் போச்சு. இந்த ட்ரெடிஸ்னல் டிரஸ்ல செம்மையா இருக்க பேப்" என்றான் ஒரு மாதிரியான குரலில்.
ஆணின் அந்த வார்த்தைகள் பருவச் சிட்டான அவளுள்ளும் பல பட்டாம் பூச்சிகளை படபடக்கச் செய்ய,
"சீனியர் இது கோவில். இங்க வந்து என்ன பேசறீங்க?" என்றவளின் குரலிலும் இனம் புரியாத கிறக்கம்.
பெண்ணின் அந்தக் குரலே அவன் நேசத்திற்கு நெய்யை ஊற்ற,
"கோவில்ங்கறதால தான் பேசிட்டு மட்டும் இருக்கேன் ஸ்வீட் ஹார்ட். இல்லன்னா" என்று மீதி வார்த்தைகளை சொல்லாது விட்டவன், "நீ எப்போ சொல்லப்போற பேப்?" என்று கேட்டான் புருவத்தை ஏற்றி இறக்கி.
"என்ன, என்ன, என்ன சொல்லணும்?" என்று புரியாமல் பார்த்தவளிடம்,
"உன் காதலை எப்ப சொல்லப்போற?" என்று ஹஸ்கி குரலில் கேட்டான் அர்ஜுன்.
அதில் விழிகள் இரண்டும் ஆழியாய் விரிய, 'எங்கு வந்து என்ன பேசுகிறான் இவன்? காதலைச் சொல்லனுமாமே! நல்ல கதைதான்' என்று அவளையும் மீறி சிவக்கத் தொடங்கிய முகத்தை தலையைத் திருப்பி மறைத்துக் கொண்டவள், "அப்டிலாம் சொல்றதுக்கு எதுவும் இல்லையே" என்று மிதப்பாகச் சொன்னாள்.
"அப்டியா? எதுவும் இல்லியா? உண்மையாவா?" என்று அவள் விழிகளுக்குள் ஆழப் பார்த்தவன், அவள் விழிகளைத் தழைத்துக் கொள்ளவும், "இன்னிக்கு இந்தத் திருவிழா முடியறதுக்குள்ள உன்ன என்கிட்ட லவ்வ சொல்ல வைக்கலை, நான் உன்னோட அர்ஜுனர் இல்ல பேப்" என்று கண்சிமிட்டிச் சிரித்தான்.
அதில் அவனைச் செல்லமாக முறைத்தவளும், "அது உங்களால முடியாது சீனியர்" என்று சவால் விடுவது போல் சொல்ல,
"அதையும் பாக்கலாம். பேப்" என்று கூட்ட நெருக்கடியால், இன்னும் அவள் முதுகில் படுமாறு லேசாக உரசி நின்றவன், "நீ, எப்போ புள்ள சொல்லப்போற. தப்பென்ன செஞ்சேன் தள்ளிப்போற" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி பாடலும் பாடத் துவங்கினான்.
அதில், "சீனியர்ர்ர்ர்" என்று நிஜமாகவே முறைத்தவள்,
"இது கோவில் சீனியர். இங்க போய் பாட்டெல்லாம் பாடலாமா?" என்று பல்லைக் கடிக்க,
"அப்போ உன் லவ்வை ஒத்துக்கோ பேபி" என்று அவன் ரகசியமாகக் கண்ணைச் சிமிட்டினான்.
சில வாரங்கள் முன்பு, அவளுக்காகவே, மின்சாரம் தாக்கப்பட்டு, அவன் மருத்துவமனையில் இருந்ததும், இப்பொழுது இந்தக்கணம், தன்னைப் பார்க்கவே தன் உடல்நிலையும் கருத்தில் கொள்ளாது, கிராமத்திற்கே வந்து நிற்பதும், அவள் உள்ளம் முழுதும் ஒருவித மாயையை வியாபிக்கச் செய்து, அவர்களின் உரையாடலையும் சகஜமாக்கி இருந்தது.
திருவிழாவின் இறுதி நாளானதால் சாமி தரிசனத்திற்கு மக்கள் கூட்டம் ஆண் பெண் பேதமில்லாமல் முண்டியடித்து அலைமோதிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதும், சிரித்துக் கொண்டதும் கூட கூட்டத்தில் இருந்த யார் கருத்தையும் பெரிதாகக் கவராது போனது.
அப்படியே அர்ஜுனோடு பேசிக்கொண்டே சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருந்தவள், அப்பொழுது தான் தோழியின் ஞாபகம் வந்தவளாய் அருகில் நின்ற யாழினியைப் பார்க்க, முன் நின்ற இடத்திலிருந்தே நகராமல் சிற்பியைதான் முறைத்துக் கொண்டிருந்தாள் யாழினி.
அவள் அருகிலே அவர்களின் இன்னொரு தோழி கீதாவும் நின்று கொண்டிருக்க, யாழினியின் முறைப்பில், 'அச்சோ!' என்று அர்ஜுனை விட்டுவிட்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவளிடம் ஓடியவள், "யாழி ஏன்டி இங்கயே நின்னுட்ட?" என்று தவறு செய்தவளாய்க் கேட்டாள்.
"நான் இங்கயே நின்னு பத்து நிமிஷம் ஆச்சுடி. ஆனா அதையே
நீ இப்போதான் பாக்குறல்ல?" என்ற யாழினியும் குற்றம் சாட்டும் தோரணையில் சொல்ல,
"அது அது அர்ஜுன் அர்ஜுன், சீனியர் வந்து, அது எனக்காக, திடீர்னு அவரைப் பார்த்ததும்" என்று மூச்சு வாங்க ஏதோ சொல்ல முயன்றாள் சிற்பி.
அதைப் பார்த்து சிரித்து விட்ட அவர்களின் தோழி கீதாவோ, "ரிலாக்ஸ் சிற்பி. சீனியர் உன்னப் பாக்கவே இவ்ளோ தூரம் வந்திருக்கார்னா அதுக்கு சந்தோசப்படாம ஏன்டி பதட்டமா இருக்க?" என்று கேட்டவள், "யாழி நீ ஏன் டி அவளை இப்டி முறைக்கிற?" என்று யாழினியிடமும் கேட்டாள்.
தோழிகளின் அழைப்பில் இன்று தான் ஊரில் இருந்து வந்த கீதாவிற்கு, நேற்று செழியன் அவர்களை கண்டித்தது எதுவும் தெரிந்திருக்கவில்லை.
கூடவே அர்ஜுன் சிற்பியைத் தேடி இத்தனை தூரம் வந்திருப்பதை, அவன் உயிர் நேசத்திற்குச் சான்றாய் எண்ணியவள், "உன் ஆளு உண்மையிலே வெரி வெரி கிரேட் டி. லவ் சொல்லி ஒரு மாசம் கூட ஆகல்ல. ஆனா உனக்காக உயிரையே பணயம் வைக்கிற அளவு போயிருக்கார். அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருந்தும் உன்னைப் பாக்குறதுக்கு, இங்கயே கிளம்பி வந்துட்டாரே! ஒரு எம் பி யோட மகன்னு எந்த பந்தாவும் இல்லடி.
நீ வெரி வெரி லக்கிடி" என்று அவள் பாட்டில் அர்ஜுனை புகழத் துவங்கி இருந்தாள்.
அதைக்கேட்டு அவளையும் சேர்த்து முறைத்த யாழினி, "ஹேய் லூசு மாதிரி உளராத கீதா. அவளைத் தேடி அவன் கிராமத்துக்கு வந்தா உடனே அவன் பெரிய இவனா?" என்று திட்டியவள், "சிற்பி, அண்ணா நேத்து என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் இல்லியா உனக்கு? அவனை மொதோ அனுப்பு!" என்று மட்டும் சொன்னாள்.
அதைக்கேட்டு, "அய்யோ ட்ரைனருக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சா? என்னடி சொன்னாங்க? ரொம்ப டோஸா?" என்ற கீதாவும் அவர்களையே குழப்பமாகப் பார்த்திருக்க,
இருவரையும் சோகமாகப் பார்த்து விட்டு, தலையைக் குனிந்து கொண்டவளும், "ஆனா ஆனா எனக்கு என்னவோ அர்ஜுன் அர்ஜுன் நல்லவர்னு தான் தோணுது யாழி. கை கூட இன்னும் சரியாகத சமயம் என்னைப் பாக்காம இருக்க முடியலன்னு இவளோ தூரம் வந்துருக்காரு. பாவம்டி அவரு"
என்று மென்குரலில் சொன்னாள் சிற்பிகா.
"ஆனா அதுக்காகவெல்லாம் அவனோட காதலை நீ அக்சப்ட் பண்ணிக்கப் போறியா சிற்பி? நேத்து அண்ணா இது படிக்கிறதுக்குண்டான வயசுன்னு சொன்னதை எல்லாம் கேட்டதான?" என்று கோபக் குரலிலே கேட்டாள் யாழினி.
"அய்யோ அப்டி எல்லாம் பண்ணப் போகல்லடி" என்று வேகமாக மறுத்தவளும், "சும்மா கொஞ்சம் நேரம் பேசிட்டு அவரை நானே அனுப்பி வச்சிட்டு வர்றேன் டி. அதுவரை என்ன யாரும் தேடாம மட்டும் கொஞ்சம் பாத்துக்கோ யாழி" என்று கெஞ்சல் குரலில் சொன்னாள்.
இத்தனை தினங்கள் அவன் இவன் என்று அவனை ஏதேதோ திட்டி இருந்தவளின் விளிப்பு, இப்பொழுது அவராக மாறி இருந்தது.
நேற்று செழியனும், இன்று தானும் இவ்வளவு சொல்லியும் கூட, அர்ஜுனோட கதைக்கப் போவதற்கு தன்னையே காவல் காக்கச் சொல்லியவளை விழியில் கூர்மை கூட்டிப் பார்த்தாள் யாழினி.
"அப்டி எல்லாம் பாக்காதடி. சும்மா பேசத்தான் யாழி. போயிட்டு உடனே வந்திடுறேன்?" என்று மீண்டும் கெஞ்சியவளை அவனோடு அனுப்ப யாழினிக்கு துளியும் மனமில்லை என்றாலும், உயிர்த் தோழியின் உணர்வுகளையும் ஒதுக்கித் தள்ள முடியாதவள், "எனக்கு என்னவோ இதெல்லாம் சரியாப் படல சிற்பி. இது கோவில். எல்லாரும் வர்றபோற பொது இடம். நீங்க ரெண்டு பேரும் ஒன்னா நிக்கிறத யாரும் பார்த்தா உனக்குத்தான் பிரச்சனை வரும். அதனால அவனை சீக்கிரம் அனுப்பிட்டு வந்திடு" என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னவே, "தாங்க்ஸ் யாழி. அம்மா, அப்பா கேட்டா ஏதாவது சொல்லி சமாளிடி" என்று அவள் கை பிடித்துக் கூறிவிட்டு சிட்டாகப் பறந்து இருந்தாள் சிற்பிகா.
செழியன் மீதும், தோழி மீதும் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்து இருப்பவள், மீண்டும் அர்ஜுனிடம் சென்ற பொழுது, "சீனியர், நீங்க மொதோ இங்கயிருந்து கிளம்புங்க" என்று தான் சொல்லி இருந்தாள்.
"ஏன், ஏன், ஏன் சிபி? நா இங்க வந்தது உனக்குப் பிடிக்கலியா?" என்று அவன் முகம் வாடிக் கேட்டதும், அர்ஜுனின் அந்த வாடிய முகம் அவளை என்னவோ செய்தது.
"அப்டிலாம் இல்ல சீனியர். நாம இப்டி நின்னு பேசிட்டு இருக்கதை அப்பா, இல்ல எங்க ரிலேசன்ஸ் யாராவது பாத்தா பெரிய பிரச்சனை ஆகிடும். அதான். ப்ளீஸ் இங்க இருந்து போயிடுங்க சீனியர்" என்றாள் கெஞ்சல் போன்ற குரலில்.
"ஹேய், இதுக்கு எதுக்கு ப்ளீஸ் எல்லாம் சொல்ற ஸ்வீட் ஹார்ட்?
போடா அர்ஜுன்னு சொன்னா, சரிங்க மேடம்னு போயிடப் போறேன்" என்று இலகுவாகச் சிரித்தவன், "ஆனா பத்து நாளா உன்னப் பாக்காம ஹாஸ்பிடல்ல இருந்தது மனசுக்குள்ள என்னவோ போல இருக்கு சிபி. அதிகம் எல்லாம் வேணாம். ஒரு பத்தே பத்து நிமிஷம் உன்னோட பேசிட்டுப் போயிர்றேன். அப்டியே உன் லவ்வையும் சொன்னின்னா அடியேன் சந்தோசமாப் போவேன்!" என்று அவனும் பார்வையாலே கெஞ்சினான்.
தமிழ்நாடு முழுதுமே ஓரளவு நன்றாகவே அறியப்பட்ட அமைச்சரின் மகனாக அறிமுகமாகி, அந்தப் பெரிய பொறியியல் கல்லூரியையே ஐந்து மாதங்களாக ஆட்டி வைத்தவன் அவன். அவன் அங்கு வந்து சேர்ந்த நாளில் இருந்து, அவன் வரும் திசையைக் கண்டாலே மாணவர்கள் எல்லாம் அலறி அடித்து ஓடுவார்கள். ஏன் ஆசிரியர்கள் கூட, அவனிடம் நின்று வாய் கொடுக்க, யோசிப்பார்கள். அவள் அறிந்து அவன் வாய் பேசியதை விட கைதான் அதிகம் பேசி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவன் தன் முன்னே வந்து நின்று, தன் நேசத்திற்காக சிறு பிள்ளை போல் கெஞ்சிக் கொண்டிருந்தது, அப்பொழுது தான் பருவ வயதிற்கே உரிய மாற்றங்களை எல்லாம் எதிர் கொள்ளத் துவங்கி இருக்கும் பெண்ணவளின் மனதிலும் சிறு மயக்கத்தை தோற்றுவிக்கத்தான் செய்தது.
ஆறடிக்கும் அதிகமான உயரத்தில், அழகும் ஆண்மையும் மிளிர, முன்னுச்சி முடியை ஸ்டைலாகக் கோதியபடி, உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் பெறப்பட்டது போன்ற, பார்ன் வித் சில்வர் ஸ்பூன் தோற்றம் கொண்டு இருந்தாலும், சற்று முன்னர் கீதா கூறியது போல், எந்த பந்தாவும் இல்லாது, அவள் முன்னே நின்று இருந்தவன், அவளை ஒரு மகாராணி போல உணரச் செய்திருந்தான்.
அதில் அவன் மேல் இருந்த விழிகளை அகற்றாது அவனையே பார்த்து இருந்தவள், "ஓகே சீனியர்." என்று அன்னிச்சையாக தலையை அசைத்தாள்.
"சீனியர் வேணாம் பேபி. அர்ச்சுனரேன்னு கூப்பிடு" என்று குழைந்த குரலில் சொன்னவன், அவளோடு இணைந்து நடந்தபடியே சாமியை கும்மிட்டு முடித்து, அவளை வெளியே அழைத்து வந்தான்.
அவன் அவளிடம் காதலை உரைத்து ஒரு மாதமே கடந்த நிலையில், அவனுடைய பார்வையும், பேச்சும், செல்ல விளிப்புகளும், மிகவும் அதிகப்படியாகவே தோன்றினாலும், இதுவரை எந்த ஆணினையும் ஏறெடுத்தும் பாராதவளை அர்ஜுனுடைய அந்த அடாவடி என்னவோ செய்யத் துவங்கியது.
அதில் கோவிலை விட்டு வெளியே அழைத்து வந்தவன், அங்கிருந்த மரத்தை கைக்காட்டி, "அங்க போய் பேசலாமா ஹனி?" என்று கேட்டதற்கும் எந்த மறுப்பும் சொல்லாது, "ம்ம்ம்" என்று அவனோடு இணைந்து நடந்தாள் சிற்பி.
Comments
Post a Comment