நூலகம் -8.2

வேதாச்சலத்திற்கு மட்டுமல்லாது, செழியனின் தந்தைக்கும் அதுதான் சொந்த ஊர் என்பதால், தாய் தங்கையின் விருப்பத்தில், அவனும் சில தினங்கள் தன் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து, அங்கு தான் வந்து இருக்க, அண்ணனோடு நின்ற தோழியைப் பார்த்ததும், "யாழி..." என்று ஓடி தோழியின் தோளைப் பற்றிக் கொண்டாள் சிற்பிகா தேவி.


"சிற்பி, வாடி" என்று மகிழ்ச்சி பொங்கத் திரும்பி அவள் கையைப் பற்றிக் கொண்டவளும் அவளோடு சேர்ந்து சாமி எல்லாம் கும்மிட்டு விட்டு அங்கிருந்த ஆலமரத் திண்டிற்கு அழைத்துச் சென்று அவளோடு அமர்ந்து கொண்டவள்,
"நேத்து நைட்டு நீ புலம்புன புலம்பலுக்கு எங்க திருவிழாக்கு வராம போயிடுவியோன்னு நினைச்சேன்டி" என்று சொன்னாள்.


மெலிதான புன்னகையை உதிர்த்தவளும், "எனக்கும் வர்றதுக்கு கொஞ்சமும் பிடிக்கலடி. ஆனா மறுப்புக்கு அப்பா காரணம் கேட்டா என்ன சொல்லன்னு தெரியல" என்று தோழியின் விழிகளைப் பாராது தலையைக் குனிந்து கொண்டவள், "நேத்து செழியன் சாரும் ஹாஸ்பிடல் போய் பாத்துட்டு அர்ஜுன் இப்ப ஓகேன்னு சொன்னாரா. அதான் அப்பாக்காக கிளம்பி வந்துட்டேன்" என்று சொன்னாள்.


தன் விழிகளைப் பார்க்க மறுக்கும் தோழியின் முகத்தையே சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தவள், "அர்ஜுனுக்காக இவ்ளோ ஃபீல் பண்றன்னா, அந்த அர்ஜுன நீயும் லவ் பண்றியா சிற்பி?" என்று சில தினங்களாகவே அவளை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வியை தோழியிடம் கேட்டாள் யாழினி.


இதுவரை அவளுக்கே ஒரு தெளிவு கிட்டாத கேள்விக்கு, தோழிக்கு எப்படி பதில் உரைப்பாள்?


"தெரியலடி..." என்று உதட்டைப் பிதுக்கியவள், "ஆனா, நாம நினைச்ச அளவு அர்ஜுன் மோசமானவன் இல்லன்னு மட்டும் எனக்கு நல்லாப் புரியுது. அந்த இடத்தில அன்னிக்கு வேற யாரு இருந்திருந்தாலும் அப்டி ஒரு காரியம் பண்ணிருப்பாங்களாங்கிறதும், அவன் பக்கத்தை ரொம்பவே வெயிட்டா காட்டுது. இப்போல்லாம் உள்ளுக்குள்ள என்னவோ குடையுதுடி. நான் நானாவே இல்ல" என்று சோகையாக புன்னகைத்தாள்.


அதைக்கேட்ட யாழினிக்கும், அர்ஜுனின் அந்தச் செயலை இலகுவாக ஒதுக்க முடியாவிட்டாலும், அவன் மேல் நம்பிக்கை வரவும் மறுக்க, "எதுக்கும் அவசரப்படாத சிற்பி. நல்லா யோசிச்சு முடிவு பண்ணு..." என்று மட்டும் சொல்லியவள், கையோடு கொண்டு வந்திருந்த தேங்காயைக் கடித்து தோழியிடம் கொடுத்தாள்.


அவளும் அதை வாங்கி உண்டு கொண்டிருக்க, தங்கையை அழைக்க வந்த சமயம், அவர்கள் சம்பாசனைகள் எல்லாம் கேட்டிருந்த செழியனுக்கோ, சினத்தில் கை முஷ்டிகள் இறுகியது.


கல்லூரி படிக்கும் காலம் தொடங்கி இப்பொழுது கல்யாண வயதை நெருங்கியும் கூட, காதல் என்ற வார்த்தையை வாயால் கூட கூறியிராதவனுக்கு, படிக்கும் பருவத்திலே இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் மாணவிகளின் மேல் அவர்களின் ஆசிரியனாகவும், கோபம் தான் சட்டென்று மூண்டது.


"என்ன நடக்குது இங்க? காதல் அது இதுன்னு ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க?" என்று பல்லைக் கடித்தபடி அவர்கள் முன்னே வந்தான் செழியன்.


அதில் அதிர்ந்து எழுந்தவர்கள், அவனைச் சற்றுப் பீதியாகப் பார்க்க, "சொல்லுங்க!" என்ற அரற்றலில் அர்ஜுன் அன்று காதல் சொல்லியதையும், அதற்கு பின்னாலும் அவள் பின்னாலே சுற்றி ஈர்க்க முயன்றதையும், அவன் தன்னைக் காப்பாற்றவே மின் வயரை கைப்பற்றியதையும் சிற்பிகா சிறு தயக்கத்தோடு சொல்லி முடித்தாள்.


"தொட்டதுக்கெல்லாம் சார் சார்னு என்கிட்ட ஓடிவந்து எல்லாம் சொல்லுற பொண்ணு, இதை ஏன் என்கிட்ட முன்னவே சொல்லலை? மேடம் ரொம்பவே பெரிய பொண்ணா ஆகிட்டீங்களோ?" என்று கூர்ந்த பார்வையோடு சிற்பியிடம் கேட்டவன், "நீயும் என்ன தோழிக்கு தோள் கொடுக்கறியா?" என்று தங்கையிடமும் காய்ந்தான்.


"ண்ணா இல்லண்ணா, அப்போவும் சரி, இப்போவும் சரி, அர்ஜுன நம்பாதன்னு தான் நான் சொல்லிட்டு இருந்தேன்" என்று யாழினி பதற்றமாகச் சொல்ல,


"அப்போ நம்பிக்கை வந்துச்சுன்னா படிக்கிற வயசுல உடனே காதல்ல இறங்கிடுவீங்களா?" என்று இருவரையும் சேர்த்தே முறைத்தவன், "பதினெட்டு வயசுங்கறது காதல் செய்றதுக்கான வயசு மட்டும் இல்லை, காதலைப் பத்திப் பேசக்கூட மெச்சூரிட்டி இல்லாத வயசு. அதிலயும் காலேஜ் பருவம் கற்றலுக்கு மட்டுமேயான பருவம். இப்ப நீங்க கத்துக்கிற படிப்பும், அது சார்ந்த விஷயங்களும் தான் உங்களுக்கு காலத்துக்கும் துணை இருக்கும். இந்த வயசுல உங்களுக்கு என்ன தெரியும்னு வாழ்க்கை முழுசும் கூடவே வரபோற லைஃப் பாட்னரை இப்பவே தேர்ந்தெடுக்க நினைக்கிறீங்க. அப்டியே உங்களுக்கு தேர்ந்தெடுக்கத் தெரிஞ்சாலும், இன்னும் படிப்பே முடியாத நிலையில் அதுக்கு என்ன அவசரம், அவசியம். உங்களை கஷ்டப்பட்டு பெத்து வளர்த்து எல்லாம் செய்ற, பேரண்ட்ஸ், உங்களுக்கான லைஃப் பாட்னரையும் சூஸ் பண்ணித் தரமாட்டாங்களா? அந்த அர்ஜுன் தான் அறிவில்லாம மனச அலைபாய விட்டா, நீயுமா?" என்று கேள்வியாய் நிறுத்தியவன், சிற்பியை ஏறிட்டுப் பார்க்க,


"சாரி சார். நீங்க நினைக்கிற அளவுலாம் எங்களுக்குள்ள எதுவும் இல்லை சார். அன்னிக்கு அர்ஜுன் எனக்காக தான் கரென்ட் வயரைப் பிடிச்சி இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கான். அதான் அவன் செஞ்ச தியாகத்தை நினைச்சு கொஞ்சம்" என்று அதற்கு மேல் சொல்ல முடியாது தடுமாறினாள் சிற்பிகாதேவி.


அதைக்கேட்டு இன்னுமே பல்லைக் கடித்து, "அன்னிக்கு அவன் தான் லூசு மாதிரி கரண்ட் வயரைப் பிடிச்சான்னா, நீ அதுக்கு காதல், தியாகம்ணு பேரு வப்பியா? அப்டியே இருந்தாலும், வாழ்க்கை முழுசும் கூடவே வரப்போற ஆரோக்கியமான ஒரு நேசத்துக்கு, சின்னதா ஒரு தியாகத்தால மட்டுமே முன்னுரை எழுத நினைக்கிறது அறிவுள்ளவங்க செய்யுற காரியம் இல்ல சிற்பிகா." என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன், "அஸ் எ ப்ரொபஸ்ஸர், அண்ட் வெல்விசரா சொல்றேன். உங்களோட இந்த ஏஜ் ஒன்லி ஒன் ஸ்டடிக்கான ஏஜ் மட்டும் தான். அதை மட்டும் இப்போ சரியா பண்ணுங்க. உங்களையே பெருசா நம்பி படிக்க அனுப்பி இருக்க, பேரண்ட்சையும் கொஞ்சம் மனசில நிறுத்துங்க!" என்றும் சொல்லி முடித்தவனைக் கண்டு,


"வெரி வெரி சாரி சார், இனிமேல் இப்டிலாம் பேச மாட்டோம் சார். ஒழுங்கா இருக்கோம்" என்று இருவருமே கோரசாகத் தலையை ஆட்டினர்.


அவனறிந்த வகையில் அவர்கள் இருவருமே, மிகவும் நல்ல பெண்கள் ஆதலால், "ம்ம்ம். கவனம்" என்று மட்டும் கூறி அதற்கு மேல் அந்த விஷயத்தை அப்படியே ஒதுக்கி விட்டு, திருவிழா வேலைகளைப் பார்க்கப் போய் விட்டான் செழியன்.


செழியனின் அந்த அறிவுரைகளில், அவர்களுக்கும் தவறு செய்து விட்டவர்களாய் குற்ற உணர்வுகள் தோன்றியது.


"படிப்பைத் தவிர இனிமேல் எதபத்தியும் யோசிக்கக் கூடாதுடி என்ன?" என்று கேட்ட யாழினியைப் பார்த்து, "ம்ம்ம்" என்று சொல்லிக் கொண்டாலும், கொளுத்தி வைத்த கொசுவத்திச் சுருளாய், அர்ஜுனின் நினைவுகளும் நம நம வென்று நெஞ்சின் ஓரத்தில் உறுத்திக் கொண்டே தான் இருந்தது பெண்ணவளிற்கு.


ஆனால் செழியனின் கண்டிப்பிலும், தந்தையை எண்ணியும் எதையும் வெளிக்காட்டாதவள், அடுத்து வந்த இரண்டு நாட்களும் திருவிழா நிகழ்வுகளில் மகிழ்ச்சியாகவே தன்னைப் புகுத்திக் கொண்டாள் சிற்பிகா தேவி.


அதற்கு செழியனின் அன்னையுடைய அலப்பறைகளும், அவரை விழியாலே உருட்டி மிரட்டும் செழியனும் பெரிதுமே உதவியாக இருந்தனர்.


திருவிழாவை முன்னிட்டு கோவிலில் செய்யப்பட்ட, சர்க்கரை பொங்கல், புளியோதரை, இன்னும் உறவுக்காரர்கள் செய்து கொடுத்த இனிப்புகள், என்று அவர் பாட்டில் அனைத்தையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்த மீனாட்சியைப் பார்த்து, "ம்மா, எண்ணைப் பண்டம் சாப்பிடாதீங்கன்னா கேக்க மாட்டிங்களா? இவ்ளோ இனிப்பா இருக்கு, இதைப் போய் இப்டி சாப்பிடுறீங்க? கொடுங்கம்மா" என்று அன்னையிடமிருந்த அதிரச வாளியை பறித்து எடுத்தான் செழியன்.


"உன் சித்தி ஆசையா செஞ்சு கொண்டு வந்துருக்காப்பா, நான் திங்கலைன்னு தெரிஞ்சா புள்ள பாவம் வருத்தப்படுவா, அப்றம் நம்ம வீட்டுக்குக் கூட வரமாட்டா. நா உன் கல்யாணத்துக்கு அவளைத் தான் பொண்ணு பாக்க வேற சொல்லி இருக்கேன். அதுக்காகவாவது அவ செஞ்சதை திங்கனுமில்ல செழியா? கொடுத்துடுப்பா" என்று மகன் கையில் இருந்த அதிரச வாளியை மீண்டும் கை பற்றியவர், மளமளவென்று நான்கு அதிரசங்களையும் உள்ளே தள்ளத் தொடங்கினார்.


அதைக்கண்டு பதறிக் கொண்டு வந்த யாழினியும், "ம்மா இது உனக்கே ஓவரா தெரியலயா? ஒரே நேரத்தில எவ்ளோமா சாப்பிடுவ" என்று வாளிக்குள் எட்டிப் பார்த்து "காலி" என்று முணுமுணுக்க,


"ஏய், சும்மா இருடி. இப்டி ஊர்ல இருக்கப்ப தான் என்னால இதெல்லாம் திங்க முடியும். சுத்தி எல்லாரும் இருக்கதால உங்கண்ணனால என்ன எதுவும் சொல்ல முடியாது. அங்கபாரு உன் அண்ணன் என்ன திட்ட மாட்டாம மூஞ்சை தூக்கி வச்சிருக்கத" என்று குதூகலித்துச் சிரித்தவர், "இந்தா சிற்பிமா, நீயும் ரெண்டு அதிரசம் திண்ணு. இனிப்புனா இனிப்பு, அப்டி ஒரு இனிப்பு" என்று அருகில் நின்ற சிற்பிகாவின் கையிலும் இரண்டு அதிரசத்தை வைத்தார் மீனாட்சி.


"தேங்க்ஸ் ஆன்டி" என்று அதை வாங்கி உண்ட சிற்பிகாவிற்கும், மீனாட்சியின் அலப்பறைகளில் மனம் ஒருவாறு சுமூகமாக உணர்ந்தது.


இரு குடும்பத்திற்கும் அதிகம் பேச்சு வார்த்தைகள் இல்லை என்றாலும், அங்கு கல்லூரியில் போலவே, ஊர் விசேஷங்களில் பங்குபெறும் இதுபோலான சந்தர்ப்பங்களில்  பெரும்பான்மை நேரம் தோழியுடன் தான் சுற்றிக் கொண்டிருப்பாள் சிற்பி.


அப்பொழுதுகளில் எல்லாம் சுசீலாவை எதிர்பாராமல், செழியனின் அன்னை மீனாட்சி தான் சிற்பிக்கும் சேர்த்து உண்ண, பருகக் கொடுத்து, தன் மகளைப் போலவே பார்த்துக் கொள்வார்.


"வீட்டுக்கு வாங்க உங்களைப் பேசிக்கிறேன்" என்று செழியன் இன்னுமே முறைத்து விட்டுப் போனதை சட்டை செய்யாது, இனிப்பு வாளி மொத்தம் காலி செய்து முடித்தவர், "ஏய் யாழி, இங்க வாயேன். அந்தப் பொண்ணை பாரேன். ரொம்ப அழகா இருக்காடி" என்று சாமி கும்மிடும் வரிசையைப் பார்த்து வேகமாக மகளை அழைத்தார்.


"அங்க நிக்குற அந்தப் பொண்ணு உன் அண்ணன் சொன்னப்போல சுடிதார் சால சரியா பின் குத்திருக்காடி பாரேன். அப்டியே அவ கழுத்தை பாத்துட்டு, நெத்தியும் பாருடி, செயினு, பொட்டுன்னு எல்லாமே அவன் கேட்ட போல பொறுப்பாதான் போட்டிருக்கா. எனக்கு என்னவோ உன் அண்ணனுக்கு ஏத்த பொறுப்பு பொன்னுத்தாயி இவளா தான் இருப்பான்னு தோணுது." என்று அருகில் நின்ற பெண்களைக் கூட தள்ளிக்கொண்டு முன்னேறியவரின் கூற்றில், "ம்மா, நீ சும்மாவே இருக்க மாட்டியா?" என்று சலித்தபடி அவர் கை காட்டிய திசையில் நிமிர்ந்து பார்த்தவள், அப்பெண்ணின் அருகில் நின்றிருந்த ஆணைக் கண்டு அப்படியே பேச்சற்றுப் போனவளாய் அருகில் இருந்த தோழியைத் தான் திரும்பிப் பார்த்தாள் யாழினி.


அச்சமயம், "நீங்க, ரொம்ப தான் ட்ரைனரை கலாய்க்கிறீங்க ஆன்டி" என்று சிரித்தபடி எதிர் திசையில் ஏறிட்டுப் பார்த்தவளும், "அர்ஜுன்..." என்று அதிர்ச்சியாக விளித்திருக்க,


அங்கிருந்தே, "எஸ் சிபி. உன் அர்ச்சுனரே தான்." என்று அவளைப் பார்த்து, கண்ணடித்துச் சிரித்தான் அர்ஜுன் தேவதாஸ்.


Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️