நூலகம் -8.1

முதல் முதலாய் தன் மனதைக் கவர்ந்த பெண்ணவளுக்கு ஆபத்து என்றதும், தன் உயிரையும் துச்சமென மதித்து அவளிடமிருந்து, மின்சார வயரைப் பிடுங்கி, மின்சாரம் பாய்ந்ததில், மயங்கி விழுந்த அர்ஜுனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று மருத்துவத்திற்கு உட்படுத்தும் வரை தான் அவன், கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தான்.


மகனுக்கு மின்விபத்து என்று கேள்விப்பட்ட உடனே விமானத்தைப் பிடித்து, கோவை வந்து இறங்கிய அர்ஜுனின் அப்பா, மகன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறி, மகன் கண் விழிக்கும் வரை, அந்த மருத்துவமனையையே ஒரு ஆட்டு ஆட்டி வைத்திருந்தார்.


அதன் பின்னரே சற்று இயல்புக்குத் திரும்பியவர், அவனைப் பார்த்துக் கொள்ளுமாறு காரியதரிசியிடம் கண் காட்டிவிட்டு, வெளியே வந்து வேதாச்சலம் முன்னால் தான் நின்றவர், "என் மகனை உன் காலேஜ்ல சேக்குறப்பவே அவனுக்கு எந்தக் குறையும் இல்லாமப் பாத்துக்க சொல்லிதானே, லட்சம் லட்சமா உன் காலேஜ்க்கு டொனேசன் அழுதேன். நீங்க என்னயா பண்ணி வச்சிருக்கிங்க? உண்மையிலே இது விபத்து தானா? இல்ல யாருக்கும் கைக்கூலியா மாறி என் பையனை போட்டுத் தள்ள டீல் ஏதும் பேசிருக்கீங்களா?" என்று வேதாச்சலத்தோடு நின்ற, பிரின்சிபல், துணை முதல்வர் என்று அனைவரிடமும் கண்டமேனிக்குப் பேசினார் எம் பி ஆவுடையப்பர்.


ஏற்கனவே பதட்டத்தில் இருந்தவர், அதைக்கேட்டு மேலும் அதிர்ந்து, "அந்த இடத்தில உங்க பையனோட சேர்த்து மொத்தம் இருபத்து அஞ்சு ஸ்டுடென்ட்ஸ் இருந்தாங்க சார். ஆனா உங்க பையன் தான் அவனாவே வயரைப் பிடிச்சி இழுத்திருக்கான். அது தெரியாம வேற ஒரு பையன் சுவிட்ச் போட போயிருக்கான். நடந்தது உண்மையிலே மின் விபத்து தான். பதவில இருக்கோம்னு சும்மா வாய்க்கு வந்ததைப் பேசாதீங்க. எங்க காலேஜ் ரொம்பவே கண்ணியமான காலேஜ்" என்று சேர்மனாக வேதாவும் பதில் கூறினார்.


"என்னய்யா கண்ணியம், கண்ணாயிரம்ணுகிட்டு. ஒரு எம் பி பையனக் கூட பாதுகாப்பா பாத்துக்க முடியல. காலேஜாம் காலேஜ். என் பையன் மட்டும் இன்னிக்கு கண்ணு முழிக்காம இருந்திருக்கணும். அப்றம் தெரிஞ்சிருக்கும் நா யாருன்னு" என்று இஷ்டத்திற்கு கத்தியவர் அது மருத்துவமனை என்றும் பாராமல், அர்ஜுனைப் பார்க்க வந்த மாணவர்களையும் பிடித்து,
ஏதோ குற்றவாளிகள் போல் அதட்டி உருட்டி விசாரித்தார்.


அத்தனை நேரமும் பெரியவர்கள் பேசட்டும் என்று கைகளை பின்னே கட்டி அமைதியாக நின்ற செழியன், அப்பாவி மாணவர்கள் மேல் கையை வைக்கவும், "சார், கிராஸ் த லிமிட். ப்ளீஸ் ஸ்டாப் திஸ் நான்சன்ஸ்" என்று எம் பியின் முன்னே வந்து நின்றவன், "சிட்டிலயே நல்ல பொசிசன்ல இருக்கது எங்க காலேஜ். இங்க படிக்கிற ஒவ்வொரு ஸ்டுடென்ட்சும், நாளைய தலைவர்கள். அவங்ககிட்ட இப்டி நடக்கிறத ஒரு ப்ரொபஸ்ஸரா என்னால அல்லோவ் பண்ண முடியாது." என்று இறுகிய குரலில் சொன்னான் செந்தமிழ்ச் செழியன்.


"யாருடா இது இள ரத்தம்? ரொம்பத் துள்ளுது" என்று அவனைப் பார்த்து முறைத்தவர், "உன் காலேஜ் அவ்ளோ நல்ல காலேஜ்ஜுன்னா அப்றம் எப்டி என் மகனுக்கு இப்டி ஒரு அசம்பாவிதம் நடந்துச்சு. இன்னும் கொஞ்சம் அதிகமா கரண்ட் பாஞ்சுருந்தா என் பையனை உயிரோடவே பாத்துருக்க முடியாதுன்னு, டாக்டருங்க சொன்னாங்கய்யா. எனக்கு என்னவோ இந்த சேர்மன் மேல தான் டவுட்டா இருக்கு. அவரு பொண்ணும் கூட அங்கதான் நின்னாளாமே? ஆனா அவளுக்குலாம் ஒன்னும் ஆகாம என் பையனுக்கு மட்டும் எப்டிய்யா?" என்றெல்லாம் அவர் ஏதேதோ கேட்க,


அதற்கு மேலும் பொறுக்க முடியாத செழியன், அங்கு நின்றிருந்த சிற்பியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, "அப்டி உங்களுக்கு சந்தேகமா இருந்தா, போய் போலீஸ்ல கேஸ் கொடுங்க சார். அவங்க வந்து இன்வெஸ்ட்டிகெட் பண்ணி உண்மையை சொல்லுவாங்க. சொல்லப்போனா உங்க பையன் காலேஜ்ல வந்து சேர்ந்ததுல இருந்து தான், இப்டி அசம்பாவிதங்கள்ளாம்  அடிக்கடி நடக்குது. அதுக்கு நாங்க தான் உங்க பையன் மேல ஆக்சன் எடுக்கணும்." என்றான் அவருக்கு ஈடான சினத்தோடே.


அதில் வெளிப்படையாய் அவனை முறைத்தாலும், அவன் கூறியது போல் போலீஸை எல்லாம் இழுத்து, தங்கள் கட்சிப் பெயருக்கு எந்த பங்கமும் விளைவிக்க விரும்பாது அவர் ஆட்டம் சற்றே குறைந்து இருக்க, "எப்போ, எப்டி, எதுக்கு, போலீஸ கூப்பிடணும்னு எனக்குத் தெரியும்யா. உன் பாடம் சொல்லிக் கொடுக்கிற வேலையை பசங்களோட நிறுத்திக்க" என்றவர், தன் காரியதரிசியையும் அழைத்து, "எல்லாரையும் இங்க இருந்து
மொதோ அனுப்புய்யா. என் மகன் நிலைக்கு காரணமான யாரும் இங்க நிக்கக்கூடாது" என்று கல்லூரி நிர்வாகத்தினரையும் பார்த்து உறுமிவிட்டே உள்ளே சென்று மறைந்தார்.


அதில் முகம் இறுகிப் போன வேதாவும், "கரண்ட் அடிக்கிறதுல இருந்து என் பொண்ணை காப்பாத்துனானேன்னு பாக்க வந்தா, அந்த எம் பி எப்டியெல்லாம் பேசுறான்னு கேட்டிங்களா? இதுக்குத்தான் இவன் மகனை எல்லாம் காலேஜ்குள்ளவே விடவேணாம் சொன்னேன். எங்க கேட்டிங்க? எம் பியே தேடி வந்து சேக்குறாரு, நம்ம காலேஜ் பேமஸ் ஆகும்ணு வம்பதா விலை கொடுத்து வாங்கி இருக்கீங்க" என்று மற்ற நிர்வாகிகளைப் பார்த்துக் காய்ந்து விட்டு, "வாம்மா போலாம்" என்று மகளின் கையைப் பற்றிய தந்தையின் கூற்றில், ஏற்கனவே அழுது கொண்டிருந்த சிற்பிகா, "அப்பா..." என்று மென்மேலும் கண்ணீரை வடித்தாள்.


தன்னால் தான் அர்ஜுனுக்கு இப்படி ஆகி விட்டது என்ற கலக்கத்தில் இருந்தவளுக்கு, இன்னும் கொஞ்சம் மின்சாரம் பாய்ந்து இருந்தால், அவன் உயிருக்கே ஆபத்து என்று அவன் அப்பா கூறிய செய்தியே, அர்ஜுனை ஒரு முறையேனும் பார்க்காமல் அங்கிருந்து செல்ல அவள் கால்களுக்கு இம்மியும் அனுமதி அளிக்க மறுத்தது.


"யாழி அர்ஜுனப் பாக்காமப் போனா என்னால நிம்மதியா இருக்க முடியாதுடி" என்று தன்னருகிலே நின்று, தன்னைத் தேற்றிக் கொண்டிருந்த தோழியிடம் மட்டும் மென்மையாக முணுமுணுத்தாள் சிற்பி.


என்னதான் செவி வழியாக அவன்  நன்றாக இருக்கிறான் என்று கேட்டு இருந்தாலும், அவன் உயிரை பணயம் வைத்து, தன் உயிரைக் காப்பாற்றியவனை நேரில் பாராமல் எப்படிச் செல்வது? குறைந்த பட்சம், அவன் செய்த உதவிக்கு சிறு நன்றி கூடக் கூறாமல் சென்று விட்டால் தான் நன்றி கெட்டவளாக ஆகிவிட மாட்டேனா? என்றெல்லாம் ஏதேதோ எண்ணித் தவித்தவளுக்கு, தந்தையின் முன்னில், "அப்பா..." என்கிற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தையும் வெளியேற மறுத்தது.


ஆனால் மகளின் அந்தத் தவிப்பைப் புரியாத வேதாச்சலமோ, "அட நீ ஏன்மா, இப்படி அழற. அதான் அந்தப் பையலுக்கு ஒன்னும் ஆகலயில்ல. உயிரோட தான் இருக்கானாமே. அப்றம் என்னமா நமக்கு. வா போவோம்" என்று அவள் கையைப் பற்றி இழுத்தபடியே செழியனை நோக்கிச் சென்றவர், "வேற எதுவும் ஃபார்மாலிட்டிஸ் இருந்தா முடிச்சுட்டு வந்துடு செழியா. கூடிய சீக்கிரம் அந்த அர்ஜுனோட டீசியக் கிழிச்சி, இவனுக சங்காத்தத்தையே முடிச்சு விட்டுறணும். பெரிய தலைவலியா இருக்கானுக" என்றும் கூறி விட்டு மகளோடு வெளியேற முனைந்தார்.


அவளோ, அர்ஜுனை வைத்திருந்த அறையையே திரும்பி திரும்பி பார்த்தபடி அசையாது நின்றவள், "யாழி..." என்று தோழியின் கரத்தையும் பற்ற,


அதில் வேகமாக அண்ணனிடம் ஓடிய யாழினியும், "அண்ணா, தன்னால தான் அர்ஜுனுக்கு  இப்படி ஆயிடுச்சுன்னு ரொம்ப குற்ற உணர்ச்சியில இருக்கான்னா சிற்பி. அவனைப் பாத்துட்டுப் போக, ஏதாவது செய்யுங்களேன் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.


அவனுக்கும் அவள் தவிப்பு அதிகப்படி என்று தோன்றினாலும், 'நீங்க கூட எனக்கு உதவி செய்ய மாட்டீங்களா?' என்பது போல் செழியனையும் பார்த்துவிட்டு கண்ணீர் கோடுகளோடு திரும்பி நடந்தவளைக் கண்டு, அமைதியாக நிற்க இயலாதவன், "சார்" என்று வேதாச்சலத்தை அழைத்து, அவருக்கு இன்று இருக்கும் முக்கியமான ஒரு மீட்டிங்கைப் பற்றி ஞாபகம் செய்தான்.


அதைக் கேட்டு, "இதை எப்டி மறந்தேன்! நல்ல வேலை செழியா ஞாபகப் படுத்துன. தேங்க்ஸ் பா, தேங்க்ஸ் பா" என்றவர், பின் மகளைத் திரும்பிப் பார்த்து, யோசித்து, அவராகவே அவளை அழைத்துச் சென்று வீட்டில் விடும் பொறுப்பைச் செழியனிடம் ஒப்படைத்தவர், அவர்களுக்கு உதவியாக தன் சாரதியோடு வாகனத்தையும் விட்டுவிட்டு, மற்ற நிர்வாகிகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருந்தார்.


அதைக்கண்ட சிற்பிகாவின் மனம் முழுதும், சற்று முன்னர் அர்ஜுன் மீது எந்த அளவிற்கு நன்றி உணர்ச்சி பொங்கி வழிந்ததோ, அதே அளவிற்கு தற்சமயம் செழியனின் மீதும் அதே உணர்வு பெறுக, "தேங்க்யூ சோ மச் ட்ரைனர்" என்று அவன் முன்னே வந்து, நெகிழ்ந்த குரலில் கண்ணீரோடு கூறினாள்.


"ஹேய் கேர்ள்!" என்று அழுத்தக் குரலில் அழைத்தவன், "நீ இவ்ளோ உணர்ச்சிவசப்படுற அளவு, அர்ஜுனுக்கு ஒன்னும் ஆகல.
ஹி இஸ் சேப். அவனுக்கு இப்டி ஆனதுக்கு நீ காரணமும் இல்ல. டோன்ட் ஃபீல் கேர்ள். வைஃப் த டியர்ஸ்." என்றவன், "வா என்னோட" என்று விட்டு அர்ஜுனின் அறை நோக்கி நடந்தான்.


அவன் அர்ஜுனைப் பார்க்க அழைத்துச் சென்றதோ? அல்லது அவன் வார்த்தைகளுக்கு மட்டும், அவளிடம் தனி மதிப்பு உள்ளதோ?   அவன் கண்ணீரைத் துடை என்று கூறிய மறுகணம் சட்டென்று விழிகளை அழுத்தி துடைத்தபடி, அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள் சிற்பிகாதேவி.


"உள்ள எங்கயா போறீங்க?"
என்று வழியை மறித்த, அர்ஜுனின் அப்பாவையும் சமாளித்த செழியனோடு சென்று, எழும்பி அமர முடியா விட்டாலும், தன்னைப் பார்த்ததும் விழிகளும், உதடுகளும் மலர, "ஆர் யூ ஓகே?" என்று கேட்டவனைப் பார்த்து, சிறு தலையசைப்போடு நன்றியும் மன்னிப்பும் கூறி, வீடு வந்து சேர்ந்தவளுக்கு, என்ன காரணமோ, மருத்துவமனையில் துடைத்த கண்ணீர் மீண்டும் வெளியேற முயலவில்லை.


ஆனால், தனக்காக இன்னல்பட்டு அங்கு மருத்துவமனையில் கிடப்பவன் மீது, அத்தனை தினங்கள் இல்லாதளவு, அன்பா, அக்கறையா, பாசமா, நன்றிக்கடனா என்று இனம் புரியா உணர்வு ஒன்று பிரவாகமாய் பொங்கிப் பெறுகியது.


அங்கு மருத்துவமனை வாசத்தில் புரண்டு கொண்டிருந்த அர்ஜுனுக்கும், எப்பொழுதடா உடல்நிலை சீராகி சிற்பிகாவைச் சென்று பார்ப்போம், எப்பொழுதடா அவளோடு பேசுவோம் என்று நினைவுகள் மொத்தம் பெண்ணவளின் மீதுதான்.


வலது கையின் இரண்டு விரல்களில் மின்சாரம் நன்றாகவே தாக்கி இருந்ததால், அந்த விரல்கள் இரண்டிற்கும் இன்னுமே சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்க, உணவு உண்ணக் கூட அடுத்தவர் உதவி தேவை என்பதால் சற்றே தன்னை அடக்கிக் கொண்டவன், பார்க்க வரும் நண்பர்களிடம், "சிபி என்னடா செய்றா. என்ன பத்திக் கேட்டாளா? நா அவளைப் பாக்கணும்டா" என்று சிற்பிகாவைப் பற்றியே பேசித் தீர்த்தவன், அவளுடைய கைபேசி இலக்கத்தையும் அவர்களிடம் பெற்று வரக் கூறினான்.


விபத்திற்கு முன்னர் என்னதான் விழியாலே பேசிக் கொண்டாலும் கைபேசி இலக்கத்தை பரிமாறிக் கொள்ளுமளவு அவர்களின் நெருக்கம் அதிகரித்து இல்லாத போதும், அவனாக அவன் எண்ணைக் கொடுத்து நெருக்கத்தை உருவாக்க முயல, தேவைப்பட்டால் தானே கேட்டு வாங்கிக் கொள்வதாகக் கூறிவிட்ட சிற்பிகாவின் வார்த்தையில், அவள் எண்ணையும் அவனால் கேட்க இயலாமலே போய் விட்டது.


ஆனால் தனக்கே தனக்காக விபத்தாகி படுக்கையில் கிடக்கும் அர்ஜுன், இப்பொழுது வந்து எதைக் கேட்டாலும் உடனே கொடுத்து விடும் மனநிலையில் இருப்பவள், இக்கணம் ஒருவார கல்லூரி விடுமுறையையும் முன்னிட்டு,  மேட்டுப்பாளையத்தை விட்டு சற்றே தள்ளி இருந்த தன் தந்தையின் கிராமத்திற்கு கோவில் திருவிழாவிற்காகக் குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தாள் சிற்பிகா தேவி.


வருடா வருடம் நடக்கும் தன் சொந்த ஊரான அந்த காரமடைத் திருவிழாவிற்கு தவறாமல் சென்று விடும் பழக்கத்தை வெகு சிரத்தையாய் கடை பிடித்து வந்தார் சிற்பியின் தந்தை வேதாச்சலம்.


அன்றைய நாளுக்குப் பிறகு அர்ஜுனை சென்று பாராததும், அவன் இப்படி மருத்துவமனை வாசத்தில் இருக்கும் பொழுது, தான் கோவில் திருவிழாவிற்குச் செல்வதும், அவள் மனதிற்குள் மிகப்பெரிய பாரத்தை ஏற்றி இருந்தாலும், நேற்று இரவு அவள் கேட்டுக் கொண்டதற்காகவே மருத்துவமனை சென்று அர்ஜுனைப் பார்த்து விட்டு வந்து, அவன் நன்றாக இருக்கிறான் என்று அவளுக்கு சமாதானம் கூறிய செழியனின், வார்த்தையில், ஓரளவு தன்னை இயல்பாக்கிக் கொண்டவள்,  பெற்றோரோடு சென்று காரமடையில் இறங்கினாள்.

Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️