நூலகம் -7.2
அவளின் அந்த அமைதியே அவனுக்கு மேலும் தைரியத்தைக் கொடுக்க, "சிபி..." என்று உருகும் குரலில் அழைத்து,
"நா சொல்லப்போற விஷயத்தை நீ எப்டி எடுத்துப்ப, என்ன ரியாக்ட் பண்ணுவ, எங்க போய் கம்ப்ளைன் பண்ணுவன்னுலாம் எனக்குக் கவலையில்லை. ஆனா இதை உன்கிட்ட சொல்லாம இருந்தா பைத்தியமே பிடிச்சிடும்." என்று அவஸ்தையான புன்னகை ஒன்றைச் சிந்தியவன், "உன்ன எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு சிபி. உன்னோட அழகு, தைரியம், சேர்மன் பொண்ணுன்னு எந்த அலட்டலும் இல்லாமப் பழகுற குணம், இப்டி எல்லாமே என்ன ரொம்ப ஈர்க்குது. எனக்குத் தெரிஞ்சு இந்த ஒரு வார காலத்துல இது வெறுமனே சாதாரண ஈர்ப்பு மட்டுமில்லன்னு நல்லாவே புரிஞ்சு போச்சு. ஐ திங்க், ஐ லவ் யூ சோ மச் சிபி. இப்ப மட்டுமில்ல, வாழ்க்கை முழுசுமே உன்ன மட்டுமே லவ் பண்ண, பண்ணிட்டே இருக்க ஆசைப்படுறேன். நல்லா யோசிச்சு உன் பதிலை சொல்லு." என்று அவள் பேசுவதற்கே இடம் கொடாமல் தன் காதலை உரைத்து முடித்தவன், அதற்கு மேல் நொடியும் தாமதியாமல் தன் வாகனத்தையும் கிளப்பிப் பறந்திருந்தான் அர்ஜுன் தேவதாஸ்.
இக்கல்லூரியில் வந்து சேர்ந்த முதல் நாளில் இருந்தே, சேர்மனின் புதல்வியாகவே அனைவருக்கும் அறிமுகமானதாலோ என்னவோ, இதுவரை எந்த ஒரு ஆணும், அவளை ரசனையாகப் பார்த்ததாகக் கூட அவளுக்கு ஞாபகம் இருக்கவில்லை.
ஆனால், 'இவனானால் தங்கள் சந்திப்பு நிகழ்ந்து இரு வாரங்களே கடந்த நிலையில், தன்னை காதலிப்பதாகக் கூறுகிறான். தனக்காக சஸ்பெண்டில் சென்றதாகச் சொல்லுகிறான், தனக்காக இரவு முழுதும் பனியில் வேறு நின்று இருக்கிறான், என்ன மாதிரியான மனிதன் இவன்? இவன் நல்லவனா கெட்டவனா?' என்று அவள் சிந்தனைகள் எங்கெங்கோ ஓடிக் கொண்டிருக்க, அவன் கூறிச் சென்ற வார்த்தைகளால் பெண்ணின் கால்கள் மட்டும் நகர்வேனா என்று அங்கேயே நின்றது.
அவன் சென்று வெகுநேரங்கள் கடந்தும், அவள் வாகனம் தரிக்குமிடத்திலே நின்று கொண்டிருக்க, அப்பொழுது தான் செழியனுடன் வந்து இறங்கிய யாழினி, "ஹாய் சிற்பி, குட் மார்னிங் டி" என்று அவளை நெருங்கி வந்து அவள் தோளைத் தட்டினாள்.
அதில் திடுக்கிட்டுத் திரும்பியவள், அவளோடு வந்த செழியனைக் கூடக் கவனியாமல், "யாழி.." என்று மலங்க மலங்க விழிக்க,
எப்பொழுது செழியனைக் கண்டாலும் முந்திக்கொண்டு ஓடி காலை வணக்கம் சொல்லும் தோழியின் இன்றைய செயலில், "ஏய் என்னாச்சுடி உனக்கு? ஏன் பேயரைஞ்ச போல நிக்கிற? சாரைப் பாத்தும் விஷ் கூடப் பண்ணல நீ?" என்று யோசனையாய் புருவம் சுருக்கினாள்.
அதன் பின்னர் தான் செழியனையே கவனித்து, "சார், சாரி சார். குட் மார்னிங் சார்" என்று பெயருக்கு வணக்கம் வைத்தவள், "காலையிலிருந்தே கொஞ்சம் தலைவலிடி. அதான் ஒருமாதிரியா இருக்கு. நான் கிளாஸ்கு போறேன். நீ சாவி எடுத்துட்டு வந்துரு" என்று தன் வாகனத்தையும் காட்டி பொய் உரைத்து விட்டு வகுப்பறைக்கும் ஓடி மறைந்திருந்தாள்.
பள்ளிக் காலங்களில் இருந்தே, எப்பொழுதும் படிப்பு, பரீட்சை, முதல் மதிப்பெண், என்று நல்லதொரு மாணவியாய் இருந்து வந்தவளுக்கு, அர்ஜுன் கூறிச் சென்ற காதல் என்ற வார்த்தையே அவள் மனதைக் குழப்பப் போதுமானதாக இருக்க, யாருடைய முகத்தையும் பார்த்து இயல்பாகப் பேசக்கூட முடியவில்லை அவளால். தான்தான் ஏதோ தவறு செய்ததைப் போல், இதயம் எக்குத் தப்பாய் எகிறிக் குதித்தது.
தோழி சொன்ன தலைவலியை உண்மை என்று நம்பியவளும், அவள் வாகனத்தைப் பூட்டித் திறப்பை எடுத்தவள், அண்ணனிடமும் சொல்லிக்கொண்டு அவள் பின்னோடே சென்று இருக்க, சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறிய அர்ஜுனைக் கண்டு விட்டே வந்ததால், சிற்பியின் தடுமாற்றத்தில் செழியனின் முகம் தான் சிந்தனையாய்ச் சுருங்கியது.
பின் எதுவானாலும் அவளாகவே வந்து சொல்லட்டும். அவள் அப்படிச் சொல்லத் தயங்காதவளும் தானே என்று எண்ணி, தன் பணிகளைப் பார்க்கச் சென்று இருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
ஆனால் அவன் எண்ணத்திற்கு மாறாக ஏனோ முன்பு போல் யாரிடமும் அர்ஜுன் கூறியதைக்
கூற முயலாததோடு, படிப்பில் கூட கவனம் செலுத்த இயலாதவளாய் அடுத்தடுத்த நாள்களையும் கலக்கத்தோடே நகர்த்திக் கொண்டிருந்தாள் சிற்பிகாதேவி.
அவளின் அந்த மாற்றம் அவள் வகுப்புத் தோழிகளுக்கு நன்றாகவே புரிபட்டு இருக்க, "சிற்பி, என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்போல்லாம் லெக்சரர்ஸ் கேக்குற எந்த கொஸ்டியனுக்கும் ஆன்சரே பண்றது இல்ல? பாடத்தை கவனிக்கிறியா இல்லியா? எங்ககூட கேண்டினுக்கும் வந்து ரொம்ப நாள் ஆச்சுடி" என்று வழக்கம் போல் கேள்விகளை அடுக்கினர்.
தன் உயிர்த் தோழிகளிடம் இனியும் விஷயத்தை மறைக்க இயலாது, அனைத்தும் சொல்லி முடித்தவள்,
"இப்டி திடீர்னு லவ்வை சொல்லுவான்னு நா எதிர்பாக்கவே இல்லடி. இதுக்கு எப்டி ரியாக்ட் பண்ணன்னு கூட எனக்குத் தெரியல. அப்பாக்குத் தெரிஞ்சா இதெல்லாம் எப்டி எடுத்துப்பாருன்னு வேற பயமா இருக்கு!" என்று புலம்பத் தொடங்கியவளைப் பார்த்து, "அடி லூசே!" என்று சிரித்து வைத்தவர்கள், "காலேஜுன்னு இருந்தா, காதல் கசமுசான்னு எல்லாம் இருக்கணும்டி. அப்போ தானே லைஃப்ல ஒரு த்ரில் இருக்கும். அதுவும் அர்ஜுன் போல ஒரு ஹாண்ட்சமான, வசதியான பையன் தேடி வந்து லவ் சொல்லி இருக்கான். நீலாம் குடுத்து வச்சவடி. பேசாம ஓகே பண்ணி காலேஜ் லைஃப என்ஜாய் பண்ணுவியா, அதைவிட்டு சின்னப்புள்ள போல சிணுங்கிட்டு இருக்க" என்று ஆள் ஆளுக்குப் பேசி, பருவ வயதுக்கே உரிய நூதனமான உணர்வுகளை எல்லாம் அவள் உள் மனதிலும், கட்டவிழச் செய்தனர்.
ஆனால் எதுவும் கூறாமல் அவள் முகத்தையே பார்த்து இருந்த யாழினி தான், "எனக்கு என்னவோ இது சரியாப் படல சிற்பி. அந்த அர்ஜுன் இங்க வந்து சேர்ந்ததுல இருந்தே அவன் மேல நம்ம யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்ல. இப்பக்கூட அவன் உன்ன பழிவாங்கறதுக்காக லவ்ன்ணு சொல்லிருக்க மாட்டான்னு என்னடி நிச்சயம்?" என்று அவளுக்குத் தோன்றிய பயத்தைச் சொல்ல, தோழிகளின் கருத்துக்கள் யாவும் சிற்பியின் மனதை தெளியச் செய்வதற்கு பதிலாக, மென்மேலும் குழம்பத்தான் வைத்ததது.
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எத்தனை இலகுவாக இருக்குமோ அதுபோலத்தான், அவள் வயதிற்கே உரிய இரண்டும் கெட்டான் மனதோடு உலா வந்த சிற்பியை, ஈர்ப்பதற்கு அர்ஜுன் பெரிதான சாகசம் எல்லாம் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை.
அவளிடம் காதலைச் சொல்லிய நாளுக்குப் பிறகு, அவள் மேற்கொண்டிருக்கும் அமைதியில், ஏதோ அவள் தன் காதலையே ஏற்றுக் கொண்டதைப் போல், அவளிடம் அதிகமான உரிமையை எடுக்கத் துவங்கி இருந்தான் அர்ஜுன் தேவதாஸ்.
தேவை இல்லாத இடத்தில் தெரியாமல் வாயை விடுவது எந்த அளவிற்கு சிக்கல்களை உருவாக்குமோ, அதுபோலத்தான், தேவையான இடத்தில் நம் விருப்பு வெறுப்புகளை சொல்லாது இழுப்பதும், நம்மை பலவித இன்னல்களுக்கு ஆளாக்கிச் சென்றுவிடும்.
அன்றைய நாளில் இருந்தே, காலையும் மாலையும் அவள் இருக்குமிடம் எல்லாம் புன்னகை முகத்தோடும்,
கண்சிமிட்டல்களோடும் காட்சி தந்தவன், யாருமில்லா சமயம் அருகில் வந்து, "மெதுவா சொன்னாலும், நல்ல முடிவா சொல்லு சிபி. ஐம் வெயிட்டிங்" என்று ஒரு ரோஜாப் பூவையும் அவள் கையில் திணித்து ஐ லவ் யூ சொல்வதை வழக்கமாக்கி வைத்திருந்தான்.
அதுபோலான சந்தர்ப்பங்களில் யாரேனும் தங்களைப் பார்த்து விடுவார்களோ, என்று இவள் தவித்துப் போய் நின்றிருக்க, அவனோ ஒருபடி மேலேவே சென்று அவளிடம் யாராவது மாணவர்கள் பேசினால் கூட அவர்களை கூப்பிட்டு வைத்து மிரட்டுவதும், லேசாக அடிப்பதும் என்று ஆர்ப்பாட்டங்கள் செய்ய, அர்ஜுனும் சிற்பிகாவும் காதலர்கள் என்ற வதந்தியும் கிசுகிசுவாகப் பரவத் துவங்கியது.
அதை அறிந்து ஆவேசமாக அவனைத் தேடிச் சென்றவள்,
"உன் மனசுல என்ன பெரிய மன்மதன்னு நினைப்பாடா? பெரிய இவன் மாதிரி பண்ணிட்டு இருக்க. உனக்கு என்ன இப்போ பதில் தான வேணும். உன்ன எனக்கு சுத்தமா பிடிக்கலைடா. ஐ ஹேட் யூ.
ஐ ஹேட் யூ, ஹேட் யூ டா" என்று கத்தி இருந்தாள்.
அவனோ அவள் கூறியதை எல்லாம் கேட்டு இம்மியும் கோபப்படாமல், "உனக்கு என்ன பண்ணினா, என்ன பிடிக்கும் சிபி?" என்று அவளையே ஆழ்ந்து பார்த்தவன், "அந்த சண்முகம் போல நல்லா படிச்சி காலேஜ் டாப்பர் ஆனா உனக்கு
என்னப் பிடிக்குமா? காலேஜ் பொறுப்பெல்லாம் இழுத்து போட்டு செய்வானே, நீ கூட அன்னிக்கு சூப்பர்ணு கை கொடுத்தியே, அந்த விக்கி போல பொறுப்பா இருந்தா பிடிக்கும் தானே உனக்கு? என்ன செஞ்சா என் லவ்வ நீ ஏத்துப்பன்னு சொல்லு சிபி. உனக்காக என்ன வேணா செய்ய நா ரெடியா இருக்கேன்!" என்று அவள் விழிகளுக்குள் ஊடுருவிக் கேட்டான் அர்ஜுன்.
ஏதோ ஒரு வேகத்தில் அவனைத் தேடி வந்து திட்டி இருந்தாலும், உள்ளூற சிறு அச்சத்தோடே நின்று இருந்தவள், அவனிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பாராது திணறியவளுக்கு, சற்று முன்னர் இருந்த சினமெல்லாம் எங்கு சென்றது என்று கூடத் தெரியவே இல்லை.
கூடவே பெண்ணினத்திற்கே உரிய பலவீனமான, உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்ற ஆணின் அந்த வார்த்தை, அந்த சின்னஞ்சிறு கன்னியின் மனதிலும், சிறு கலகத்தை மூட்டி இருந்தது.
அவன் கூறிய வார்த்தைகளோடு,
தன் முகத்தையே காதலாகப் பருகி இருக்கும் ஆடவனின் செயலிலும் வெட்கப் புன்னகை ஒன்று அவளறியாமல் துளிர்த்து விட்டிருக்க, தலையைக் குனிந்து அதை மறைத்துக் கொண்டவள், "போடா லூசு" என்று அவனைத் திட்டிவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்தாள்.
பெண்ணவளின் அந்த வெட்கச் சிரிப்பே, அவளுக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பித்து விட்டதை அர்ஜுனுக்கு சொல்லாமல் சொல்லி இருக்க, அடுத்தடுத்த நாட்கள் எல்லாம், அவளுக்கு பிடித்ததை எல்லாம் தேடித் தேடிச் செய்யத் துவங்கினான் அர்ஜுன் தேவதாஸ்.
அப்படியே ஒரு மாதம் மின்னலெனக் கடந்திருக்க, இப்பொழுதெல்லாம் ஆடவனைக் கண்டவுடனே அழகாய் ஒரு புன்னகையைத் தவழவிட்டு, ஹாய் என்றும், சாப்டாச்சா? என்றும் விழிகளாலே பேசிக்கொள்ளும் அளவு, இருவருக்கும் இடையில் சிறிதான நெருக்கமும் தோன்றி இருந்தது.
அன்றும் அப்படித்தான் சில நாட்கள் கழித்து நடக்கப் போகின்ற, பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்காக, செமினார் ஹாலில் இருந்த மின் சாதனங்கள் எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க வந்த பொறியாளருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொண்டிருந்தார்கள் சீனியர்
மற்றும் ஜுனியர் மாணவர்கள்.
உடையவன் இருந்து பார்க்காவிட்டால் ஒரு முழம் கட்டை என்ற தந்தையின் கூற்றை கேட்டே வளர்ந்ததால், இதுபோலான வேளைகளில் எல்லாம் எப்பொழுதும் ஆவல் எடுத்துப் பங்கேற்பவள், அன்றும் அங்குதான் உதவி செய்து உலவிக் கொண்டிருக்க, நானும் உதவி செய்கிறேன் பேர்வழி என்று அவளோடு ஒட்டிக் கொண்டு திரிந்து, பார்வையாலே அவளை பருகிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அச்சமயம், அங்கிருந்த அலங்கார விளக்குகளின் வயர் ஒன்று மிகவுமே சேதமாகி இருக்க, அதை மாற்றி அமைத்த பொறியாளர், மின் இணைப்பை இணைக்கும்படிக் கூற, அதைச் செயலாற்ற விரைந்தான் சீனியர் மாணவன் ஒருவன்.
அவன் மின்பகுதியை நெருங்கியப் பின்னர் தான், அந்த வயரின் மறுமுனை தனக்கு சற்றே தள்ளி நின்றிருந்த சிற்பிகாவின் கரத்தில் இருப்பதை உணர்ந்து, அந்த சீனியர் மாணவனைத் தடுக்க முனைந்த அர்ஜுன், அவன் சுவிட்ச்சில் கை வைத்த நொடி, நொடியும் தாமதியாது, சிற்பியின் கரத்தில் இருந்த வயரைப் பிடுங்கியவன், அதை கீழே போடுவதற்குள், உடலில் பாயப்பட்ட அதிகப்படி மின்சாரத்தில் துள்ளிக் குதித்துத் துடிதுடிக்கத் துவங்கினான்.
அதைக்கண்டு "அர்ஜுன் ன் ன் ன்" என்று கத்திய சிற்பியின் கூக்குரலில், மின் இணைப்பை நிறுத்தியவர்கள், பதறி அடித்து அர்ஜுனிடம் ஓட, அனைவரையும் முந்திக் கொண்ட சிற்பியும் அவனருகில் விரைய, லேசாக நிறம் மாறிய முகத்தோடு, அவள் முகத்திலே நிலை குத்திய விழிகளை, "சிபி" என்று மெல்ல மெல்ல மூடியபடி தரையில் சரிந்திருந்தான் அர்ஜுன் தேவதாஸ்.
Comments
Post a Comment