நூலகம் -7. 1
அன்றைய நாளுக்குப் பிறகு, அர்ஜுன் கல்லூரிக்கு வந்தே ஒருவார காலம் ஓடி இருக்க, அங்கு கூட்டமாக நடந்து வந்த, அவன் நண்பர்கள் பட்டாளத்தில் அன்றும் அவன் இல்லாததைக் கண்டு முகம் சுருங்கியவள், அங்கிருந்த இருக்கையில் சோகையாக அமர்ந்து இருந்தாள் சிற்பிகா தேவி.
அப்பொழுது தான் செழியனுடன் கல்லூரிக்குள் நுழைந்த யாழினி, தோழியைக் கண்டதும், "வர்றேன் ணா" என்று விட்டு அவளிடம் ஓடியவள், "என்னடி இங்கயே உக்காந்துட்ட? கிளாஸ்கு போகல?" என,
"போகணும்டி..." என்று மட்டும் சொல்லிக் கொண்டவள், அர்ஜுன் படிக்கும் கட்டிடத்தின் பகுதியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதைப்பார்த்து, "இன்னும் நீ அதையே தான் நினைச்சுட்டு இருக்கியா?" என்று சலித்தவள்,
"அந்த ஜுனியர் பொண்ணுகிட்ட கலாட்டா பண்ணது வேணா அர்ஜுன் செஞ்ச தப்பா இல்லாம இருக்கலாம், ஆனா உனக்கு லெட்டர் போட்டதும், கண்ணடிச்சதும், தப்புத் தானடி. அப்போ சஸ்பென்ட் ஆனதும் சரிதானே. அதுக்கு ஏன் நீ பீல் பண்ற?" என்று சிற்பியின் அருகில் அமர்ந்தாள் யாழினி.
"நீ சொல்றதும் சரிதான்டி. ஆனா அவன் எந்த தப்பும் பண்ணாதப்போ அவனை பொறுக்கின்னு திட்டினது என் தப்புத்தானடி. நான் அப்டி சொன்னதால தான் அவனும் என்கிட்ட அப்டி பிகேவ் பண்ணிட்டானோ என்னவோ? அது தெரியாம நான் திரும்பவும் போய் செழியன் சார்கிட்ட கம்ப்ளைன் பண்ணி, என்னால தான் அவனாவே சஸ்பென்ட் வாங்கிட்டும் போயிருக்கான்." என்று கவலைக் குரலில் கூறிக்கொண்டே வந்தவள், "சிற்பிகா..." என்ற அழுத்தமான குரலில், "சார்" என்று எழுந்து நின்றிருந்தாள்.
கடந்த சில தினங்களாகவே, அர்ஜுன் கல்லூரி வராமல் இருப்பதற்கு தான்தான் காரணம் என்று எண்ணி, முகம் வாடித் திரியும் சிற்பிகாவை கவனித்துக் கொண்டிருப்பவன், இப்பொழுதும் அவள் வகுப்பிற்குக்கூடச் செல்லாமல் கல் இருக்கையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து, எனக்கென்ன என்று செல்ல முடியாமல் அவளை நெருங்கி வந்திருந்தான்.
"சார், குட்மார்னிங் சார்?" என்று மரியாதையோடு எழுந்து நின்றவளிடம் சிறு புன்னகையை உதிர்த்தவன், "நா ஏற்கனவே இதை உன்கிட்ட சொல்லிருக்கேனா தெரியல. ஒருத்தருக்கு நடக்குற நல்லதோ கெட்டதோ, அவங்கவங்க செய்ற செயல்களைப் பொருத்தும், அவங்களோட சேர்க்கையைப் பொருத்தும் தான் நடக்கும் கேர்ள். இதுல அடுத்தவங்க தலையீடு பாதி கூட இருக்க வாய்ப்பில்லை" என்று நிறுத்தினான்.
அவன் வார்த்தைகள் அனைத்தும், கவனமாகக் கேட்டுக் கொண்டவள், "அப்போ அர்ஜுன், சஸ்பென்ட் ஆகி இருக்கதுக்கு நா மட்டும் காரணம் இல்லையா ட்ரைனர்?" என்று கேட்டாள் சிற்பிகா.
"ஒரு பர்சன் கூட நீ காரணம் இல்லமா" என்று சிரித்தவன், "அவனை அன்னிக்கு தப்பாப் பேசினது உன் தப்பா இருந்தாலும், அப்டி தப்பா நினைக்குற இடத்தில இருந்தது அர்ஜுனோட தப்புத் தானே?" என்று கேட்டவன், "அத்தோட அன்னிக்கு நீ உன் கம்ப்ளைன வாபஸ் வாங்கியும், அவனாதான், பரவாயில்லை நான் சஸ்பென்ட்ல போறேன்னு பிடிவாதமா போயிருக்கான். இன்னும் ரெண்டு நாளோ, மூனு நாளோ திரும்பவும் இங்கதான் வரப் போறான். இதுல உன் தப்பு எதுவுமே இல்ல" என்றான் உறுதியான குரலில்.
அத்தனை தினங்களும் சிறியதே ஆகினும் தவறு செய்து விட்டோமோ என்று தவித்துக் கொண்டிருந்தவளுக்கு, ஆடவனின் அந்தக் குரலே, 'நீ எந்தத் தவறும் செய்யவில்லை!' என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்து இருக்க,
"நிஜமாத்தானே சார்? அப்போ நான் இனி பீல் பண்ணத் தேவை இல்லைல? தங்க்யூ சோ மச் சார். நான் எப்ப குழப்பத்தில இருந்தாலும், உங்ககிட்டப் பேசினா மனசே லேசாகிடுது" என்று இதழ் மலர்ந்து சிரித்தவள், யாழினியிடமும் திரும்பி, "ஹேய் யாழி, கேட்டியாடி? என்மேல எந்தத் தப்பும் இல்லியாம். செழியன் சாரே சொல்லிட்டாங்க. வாடி கிளாஸ்கு போலாம்" என்று துள்ளிக் குதித்து வகுப்பறையை நோக்கி ஓடி இருந்தாள்.
அவள் சென்று மறையும் வரை அவளையே பார்த்து இருந்தவன்,
"வேதா சார் மாதிரியே அவர் பொண்ணுக்கும் ரொம்பவே இளகின மனசு. எல்லாரையும் பாவம்னு நினைக்கிறா, இன்னொசன்ட் கேர்ள்!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், "அவ கூடவே இருந்து பாத்துக்கோ யாழி." என்று தங்கையையும் அனுப்பி விட்டு தன் பகுதியை நோக்கி விரைந்திருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
அவளது ஆஸ்தான ஆசிரியரே கூறி விட்டதால், அடுத்து வந்த நாட்களிலும், அர்ஜுனின் நினைவை ஒதுக்கித் தள்ளியவள், படிப்பில் கவனம் செலுத்தியதோடு, தோழிகளோடு இணைந்து, தன் வழக்கமான கலகலப்பையும் மீட்டு எடுத்திருந்தாள்.
அன்று மதியத்திற்கு மேல் அவர்கள் வகுப்பிற்கு வரவேண்டிய ஆசிரியர், விடுப்பு எடுத்துச் சென்று இருந்ததால், "ஹேய் வாங்கடி ஸ்னாக்ஸ் ஏதாவது சாப்பிடலாம்" என்று கிளம்பிய, சிற்பிகாவின் குழு, எதை எதையோ சலசலத்தபடி கேண்டினிற்குள் நுழைய, அங்கு ஏற்கனவே அமர்ந்து, சக ஆசிரியரோடு சிரித்துப் பேசியபடி தேநீர் அருந்திக் கொண்டிருந்தான் ராம்சரண்.
செழியன் அளவிற்கு இல்லாவிடினும், அழகும் ஆண்மையும் இணைந்து, கள்ளம் கபடமில்லா முகத்தோடு, ஏதோ ஒரு கல்லூரிப் பாடம் பற்றி மும்முறமாக பேசிக் கொண்டிருந்தவனை, ரசனையாய் பார்த்தபடி இருக்கையில் சென்று அமர்ந்தாள் அக்குழுவில் இருந்த ஒருத்தி.
அவள் பார்க்க ஆரம்பித்து சில நொடிகளிலே, யாரோ முதுகைத் துளைப்பது போன்ற உணர்வில் சட்டென்று அங்கிருந்த பெண்களை ஏறிட்டுப் பார்த்தான் ராம்சரண்.
அவன் பார்க்கவும் மாணவிகள் எல்லாம், "சார்" என்று மரியாதையாகச் சிரித்துக் கொள்ள, அந்த ஒருவள் மட்டும், பார்வையில் ரசனையைக் கூட்டி, ஒரு நேசப் புன்னகையும் உதிர்த்து வைத்தாள்.
அதைக்கண்டு கடவுளே என்று விழிகளைத் திருப்பிக் கொண்டவன், 'வர வர இந்தப் பொண்ணுக்கு என்னாச்சுன்னு தெரியல? இப்போல்லாம் வித்தியாசமா நடந்துக்கிறா. இதெல்லாம் எங்க போய் முடியுமோ?' என்று தலையையும் உலுக்கியவாறு வேகமாக எழுந்து கொண்டவன்,
மீதி தேநீரை அருந்தாமல் கூட அங்கிருந்து சென்று இருந்தான்.
அவன் சென்ற திசையையே பார்த்து, 'எவ்ளோ நாள் தான் இப்டியே முகம் திருப்பிட்டு போகப் போறீங்க ராம்?' என்று சற்றே முகம் வாடினாலும், தன் தோழிகளின் கலகலப்பில் அவளும் அவர்களோடு ஐக்கியமாகி இருக்க, தன் வழக்கமான வேக நடையில், இப்பொழுது கேண்டினிற்குள் நுழைந்து இருந்தது என்னவோ அர்ஜுன் தேவதாஸ் தான்.
ஆம் பத்து தினங்கள் சஸ்பென்ட்டில் இருந்துவிட்டு இன்றுதான் கல்லூரிக்கு வந்து இருந்தான்.
கூடவே அவன் அல்லக்கைகளும், இத்தனை தினங்கள் அடக்கி வைத்த ஆர்ப்பாட்டங்களோடு இருக்கைகளை ஆக்கிரமிக்க, "ஹேய் அர்ஜுன் டி. அர்ஜுன் ரீஜாய்ன் பண்ணிட்டான் போல" என்ற தோழிகளின் கூற்றில் அவளையும் மீறி அவனை ஏறிட்டுப் பார்த்தாள் சிற்பிகா தேவி.
அவனும் அக்கணம் அவளைத்தான் பார்த்துக் கொண்டே அமர, பார்த்த விழிகளை நகர்த்த விடாது, அவள் பார்வையோடு சேர்த்து, மனதையும் அவன் மீதே நிலை நிறுத்தியது, அவன் தலையில் போட்டிருந்த சிறிதான கட்டு ஒன்று.
'என்னாச்சு இவனுக்கு? வேற எங்கையும் போய் பொண்ணுங்க கிட்ட வாலாட்டி வாங்கிக் கட்டிக்கிட்டானா?' என்று கேலியாய் புருவத்தைச் சுருக்கியவள்,
"ஒரு வாரமா கிரிக்கெட் கிரவ்ண்டுக்குக் கூட வரலியே, தலையில என்ன மச்சி கட்டு?
நீ பாட்டுக்கு அந்த பெண்ணு கம்பளைண்ட் பண்ணிச்சுன்னு சஸ்பென்ட் வாங்கிட்டு போயிட்ட, அந்த ஜுனியர் பசங்க எல்லாம் எப்டி கலாய்ச்சானுங்க தெரியுமா? ஏன்டா இப்டி பண்ண?" என்ற அர்ஜுனின் நண்பர்கள் கூற்றில், அவர்கள் தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று உணர்ந்து, அவன் பதிலை அறிந்து கொள்ளவும் ஏதோ ஒரு உந்துதல்.
ஒரே ஒரு நொடி மட்டும் மீண்டும் அவனை ஏறிட்டுப் பார்த்தவள், அவன் வலப் புருவத்தை உயர்த்தவும், சட்டென்று தலையைக் குனிந்து செவிகளை மட்டும் கூர்மையாக்கிக் கொண்டாள்.
அவனின் அந்தச் செய்கையில் உள்ளம் கொட்டும் முரசாய் மத்தளம் கொட்டியது.
அவள் செயலில் அவன் புன்னகை மேலும் விரிய, "மச்சீ, இத்தனை நாளா என்ன நீ எவ்ளோ தேடினன்னு கேள்விப்பட்டு அப்டியே புல்லரிச்சுப் போச்சு மச்சி. அதான் கட்டைக்கூடப் பிரிக்காம சீக்கிரமே வந்துட்டேன்" என்று உரக்கவே கூறியவன்,
"ஆனா நான் சஸ்பென்ட் வாங்கிப் போனதுக்கு நீ நினைக்கிறது மட்டும் காரணமில்லை மச்சி. வேற என்ன காரணம்னு சொன்னா நீ எப்டி ரியாக்ட் பண்ணுவன்னும் தெரியலை. ஆனா அந்த காரணத்த உன்னத்தவிர வேற யார்கிட்டயும் சொல்ல முடியாது மச்சி. அதனால" என்று நிறுத்தினான்.
அவன் நண்பனிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தனக்கானது தான் என்று உணர்ந்து கொள்ள முடிந்ததில், இனம்புரியாத அவஸ்தை ஒன்று அவள் உள்ளத்தைப் பிசைந்தது.
அதை மேலும் அதிகரிக்கும் விதமாய்,
"ஈவ்னிங்க் பைக் பார்க்கிங் பக்கத்துல உனக்காக வெயிட் பண்ணுவேன் மச்சி. கண்டிப்பா வந்திடு. முக்கியமா பேசணும" என்றும் அவன் அவளையே பார்த்து சொல்லி முடிக்கவும், சட்டென்று எழுந்து கொண்டவள், உடன் வந்த தோழிகளைக் கூட அழைக்காமல் வேகமாக வெளியேறி இருந்தாள் சிற்பி.
அர்ஜுன் நண்பனை சாக்கிட்டு அவளிடம் தான் பேசுகிறான்
என்று புரியாமல், தோழியின் நடவடிக்கையில் திகைத்து, அவளைப் பின் தொடர்ந்து ஓடியவர்கள், "ஏன்டி? என்னடி ஆச்சு? ஏன் இப்டி ஓடி வந்துட்ட? அந்த அர்ஜுன் திரும்ப ஏதும் கண்ணடிச்சானா?" என்று ஆள் ஆளாக்குப் பதறினர்.
அதில் சற்றே தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்,
"ச்ச ச்ச அதெல்லாம் இல்லடி. நீங்க கிளாஸ்கு போங்க. நான் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிட்டு வர்றேன்." என்று அனுப்பி விட்டு, "எவ்ளோ திமிரு அந்த அர்ஜுனுக்கு, அன்னிக்கு கேண்டின் வரச்சொல்லி லெட்டர் போடுறான். இன்னிக்கு பார்க்கிங்கு வரணுமாமே. அதுவும் முக்கியமா பேசணுமாம்." என்று வாய்க்குள்ளே முனகிக் கொண்டவள், "இவனைப் பொறுக்கின்னு சொல்லிட்டமேன்னு நா ஃபீல் பண்ணிட்டு இருந்தா, அகைன் அண்ட் அகைன் அந்த வேலை தான் பாக்கிறான். பொறுக்கி, பொறுக்கி" என்று வாய்விட்டே வைதவள், அன்று முழுதும் கூட வாகனம் நிறுத்துமிடத்திற்குச் செல்லவே இல்லை. அவளது இரு சக்கர வாகனத்தைக் கூட தோழிகளை வைத்தே எடுத்து,
மாலை வீடு சென்றும் சேர்ந்து இருந்தாள்.
ஒரு திமிர் பிடித்த ஆணுக்கு சரியான பதில் கொடுத்த திருப்தியில், மறுநாள் காலை உற்சாகமாகவே எழுந்து ஆயத்தமாகி கல்லூரிக்கு வந்தவள், வாகனம் நிறுத்துமிடத்தில், தன் வாகனத்தை நிறுத்தி விட்டுத் திரும்ப, அங்கிருந்த சலவைக் கல்லில் இருந்து மெதுவாக எழுந்து நின்றான் அர்ஜுன் தேவதாஸ்.
நேற்று அணிந்திருந்த அதே உடையோடு, கலைந்த தலையும், சிவந்த விழிகளுமாய் தன்னை நெருங்கி வந்தவனைப் பார்த்தே, அவன் விடிய விடிய வீட்டிற்கே போகாமல் இங்கேயே அமர்ந்து இருக்கிறான் என்று புரிந்து கொண்டவளுக்கு, நேற்றிலிருந்து இருந்த மகிழ்ச்சி எல்லாம் மறைந்து அதிர்ச்சியும், அச்சமும் சேர, உள்ளம் படபடவென்று அடிக்கத் துவங்கியது.
ஆறடிக்கும் அதிகமான உயரத்தில், பாலும் பழமுமாக உண்டு வளர்ந்த தேகம், இரவு முழுதும் கொட்டித் தீர்த்த மார்கழி மாதப் பனிக்குக் கூட தளராது விரைத்து நிற்க, ஒரு தமிழனுக்கே உரிய திராவிட நிறத்தோடும், திகட்டாத களையோடும், அவள் முன்னே வந்து நிமிர்ந்து நின்றான் அர்ஜுன்.
பின், "நான் உனக்கு அறிமுகமான முறை வேணா தப்பா இருக்கலாம். ஆனா நான்" என்று தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டவன், "முன்ன படிச்ச காலேஜ்லையும் சரி இங்கேயும் சரி, உன்னப்போல நிறைய பெண்களை கடந்து வந்துருக்கேன். ஆனா உன்ன, உன்ன மட்டும் என்னால ஏனோ கடக்க முடியல. அன்னிக்கு தெரிஞ்சோ தெரியாமலோ பொறுக்கின்னு சொன்ன உன்ன ஏதாவது செய்யணும்னு தான் உன்ன தேடி ஆடிட்டோரியம் வந்தேன். ஆனா
நீ அர்ஜுனரே அர்ஜுனரே அம்பு விடுவது எப்போன்னு பாடுன பாட்டுல, அம்பு துளைச்ச பறவை போல உன்கிட்ட முழுசா விழுந்துட்டேன்டி. இதுவரை எந்தப் பொண்ணும் என்ன இந்தப்பாடு படுத்துனது இல்லை. உன்ன பாக்காம இருந்தா, உன்மேல இருக்க ஈர்ப்பு மாறிடும்னு தான் பத்து நாள் சஸ்பென்ட்ல போனேன். ஆனா உன்மீதான ஏக்கம் மென்மேலும் அதிகரிச்சு, தூக்கத்துல உன்ன நினைச்சு, கட்டில்ல இருந்து விழுந்து தலையில அடிபட்டது தான் மிச்சம்." என்று அவன் வெட்கச் சிரிப்போடு நிறுத்த, அவன் தலையில் இருந்த கட்டில் பார்வையைப் பதித்து, , இமை சிமிட்ட மறந்தவளாய் அவனையே பார்த்து நின்றாள் சிற்பிகாதேவி.
Comments
Post a Comment