நூலகம் -6

அன்று காலை வீட்டில் நடந்ததை எல்லாம், மதிய இடைவெளியில், ஏற்ற இறக்கமாய் கூறி முடிக்கவும், "அய்யோ யாழி, முடிலடி , ட்ரைனர் சார் இப்டிலாமா சொல்லுறாரு. ஆன்டி உண்மையிலே பாவம்டி" என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் துவங்கினார்கள் யாழினியின் வகுப்புத் தோழிகள்.


"அது மட்டும் இல்லடி. வீட்ல தேவையில்லைமா இங்க்லீஷ் பேசக்கூடாது, டெய்லி மார்னிங் யோகா பண்ணனும், புட் கண்ட்ரோல் எல்லாம் பர்பெக்ட்டா இருக்கணும்டி அண்ணாக்கு" என்று யாழினியும் பெருமையாகச் சொல்ல,


"அய்யய்யோ" என்று தோழிகள் எல்லோரும் அலற, "அப்போ ட்ரைனர மேரேஜ் பண்ணா ட்ரில் மாஸ்டர் கூடத்தான் குடும்பம் நடத்தணும்னு சொல்றியா?" என்று சோகம் போல் கேட்டாள் ஒரு தோழி.


"அப்டித்தான் போலடி. ட்ரைனர் மாதிரி ஆண்கள் எல்லாம் சைட்டடிக்க மட்டும் தான் செட் ஆவாங்களோ?" என்று இன்னொருவளும், கவலையாகக் கேட்க,


"அப்டி எல்லாம் சொல்லாதீங்கடி. செழியன் சார் மாதிரி பர்பெக்ட்டா இருக்கவங்க புருஷனா கிடைச்சா, நாம டென்ஷன் இல்லாம இருக்கலாம்டி. எல்லாம் அவங்களே பொறுப்பெடுத்து பாத்துப்பாங்க" என்று இன்னொருவள் கண்ணடித்துச் சொன்னாள்.


"ஆமாடி, நீ சொல்றதும் சரிதான். எங்க வீட்டு பக்கத்து வீட்டுலயும் இப்படித்தான் ஒரு அண்ணா இருக்காருடி. அவர் ஒயிப் எந்திரிக்கங்குள்ளையுமே அவர் எந்திரிச்சி எல்லா வேலையும் பாத்துருவாரு தெரியுமா?" என்று அப்படியே ஆளாளுக்கு செழியனையும் இணைத்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருக்க, அப்பொழுது தான் அங்கிருந்த சிற்பிகாவை கவனித்தாள் யாழினி.


எப்பொழுதும் தோழிகள் இதுபோல் செழியனைப் பற்றிப் பேசி ஜொள்ளுவிடும் சமயங்களில் எல்லாம், "ஹேய் லூசுங்களா, அவர் நம்ம ட்ரைனர்டி. நமக்கெல்லாம் குரு போல. அவரைப் போய் இப்டி எல்லாம் பேசலாமா? நீங்கள்ளாம் ஸ்டுடென்ட்ஸாடி?" என்று வறுத்து எடுப்பவள், இன்று கையிலிருந்த சிறு துண்டுக் காகிதத்தையே வெறித்தபடி உணவைக்கூட உண்ணாமல் அமர்ந்திருந்தாள்.


அதில், "சிற்பி" என்று அவள் தோளைத் தொட்ட யாழினி, "என்னடி, ஏன் என்னவோ போல இருக்க? சாப்பாடும் அப்டியே இருக்கு" என்று கேட்டு, கையிலிருந்த காகிதம் பற்றியும் விசாரித்தாள்.


"அது, அது, ஒன்னுமில்லடி" என்று அந்த காகிதத்தை கசக்க முயன்றவளின் முகமும் ஏகத்துக்கும் கசங்கி இருந்தது.


அதில் அவள் மறைக்க முயன்ற காகிதத்தை சட்டென்று கைபற்றியவள், வேகமாக அதைப் பிரித்துப் படித்தாள் யாழினி.


அவளோடு மற்ற தோழிகளும், "என்னடி?" என்று எட்டிக் கொண்டு அக்காகிதத்தை வாசிக்க,
"அர்ச்சுனர் அம்பு விடுவதற்குத் தயாராக இருக்கிறார். கட்டாயம் கேண்டினிற்கு வந்துவிடு" என்று அதில் கிறுக்கப்பட்டிருக்க, இப்பொழுது தோழிகளின் விழிகளும் அதிர்ச்சியாக விரிந்தது.


"ஏய் சிற்பி, என்னடி இது? உன்கிட்ட எப்டி வந்துச்சு? யாரு இதை எழுதினது?" என்று யாழினியும் மற்ற தோழிகளும் ஆளாளுக்கு வினவ,


"அதான் அதுலயே அவன் பேர் இருக்குல்லடி" என்று கடுப்பாகக் கூறியவள், அர்ஜுன் நேற்று காகிதத்தைத் தூக்கிப் போட்டு, கண்ணடித்துச் சென்றதையும் கூறினாள்.


அதைக்கேட்டு "நிஜமாவே கண்ணடிச்சானாடி? இது மட்டும் தான் கொடுத்தானா? இல்ல வேற ஏதும் சொன்னானா? நீ சேர்மன் பொண்ணுன்னு தெரிஞ்சும், உன்கிட்டயே வாலாட்டிருக்கான் பாரேன். ரொம்பவே தில்லு தான் டி. அதுசரி அவனும் எம்எல்ஏ பையனாமே. பாக்கவும் செம்மயா இருக்கான்டி. அதான் அவ்ளோ திமிரு போல" என்று தோழிகள் எல்லாம் ஆளாளுக்கு அலப்பறைகள் செய்ய,


"ச்சு சும்மா இருங்கடி. அவளே அப்செட்டா இருக்கா. நீங்க வேற" என்று அனைவரையும் அடக்கிய யாழினி, "சிற்பி, இப்ப என்னடி செய்யப்போற? அவனைப் பாக்க கேண்டினுக்குப் போகப் போறியா?" என்றாள் சிற்பிகாவின் கரத்தைப்பற்றி.


"அவன் கூப்பிட்ட உடனே போக, நான் என்ன பைத்தியமாடி?" என்று முறைத்தவள், "அன்னிக்கு நம்ம டிபார்மென்ட் பொண்ணுகிட்ட கலாட்டா பண்ணிருக்கானுக. இன்னிக்கு என்னையே கேண்டினுக்கு கூப்பிடுறான். இதை இப்டியே விடப்போறது இல்லடி" என்றாள் படு தீவிரமான குரலில்.


"இப்டியே விடலைன்னா என்னடி செய்யப்போற? உன் அப்பாகிட்ட சொன்னாக்கூட, அந்த அர்ஜுன ஒன்னும் பண்ண முடியாது.  அன்னிக்கு பங்க்ஸன் அப்போ பாத்ததான? எல்லாரும் அவன்கிட்ட பம்மி பம்மி பேசுனத. நமக்கெதுக்குடி வீண் பிரச்சனை" என்று கவலைக் குரலில் கேட்டாள் யாழினி.


"வீண் பிரச்சனை வேண்டாம்னு இப்டி பொண்ணுங்க பொறுத்துப் போறதால தான்டி பொறுக்கி பசங்களுக்கு குளிர்விட்டுப் போகுது. என் அப்பாவோ, மத்தவங்களோ தான அன்னிக்கு பம்முனாங்க. ஆனா உன் அண்ணா?" என்று நிறுத்தியவள், "நான் ட்ரைனர் சார்கிட்ட போய் கம்ப்ளைன் பண்ணப் போறேன். அவனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி காலேஜ விட்டே துரத்துறேன்" என்று சட்டென்று எழுந்து கொண்டவள், செழியனின் அறையை நோக்கி வேகமாக நடக்கத் துவங்கினாள்.


"செழியன் சார்கிட்டன்னா நாங்களும் வர்றோம்டி" என்று யாழினியோடு சேர்த்து மற்ற தோழிகளும் அவளுக்கு வால் பிடித்து ஓடினர்.


மதிய உணவு இடைவேளையான நேரமதில், அப்பொழுது தான் உணவை முடித்து, பாத்திரங்களையும் கழுவி வைத்தவன், மேசையில் இருந்த குறிப்பேட்டை கையில் எடுக்க, கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு மூச்சு வாங்க அவன் அறைக்குள் நுழைந்தாள் சிற்பிகா.


அவள் உள்ளே வந்த வேகத்தில், "வாட் ஹெப்பண்ட் சிற்பிகா? எனிதிங் பிராப்லம்?" என்று வினவியபடியே இருக்கையை தள்ளிக்கொண்டு எழுந்து நின்றான்.


அதில் இன்னுமே திடம் கூடியவள்,
"எஸ் சார்" என்று ஆரம்பித்து விஷயத்தையும் கூற, விழிகளில் சற்றே சிவப்பு ஏற, அந்தக் காகிதத்தை வாங்கிப் பார்த்தான் செந்தமிழ்ச் செழியன்.


பின், "இதுல இருக்க பாட்டு வரியை மட்டுமே வச்சி, இதை அர்ஜுன் தான் பண்ணான்னு எப்டி சொல்ற கேர்ள்?" என்றான் ஆசிரியனாகவும் நிதானித்து.


"பாட்டு வரியை வச்சி மட்டும் சொல்லல சார். இந்த பேப்பர் நேத்து என்மேல வந்து விழுந்தப்போ, அந்த அர்ஜுன் தான் ஜன்னல் பக்கம் நின்னு" என்று சற்றே தயங்கி, "கண், கண்ணடிச்சு சிரிச்சான்" என்று இறுகிய குரலில் சொன்னவள்,
"மிஸ் பிகேவ்ணு அவன் மேல நான் கம்பளைண்ட் தர்றேன். அவனை காலேஜ் விட்டே அனுப்புங்க" என்றாள் சிற்பிகா.


அவள் தான் இக்கல்லூரிக்கே உரிமைப்பட்டவள் என்றாலும்,
அவள் படிக்க வந்து சேர்ந்த இந்த இரண்டு வருட காலங்களில், இதுபோல யார்மீதும் குற்றம் குறை கூறியோ, வெளியே அனுப்புங்கள் என்று சொல்லியோ அவன் இதுவரை அறிந்ததே இல்லை. ஆனால் இப்பொழுது அர்ஜுன் மீது குற்றம் கூறுகிறாள் என்றாள், அவன் செய்து இருக்கும் தவறு பெரிது என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் செய்த தவறுக்குச் சான்று அவன் கையிலும் இருக்கின்றதே.


ஆனால் இதை மட்டும் வைத்து அவள் கூறுவது போல் அவனை இந்தக் கல்லூரியை விட்டு அனுப்புவது எல்லாம் அவனால் முடியாத காரியம் அல்லவா. அப்படி அவன் அனுப்ப முயன்றாலும் அதற்கு அவளின் அப்பாவின் எதிர்ப்பு தானே முதலில் இருக்கும்.


இப்படி பலவிதமான யோசனைகளோடே அக்காகிதத்தைப் பார்த்து இருந்தவன், "நான் அர்ஜுனை கூப்பிட்டு வான் பண்றேன் சிற்பிகா. நீ கிளாஸ்கு போ" என்றான் இலகுவான குரலில்.


"இல்லை சார். நீங்க என் கண்ணு முன்னவே அவனை கூப்பிட்டு பனிஷ் பண்ணுங்க" என்றாள் அவளும் பிடிவாதக் குரலில்.


"ஏன்? என் மேல நம்பிக்கை இல்லியா கேர்ள்?" என்று அவன் கேள்வியாய் புருவத்தைத் தூக்க,


அவனிடம் அவளுக்குப் பிடித்தமான அச்செய்கையில், "இல்லை சார், அப்டி இல்லை" என்று அவளும் இலகுவாகியவள், "எனக்கு சேர்மன் சார் மேலதான் நம்பிக்கை இல்லை. நான் அந்த பக்கம் போனதும், அவரு இந்தப்பக்கம் உங்களை கன்வின்ஸ் பண்ணிடுவாரு" என்று அசையாது நின்றாள்.


தலையை இடம் வலமாய் ஆட்டிக் கொண்டவன், அங்கிருந்த தொலைபேசியை எடுத்து, சிற்றூழியனிடம் அர்ஜுனை அழைத்து வரப் பணிக்க, அடுத்த சில நிமிடங்களிலே தன் நண்பர்களோடு வந்து சேர்ந்தான் அர்ஜுன்.


அவன் உள்ளே வந்த கணம் முதல் மீண்டும் முகம் இறுகிப் போனவள், அவனை முறைத்தபடி நின்று இருக்க,


"மிஸ் பிகேவ்ணு சிற்பிகா உன்மேல கம்பளைண்ட் பண்ணிருக்காங்க அர்ஜுன். உன்ன சஸ்பென்ட் பண்ணியே ஆகணும்னு சொல்றாங்க. நீதான் இந்த லெட்டரை எழுதி, அவங்க மேல தூக்கிப் போட்டியா?" என்று கையிலிருந்த காகிதத்தை அங்கிருந்த மேசை மேல் வைத்தான் செழியன்.


அதில் அவளை ஏறெடுத்துப் பார்த்து விட்டு, செழியன் புறம் திரும்பியவன்,
"எஸ் சார். எனக்கு அவங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல வேண்டி இருந்தது. அதான் கேண்டின் வரச் சொல்றதுக்காக அப்டி பண்ணேன்" என்று நிமிர்ந்து நின்றே கூறியவன், சிற்பிகாவின் முன்னேயும் வந்து நின்று, "அன்னிக்கு என் பிரண்ட் ஜுனியர் பொண்ணுகிட்ட கலாட்டா பண்ணிருக்கான்னு தெரியாம தான் நான் அந்த பையனை போட்டு அடிச்சுட்டேன். நான் கொஞ்சம் அடாவடிக் காரன்தான். ஆனா நீ சொன்னபோல பொறுக்கி எல்லாம் இல்ல. இதை சொல்லத்தான் உன்ன கேண்டின் வரச் சொன்னேன். ஆனா நீ இங்க வந்து நிக்கிற" என்று மீண்டும் செழியன் புறம் திரும்பியவன், "என்ன பனிஷ் பண்றது தான் அவங்களுக்கு சந்தோசம்னா, எவ்ளோ நாள் சஸ்பென்ட் பண்ணணுமோ பண்ணுங்க சார். ஐ அக்ஸப்ட் யூர் பனிஷ்மென்ட்." என்று பேச்சு அவனிடம் இருந்தாலும், பார்வையை மட்டும் அவளிடம் வைத்துக் கூறியவன் வந்த வேகத்திலே அங்கிருந்து வெளியேறி இருந்தான் அர்ஜுன் தேவதாஸ்.


அத்தனை நேரமும் அவனை எரித்து விடுவது போல் முறைத்து இருந்தவள், இக்கணம் திகைத்த பார்வையோடு அவன் முதுகையே பார்த்து நிற்க, செழியனோ, அவளைத்தான் ஏறிட்டுப் பார்த்தான்.


Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️