நூலகம் -5

மேட்டுப்பாளையம் ஊட்டியின் அடிவாரத்தில் இருந்ததால் ஊரின் தட்பவெட்பம் ஓரளவு இதமாகவே இருக்க, அதன் இயற்கை காற்றை ஆழ்ந்து சுவாசித்தபடியே அந்த அதிகாலை வேளையதில் பசுமை கொஞ்சும் சாலைகளின் ஓரம் மிதமான வேகத்தோடு ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தான் செந்தமிழ்ச் செழியன்.


ஆடவனின் தூண் போன்ற கால்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிற்கும் அவன் நெஞ்சில் குவிந்திருந்த கரளை போன்ற கரங்கள் இரண்டும் அவன் அகன்ற மார்போடு சேர்ந்து அழகிய ரிதமாய் அசைந்து கொண்டிருந்தது.


அரை மணி நேரம் இடைவிடாத ஓட்டப் பயிற்சியின் பலனாக அவன் எரித்து முடித்த கலோரிகள் எல்லாம் வியர்வைகளாகி அவன் மேலுடையையும் நனைத்து விட்டிருக்க, அவனைக் கடந்து சென்றவர்களின் விழிகள் எல்லாம் ஒரு கணமேனும் அவன் மீது படிந்து விட்டே நகர்ந்தது.


இதெல்லாம் தினசரி வாடிக்கை என்பது போல் எதையும் கண்டு கொள்ளாமல் செவியில் மாட்டி இருந்த ப்ளூ டூத்தின் வழியாக பிரபல தமிழ் சொற்பொழிவாளர் ஒருவரின் தமிழ் உரையை செவிமடுத்தபடியே அடுத்த ஐந்து நிமிடங்களும் ஓடி தன் வீடு இருக்கும் தெருவினுள் நுழைந்த சமயம், அவன் அலைபேசி வேதா சார் என்ற அழைப்பைத் தாங்கி அதிர்ந்தது.


அவனும் நடையை நிறுத்தி விட்டு அலைபேசியை செவியில் வைத்தவன், "காலை வணக்கம் சார். சொல்லுங்க?" என்றான்.


"காலை வணக்கம் செழியன்." என்று பதில் கூறியவரும், "மாமான்னு கூப்பிடுன்னு சொன்னா கேக்க மாட்டிறியேப்பா" என்று குறைபட்டுக் கொள்ள,


சிறு புன்னகையை உதிர்த்தவன், "நீங்க என் அப்பாவோட நண்பரா மட்டும் இருந்திருந்தா அப்டி கூப்பிடுவேன் சார். ஆனா நான் பணி செய்ற கல்லூரியோட முதல்வர, அதுக்குண்டான முறையோடு கூப்பிடுறது தானே சரியா இருக்கும்?" என்றான்.


"அதுக்குத்தான் காலேஜ்குள்ள சார்னு கூப்பிடுறியேப்பா. மத்த நேரமாச்சும் ஏதாவது உறவு முறை வச்சு கூப்பிடலாம்ல?" என,


"கூப்பிடலாம் தான். ஆனா எனக்கு பழக்கம் மாற ரொம்ப சிரமம் ஆகிடும் சார். வெளிய கூப்பிடுற பழக்கத்தில கல்லூரிலையும் கூப்பிட்டுட்டா அது அவ்ளோ நல்லா இருக்காது" என்று விடாமல் அவன் வாதத்தை முன் வைத்தான் செழியன்.


"நீ லெக்சரர்ங்கிறதையே மறந்துட்டு, நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் பாரு. உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? நா அப்பீல்பா. உனக்கு எப்டி கூப்பிட விருப்பமோ அப்படியே கூப்பிடு. ஆனா என் சிநேகிதன் சிதம்பரத்தோட புள்ள நீயி. எனக்கும் புள்ள மாதிரி தான். அத மட்டும் மறந்துடாத" என்று அவரும் சிறிது பாசப்பயிரை வளர்த்தவர், "ம்ம்ம், ஏதேதோ பேசி கேட்க வந்ததையே மறந்துட்டேன் பாரு." என்று கல்லூரி விபரங்கள் சிலதும் பேசத் தொடங்கினார்.


சிறு புன்னகையை உதிர்த்தபடியே அவர் பேச்சை செவிமடுத்திருந்தவன், அவர் கூறிய விபரங்களுக்கு உரிய பதில்களும் வழங்கி விட்டு அலைபேசியை அணைத்தபடி, வீட்டையும் அடைந்து இருந்தான்.


வேதாச்சலத்தின் பால்ய காலச் சினேகிதனான சிதம்பரத்தின் அருமை மகன்தான் செந்தமிழ்ச் செழியன். வேதாச்சலம் போல் வெளியூர் எங்கும் செல்லாமல், சொந்த ஊரிலே படித்து முடித்து அருகில் இருந்த அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராய் பணி புரிந்தவர் தான் அவன் தந்தை சிதம்பரம்.


பெற்றோர் பார்த்து மணமுடித்து வைத்த தூரத்து உறவான மீனாட்சியோடு நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்ந்து, ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இரு பிள்ளைகளும் ஈன்று, நல் முறையில்  வளர்த்து ஆளாக்கி இருந்தவர், செழியன், இளங்கலை முடித்து மேற்படிப்பின் பாதியில் இருந்த சமயம் மாரடைப்பால் தவறி இருந்தார். அதில் அவரின் ஆசிரியப் பணியும் அவனுக்கே கிடைத்து, வீட்டின் தேவையையும், தன்னை விட எட்டு வயது சிறியவளான தங்கையின் பொறுப்பையும் கருத்தில் கொண்டு, படிப்பை நிறுத்திவிட்டு பணிக்குச் செல்லத் தொடங்கி இருந்தான் செந்தமிழ்ச் செழியன்.


வெளிநாடு சென்று இருந்ததால், சற்று தாமதமாகவே நண்பனின் இறப்பை அறிந்து, விசாரிக்கச் சென்ற சமயம்தான் செழியனின் படிப்பு வேலை என்று எல்லாம் கவனித்து, அவன் பாதியில் விட்டிருந்த படிப்பை முடிக்கக் கூறியவர், நண்பனின் மகனை தன் கல்லூரியிலே ட்ரைனராகவும் நியமித்து, அவர்களின் ஊர் மாற்றத்திற்கும் பலவித உதவிகள் செய்து இருந்தார் வேதாச்சலம்.


அவனும் ஏற்கனவே தன் குணத்தாலும், பண்பாலும் அவரை ஈர்த்து இருந்தவன், செய்யும் வேலையையும் திறம்படச் செய்து, இந்த ஐந்து வருட காலங்களில், சிறுகச் சிறுக உயர்ந்து, வேதாச்சலத்தின் நன் மதிப்பைப் பெற்றதோடு, அக்கல்லூரியில் பயிலும், மாணவ மாணவியரின் ஆஸ்தான நாயகனாகவும் மாறிவிட்டு இருந்தான்.


அவனுக்கே உரிய அழுத்த எட்டுக்களோடு வீட்டு வாசலில் வந்து நின்றவனின் கால்பூட்டணியின் சப்தத்தை வைத்தே அவன் வந்து விட்டதை உணர்ந்து, "அச்சோ இப்பதான போனான். அதுக்குள்ள வந்துட்டான்" என்று சமையற் கட்டிலிருந்து மின்னல் வேகத்தில் வரவேற்பறைக்கு விரைந்தவர் அங்கு ஏற்கனவே யோகா செய்து கொண்டிருந்த மகள் யாழினியை, "ஹே... தள்ளுடி" என்று இடித்துக் கொண்டே அமர்ந்து மூச்சுப் பயிற்சியை செய்யத் தொடங்கினார் மீனாட்சி.


வீட்டிற்குள் நுழையும் பொழுதே சமையலறையிலிருந்து ஓடி வந்த அன்னையை கண்டு விட்டிருந்தவன், இப்பொழுதும் பாதி கண்ணைத் திறந்து திறந்து மூடி தன்னை அவதானித்துக் கொண்டே பயிற்சி செய்து கொண்டிருப்பவரை, இல்லை அப்படி பாசாங்கு செய்து கொண்டிருப்பவரைப் பார்த்து இடம் வலமாய் தலையை ஆட்டி, "மீனம்மா, என்ன செய்றீங்க?" என்று அவர் முன்னே குத்துக்காலிட்டு அமர்ந்தான்.


அதில் கண்ணை நன்றாகவே திறந்து மகனை ஏறிட்ட மீனாட்சியும், "அடடே வந்துட்டியாப்பா?" என்று அப்பொழுது தான் அவனைப் பார்ப்பது போல் ஆச்சர்ய பாவம் காட்டியவர், "நீதானப்பா தினமும் மூச்சுப் பயிற்சி செஞ்சா நல்லதுன்னு சொல்லி இருக்க. அதான் செஞ்சிட்டு இருக்கேன்" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துச் சொன்னார்.


அதைக்கேட்டு, "மூச்சுப் பயிற்சி, யோகா விரிப்ப தரையில விரிச்சு அதுல உக்காந்து செய்யனும்மா.
இப்டி தலையில போட்டுக்கிட்டு செய்யக்கூடாது" என்று அவர் தலையில் போட்டிருந்த மெல்லிசான யோகா மேட்டையும் சுட்டிக் காட்ட...


அப்பொழுது தான் கண் விழித்து அன்னையை ஏறிட்ட யாழினியும், திகில் படங்களில் எல்லாம் ச்சோ வென்று பெய்யும் மழையில், தலையில் சாக்கைப் போட்டுக் கொண்டு நிற்கும் தேவையற்ற கதாபாத்திரம் போல், ங்கே என்று அமர்ந்து இருந்தவரைக் கண்டு,
"ம்மா என்னம்மா இது கோலம்?" என்று வாய் விட்டே சிரிக்கத் தொடங்கினாள்.


அப்பொழுது தான் அவசரத்தில்,
தான் செய்து இருந்த செயல் புரிந்து சட்டென்று அதை எடுத்துக் கீழே போட்டவர், "அது அது அது வந்து தம்பி" என்று திருதிருத்து விழித்து அவனின் கூர்ந்த பார்வையில், "நேத்து நீ சொன்னன்னு டிவில ஒரு யோகா கிளாஸ் பார்த்தேன்ப்பா. அதுல இப்படித்தான் ஒருத்தர் யோகா பண்ண சொல்லிக் கொடுத்தாப்ல. மேட்டை தலையில வச்சி யோகா பண்ணா கழுத்து எலும்புக்கு நல்லதுன்னாப்ல." என்று இஷ்டம் போல அடித்து விட்டார் மீனாட்சி.


அவர் முகத்தையே கூர்மையாகப் பார்த்து இருந்தவன், சிரித்துக் கொண்டிருந்த தங்கையையும் முறைத்து விட்டு வேகமாக கைபேசியை எடுத்து, "என்ன நிகழ்ச்சி, எந்த அலைவரிசைணு சொல்லுங்கம்மா. நானும் அந்த யோகாவை கத்துக்கறேன்" என்று யூடூபைத் திறக்க...


அதைப்பார்த்த யாழினியும், 'ரைட்டு... காலைலயே வாத்திகிட்ட வான்டடா வந்து மாட்டிருச்சு மம்மி' என்று சிரிப்பை அடக்கியபடி அவர்களையே பார்த்து இருந்தாள்.


மகனின் கூற்றில் மேலும் ஆடு திருடியவர் போல் விழித்த மீனாட்சியும், "அது அது அந்த சேனல், இல்ல அலைவரிசை எந்த டூப்லையும் வராது தம்பி" என்று திணற...


"ஆமங்க்மா இல்லாத வகுப்பு எப்படி வரும்? இனி நீங்களே, பொய்கள் இலவசம்ணு ஒரு அலைவரிசை ஆரம்பிச்சா தான் உண்டு" என்று அன்னையை மென்மேலும் முறைத்தவன், "சொல்பேச்சு எதுவும் கேக்காததோட இப்ப பொய்யும் சொல்ல ஆரம்பிச்சாச்சு. நல்ல முன்னேற்றம் தான். நீங்களே இப்டி பொறுப்பில்லாம இருந்தா யாழினி எப்படி பொறுப்பா வளருவா?" என்று கண்டனக் குரலில் கூறியவன், அடுத்த அரை மணி நேரத்திற்கும், யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகளையும், அதை செய்யாது விட்டால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளையும், பத்தி பத்தியாக பாடம் நடத்தியவன், "இனிமேல் தூங்கி முழிச்சு கண்ணையே தொரக்காட்டி கூட யோகா பண்ணிட்டு தான் மறு வேலை பாப்பேன் ப்பா" என்று மீனாட்சி வாக்கு கொடுத்தப் பின்னரே அந்த இடத்தை விட்டு அகன்று அவன் அறைக்குள் சென்று மறைந்தான்.


அத்தனை நேரமும் அவன் கூறுவதை எல்லாம் தலையை ஆட்டி ஆட்டி
நல்ல பிள்ளை போல் கேட்டுக் கொண்டிருந்தவர், அவன் தலை மறைந்த மறுநிமிடம், "காளியம்மா..." என்று இழுத்து பிடித்திருந்த மூச்சை வெளிவிட்டு மகளிடம் திரும்பியவர், "யாழி... கைய புடிடி. தூக்கி விடு" என்று அவள் கை பற்றி எழுந்து அங்கிருந்த நீள்விருக்கையில் அக்கடா என்று சாய்ந்து அமர்ந்தவர், "வனபத்ரகாளி இன்னிக்கு போலவே நாளைக்கும் இந்த யோகால இருந்து என்ன காப்பாத்தி விட்டுருமா. உனக்கு எலுமிச்சை மாலை போடுறேன்" என்று அவசர வேண்டுதலும் வைத்துக் கொண்டார்.


அதைக்கேட்டு அன்னையை முறைத்த யாழினியும், "ம்மா இது உனக்கே ஓவரா தெரியல? அண்ணன் என்ன உன்ன புஷ் அப்ஸா எடுக்க சொன்னாங்க. ஜஸ்ட் பிரீத்திங் எக்ஸசைர்ஸ் தானே?" என்று கேட்க,


"அடி போடி போக்கத்தவளே, எக்ஸசைர்சாம்ல எக்ஸசைசு. நான்லாம் தட்டுத் தட்டா கறியும் சோறும் தின்னப்பவே வாக்கிங்க் கூடப் போனதில்லை. உங்கப்பாவும் என்ன எதுவும் சொன்னதில்லை. ஆனா உங்கண்ணன்ங்காறேன் வாத்தியார் ஆனாலும் ஆனான். அதை சாப்பிடாத இதை சாப்டாத. இப்டி உக்காரத, இங்க நிக்காத. பிரசர் வரும். சுகர் இருக்குன்னு உயிரை வாங்குறான். பத்தாதுக்கு வாரத்தில ஆறு நாள் கீரைய வேற சாப்பிட சொல்றான் டி. இவன் வாத்தியாரா?, இல்ல டாக்குட்டரா?" என்று அழாத குறையாய் புகார் வாசித்தவர், சற்று முன்னர் போட்டு வைத்த வெள்ளை சக்கரை போட்ட தேநீரையும் எடுத்து ரசித்து ருசித்து பருகத் துவங்கினார்.


அதைப் பார்த்து, "அண்ணன் உன் நல்லதுக்குத் தானேம்மா சொல்றாங்க" என்று வக்காலத்து வாங்கியவளும், "உடம்பு புல்லா சுகரை வச்சிகிட்டு டெய்லி காலைல சுகர் போட்டு டீ குடிக்கிறதுக்கே ஒருநாள் அண்ணட்ட வசமா மாட்டப் போறம்மா" என்று எச்சரிக்கையும் செய்ய...


"ஏய் ஏய், போடி போடி போடி. பெருசா மிரட்ட வந்துட்டா. உன் அண்ணன் உனக்கு வாத்தியாரா இருந்தா நீ பயப்படுடி. அவன பத்து மாசம் சுமந்து பெத்து வளர்த்த நான் ஏன்டி" என்று சொல்லிக்கொண்டே வந்தவர், "ம்மா என்னம்மா அங்க சத்தம்?" என்ற செழியனின் கூற்றில், "சும்மா பேசிட்டு இருக்கோம்ப்பா" என்று அடித்து பிடித்து எழுந்து, தேநீர் குவளையோடே சமையலறைக்குள் ஓடி இருந்தார்.


அடுத்து வந்த அரை மணி நேரமும் ஊசி விழுந்தால் கூடக் கேளுமளவு
வீடு முழுதும் அப்படி ஒரு அமைதியில் மூழ்கி இருக்க, "ம்மா, பலகாரம் ஆச்சா?" என்ற கணீர் குரலைத் தொடர்ந்து, சமையல் அறைக்குள் நுழைந்து இருந்தான் செந்தமிழ்ச் செழியன்.


"ம்ம்ம் ஆச்சுப்பா." என்ற மீனாட்சியும் சுடச்சுட பூரியும் உருளைகிழங்கும் பாத்திரங்களில் எடுத்து வைக்க...


அணிந்திருந்த வெள்ளைச் சட்டையில் உரசிவிடாதவாறு அவைகளை எல்லாம் எடுத்து வந்து சுத்தமாக துடைத்து இருந்த மேசையில் அழகாக அடுக்கி வைத்தவன், அங்கிருந்த பியூரிஃபயரில் நீரும் பிடித்து,
"ம்மா நீங்களும் உக்காருங்க" என்று அவனும் அமர்ந்து தங்கையின் அறையையும் ஏறிட்டுப் பார்த்தான்.


வெளியில் அண்ணனின் சப்தம் கேட்டதுமே, "அய்யோ அதுக்குள்ள கிளம்பிட்டாரா?" என்று தன் அலங்காரங்களை எல்லாம் அவசர கதியில் முடித்துக் கொண்டு புத்தகப் பையோடு யாழினி என்னதான் வேகமாக ஓடி வந்தாலும் இன்றும் அவனுக்குப் பின்னேயே வந்து நாற்காலியில் அமர்ந்தாள்.


"கொஞ்சம் முன்னவே கிளம்பி அம்மாக்கு உதவி பண்ணுவோம்னு நல்ல பழக்கம்லாம் இல்லயா யாழி? வயசுப்பிள்ளை பொறுப்போட இருக்க வேணாமா?" என்று தங்கைக்கும் காலை வகுப்பு ஒன்றை நடத்தி முடித்து, "ம்மா, பூரி எல்லாம் எண்ணெய்ப் பொருள். அதிகம் செய்யாதீங்கன்னு சொல்லி இருக்கேன்ல. கேக்கவே மாட்டிங்களா?" என்று கடிந்தபடி ஆளுக்கு இரண்டு பூரிகளை மட்டும் அவனே எடுத்து அனைவரின் தட்டிலும் வைத்தவன் அமைதியாகவே உண்ணத் தொடங்கினான்.


ஆனால் அப்படி அமைதியாக இருந்தால் அது மீனாட்சிக்கு அழகில்லை அல்லவா.


மிக மிக மெதுவான குரலில், "தம்பி என்று அழைத்தவர் அவன் ஏறிட்டுப் பார்க்கவும், "நேத்து ஒரு பொண்ணோட போட்டோ அனுப்பி இருந்தேனே. அதை பத்தி ஒன்னும் சொல்லலலியேப்பா? எப்ப பொண்ணு பாக்க போலாம்?" என்று ஒரு எதிர்பார்ப்போடு மகன் முகத்தைப் பார்த்தார்.


"இல்லம்மா, அந்த பொண்ணு சரி வராது." என்று சொன்னவன் அன்னையின், "ஏன் ஏன் ஏன்ப்பா?" என்ற ஆதங்கக் கேள்விக்கு, "மொதோ சாப்பிடுங்கம்மா சொல்றேன்" என்று விட்டு உணவில் கவனம் செலுத்தினான். சாப்பிடும் பொழுது பேசாமல் சாப்பிட வேண்டும் என்ற கொள்கையையும் கடைப்பிடிப்பவன் அவன்.


அதில், ம்ம்ம் என்று தலையாட்டி அமைதியாக உணவைக் கொரித்தாலும், "இதுவரை ஐம்பது பொண்ணு பாத்து ஏதேதோ நொட்டை சொல்லி இது ஐம்பத்தி ஒன்னாவது பொண்ணுடி. அவனைப்போலவே காலேஜ் லெக்ச்சரர்" என்று அருகில் இருந்த மகளிடம் கிசுகிசு குரலில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் மீனாட்சி.


ஆனால் காரியமே கண்ணாக, உணவை முடித்து, சமையலறை சென்று தட்டையும் கழுவி வைத்து வந்த செழியனோ, நேற்று வாட்சப்பில் மீனாட்சி அனுப்பிய பெண்ணின் புகைப்படத்தை எடுத்து, "இங்க பாருங்கம்மா இந்தப் பொண்ணை." என்று அன்னையிடம் காட்டியவன், "போட்டிருக்க சுடிதாரோட துப்பட்டாவைக் கூட சரியா பின் குத்தாம போட்டோக்கு நின்னுருக்கா. கழுத்துல இருக்க செயின் டாலர் திரும்பி இருக்கு அதைக்கூட கவனிக்கலை. நெத்தில வச்சிருக்க குங்குமத்தைக் கூட வட்டமா வைக்காம ஏனோ தானோன்னு வச்சிருக்கா. ஒரு போட்டோக்கே இப்டி பொறுப்பில்லாம நிக்கிற பொண்ணு வாழ்க்கையில எப்டிம்மா பொறுப்பா இருப்பா? அதனால வேற பாருங்க" என்று அண்ணன் அடுக்கிய  காரணங்களைக் கேட்ட யாழினியோ தாயைப் பார்த்து வாயை மூடிச் சிரித்து வைக்க...


"எல்லாரும் பொண்ணு போட்டோ காட்டுனா, அழகா இருக்காளா, கலரா இருக்காளா, கண்ணு எப்டி, மூக்கு எப்டின்னு தானடி பாப்பாங்க. இவன் என்னடி செயின்ல இருக்க டாலரையும், கலைஞ்சு இருக்க பொட்டையும் பார்த்து வச்சிருக்கான். இவனுக்குலாம் கல்யாணம்னு ஒன்னு நடக்குமாடி?" என்று மகளின் கையைப் பற்றிப் புலம்பியவர், "என் வயித்துல மட்டும் பொறக்காம இருந்திருந்தா உனக்குலாம் பொண்ணே கிடைக்காதுன்னு சாபமே விட்டுருப்பேன்டா." என்று மகன் சென்ற திசையைப் பார்த்து நல் அர்ச்சனைகளையும் வாரி இறைத்தார் மீனாட்சி

Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️