நூலகம் -4
"பொறுக்கி" என்ற வார்த்தையை சத்தமாகக் கூறாவிடனும், அவள் உதட்டசைவை வைத்தே அவள் கூறிச் சென்ற வார்த்தையை நன்கு புரிந்து கொண்டவனுக்கு, கை முஷ்டிகள் தன்னால் இறுக, "டேய், யாருடா அந்தப் பொண்ணு? அப்போல்ல இருந்தே ஓவர் ஆட்டிடுட் காட்டுறா?" என்று கேட்டான் தலையைச் சிலுப்பிக் கொண்டு செல்பவளைக் கை காட்டிய அர்ஜுன்.
"அதுவா? அந்தப் பொண்ணு பேரு சிற்பிகா அர்ஜுன். நம்ம சேர்மன் சாரோட ஒரே பொண்ணு. நீ அடிச்சில்ல சதீஸ், அவன் டிப்பார்மென்ட் தான். காலேஜ் டாப்பர்" என்று அவனின் இன்னொரு நண்பன் கூற,
"இதெல்லாம் நல்லா சொல்லுங்கடா. ஆனா ஒரு ஜுனியர் பொண்ணுகிட்ட கலாட்டா பண்ணி, எல்லார் முன்னயும், என் இமேஜே ஸ்பாயில் பண்ணிட்டிங்க" என்று வேகமாகத் திரும்பி அனைத்து பிரச்சனைக்கும் காரணமான நண்பனை ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான் அர்ஜுன் தேவதாஸ்.
அர்ஜுன் இந்தக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து மாதங்களே ஆகி இருந்ததால், இதுவரை அவனுக்கு சிற்பிகாவைப் பற்றிய எந்த விபரமும் தெரிந்திருக்கவில்லை.
முன்பு அவன் படித்த கல்லூரியிலும் சரி, இங்கும் சரி, என்னதான் அடிதடி, சண்டை, சச்சரவு, என்று அவனுக்கே உரிய அடாவடியோடு திரிந்தாலும் உடன் பயிலும் மாணவிகளிடம் பெரிதாகப் பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்ளாதவன், சற்று முன்னர் கூட நண்பன் செய்த தவறை முழுமையாக அறியாமல் தான் அந்த ஜுனியர் மாணவனிடம் சண்டைக்குச் சென்றிருந்தான்.
அனைத்தும் விசாரித்து அறிந்த செழியன் தான், அந்த மாணவியையும் வரவழைத்து, அர்ஜுனின் நண்பன் மேல் தான் முழுத் தவறு என்றும், கல்லூரி விதிகளை மீறி பெண் பிள்ளையை ராக்கிங் செய்ததால் அவனை பத்து தினங்கள் சஸ்பென்ட் செய்யப் போவதாகவும் அறிவித்து இருக்க, "பொம்பளைப் பிள்ளையை ஒரண்டை இழுத்துட்டு தான், இவ்ளோ நேரம் நல்லவன் வேஷம் போட்டியா?" என்று அவன் காதோரம் உறுமி விட்டுத்தான், மறுவார்த்தை பேசாமல் வெளியேறி வந்திருந்தான் அர்ஜுன் தேவதாஸ்.
ஆனால் இதை எதையும் அறியாத சிற்பிகா, அவனை பொறுக்கி என்று திட்டிவிட்டுச் சென்று இருக்க, அவள் சென்ற திசையையே பார்த்து இருந்தவனுக்கோ பெண்ணின் அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்தை ஊசியாய் குத்தத் துவங்கியது.
வேறு எந்த வார்த்தை சொல்லி அவள் திட்டி இருந்தாலும், அவன் பெரிதாக எடுத்து இருக்க மாட்டானோ என்னவோ.
ஆனால் பெண்கள் புறமே திரும்பாத அவனை பொறுக்கி என்றதை, அவனால் இம்மியும் ஜீரணிக்கவே முடியாது இருக்க, வேகவேகமாக ஆடிட்டோரியத்தினுள் நுழைந்தவன் சிற்பிகாவைத் தேடினான்.
அச்சமயம் சரியாக மேடையின் ஓரத்தில் இருந்த ஒலிப்பெருக்கியில் (ஸ்பீக்கர்), "அர்ச்சுனரே அர்ச்சுனரே" என்ற பாடல் வரிகள் ஒலிக்கத் தொடங்க, ஆண் வேடமிட்டிருந்த தன் தோழியோடு இணைந்து, அந்தப் பாட்டிற்குத் தோதான நடனத்தை ஆடத் துவங்கி இருந்தாள் சிற்பிகா தேவி.
திடீரென தன் பெயரில் பாடல் ஒலிக்கவுமே அவன் பார்வை அன்னிச்சையாக விழா மேடையில் பதிய, அங்கோ சற்று முன்னர் அவனை பொறுக்கி என்று ஏசிய பெண்ணவள் இக்கணம்,
"அர்ச்சுனரே அர்ச்சுனரே
ஆசையுள்ள அர்ச்சுனரே
அழகான வில் வளைத்து
அம்பு விடுவது எக்காலம்" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உதடுகளை அசைத்து, ஆடல் என்ற பெயரில் நாட்டியம் ஆடும் விழிகளாலும் ஆணின் மனதை ஈர்த்து எடுத்தாள்.
தன் பெயரில் இருந்த அந்தப் பாடலையே இப்பொழுது தான் அறிந்து கொண்டவனுக்கு, அவள் அர்ச்சுனரே அர்ச்சுனரே என்று உதட்டை அசைக்கும் பொழுதெல்லாம் தன்னையே அழைப்பது போல் இருக்க, "என்ன இது?" என்று தலையை உலுக்கி தன்னை மீட்டுக் கொண்டவன், அவள் முகத்தில் படிந்த விழிகளை மட்டும் மீட்க இயலாது நின்றான்.
நண்பன் வேகமாக ஆடிட்டோரியத்தினுள் நுழையவும், மீண்டும் கலாட்டா செய்வானோ என்று பதறிக் கொண்டு ஓடி வந்த அவனின் இன்னொரு நண்பன், அங்கு மேடையையே பார்த்தவாறு நின்றவனிடம், "என்னடா, இங்க நின்னுட்ட? நீ வந்த வேகத்துக்கு அந்த சிற்பி பொண்ண ஏதும் பண்ணிருவியோன்னு ஓடி வந்தேன்டா" என்று பதற்றமாகச் சொன்னான்.
அப்பொழுது தான் அவனுக்கும் அவளை எதற்காகத் தேடி வந்தோம் என்றதே ஞாபகத்திற்கு வந்தது போலும்.
ஆனால் அப்பொழுதும் அவள் மீது பதிந்திருந்த விழிகளை மட்டும் நகர்த்தாமல், "செய்யணும்டா, ஆனா என் பேரைச் சொல்லி இவ்ளோ அழகா ஆடுற பொண்ண என்னடா செய்றது?" என்று அவனிடமே கேட்டவன், "செம்மயா ஆடுறாள்ள மச்சான்!" என்றும் ஒரு மாதிரியாகச் சிரித்தான்.
அதைக்கேட்டு, "ஆத்தி..." என்று அலறிய அவன் நண்பனும், "உன் பேச்சு, பார்வை எதுவும் இன்னிக்கு சரியில்லையே மாப்புள. அது சேர்மனோட பொண்ணுடா. மொதோ கிளம்பு போவோம்" என்றான்.
"நான், எம் பி பையன்டா" என்று அதற்கும் சிரித்தவன், "இவ்ளோ அழகா ஒரு டான்ஸ் பர்மாமென்ஸ் நடந்திட்டு இருக்கு. பாதிலயே போலாம் சொல்ற. கலா ரசனையே இல்லயாடா உனக்கு?" என்று வினவ,
"ஏதே கலா ரசனையா? டிவி ல கலா மாஸ்டர் ஜட்ஜ் பண்ற டான்ஸ் நிகழ்ச்சியக் கூட, அய்யய்ய இதெல்லாம் மனுஷன் பாப்பானான்னு மாத்தி விட்டு பைட் சீனா பாத்துட்டு, இப்ப அந்தப் புள்ள ஏதோ தத்து பித்துன்னு ஆடிட்டு இருக்கு. இது உனக்கு செம்மையா இருக்கா?" என்று மேலும் நொடித்தான் நண்பன்.
"இல்லியா பின்ன?" என்றவனும், "தத்துப் பித்துன்னு ஆடுனாலும், தலைவன் பேரைச் சொல்லி ஆடுறாளே. அதுக்காகவே நூறு மார்க் போடலாம்லடா" என்று இன்னுமே பார்வையில் ரசனையைக் கூட்டினான் அர்ஜுன் தேவதாஸ்.
அதில் அதிர்ந்து அவனைப் பார்த்தவனும், "எப்பவும் எந்த பொண்ணையும் நீ இப்டி பாக்க மாட்டியே மச்சான். நீ இன்னிக்கு சரியில்லை. வாடா போலாம்" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தான்.
அதற்குள் மேடையில் நடனப் போட்டியும் முடிந்து இருக்க, அனைவருக்கும் வணக்கம் வைத்து கீழே இறங்கியவளைப் பார்த்து,
"ஒருவேளை எனக்குன்னு பொறந்தவ இவதானோ என்னவோ. அதான் இவ்ளோ நாளா எந்தப் பொண்ணையும் பாக்கத் தோணல போலடா" என்று அவளை நோக்கி எட்டு வைத்தவன், "அர்ஜுன் திரும்ப என்ன பிரச்சனையை தூக்கிட்டு வந்துருக்க?" என்ற செழியனின் குரலில் அப்படியே நின்றிருந்தான்.
அவர்களை நெருங்கி வந்த செழியனும், "இன்னும் என்ன அர்ஜுன் வேணும் உனக்கு?. பங்க்சன் நடந்துட்டிருக்கப்போ திரும்ப திரும்ப வந்து பிரச்சனை பண்ணா, அப்றம் நான் உன்மேலயும் ஆக்சன் எடுக்க வேண்டி வரும்" என்று எச்சரிக்கையும் விடுக்க,
அக்கூற்றில் அவர்கள் புறம் திரும்பிப் பார்த்த சிற்பிகாவோ, அங்கு நின்ற அர்ஜுனையும் பார்த்து மீண்டும் தவறாக எண்ணியவள், "பொறுக்கி, இவனுக்கு வேற வேலையே இல்ல போல" என்று இன்னொரு முறையும் உதடுகளை அசைத்துச் சென்றிருந்தாள்.
அதற்குள், "இல்ல சார் நாங்க, பிரச்சனைலாம் பண்ண வரல! சும்மா பிரண்டு ஒருத்தனப் பாக்க வந்தோம்" என்று முன்னே வந்த அர்ஜுனின் நண்பனும், "மச்சி வாடா போயிர்லாம்" என்று சிற்பிகாவின் மீதே பார்வை பதித்து இருந்தவனை வம்படியாக இழுத்துக் கொண்டு வெளியேறி வந்திருந்தான்.
அவன் இழுவைக்கு அவனோடு வந்திருந்தாலும், அன்று மட்டுமில்லாமல் அடுத்து வந்த நாட்களும் கூட, அவள் கூறிய பொறுக்கி என்ற வார்த்தையும், பெண்ணவளின் வடிவான வதனமும் சேர்ந்தே அவனை வெகுவாக இம்சிக்கத் துவங்கியது.
அவ்விம்சையை விரிவு படுத்தும் விதமாக சிற்பிகாவும், அடுத்தடுத்த சந்தர்ப்பங்களிலும் அவனைக் காண நேரிட்டால், முகத்தைத் திருப்பிக் கொண்டே சென்று இருக்க, வாழ்க்கையிலே முதன்முறையாக அப்படி ஒரு முகத் திருப்பலை எதிர் கொண்டவனுக்கோ அன்று அர்ச்சுனரே அர்ச்சுனரே என்று அவன் பெயரில் உள்ள பாடலுக்கு நடனமாடியவளை, "அர்ஜுன் அர்ஜுன்" என்று தன் நாமத்தைக் கூற வைக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளே துளிர் விட்டது.
'எனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படியெல்லாம் தோணுது? இது என் இயல்பில்லையே?' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாலும், நாளாக, நாளாக, தன்னை பொறுக்கி என்று அருவருப்பாகப் பார்த்தவளின் விழியால், தன்னை சினேகமாகப் பார்க்க வைக்க வேண்டும் என்று ஒருவித வெறியே தோன்றி இருந்தது அர்ஜுனுக்கு.
எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நினைத்த மாத்திரமே நடத்திப் பழக்கப் பட்டவன், அவளை நேரடியாகச் சந்தித்துப் பேசுவது என்றும் முடிவு செய்தவாறு, அன்று அவள் வகுப்பறையை நோக்கி விரைந்திருந்தான் அர்ஜுன் தேவதாஸ்.
அங்கோ அவளுக்கு இன்று முக்கியமான பாடம் ஒன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்க, காரியமே கண்ணாக, கருமணியைக் கூட அசைக்காமல், மும்முரமாக பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள் சிற்பிகா தேவி.
அரை மணி நேரத்திற்கும் மேலாக ஜன்னல் புறம் நின்று, நின்று பார்த்து அவள் திரும்பிக்கூடப் பாராததில், சினம் கொண்டவன், அங்கிருந்த ஒரு மாணவனின் புத்தகப் பையை வேகமாகப் பிடிங்கி,
"சீனியர், மை, பேக் சீனியர்" என்று அவன் கத்துவதையும் பொருட்படுத்தாமல், அவன் குறிப்பேட்டில் இருந்தே ஒரு தாளை சர்ரெனக் கிழித்து, அவன் பேனையையும் எடுத்து, எதையோ கிறுக்கியவன், அதை பந்தாய்ச் சுருட்டி, அவள் மீது விட்டெறிந்தான்.
திடீரென தன் மீது ஏதோ வந்து விழவும், அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள் சிற்பி.
அதில் எழுதி இருந்த வாசகத்தைக் கண்டு முதலில் புருவம் சுருக்கியவள், பின் விழிகள் சிவந்தவளாய், விலுக்கென்று ஜன்னலின் புறம் ஏறிட்டுப் பார்க்க,
அங்கோ தூணில் சாய்ந்து நின்று அவளையே பார்த்தபடி லேசாகக் கண்ணடித்துச் சிரித்தான் அர்ஜுன் தேவதாஸ்.
Comments
Post a Comment