நூலகம் -3
சிற்பிகா தேவி, வேதாச்சலம் சுசீலாவின் ஒரே ஒரு செல்ல மகள்.
வேதாச்சலம் மேட்டுப்பாளையத்தை ஒட்டிய ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலே தாய் தந்தையை இழந்து, படிப்பிற்காக மேட்டுப்பாளையம் வந்த சமயம் சுசீலாவுடன் காதல் வயப்பட்டு அவள் பெற்றோரின் விருப்பத்தோடு, அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டில் ஆகி இருந்தார்.
அழகும், அறிவும், ஒழுக்கமும் கொண்ட அவரை சுசீலாவின் தந்தைக்கும் மிகவும் பிடித்துப் போக, தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்ததோடு, தங்கள் குடும்ப சொத்தான, தேவி பொறியியல் கல்லூரியையும், சிறந்த முறையில் நடத்தக் கூறி அவரிடம் ஒப்படைத்தார்.
அன்றிலிருந்து இன்று வரை, தன்னை நம்பி தன் மாமனார் கொடுத்த பொறுப்பை திறம்படச் செய்து கொண்டிருப்பவருக்கு, ஐந்து வருடங்கள் கழித்துப் பிறந்த அருமை மகள் தான் சிற்பிகா தேவி.
தேவி என்பது சுசீலாவின் தாயார் பெயர் தான். அவர் பெயரில் தான் கல்லூரி உள்ளது. அதை மாற்றாமல், அந்தப் பெயரையே தன் மகளுக்கு வைத்து, அவள்தான் தங்கள் கல்லூரியின் நாளைய தலைமை என்று அனைவருக்கும் சொல்லாமல் சொல்லி இருந்தனர் வேதாச்சலம் தம்பதி.
ஆனால் பெண்ணவளுக்கு அப்படி எந்த எண்ணமும் இருக்கவில்லை. சாதாரண ஒரு மாணவி போலத்தான் அவளது செயல்பாடுகள் அக்கல்லூரியில் இருக்கும்.
எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டாள். யாரிடமும், நான்தான் இந்தக் கல்லூரியின் சொந்தக்காரி என்று காட்டிக் கொள்ளவும் மாட்டாள்.
விழா மேடையில் சிற்பிகா பேசி முடிக்கவும், கீழே கூட்டத்தில் சலசலப்புக் கேட்கவும் சரியாக இருக்க, சிற்பிகா உட்பட அங்கிருந்த அனைவரின் பார்வையும் சப்தம் வந்த திசையை நோக்கித் திரும்பியது.
அங்கோ முகத்தில் கோபம் கொப்பளிக்க உள்ளே வந்த அர்ஜுன், அங்கு ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், அவனிடம் அடி வாங்கி விழுந்த மாணவனின் சட்டையைப் பற்றித் தூக்கி நிறுத்தியவன், "எவ்வளவு திமிர் இருந்தா சீனியர்ஸ் கிட்டயே உன் திமிரக் காட்டுவ?" என்று கேட்டவாறே மீண்டும் அவன் முகத்தில் குத்தப்போனான்.
அதற்குள், "ஹேய் அர்ஜுன், என்ன செய்ற நீ?" என்று அவன் கையைத் தடுத்து, அந்த மாணவனை பின்னே இழுந்திருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
அதில் கண்கள் சிவக்க அவனை நிமிர்ந்து பார்த்தவன், செழியனின் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் என்ன செய்திருப்பானோ?
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக வாரத்தில் மூன்று வகுப்புகள் அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசியரான செந்தமிழ்ச் செழியனை ஒன்றும் செய்ய இயலாது, "விடுங்க சார். அவனை இன்னிக்கு உண்டில்லைன்னு ஆக்கணும்" என்று பல்லைக் கடித்தான் அர்ஜுன் தேவதாஸ்.
அதில் செழியனுக்கும் கை முஷ்டிகள் இறுக, "அர்ஜுன், ஆர் யூ மேட்? உன் இஷ்டத்துக்கு ஒருத்தன போட்டு அடிக்க, இது என்ன காலேஜா, இல்ல உங்க வீடா?" என்று கேட்க,
அவனை முறைத்துப் பார்த்த அர்ஜுனும், "எவ்ளோ தைரியம் இருந்தா அவன் என் பிரண்ட் மேலவே கையை வைப்பான். அவனை இன்னிக்கு நான் சும்மா விட மாட்டேன்" என்று அந்த மாணவனை மீண்டும் இழுக்கப் போனான்.
அதற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் என்று பெரும் கூட்டமே அவ்விடம் கூடிவிட்டு இருக்க, "ஹேய் ஸ்டுப்பிட்" என்று மீண்டும் அம்மாணவனை மறைத்து நின்ற செழியன், "அவன் என்ன பண்ணான்னு நா விசாரிக்கிறேன் அர்ஜுன். அப்டியே அவன் தப்பு பண்ணிருந்தாலும், நீ லெக்சரர் ஆர் பிரின்சிபல் கிட்ட தான் கம்ப்ளைண்ட் பண்ணனும். அதைவிட்டு அவனை ஒரு அடி அடிச்சதே தப்பு. சாரி கேளு அவன்கிட்ட" என்றான் கன்னம் பற்றி நின்றிருந்தவனைப் பார்த்தவாறே.
அதில், "வாட்? நா, நா இவன்கிட்ட சாரி கேட்கணுமா? நல்ல காமெடி தான் உங்களோட" என்று திமிராகச் சிரித்தவன், "இப்டி ஒரு வார்த்தையை என்னப் பாத்து சொன்னது தெரிஞ்சாலே என் அப்பா உங்களை உண்டில்லைன்னு ஆக்கிடுவாரு.
நா யாருன்னு தெரியும் தான உங்களுக்கு?" என்றான் இன்னுமே திமிரான குரலில்.
அதைக்கேட்டு செழியனின் விழிகளும் சிவக்க, "நீ யாரா வேணா இருந்திட்டுப் போ. இங்க இந்த இடத்தில நீ என்னோட ஸ்டுடென்ட் மட்டும் தான். இது கல்வி அறிவை வளத்துக்கற இடம். சீனியரோ ஜுனியரோ, என்ன பிரச்சனை வந்தாலும், யாரும் இங்க வன்முறையை கையிலெடுக்க, நா அனுமதிக்க மாட்டேன்" என்று அவனைப் போல் அதிகமாகத் துள்ளாமல் வெகு நிதானத்துடனே கூறினான் செந்தமிழ்ச் செழியன்.
அதைக்கேட்டு, "அய்ய, இதப்பாருடா நம்ம புத்தரு. உங்ககிட்ட யாரும் இப்போ பர்மிசன் கேட்டாங்களா? கம்முன்னு போவீங்களா அந்தாண்ட" என்று அர்ஜுன் நக்கல் செய்து கொண்டிருக்கும் பொழுதே, "செழியன் என்னப்பா பிரச்சனை?" என்று வினவியபடி பதட்டத்தோடு அங்கு வந்தார் வேதாச்சலம்.
அவர் பின்னோடே சிற்பிகாவும், அவள் தோழிகளும் கூட என்னவோ ஏதோவென்று அங்கு வந்து சேர்ந்து இருக்க,
வேதாச்சலத்தைப் பார்த்ததும், "சார், இந்த ஜுனியர் பையன் என் பிரண்ட் மேலயே கையை வச்சி இருக்கான். நான் என்னனு கேக்க வந்தா, இவரு என்னவோ பெரிய இவரு போல அவனை காப்பாத்தப் பாக்குறாரு" என்றான் செழியனைக் கைகாட்டிய அர்ஜுன்.
அவனின் அவரு இவரு என்ற பேச்சில் அத்தனை நேரம் அமைதியாக இருந்த ராம்சரணோ,
"அர்ஜுன், அவரு இந்த ஹோல்ட் காலேஜ்க்கே ட்ரைனர் ஆஃப் ஹெட். அவருகிட்ட மரியாதையாப் பேசு." என்று எச்சரிக்கை செய்ய, "ப்ச்"
என்று சலித்தான் அர்ஜுன்.
அவன் பேச்சும், தோரணையும் வேதாச்சலத்திற்குமே, இம்மியும் பிடிக்கவில்லை என்றாலும், ஆளுங்கட்சி அரசியல்வாதியான அவன் தந்தையின் செல்வாக்கும், சில மாதங்கள் முன்பு, அவனை இங்கு சேர்க்க வந்த பொழுது, "ஒரு சின்ன பிரச்சனை காரணமா தான் லாஸ்ட் இயர்கு மட்டும் என் பையன இங்க சேர்க்குறேன். உன் காலேஜ்கு எவ்ளோ வேணா டொனேசன் வாங்கிக்க. பட் என் பையன் இங்க எந்த குறையும் இல்லாம படிக்கணும். இல்ல நீ இங்க காலேஜ் நடத்த முடியாது" என்று அவர் மிரட்டிச் சென்ற வார்த்தைகளும் அவர் கையை கட்டிப் போட்டிருக்க, "நா என்னன்னு கேக்குறேன்ப்பா. நீ கொஞ்சம் பொறுமையா இரு" என்று அர்ஜுனிடம் சொன்னவர் செழியனைத்தான் கவலையோடு பார்த்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த கல்லூரியின் பிரின்சிபல், மற்றும் கரஸ்பான்டன்டும், "ஏய் ஸ்டுப்பிட், அர்ஜுன் யாரு, யாரோட பையன்னு உனக்கு தெரியாதா என்ன? ஒழுங்கா அர்ஜுன் கிட்ட சாரி கேளு. இல்ல இந்த காலேஜ்லயே நீ படிக்க முடியாது" என்று அந்த ஜுனியர் மாணவனை மிரட்டியவர்கள், "நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத அர்ஜுன். நாங்க அவனை சாரி கேக்க வைக்கறோம்" என்று அர்ஜுனையும் சமாதானம் செய்தனர்.
வேதாச்சலத்தைப் போலவே, அவர்களுக்கும் அர்ஜுனைப் பகைக்க முடியாத சூழ்நிலை தான் என்றாலும், அதையும் தாண்டி, மகனை கவனித்துக் கொள்ள வேண்டி, அவன் தந்தை அவ்வப்போது தூக்கிப் போடும் எலும்புத்துண்டுகளும், இந்த மூன்று மாத காலங்களாய், அர்ஜுனுக்கு கொடி பிடிக்கும் வேலையையும் அலுங்காது செய்ய வைத்திருந்தது.
ஆனால் அவர்களைப் போல் இல்லாமல் வேதாச்சலத்தின் தவிப்பெல்லாம், இத்தனை வருட காலங்களாய், சாதாரண ராக்கிங்க் பிரச்சனை கூட இல்லாது, அருமை பெருமையாய் வளர்த்த அக்கல்லூரி, அர்ஜுனைப் பகைப்பதால் தன் இயல்பை தொலைத்து விடக் கூடாது என்பதாகவே இருக்க, அவர் பார்த்த பார்வையிலேயே அவர் மனதை உணர்ந்தவனாய் அவரருகில் போய் நின்று, "சர், இந்த பிரச்சனையை நான் பாத்துக்கறேன். நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க" என்றான் செந்தமிழ்ச் செழியன்.
பின் ராமிடம் திரும்பி, "நீங்களும் மத்த ஸ்டாப்சும் பங்சனை நடத்துங்க ராம். நான் இப்ப வந்தர்றேன்." என்றவன், "ப்ளீஸ், கோ ஆப்ரேட் ஸ்டுடென்ட்ஸ்" என்று மாணவர்களிடமும் சொல்லி, "அர்ஜுன், உன் பிரண்டையும் கூட்டிட்டு சேர்மன் சார் ரூம்க்கு வா" என்று அவனுக்கே உரித்தான ஒரு கட்டளைக் குரலில் கூறிவிட்டு, அந்த ஜுனியர் மாணவனையும் கையோடு அழைத்துக் கொண்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
அவன் பின்னோடே வேதாச்சலமும், தந்தையோடு சிற்பிகாவும், அவளுக்கு வால் பிடித்து, அவள் தோழிகளும் கூட, செழியனைத் தொடர்ந்து சென்று இருக்க,
வேறு வழியில்லாத அர்ஜுனும், அவன் விசிறிகளும் சேர்மன் அறையை நோக்கி விரைந்தனர்.
அங்கோ பிரச்சனைக்கு சம்பந்தம் இல்லாத மாணவர்கள் எல்லாம்
அறை வாயிலிலே தடுக்கப்பட்டு, மற்றவர்கள் மட்டும் உள்ளே நுழைந்திருக்க, அடுத்து வந்த பத்து நிமிடங்கள், நகத்தைக் கடித்துத் துப்பியபடி உலவிக் கொண்டிருந்தவள், "ஏய் உள்ள என்ன நடக்குதுன்னு உங்களுக்கு ஏதாச்சும் கேக்குதா? இந்த சீனியர் அர்ஜுன், நம்ம காலேஜ் ல வந்து சேர்ந்ததில இருந்தே அடிக்கடி இப்டி பிரச்சனைய கூட்டிடுறான்டி. அவன் ஆளும் மூஞ்சியும். அப்பாவுக்கு வேற ஹெவி பிரசர் இருக்கு. டென்ஷன் ஆகக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க" என்று தோழிகளிடம் கவலைக் குரலில் சொன்னாள்.
"அதான் செழியன் சார் டீல் பண்றாருலடி. ப்ரோப்லேம் சால்வ் ஆகிடும். பீல் பண்ணாத" என்று தோழிகளும் அவளை சமாதானம் செய்ய,
மேலும் ஐந்து நிமிடம் கழிந்த நிலையில் உள்ளே இருந்த அனைவரும் ஒவ்வொருவராக வெளியேறி அவரவர் பணிகளை கவனிக்கச் சென்றனர்.
அதில் சற்று முன்னர் அடி வாங்கியிருந்த அந்த ஜுனியர் மாணவன், சிரித்த முகமாகவும், அர்ஜுனின் குழு, இறுகிய முகத்தோடும், வெளியேறி இருக்க, தன்னுடைய பிரிவில் தான் படித்துக் கொண்டிருந்த, அந்த மாணவனை சிற்பிகா நெருங்கியவள் என்ன பிரச்சனை என்று விசாரித்தாள்.
அவளை நன்கு அறிந்திருந்த அவனும், "அது ஒன்னும் இல்ல சிற்பி. அந்த அர்ஜுனோட ஃபிரண்ட் நம்ம கிளாஸ் பொண்ணுகிட்ட ஏதோ கலாட்டா பண்ணிருப்பான் போல. அந்தப் பொண்ணு என் பக்கத்து வீடுனால என்கிட்ட வந்து சொல்லுச்சு. நா போய் அவனை வான் பண்ணேன். அதுக்கு அவன் என்னையும் அந்த பொண்ணையும் தப்பா பேசிட்டான் சிற்பி. அதான் கோவத்துல கையை நீட்டிட்டேன். அதான் பதிலுக்கு அந்த அர்ஜூனும் என்ன அடிச்சுட்டான்" என்று நடந்ததை எல்லாம் கூறியவன், "ஆனா செழியன் சார், அந்த பொண்ணையும் கூப்பிட்டு பேசி, அர்ஜுன் கேங்கயும் வான் பண்ணி அனுப்பிட்டாங்க" என்றும் சந்தோசமாகவே கூறிவிட்டுச் சென்றான்.
சற்று முன்னர் தங்கள் ஆசிரியனான செழியனை எதிர்த்துப் பேசியதற்கே அர்ஜுன் மேல் கடும் கோபத்தில் இருந்தவள், சக மாணவியிடம் கலாட்டா செய்தார்கள் என்ற விடயத்தையும் கேட்டு, விழிகள் இரண்டும் சிவக்க, அப்பொழுது தான் அவர்களைக் கடந்து சென்ற அர்ஜுனைப் பார்த்தவள்,
"பொறுக்கி" என்று தனக்குள்ளே திட்டியவாறு தோழிகளுடன் சேர்ந்து ஆடிட்டோரியத்திற்கு விரைந்து இருந்தாள்.
Comments
Post a Comment