நூலகம் -2

"இவளுக்கு என்னாச்சு டி. நல்ல நாள் அதுவுமா, ஏன் இவ்ளோ அப்செட்டா இருக்கா?" என்று தங்களுக்குள் பேசியபடி சிற்பிகாவை நெருங்கிய தோழிகளோ, "ஹேய் என்ன சிற்பி, ஏன் இவ்ளோ டல்லா இருக்க. தமிழ் எஸ்ஸேவ சரியா பிரிப்பேர் பண்ணலையோ?" என்று அக்கறையுடனே வினா எழுப்பினர்.


அதற்கு, 'அதெல்லாம் இல்லை' என்பது போல் தலையை ஆட்டியவளைப் பார்த்து,
"அப்றம் என்னடி, எதுக்கு இப்டி ஏரோபிளேன் டைவடிச்ச போல உக்காந்திருக்க? (எவ்வளவு நாளைக்கு தான் கப்பல் கவுந்த போலன்னே எழுதுறது)" என்றவர்கள் அப்பொழுதும் அழுவது போலவே அமர்ந்திருந்தவளைப் பார்த்து,
"ஏய் லூசு, வாயத் திறந்து பேசு. வாயில் என்ன கொழுக்கட்டையா?" என்று திட்டவே துவங்கினர்.


அதைக்கேட்டு லேசாக உதட்டைப் பிதுக்கியவளும், "வாயில் எல்லாம் கொழுக்கட்டை இல்லடி. தொண்டைல தான்டி செம்ம கோல்ட்" என்று அழுகுரலிலே கூறி இருந்தாள்.


ஏற்கனவே உடல்நிலை கோளாறால் நன்றாகவே மாறிவிட்டு இருந்த பெண்ணவளின் தேன்குரல், இப்பொழுது அவள் பேசிய பாவனையில் இன்னுமே மோசமாக ஒலித்திருக்க, "என்னடி, கழுதையே உன்கிட்ட கடன் கேட்கணும் போல. ஓவர் நைட்ல குரல் இவ்வளவு இனிமையா மாறுறதுக்கு அப்படி என்னத்தடி பண்ணுன?" என்று தோழிகள் எல்லாம் கேலியில் இறங்கினர்.


அதில், "போங்கடி" என்று மென்மேலும் சிணுங்கிக் கொண்டவளோ, "அதான் இன்னிக்கு பேச்சுப் போட்டில நான் பேசப் போறது இல்லைடி. இதை செழியன் சார்கிட்ட மட்டும் யாராச்சும் போய் சொல்லிருங்க" என்று விட்டு,  மீண்டும் சோகமாகி அமர்ந்து கொள்ள,


'இவளுக்கு என்ன பைத்தியமா?' என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட தோழிகளும், "ஏய், அதெல்லாம் ஒன்னும் இல்ல சிற்பி. நாங்க சும்மாதான்டி சொன்னோம். இந்த மாதிரி சப்ப ரீசனுக்கு எல்லாம் இவ்ளோ நாள் பண்ண பிராக்டிஸ்ஸ யாராச்சும் வேஸ்ட் பண்ணுவாங்களா?" என்று ஆளாளுக்கு அவளை சமாதானம் செய்தனர்.


ஆனால் யார் சமாதானத்திற்கும் இறங்கி வராதவள், "சிற்பிகா" என்ற அழுத்தமான ஒற்றை உச்சரிப்பில் உடல் தூக்கிப்போட எழுந்து நின்றவள், அழைப்பு வந்த திசையை நோக்கி குடுகுடுவென ஓடி இருந்தாள்.


தன் முன்னே வந்து நின்றவளையும், அவள் கையிலிருந்த காகிதத்தையும் மாறி மாறிப் பார்த்தவன், "அந்த பேப்பரை யாழினிகிட்ட கொடு சிற்பிகா" என்றான் எந்த உணர்வுகளும் காட்டாத குரலில்.


அதில், "சார்..." என்று இழுத்து நிறுத்தியவள், "அது வந்து சார்" என்று அருகில் இருந்த தன் தோழியையும் பார்க்க,


"நீதான், பேச்சுப் போட்டில உன்னால பேச முடியாதுன்னு சொன்னியாமே. அந்தக் கட்டுரையை யாழினிகிட்டக் கொடு. அவ பேசட்டும்" என்றான் இன்னுமே குரலை அழுத்தி.


அப்பொழுதும் சார் என்று இழுத்தவளுக்கு, இப்பொழுது இருக்கும் குரலோடு மேடையில் ஏறி பேசுவதற்கு பெரும் தயக்கம் இருந்தாலும், இன்றைய பேச்சுப் போட்டிக்காக, தன்னை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்து இருக்கும் தன் ஆசானையும் அதிருப்திப்படுத்த முடியாமல், "நேத்து நைட் இருந்தே வாய்ஸ் ரொம்ப கரகரப்பா இருக்கு சார். நான் பேசினா நல்லா இருக்குமா? என்னால தெளிவா பேச முடியுமான்னு டவுட்டா இருக்கு. அதான்" என்று அவஸ்தையாய் அவனை ஏறிட்டுப் பார்த்தாள் சிற்பிகா தேவி.


பெண்ணின் அந்தப் பார்வையிலே அவன் முகத்தில் இருந்த கடினம் மெல்ல மெல்ல மறைய, "நம்மாள ஒரு விஷயம் முடியும் முடியாதுங்கிறது ரெண்டாவது விஷயம் கேர்ள். முதல்ல முயற்சி, முயற்சி பண்ணனும்னு நினைக்கிறது தான் நம்மளை வெற்றிக்கான படிகளுக்கு அழைச்சிட்டுப் போகும்" என்று அவள் முகத்தையே ஊடுறுவிப் பார்த்தான்.


அதைக்கேட்டிருந்த அவள் தோழிகளும், "அதான் செழியன் சாரே இவ்ளோ சொல்றாங்கள்ள சிற்பி. உன்னால முடியும். போய்ப் பேசுடி" என்று சொல்ல,


அப்பொழுதும் அவள் முகம் தெளியாமல் இருப்பதைக் கண்டு, அங்கிருந்த சிற்றூழியனை அழைத்த செழியனோ ஒரு டம்ளரில் வெந்நீரும் கேண்டினில் இருந்து தேன் மற்றும் மிளகுத் தூளும் வாங்கி வரப் பணித்தான்.


அத்தனை நேரமும் அவன் கூடவே இருந்த ராம்சரணோ, "தேன், மிளகு, சுடுதண்ணிலாம் எதுக்கு செழியன் சார். அடுப்பில்லாத சமையலா?" என்றான்.




"அடுப்புக்கு தான் உன் வாய் இருக்கே ராம். அதுலயே சமைச்சுருவோமா?" என்று செழியனும் சிரிக்காமல் வினவ,


அதைக்கேட்ட மாணவிகளோ கிளுக்கிச் சிரித்தார்கள்.


அதில், "சார், என் வாய் என்ன அடுப்பு போலவா இருக்கு?" என்று சிறுபிள்ளை போல் சிணுங்கியவனைப் பார்த்து மாணவிகள் எல்லாம், "ஆமா சார்" என்று மென்மேலும் சிரித்து வைக்க,


அழகாக கத்தரிக்கப்பட்டிருந்த கருத்தடர்ந்த மீசைக்குள், எந்தவித கெட்ட பழக்கமும் என் அருகில் கூட நெருங்க முடியாது என்று சொல்லாமல் சொல்வது போன்ற  செக்கச் சிவந்த ஆடவனின் அதரங்களை ஏறிட்டுப் பார்த்த ஒருத்தி மட்டும், "இல்லை" எனும் விதமாய் தலையை அசைத்தாள்.


அத்தனை நேரமும் விளையாட்டுப் போல் பேசிக் கொண்டிருந்தவன், பெண்ணின் அந்த தலையசைப்பைக் கண்ட நொடி சட்டென்று பார்வையைத் திருப்பி, "நா, நா, போய் நெக்ஸ்ட் என்ன ப்ரோக்ராம்னு பாக்குறேன் சார்" என்று விட்டு வேகமாக அங்கிருந்து அகன்றிருந்தான் ராம்சரண்.


அச்சமயம் வெந்நீர் எடுக்கப்போன சிற்றூழியனும், செழியன் கேட்டதை எல்லாம் கொண்டு வந்து கொடுத்திருக்க, ஸ்பூனில் சிறு மிளகுத் தூளை எடுத்து, அதிலேயே தேனையும் ஊற்றிக் குழைத்து சிற்பிகாவிடம் நீட்டியவன், "இதை சாப்பிட்டு, அப்டியே இந்த வெந்நீரையும் குடிச்சிடு கேர்ள். தொண்டைக்கு இதமா இருக்கும். அப்றம் போய்ப் பேசு" என்றான்.


அக்கல்லூரியில் அவள் மாணவியாய்ச் சேர்ந்த காலம் தொட்டே, அவன் வார்த்தைகளை அப்படியே ஏற்றுப் பழகி இருந்தவளும், "ஓகே சார்." என்று தலையை ஆட்டி, அவன் சொன்னவாறே செய்து முடிக்க,
"பெஸ்ட் ஆப் லக்" என்றும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான் செந்தமிழ்ச் செழியன்.


அடுத்து வந்த சில நிமிடங்களில் "குரூப் டான்ஸைத் தொடர்ந்து தமிழ் பேச்சுப்போட்டியில் பங்கேற்க நம்ம காலேஜ் AIDS (Artificial intelligence and data science)டிபார்ட்மென்ட் மாணவி, சிற்பிகா தேவியை மேடைக்கு அழைக்கிறோம். கல்வித் தந்தை கருமதீரர் காமராஜரின் பெருமைகளும், தொண்டுகளும் பற்றி இதோ சிற்பிகாவின் வார்த்தைகளில் உங்களுக்காக" என்று ஒலிப்பெருக்கியில் ஒலித்து முடித்த அழைப்பைத் தொடர்ந்து, அந்த பிரம்மாண்டமான ஆடிட்டோரியத்தின் பக்கவாட்டுக் கூட்டத்தில் இருந்து, கால் முளைத்த பூவாய் நடந்து வந்து சற்று தயக்கத்தினூடே மேடையில் ஏறினாள் சிற்பிகா தேவி.


பெயருக்கு ஏற்றார் போல கைதேர்ந்த சிற்பி ஒருவன், தங்கத்தாலே கடைந்தெடுத்து பொன்னில் வடித்த சிற்பமென அத்தனை அழகாக இருந்தாள்.


கத்தரிப்பூ வண்ணத்தில், தரையை உரசாது உடுத்தியிருந்த அனார்கலி சுடிதார் அதனை, வெண்டைப் பிஞ்சு விரல்களில் சற்றே தூக்கிப் பிடித்தபடி, மேடையேறியவளை அவளின் தோழியர் எல்லாம், "சிற்பி, சிற்பி" என்று உற்சாகப் படுத்த, கீழே அமர்ந்து இருந்த அவள் தந்தை வேதாச்சலத்தின் விழிகளும், "பாப்பா" என்று பெருமையாக விரிந்து கொண்டது.


ஆனால் அவள் தோற்றத்தில் இருந்த வனப்பிற்கு மாறாக, வஞ்சியவளின் வட்ட முகமோ இன்னமும் பதட்டத்தைத்தான் பூசியிருக்க, அவள் மேடை ஏறும் முன்னரே கீழிருந்த கூட்டத்தில், "ஹேய் ஒழுங்கா பேசிடுடி. கல்வித்தந்தை காமராஜரப் பத்தி பேசுறதுக்கு பதிலா, மக்கள் நாயகன் ராமராஜன்னு பேசி வச்சுராத." என்ற தோழியரின் கிண்டலில், சற்றே உதட்டைச் சுழித்தவள் சற்று படபடப்புடனே அங்கிருந்த ஆசியரின் கூட்டத்தில் பார்வையைப் படறவிட்டு யாரையோ தேடினாள்.


அவள் தன்னைத் தேடுவாள் என்று அறிந்தே இருந்தவன் போல் கூட்டத்தில் இருந்து ஒரு எட்டு மட்டும் முன்னே வந்து, பெண்ணின் தேடல் பார்வையை தன் தீர்க்க விழிகளால் தாங்கி நின்றவன், "உன்னால் முடியும். பேசு" என்பது போல் கட்டை விரலை உயர்த்திக் காட்டி தலையையும் மெதுவாக அசைத்தான்.


ஆடவனின் அந்தத் தலையசைப்பில் என்ன கண்டாளோ, அடுத்த நொடி முகம் முழுதும் மலர்ந்து விரிய,  அங்கிருந்த ஒலிப்பெருக்கியை வாகாக கைப் பற்றியவள், "அனைவருக்கும் சிற்பியின் சிறப்பான வணக்கங்கள்" என்ற அறிமுகத்தோடு துவங்கி, கல்வித்தந்தை காமராஜரின் அருமை பெருமைகளை மிக மிக அழகான செந்தமிழில் அந்த அரங்கு முழுதும் நிறைக்கத் தொடங்கினாள்.


அத்தனையும் அவன் எழுத்துக்கள் தான்.


அந்த பொறியியல் கல்லூரியில் அவனுக்கான பணி, நேர்முகத் தேர்வுக்கும் (கேம்பஸ் இன்டர்வியூ), அதன் பின்னான வேலைக்கும், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ட்ரைனர் பணிதான் என்றாலும்,
செம்மொழியாம் தமிழ் மொழியின் மீது அவன் கொண்ட ஈர்ப்பின் காரணமாகவும், தமிழ் ஆசிரியரான தந்தையின் கற்பித்தலும் சேர்ந்து தமிழ் மொழிக் கல்வியிலும் சில பட்டங்கள் பெற்றிருப்பவன், கல்லூரியில் நடக்கும் இது போன்ற தமிழ் கதை, கட்டுரை, போன்ற போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்து, அவர்களுக்கு பயிற்சிகளும் அளித்து வருகிறான்.


அப்படி ஒரு சூழலில் தான், சிற்பிகாவின் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை அறிந்து, இன்றைய ஆண்டு விழாவிற்கும் அவளை ஆயத்தம் செய்திருக்க, ஆரம்பத்தில் தன் குரலை எண்ணி சற்றே தயங்கினாலும், ஆசானின் உந்துதலில் மேடையேறிய பெண்ணவளோ மடை திறந்த வெள்ளம் போல் அழகாகப் பேசிக் கொண்டிருந்தாள்.


பெண்ணவளின் அந்தப் பேச்சுரையில் அத்தனை நேரம் அவளை கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்த தோழிகளில் ஒருவள், "கொஞ்சம் முன்ன வாய்ஸ் நல்லாருக்கா? நல்லா பேசிருவனான்னு? பேசிப் பேசியே நம்ம உசுர வாங்குனா. இப்பப் பாரேன் பட்டிமன்றம் பாரதி பாஸ்கர் போல பிச்சு உதருறா" என்று அருகில் இருந்த யாழினியிடம் சொல்ல...


"ஹேய், பிராக்டிஸ் கொடுத்திருக்கது எங்க அண்ணாவாக்கும், அவ பிச்சு உதரலைனா தான்டி ஆச்சர்யம்" என்ற யாழினியும் அங்கிருந்த செந்தமிழ்ச் செழியனை பெருமையாகப் பார்த்துக் கொண்டாள்.


அவர்களுடன் நின்ற மற்ற தோழிகளும், "ஆமாடி. நீ சொல்றதும் சரிதான். ட்ரைனரோட டீச்சிங்க்கு மட்டுமில்ல, அவரோட ஹெண்ட்சம்க்கும் சப்ட்யூட்டே இல்லடி" என்று அவனைப் பார்த்து விழி மலர்களையும் ஒளிரவிட...


பெண்கள் மட்டுமல்லாது செழியனோடு நின்ற ராம்சரணும், "நைஸ் ஸ்பீச், செழியன் சார். நல்ல எஃப்பட்!" என்று அவனைப் பாராட்டிக் கொண்டான்.


அவனது வழக்கமே வழக்கமாய், அதற்கும் சிறு புன்னகையோடு தலையை மட்டும் அசைத்துக் கொண்டு, மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்தவளின் பேச்சையே உள்வாங்கி இருந்தவனுக்கு, "பரவாயில்லை, சொல்லிக் கொடுத்ததை நல்லாவே கவனிச்சு இருக்கா. நல்ல பொண்ணு தான்" என்று தன் மாணவி என்ற பெருமையில், விழிகள் இரண்டும் அவள் மீதே வாஞ்சையாகப் படிந்திருந்தது.


அச்சமயம் மடார் என்ற சப்தத்தோடு அந்த ஆடிட்டோரியத்தின் பக்கவாட்டுக் கதவைத் தள்ளிக் கொண்டு, அக்கல்லூரியின் மாணவன் ஒருவன் முகத்தில் வாங்கிய குத்தோடு உள்ளே வந்து விழுந்ததைத் தொடர்ந்து, "பாஸ்டர்ட், யார் பிரண்ட் மேல யாருடா கைய வைக்கிறது?" என்று அவனை அடித்த கரத்தை உதறியபடி தன் அழுத்த எட்டுக்களோடு உள்ளே நுழைந்திருந்தான் அர்ஜுன் தேவதாஸ். அக்கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவைச் சேர்ந்த நான்காமாண்டு மாணவன். ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெரிய புள்ளி ஒருவரின் ஒற்றை வாரிசு.


Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️