நூலகம் -12.2

சிற்பியின் பட்டப் படிப்பை முன்னிட்டோ, அல்லது  இனியும், யாரும் அவளை தவறாகப் பேச இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணினானோ, தங்களின் திருமண விஷயம், அவர்கள் கல்லூரி வட்டத்திற்கு மட்டுமல்லாது, இருவரின் தோழ தோழியர் வட்டத்திற்கும் கூட இப்போதைக்குத் தெரிய வேண்டாம், என்று செழியன் அழுத்தமாகவே கூறி விட்ட நிலையில், கழுத்தில் மறைத்து அணிந்திருக்கும் தாலிச் சரடு தவிர்த்து, பிறந்த வீட்டில் எப்படி இருந்தாளோ, அதேபோலத்தான் புகுந்த வீட்டிலும் உலா வந்து கொண்டிருந்தாள் சிற்பிகா தேவி.


இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அவள் பிறந்த வீட்டில் இருந்ததை விடவும், இங்கு தோழியே நாத்தியாகிப் போன மகிழ்ச்சியோடு, தோழிக்கும் மேலான பாசத்தைக் கொட்டும்  மாமியாரோடும், கண்களில் கனிவும் குரலில் கண்டிப்புமாகத் தன்னை வழி நடத்திச் செல்லும் ஆசிரியக் கணவனோடும், அவளின் நாட்கள் மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது துளியும் மிகையில்லை.


அந்த ஆசிரியன், கணவனாக அவதாரம் எடுக்கும் சமயமும், இதே அன்போடு அவனை ஏற்பாளா பெண்ணவள்?


தாயும் மகனும் செய்யும் அலப்பறையில், சிரிக்கவும் முடியாமல், சிரிப்பை அடக்கவும் முடியாமல், தங்களை நெருங்கிய சிற்பியின் வருகையில், "குட் மார்னிங் கேர்ள்." என்றான் அவள் கணவன். முகமெல்லாம் புன்னகை தேசமாக.


கணவனின் அந்த காலை வணக்கத்தில், அவளும் பெரிதாக புன்னகைத்து, "குட் மார்னிங் ட்ரைனர்!" என்று குடுகுடுவென்று
ஓடி அவன் முன்னால் நின்றவள், "இன்னிக்கு என்ன யோகா சொல்லிக் கொடுக்கப் போறீங்க ட்ரைனர்? ஆன்டிக்கு சொல்லிக் கொடுத்தது பாத்தே நா ரொம்ப எக்சைட்மென்டா இருக்கேன்!" என்று ஒளி வீசும் விழிகளோடு அவனை ஏறிட்டாள் மனைவி.


அப்பொழுது தான் உறங்கி எழுந்ததால் களைந்து கிடந்த முடிக்கற்றைகளை எல்லாம், வெறுமனே ஒன்று சேர்த்து உச்சியில் கொண்டை போல் இட்டு இருந்தவள், அதில் கொண்டை ஊசி ஒன்றும் சொருகி இருக்க, அந்த கொண்டைக்குள் அடங்காமல் சில ரோமக் கற்றைகள் அவள் ஆப்பிள் கன்னத்தினை உரசியும் உரசாமல் இருந்தது.


மை எதுவும் தீட்டாமலே சாசராய் விரிந்திருக்கும் விழிகளோடும், கொட்டும் இமைகளோடும், ஆதவனைக் கண்டதும் மலர்ந்து நிற்கும் சூரியகாந்தி மலரைப் போல், தன் முகம் பார்த்து நின்ற மனைவியின் அந்த அழகில் சில நொடிகள் தடுமாறித் தான் நின்று விட்டான் செந்தமிழ்ச் செழியன்.


போதாததற்கு கல்லூரியில் எப்பொழுதும் உடைக்குள்ளே வைத்து இருக்கும் தாலியதை, வீட்டில் இருக்கும் சமயம் மட்டும் அன்னிச்சையாகவே வெளியே எடுத்து விட்டிருந்ததில், பாவையவளின் பால்வண்ண பவளக் கழுத்தில், பொன் நிறத்தில் மின்னிக் கிடந்த தாலியானது, அவளோடான அவனது உறவையும் பட்டவர்த்தனமாய் எடுத்துக் கூற, சில நொடிகளுக்கும் மேலாக, இமையைக் கூடச் சிமிட்டவில்லை ஆடவன்.


மீண்டும் "ட்ரைனர்" என்ற சிற்பியின் அழைப்பில் தான், ஹான் என்று தன்னிலை மீண்டவன், "கடவுளே, என்ன இது!" என்று பிடரியைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.


பின்னர் அவள் கேள்வியும் உரைக்க, "ம்ம்ம், பெல்லி ஃபேட் குறைய, நேத்து சொல்லிக் கொடுத்தேனே அந்த யோகாவையே இன்னிக்கும் பண்ணுங்க. நாளைக்கு வேற பண்ணலாம்" என்று தங்கைக்கும் சேர்த்தே கூறியவன்,
"அம்மாக்கும் அந்த யோகாவை சொல்லிக் குடுங்க. நா இப்ப வந்தர்றேன்" என்று விட்டு தனதறைக்குள் சென்று மறைந்தான்.


அவன் உள்ளே சென்று மறைந்ததும், தன் பேச்செல்லாம் அன்னையிடம் எடுபடாது என்று உணர்ந்தே இருந்த யாழினி, அவள் பாட்டில் அவள் பயிற்சியை செய்து கொண்டிருக்க,


"ஆன்டி வாங்க ஆன்டி. நாம யோகா பண்ணலாம். இந்த யோகா பண்ணா பெல்லி ஃபேட் எல்லாம் சொல்லாம ஓடிருமாம். ட்ரைனர் சொன்னாங்க" என்று அவன் அன்னையையும் அழைத்தாள் சிற்பி.


அதில் அவளை ஏற இறங்கப் பார்த்தவரும், "என் பையனுக்கு கல்யாணம்ணு ஒன்ன பண்ணி வச்சுட்டா, அவன் பொண்டாட்டி பின்னாடி திரிவான். நம்மள போட்டு படுத்த மாட்டான்னு, உன்ன அவனுக்குக் கட்டி வச்சா, இப்ப நீயும் அவனோட சேர்ந்து என்னயப் போட்டு பாடா படுத்துற சிற்பிமா" என்று மருமகளிடமே தன் ஆதங்கத்தைக் கொட்டினார் மீனாட்சி.


அதில், "அச்சோ, சோ சாரி அத்தை. நீங்க ட்ரைனர் பத்தி தப்பு கணக்கு போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்!" என்று உச்சுக் கொட்டியவள், "ட்ரைனர் உங்க நல்லதுக்குத் தானே சொல்றாங்க அத்தை. வாங்க இப்டி பண்ணுங்க. அப்பதான் என் ஹிப் போல உங்களுக்கும் நல்ல ஷேப் கிடைக்கும்" என்று தன் இடையையும் வளைத்துக் காட்டி அழகாகச் சிரித்தாள் மருமகள்.


எப்பொழுதாவது அவளையும் அறியாமலே வந்து விடும் அவளின் அத்தை என்ற விளிப்பிலே க்ளீன் போல்ட் ஆகி விடும் மீனாட்சியும், "இப்ப இருக்க பிள்ளைகளுக்கு எல்லாம் என்ன இடுப்பு இருக்காம்?. உன் புருஷனை பெறுறதுக்கு முன்ன எனக்கு இருந்துச்சு பாரு அதான் இடுப்பு. இடுப்பழகி சிம்ரனே உன்கிட்ட தோத்துடிச்சின்னு உன் மாமா எவ்ளோ தரம் சொல்லி இருக்கார் தெரியுமா? உன் புருசனும் உன் பிரண்டும் வந்து பிறந்து தான், என் ஷேப் எல்லாம் போச்சு. அது தெரியாம இப்ப வந்துட்டான் யோகா சொல்லிக் கொடுக்க. நீங்கல்லாம் எவ்ளோ தான் விழுந்து விழுந்து யோகா பண்ணாலும், பிரியா வாரியரா, கேரியரா? அந்தப் புள்ள சுல்தானா ரீமிக்ஸ்க்கு ஆடுன போல காமெடியா தான் இருக்கும்!" என்றும் நொடித்துக் கொண்டவர், அவரின் இளமைக் கால அனுபவங்கள் சிலதும் மருமகளோடு பகிர்ந்தபடியே அவள் சொல்லிக் கொடுத்த யோகாவையும் அவளோடு சேர்ந்தே செய்யத் துவங்கினார் மீனாட்சி.


இங்கு அறைக்குள் வந்தும் கூட, இன்னும் பிடரியை வருடியபடியே நின்று இருந்தவன், 'இதுக்குத்தான் இந்த கல்யாணம் காட்சி எல்லாம் வேணாம் சொன்னேன். என் பேச்சை யாரு கேட்டா? இப்போ பாரு படிக்கிற பொண்ணப் போய் ஒரு மாதிரியா பாத்து வைக்கிறேன்' என்று தன்னைத் தானே திட்டிகொண்டே, கல்லூரி சம்பந்தப்பட்ட வேலைகள் எதையோ இழுத்துப் போட்டு பார்க்கத் துவங்கினான் செழியன்.


பத்து மாதங்கள் முன்னர், தன்னிடம் படிக்கும் மாணவியையே மணம் புரிகிறோமே, இது எந்தளவிற்கு ஏற்புடையதாக இருக்கும்? என்ற பெரும் குழப்பத்திலே அவள் கழுத்தில் தாலியைக் கட்டியவனுக்கு நாட்களின் ஓட்டத்தில், குமரியும் அல்லாத குழந்தையும் அல்லாத மனைவியவளின் மலர்ந்த முகமும், அவள் தங்களை அன்னியர்களாய் எண்ணாது, தங்களில் ஒருவளாய் ஒன்றிப்போன விதமும், அவனுள் ஒரு கணவனுக்கான தடுமாற்றங்களை உற்பத்தி செய்யத் துவங்கியது.


இது சரியா தவறா என்றெல்லாம் பலவித ஆராய்ச்சிகள் நடத்தி, விடை கிட்டாது, ஓய்ந்து இருப்பவன், இப்படியான சந்தர்ப்பத்தில், வேறு ஏதாவது வேலைகளை இழுத்துப் போட்டு, தன் சிந்தையை திசை திருப்பிக் கொள்வான் செழியன்.


சரியாக அரைமணி நேரம் கழித்து அவன் அறையை விட்டு வெளியே வந்தபொழுது, தனக்கும் சிற்பிக்குமான கல்லூரிக்கு அணியும் உடையை யாழினி இஸ்திரி செய்து கொண்டிருக்க, உள்ளே சமையல் அறையிலோ மாமியாரும் மருமகளும், தீவிரமான பேச்சு வார்த்தையோடு, உணவுத் தயாரிப்பும் செய்து கொண்டிருந்தனர்.


சமீப நாட்களாகவே பழக்கமாகி விட்ட காட்சியதில், அதிலும் அன்னையின் பேச்சை விடவும், மனைவியின் குரலே உற்சாகமாக ஒலித்துக் கொண்டிருந்ததில், அவன் முகமும் அன்னிச்சையாக மலர்ந்தது.


தன் வீட்டில் அவள் சந்தோசமாக இருக்கின்றாள், தன்னோடான திருமண பந்தம், அவள் மகிழ்ச்சியையோ, சுதந்திரத்தையோ அவளிடமிருந்து பறித்து விடவில்லை என்ற திருப்தி கொடுத்த மலர்ச்சி அது.


பெண்ணின் பேச்சுக்களை செவிமடுத்தபடியே, அவனும் கல்லூரிக்கு ஆயத்தமாகியவன், பெண்களையும் துரிதப்படுத்த, அடுத்த ஒருமணி நேரத்தில், பெண்கள் இருவரும் அழகான பிங்க் வண்ண ஸ்கூட்டியதிலும், செழியன் வழக்கம் போல் அவன் பல்சரிலும் கல்லூரி வாசலை நோக்கி பறக்கத் துவங்கினர்.


திருமணத்தன்று சொல்லிவிட்டுச் சென்றது போலவே, பத்து தினங்கள் கழிந்த நிலையில், மகளுக்கான சீர் செனத்தி என்று மிகப்பெரிய லிஸ்ட் ஒன்றை போட்டுக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு வந்திருந்த வேதாச்சலம், மகள் கல்லூரி செல்வதற்குத் தோதுவாகவும், பாத்துக்காப்பிற்கும் புதிய மகிழுந்து ஒன்றை வாங்கித் தருவதாக அறிவித்தார் அன்று.


தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணிடமிருந்து வரதட்சணை என்று எதுவும் வாங்கப் போவதில்லை என்று ஏற்கனவே கொள்கை வைத்திருந்த செழியனுக்கோ, அதில் எதையுமே பெற்றுக் கொள்ள இம்மியும் விருப்பமில்லாததோடு, மனைவி தங்கை இருவருமே ஒன்றாக கல்லூரி சென்று வருவதற்காக புதிய இருசக்கர வாகனம் ஒன்றும் புதிதாக வாங்கி நிறுத்தியிருந்தான் செந்தமிழ்ச் செழியன்.


இருந்தும் வசதி வாய்ப்புகளோடு வளர்ந்த சிற்பிகா மகிழுந்துப் பயணத்தை விரும்புவாளோ, என்று எண்ணியவன், "சிற்பி விருப்பம் என்னவோ அதுபடியே செய்ங்க சார். எனக்கு நோ அப்ஜக்சன்" என்று மேலோட்டமாகவே முடித்து விட்டான்.


மருமகன் இப்பொழுதே மகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில், மகிழ்ந்து போன வேதாவும்,
"நாளைக்கே சோரூம் போலாமா சிற்பிமா?" என்று ஆவலோடே வினவ, அவள் முகத்திலோ அப்பட்டமான அதிருப்தி மட்டுமே.


நேற்று தாலி கட்டியவன் தனக்கு கொடுக்க முனையும் சுதந்திரத்தைக்கூட, இத்தனை காலமாக பெற்று வளர்த்த
பெற்றோர் தனக்கு கொடுக்க முன்வரவில்லையே? இது இயல்பாக நடந்த திருமணம் போலவும், அனைத்தும் என் விருப்பம் கேட்டுத்தான் செய்தது போலவும், இவர்களால் மட்டும் எப்படி இப்படி இயல்பாகப் பேச முடிகிறது? என்று மனமெல்லாம் புண்ணாய் வலித்தது பெண்ணிற்கு.


கூடவே, தந்தை பேச ஆரம்பித்ததில் இருந்தே கணவன் முகத்தையே பார்த்து இருந்தவளுக்கு, அவன் தனக்காகவே வாங்கி நிறுத்தி இருக்கும் ஸ்கூட்டியும் ஞாபகம் வர, "இல்லப்பா எங்களுக்கு இதெல்லாம் எதுவும் வேண்டாம். நா யாழியோடவே ஸ்கூட்டில காலேஜ் போய்க்கறேன்" என்று உணர்வுகளற்ற குரலில் கூறினாள் சிற்பி.


அதைக்கேட்டு அவள் பெற்றோர் எப்படி உணர்ந்தார்களோ தெரியவில்லை. தான் வாய் திறந்து எதுவும் சொல்லாமலே, மனைவி கூறிய இசைவான பதிலைக்கேட்டு செழியனின் முகமெல்லாம், வெட்டி எடுத்த வைரமாய் ஒளி வீசியது.


ஆனால் இப்பொழுதும் மகளின் விருப்பமறியா சுசீலாவோ, "நம்மகிட்ட ஒன்னுக்கு மூனு கார் இருக்கப்போ இனியும் ஸ்கூட்டில எதுக்குப் போகணும் சிற்பி? நீங்க தனியா போறப்ப அந்த எம் பியோட பையனோ, ஆளுகளோ வந்து கலாட்டா பண்ணா என்ன செய்யிறது?" என்று தாயாகவும் படபடத்தார்.


வேதாச்சலமும், மீனாட்சியும் கூட சுசீலாவின் பேச்சைக் கேட்டு, "ஆமா தம்பி, அதெல்லாம் வேணாம். காரே வாங்கிருவோம்" என்று பதட்டமாகச் சொல்ல,


அதைக்கேட்டு, "யார் யாருக்கோ பயந்து நம்ம வீட்டு பொண்ணை மூலைல முடக்கி வைக்க சொல்றீங்களா சார்? சிற்பிய கொஞ்சம் பிரீயா விடுங்க. அத்தோட நா அவங்க கூடவே தான போகப் போறேன். நா பாத்துக்குறேன். எல்லாரும் பயப்படாம இருங்க!" என்று பெயவர்களை சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தான் செழியன்.


பின் மனைவியியையும் தனியாக அழைத்து வந்தவன், "நா ஸ்கூட்டி வாங்கிட்டேங்கறதுக்காக காரை வேணாம் சொல்லாத கேர்ள்? உனக்கு விருப்பம் இருந்தா கார் வாங்கிக்கோ. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று அவன் கூறி முடிக்கும் முன்னரே, "எனக்கும் இதுதான் விருப்பம் ட்ரைனர். என்னவோ தெரியல. அப்பா வாங்கிக் கொடுக்குற காரவிட, நீங்க வாங்கிக் கொடுத்திருக்க ஸ்கூட்டி தான் எனக்கு கம்ஃபோர்ட்டா இருக்கும்னு தோணுது" என்று சொல்லிச் சென்றவளைப் பார்த்து, அவனுக்கோ தரையில் கால் பாவா நிலைதான்.


லேசாக பிடரியை வருடிவிட்டு, "ஹேய் கேர்ள்" என்று அவள் நடையை நிறுத்தியவன், "ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்மா" என்றான். இதழ்கள் மலராய் விரிய,


"நீங்க செஞ்ச, செஞ்சிட்டு இருக்க உதவிக்கு எல்லாம், நான்தான் நிறைய நிறைய தேங்க்ஸ் சொல்லணும் ட்ரைனர். நீங்க இல்ல" என்றவளும், அவனைப் பார்த்து அழகாகப் புன்னகைக்க, ஆடவனின் தற்போதைய தடுமாற்றத்திற்கு அன்று தான் முதல் வித்து போடப்பட்டதோ என்னவோ? இருவருமமே அறியார்.


அன்றைய நாளில் இருந்தே, இருவரையும் அறியாத, ஒருவித இணக்கம் இருவருக்குள்ளுமே தோன்றி விட்டு இருக்க, ஒருவரின் அருகாமை மற்றவருக்கு, பெரிதான மகிழ்ச்சியையே கொடுக்க, அவர்களின் அந்த இணக்கமும், கணவன் மனைவி எனும் புதிய பந்தமும் அவர்களுக்குள் இதுவரை இருந்த ஆசிரியர் மாணவி என்ற பழைய பந்தத்தை பலமிழக்கச் செய்து, நேசப் பூக்களையும் மலரச் செய்யுமா?


Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️