நூலகம் -12.1
அந்தி வானம் மஞ்சள் பூசி இருந்த அழகான மாலைப் பொழுதில், பூக்களும் பழங்களும் நிறைந்து இருந்த சோலையை ஒட்டி சிறிதான நீரோடை ஒன்று ஓடிக்கொண்டு இருக்க, ஓடையின் இந்தப்புறம் நின்றிருந்த பெண்ணவளோ, அவ்வோடையை எப்படிக் கடந்து அந்தப்புறம் செல்வது என்ற யோசனையில் இருந்தாள்.
ஓடையின் அந்தப்புறம் தான் அந்த அழகிய பூக்களும், அழகு மிகும் சோலையும் இருக்க, எப்படியாவது ஓடையைக் கடந்து, சோலைக்குள் நுழைந்து விட வேண்டும் என்ற தீவிரம் தான் பெண்ணில்.
ஆனால் ஓடையின் ஆழமும் அகலமும் எப்படி என்று அறிந்திராத நிலையில், காலை மெதுவாக நீருக்குள் வைப்பதும், பின் பயந்து போய் எடுத்து விட்டு, யாரும் உதவிக்கு வர மாட்டார்களா என்று சுற்றியும் முற்றியும் பார்ப்பதுமாய் துப்பட்டாவின் நுனியை எடுத்து வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்தாள்.
அச்சமயம் சரியாக, கம்பீரமான ஆண் உருவம் ஒன்று மெல்ல நடை போட்டு அவளை நெருங்கி வந்து,
"நா கூட்டிட்டு போறேன் வர்றியா?" என்று அவளை நோக்கிக் கையை நீட்டியது.
ஓரளவு இருட்டி விட்ட சூழ்நிலையால் அந்த ஆணின் முகம் சரியாகப் புலப்பட வில்லையானாலும், அக்குரல் நன்கு பரிச்சயமானதாகவே இருக்க, சிறு தயக்கத்தினூடே அவன் கரத்தில் தன் கரத்தை வைத்தாள் பெண்ணவள்.
அவள் கரத்தை வைத்த மறுநிமிடம், லேசாக ஒரு சுழற்று சுழற்றிய அந்த ஆண் உருவம், அவளை அலேக்காகத் தூக்கிக் கொள்ள, "அய்யோ என்ன செய்றீங்க?" என்று பதறினாள் பெண்.
"அப்டி உன்ன என்ன செஞ்சிறப் போறேன் பெண்ணே? என்கிட்ட என்ன பயம்?" என்ற ஆண்குரல் சன்னமாகச் சிரிக்க,
அக்கேள்வியிலும், அதில் இருந்த உரிமையிலும் அமைதி அடைந்தவளை இரு கரங்களிலும் பூப்போலச் சுமந்தபடியே, கெண்டை கால் அளவே ஆழம் இருந்த ஓடையதை மெதுவாகக் கடந்து வந்து அவளை பூஞ்சோலைக்குள் இறக்கி விட்டவன், அங்கிருந்த மரத்தில் சில கனிகளையும் பறித்துக் கொடுத்தான்.
சற்று ஆவலோடே அதை வாங்கி நன்றி உரைத்தவள், 'இது யாராக இருக்கும்? இந்த குரலும், அக்கறையும் நமக்கு பரிச்சயமானதா இருக்கே? ஆனா அவரோட முகம் ஏன் சரியா தெரிய மாட்டிங்கிது?' என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே, "வேற ஏதும் என்கிட்ட சொல்லணுமா பெண்ணே?" என்று கேட்டான் அவன்.
அக்கேள்வியில், "என்ன, என்ன, என்ன சொல்ல?" என்று திக்கித் திணறியவள், 'தெரியலயே' என்று குழப்பமாகத் தலையை ஆட்ட, சிறிதான சிரிப்பையே சிந்தி விட்டு, "எப்ப தேவைன்னாலும் கூப்பிடு. நா உன்கூடவே தான் இருப்பேன்!" என்று அவள் தலையிலும் தடவிக் கொடுத்துவிட்டு நகரத் துவங்கியது அந்த ஆண் உருவம்.
அந்த ஆண் சென்று மறையும் வரை அதன் திசையையே பார்த்து இருந்தவள், "என் கூடவே இருப்பேன்னுட்டு அவங்க பாட்டுக்கு போறாங்க. யாரிது?" என்ற சிந்தனையோடே கையில் இருந்த பழத்தைக் கடிக்க,
"ஆ ஆ ஆஆஆஆ கைடி, கைடி, கைடி" என்று ஏகத்துக்கும் அலறி இருந்தாள் யாழினி.
தோழியின் அந்த அலறலில் மற்றவை எல்லாம் பின்னுக்குச் செல்ல, சட்டென்று கண்விழித்து, எழுந்து அமர்ந்தாள் சிற்பிகாதேவி.
சுற்றியும் முற்றியும் பார்த்து, "ச்சே இன்னிக்கும் அதே கனவா?" என்று சலித்துக் கொண்டவள், 'இப்போல்லாம் அடிக்கடி இந்த கனவு வருதே, என்னவா இருக்கும். கனவுல வந்த அந்த ஜெண்டில்மென் யாரா இருக்கும்?' என்றெல்லாம் பலவித சிந்தனையில் மூழ்கியவளை, "எரும எரும, போன ஜென்மத்துல நாயா கீயா பொறந்தயாடி, விரல இந்த கடி கடிக்குற?" என்ற யாழினியின் வசவுகள் தான் நடப்பிற்கு இழுத்து வந்தது.
அதில் நன்றாகவே விழித்து விட்டவளும், "ஏய் யாழி சாரிடி. சாரிடி. நல்லா கடிச்சுட்டனா? ரொம்ப வலிக்குதா? இரு பாக்குறேன்" என்று பதறியவள், கடித்த விரலை அழுத்திப் பிடிக்க, "ஆ அம்மா கொல்றாளே" என்று கத்தி, "விடுடி கையை. இத்தோட மூனு வாட்டி இப்டி பண்ணிட்ட. ஏதோ தூக்கத்துல பண்றன்னு, நானும் பொறுத்துப் போனா, எப்டி கடிச்சுருக்கன்னு பாருடி. போய் டிடி தான் போடணும் போல" என்று நன்றாக பற்தடம் பதிந்திருந்த விரலை நீவி விட்டாள் யாழினி.
அதில் மென்மேலும் குற்ற உணர்ச்சி கொண்டவளும், "ஹேய் நிஜம்மா சாரி யாழி. நான் அன்னிக்கு சொன்னேன்ல, அதே கனவு தான்டி இன்னிக்கும் வந்துச்சு. இன்னிக்கும் அந்த ஜெண்டில்மென் இறக்கி விட்டதோட போகாம பழமும் பறிச்சு கொடுத்தாங்கடி. அதான் கனவுல அதை கடிக்கிறேன்னு நிஜத்தில உன் விரலை" என்று நிறுத்தியவள், "சாரிடி, சாரிடி, இனிமேல் இப்டி பண்ண மாட்டேன்டி" என்று அவள் விரலையும் பிடித்து நீவி விட்டாள்.
"செய்றதெல்லாம் செஞ்சிட்டு பூசி மொழுகாதடி" என்றவள் மென்மேலும் முறுக்கிக் கொள்ள, "யாழிகுட்டி, என் செல்லம்ல. அம்மு இல்ல. நா உன் சிற்பியில்ல" என்று அவள் தாடையைப் பற்றிக் கொஞ்சினாள் சிற்பிகாதேவி.
"ஆஹான், இந்த கொஞ்சல்லாம் வேற எங்காவது கொண்டு வச்சுக்கோ. இன்னிக்கு என்னோட வேலை எல்லாம் நீ பாக்கிறேன்னு சொல்லு. போனா போகுதுன்னு உன்ன மன்னிக்கிறேன்" என்றாள் யாழினி கெத்தாக.
முன்னை விடவும் இன்று நன்றாகவே கடித்து இருந்ததால், தோழியின் கூற்றிற்கு உடனே, "சரிடி" என்று சொல்லி விட்டவளிடம், "உன்னலாம் நம்ப முடியாது. பிராமிஸ் பண்ணுடி" என்று சத்தியமும் வாங்கிக் கொண்டவள், "சரி சரி சொல்லு. அடிக்கடி உன் கனவுல வர்ற அந்த ஜெண்டில்மென் என் அண்ணாதானே?" என்று கண்ணைச் சிமிட்டினாள் யாழினி.
அதில் அவளையும் அறியாமல் தலையைக் குனிந்து, "ம்ம்ம்..." என்று யோசித்தவள், "எனக்கு சரியா தெரியலடி" என்று உள்ளே போன குரலில் சொல்ல,
"என்னடி இது, எப்ப கேட்டாலும் நீ இப்டியே சொல்ற?" என்று சலித்தாள் யாழினி.
"நா என்னடி பண்ணட்டும். எனக்கும் அது யாருன்னு தெரிஞ்சிக்க ஆசைதான். ஆனா கனவில அவங்க முகம் மட்டும் சரியா தெரிய மாட்டிங்குதே!" என்று சிற்பியும் கவலைக் குரலில் சொல்ல,
"சரி சொல்லு, அது அண்ணா தான்னு தெரிஞ்ச பின்ன, நீ என்ன பண்ணலாம்ணு இருக்க?" என்று ஆவலோடு கேட்டாள் யாழினி.
அவளைப் புரியாது பார்த்தவளும், "அது கனவுடி. அதுல நா பண்றதுக்கு என்ன இருக்கு?" என்று கேட்க,
"கனவுல இல்ல. ஆனா நேர்ல பண்றதுக்கு எவ்ளவோ இருக்கே. குறைஞ்ச பட்சம் என் அண்ணாவை உனக்கு பிடிச்சிருக்கா இல்லியான்னாவது அண்ணாகிட்ட போய் சொல்லுவல்ல?" என்றாள் யாழினி.
"ட்ரைனர தான் எனக்கு எப்பவும் பிடிக்குமேடி. இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு?" என்ற சிற்பி அப்பொழுதும் புரிய மறுத்தவளாய்க் கேட்க,
"என் லூசு அண்ணி. நா சொல்றது அண்ணாவை உன் ஹஸ்பண்ட்டா பிடிக்குமா இல்லியான்னு அத சொல்ல சொன்னேன். ஐ மீன், ஐ லவ் செந்தமிழ்ச் செழியன். அப்டி" என்று விம் போட்டே விளக்கினாள் யாழினி.
அதில் ஒரு நொடி, ஒரே ஒரு நொடி,
'ஐ திங்க், ஐ லவ் யூ சோ மச் ஸ்வீட் ஹார்ட்.' என்ற அர்ஜுனின் குரல் எங்கோ ஒரு மூளையில் உயிர்ப்பின்றி ஒலிக்க, சட்டென இறுகி விட்ட முகத்தை, விழிகள் மூடித் திறந்து தன்னை சமன்படுத்திக் கொண்டவள், "உனக்கு இதை விட்டா வேற பேச்சே இல்லியா? எப்ப பாரு, அண்ணாவை பாக்கறியா, அண்ணாவை சைட் அடிக்கிறியா? அண்ணாமேல லவ் வரலியான்னு?
நீ வரவர ரொம்ப கெட்டு போயிட்ட யாழி." என்று படுக்கையை விட்டு இறங்கியவள் யாழினியின் கேள்விக்கு பதில் கூறாமலே குளியலறை நோக்கி எட்டு வைக்க முயன்றாள்.
"நா கெட்டுப் போயிட்டேனா? இது நல்ல கதையா இருக்கே" என்று அவள் வழி மறித்து நின்றவளும், "ஹலோ மேடம், உங்களுக்கும் என் அண்ணாவுக்கும் மேரேஜ் ஆகி இன்னியோட டென் மந்த்ஸ் முடியப்போகுது. அதுவாவது ஞாபகம் இருக்கா உங்களுக்கு?" என்றாள் நக்கலாக.
தோழியின் அந்த நக்கலில் இயல்பு மீண்ட சிற்பியும், "அதுவா? இருக்கு, ஆனா இல்ல" என்று வேண்டுமென்றே ராகமிழுக்க,
"இன்னும் இருக்கு, இல்லன்னு எஸ் ஜே சூர்யா மாறியே பேசிட்டு இருந்தன்னு வையி, அப்றம் நா என் அண்ணாவுக்கு வேற பொண்ணை பாத்து கட்டி வச்சுருவேன் பாத்துக்கோ" என்று முறைத்துக் கொண்டே மிரட்டினாள் யாழினி.
அதில் நன்றாகவே வாய் விட்டுச் சிரித்தவளும், "உனக்கும், உன் அண்ணாவுக்கும் அவ்ளோ சாமர்த்தியம் எல்லாம் இல்லடி!"
என்று மிதப்பாகச் சொன்னாள் சிற்பிகா.
"என்னடி, பத்து மாசம் முன்ன, பால்குடி மறக்காத பாப்பா போல கண்ண கசக்கிட்டே வீட்டுக்குள்ள வந்த, இப்போ என் அண்ணா, அம்மா எல்லாரையும் உன் பக்கம் இழுத்துட்டோம்னு ஆணவமோ?" என்ற யாழினி பல்லைக் கடித்துக் கேட்க,
"ம்ஹும், என் யாழிக்குட்டி நாத்தனார் அவங்களோட அண்ணிக்கு அப்டிலாம் பண்ண மாட்டாங்கன்னு என் நாத்தி மேல நம்பிக்கைடி" என்று அவளும் கண்ணடித்துச் சிரித்து, தோழியின் கன்னத்தில் சிறு முத்தமும் பதித்தாள்.
"ச்சீ ச்சீ ஊத்தவாய், ஊத்தவாய், போய் மொதோ பல்லை விளக்குடி. என் அண்ணாக்கு கொடுக்க வேண்டியதை எல்லாம் எனக்குக் கொடுத்துக்கிட்டு." என்ற யாழினி சிற்பியைப் பிடித்துத் தள்ளிவிட,
அதில் மென்மேலும் முறைத்த சிற்பி, தோழியை நெருங்குவதற்குள்,
"யாழி, சிற்பியை கூப்பிட்டு வர இவ்ளோ நேரமா? அவளோட சேர்ந்து நீயும் தூங்கிட்டியா என்ன?" என்று வரவேற்பறையில் இருந்து பெண்களை வந்து தீண்டியது செழியனின் கணத்த குரல்.
அதில் அடித்துப் பிடித்து ஓடி தன்னை சுத்தம் செய்து வந்தவள், "உன்ன அப்றம் பேசிக்கிறேன் இரு!" என்று தோழியை மிரட்டியபடியே வரவேற்பறைக்குச் செல்ல,
அங்கோ, "ம்மா என்னம்மா அதுக்குள்ள உக்காந்துட்டிங்க? பண்ணுங்கம்மா. நா சொல்லிக் கொடுத்த போல இருபது தரம் செஞ்சிங்கன்னா, வயிறு எல்லாம் இருக்க இடமே தெரியாம சப்புன்னு வத்திரும்" என்று தொப்பை குறைவதற்கான உடற்பயிற்சி ஒன்றை செய்யச் சொல்லி அன்னையை ஏவிக் கொண்டிருந்தான் செந்தமிழ்ச் செழியன். இல்லையில்லை மீனாட்சியின் பாஷையில், அவர் உயிரை எடுத்துக் கொண்டிருந்தான் மீனாட்சியின் மைந்தன்.
'எந்திரிச்சி ஒரு மணி நேரம் ஆகியும் இன்னும் ஒருவாய் காபித்தண்ணி கூட குடிக்காம, என் வயிறு இப்பயே சப்புன்னு வத்திப் போய் தான்டா இருக்கு. ஏன்டா இப்டி படுத்துற?' என்று உள்ளுக்குள்ளே புலம்பிக் கொண்டவரும், அவன் சொல்லிக் கொடுப்பது எல்லாம் நன்றாகவே புரிந்தாலும், ஒன்றும் புரியாதவர் போல், கையையும் காலையும், இங்குமங்கும் ஆட்டிவிட்டு, "இந்த யோகா மட்டும் எனக்கு வரல தம்பி. விட்டுறேன்" என்று யோகா மேட்டிலே சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார் மீனாட்சி.
அதைக்கேட்டு அதிருப்தி கொண்டவனும், "எதே, இது மட்டும் தான் வரலயா. அப்போ மத்த யோகா எல்லாம் தினமும் சரியா செய்யறீங்களா நீங்க?" என்று அன்னையை பலமாகவே முறைத்தவன், உடற்பயிற்சியைப் பற்றிப் பாடமும் எடுக்கத் துவங்கிவிட, ஆடு திருடியவர் போல் விழித்துக் கொண்டிருந்த மீனாட்சியைக் கண்டு, சிரிப்பை அடக்குவதற்குள் அரும்பாடு பட்டுப் போனாள் சிற்பிகாதேவி.
அவன் யாரையும் அதட்டும் போது அதைப் பார்த்துச் சிரித்தால் அவனுக்குப் பிடிக்காது, என்று அறிந்ததால், வாயை மூடி சிரிப்பை அடக்கியவள், அவர்களின் அழகான தாய் பிள்ளை உறவையும் என்றும் போல் இன்றும் ரசித்துப் பார்த்திருந்தாள் சிற்பி.
இன்று மட்டுமல்ல, அன்று மணம் புரிந்து, இவ்வீட்டின் மருமகளாய் அவள் அடி எடுத்து வந்த நாளில் இருந்தே, அவளின் விடியல் எல்லாம் இப்படித்தான் அழகிலும் அழகானதாய் விடிந்து கொண்டு இருந்தது.
அன்று எத்தனைக்கு எத்தனை, இத்திருமணத்தை எண்ணிக் கலக்கம் கொண்டு தவித்தாளோ அதெல்லாம் முற்றிலும் தேவையற்றது என்று அனுதினமுமே அவளுக்கு சொல்லாலும், செயலாலும் உணர்த்திக் கொண்டிருந்தனர் அவளின் புகுந்த வீட்டினர்.
மணமான அன்று கணவனுடனான தனிமையை எண்ணிய கலக்கத்தில் அவள் தவித்துப் போய் நின்றிருந்த பொழுது, இரு கரம் நீட்டி, அவள் கலக்கத்தை எல்லாம் துடைத்து, தங்களோடே அவளைத் தங்க வைத்த மீனாட்சி, அவர் மகளுக்கும் மேலாகவே அவளை அன்பாகப் பார்த்து வருபவர், அவள் முழுதாகப் படிப்பை முடிக்கட்டும் என்று எண்ணினாரோ, மகனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இருக்கிறாரோ?
அவர்கள் திருமணம் முடிந்து பல மாதங்கள் முடிந்து விட்ட நிலையிலும், மகனோடான வாழ்வைப் பற்றியோ, அவர்களின் தனிமைப் பொழுதுகள் பற்றியோ எதுவும் கேட்டு, அவளை எவ்வித சங்கடங்களுக்கும் ஆளாக்காத மாமியாரின் மேல் தனிப்பெரும் மதிப்பே உண்டாகி இருந்தது சிற்பிகாவிற்கு.
என்னதான் மீனாட்சியின் பெருந்தன்மையில் ஈர்க்கப்பட்டாலும், அதன் பின்னால், நிச்சயம் தன் ஆசிரியனும் கணவனுமாகிய, செந்தமிழ்ச் செழியன் தான் இருக்கின்றான் என்றும் நன்றாகவே புரிந்து இருக்க, முன் ஆசிரியனாய் அவன் மேல் கொண்ட மரியாதையை விடவும், இந்த இடைப்பட்ட நாட்களில் பலநூறு மடங்கு மதிப்பும், நன்றி உணர்வும் ஏகத்துக்கும் கூடி இருந்தது பெண்ணிற்கு.
காதல் என்ற வார்த்தையை எங்கேனும் கேட்க நேரிட்டால், அவ்வப்போது தோன்றும் அர்ஜுனின் நினைவும், இத்தனை மாதங்கள் கடந்தும் அவனைப் பற்றி எந்த தகவலும் தெரியாததால், அவனுக்கு ஏதேனும் ஆகி இருக்குமோ? ஒருவேளை அவன் திரும்பி வந்தால், என்ன ஆகுமோ? என்ற கலக்கங்களும் தவிர்த்து, அன்று நடந்தேறிய அசம்பாவிதங்கள் கூட புகுந்த வீட்டினரின் அரவணைப்பில், பெண்ணவளை விட்டு சிறிது சிறிதாக அகன்று கொண்டிருந்தது இந்த பத்து மாத காலத்தில்.
Comments
Post a Comment