நூலகம் -11.2
பூக்களும், பொழுதுகளும் புலரும் விடி காலை வேளையதில், காஞ்சிபுரப் பட்டுக்களும் அதற்குத் தோதான அணிமணிகளும் பூட்டி, மாலையும் கழுத்துமாக, செழியனும், சிற்பியும் எதிரெதிரே நின்று இருக்க, சில நொடிகள் முன்னர் தான்,செழியனின் கரத்தால் கட்டப்பட்டு நெஞ்சை தொட்டு உரசிக் கொண்டிருந்த தாலியானது, பெண்ணின் வெண் சங்குக் கழுத்தில் சன்னமாக வீற்றிருந்தது.
மணமக்களைச் சூழ்ந்து இருந்த உறவுகளின் ஆசியால், அட்சதைப் பூக்களும், மஞ்சள் கலந்த அரிசிகளும், இருவரின் தலையிலும் அங்கங்கு காட்சி தர, "அப்டியே வகிட்டுக்கும் மாங்கல்யத்துக்கும், திலகமும் வச்சிடுங்கோ" என்ற ஐயரின் கூற்றில், ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு, சிறிதளவே குங்குமத்தை எடுத்து, மாகல்யத்தில் வைத்து விட்டவன் அவளின் பின் தலையையும் சுற்றி வந்து, வகிட்டிலும் வைத்து விட்டான்.
அத்தனை நேரமும் அவனுக்கு எதிரே இருந்த பெண்ணவள், இக்கணம் அன்னிச்சையாகவே அவன் தோள் உரசும் நெருக்கத்தில் வந்து விட்டிருக்க, கண நேரமே தோன்றி மறைந்த அந்த இனம் புரியாத உரசலில் ஒருவரை ஒருவர் ஏறிட்டுப் பார்த்தனர்.
அப்படி பார்த்துக் கொண்ட விழிகளில், பெண்ணின் விழிகளில் மட்டும், சில தினங்கள் முன்னர், இப்படி ஒரு நெருக்கத்தில், வேறு ஆடவனின் கரத்தைப் பற்றி நின்றதும், அதற்குப் பின்னான நிகழ்வுகளும், தோன்றி மறைய, 'கடவுளே, எனக்கு ஏன் இந்தச் சோதனை. நா உண்டு, படிப்பு உண்டுன்னு நா பாட்டுக்கு இருந்த என்ன, அர்ஜுன்னு ஒருத்தன்கிட்ட பேச வச்சி, சிரிக்க வச்சி, அவன் உன்ன காதலிக்கிறேன்னு உருகினத எல்லாம் கேக்க வச்சி, அப்றமும் என்னென்னவோ நடந்து, அந்த ரணம் எல்லாம் ஆறும் முன்ன, இப்ப வேற ஒருத்தருக்கு மனைவியா என்ன நிக்க வச்சிருக்கியே? இது உனக்கே நியாயமா?' என்று ஏகத்துக்கும் கலங்கத் தொடங்கியது.
அதைக் கண்டு காரணம் தெரியாவிடினும், அவனுக்கும் உள்ளுக்குள் மனம் பிசைய, அன்னிச்சையாக விழிகளை மூடித் திறந்து, "அழக் கூடாது. நான் இருக்கேன் உனக்கு" என்பது போல் தலையையும் மெதுவாக ஆட்டினான் செந்தமிழ்ச் செழியன் .
ஆடவனின் அந்தச் செயலில், ஏனோ மென்மேலும் பொங்கிப் பெறுகிய கண்ணீரை உதடுகள் கடித்து அடக்கியவளும், அவளின் வழக்கமான வழக்கமாய், "ம்ம்ம்" என்று தலையை அசைத்திருக்க,
அதை எல்லாம் பாராமல் பார்த்து இருந்த பெரியவர்களுக்கோ, அத்தனை நேரம் இருந்த சிறு சிணுக்கம் கூட மறைந்து, உதடுகள் புன்னகையைப் பூசியது.
அன்றைய நாளில் இருந்தே, எங்கே மகள் அந்த அர்ஜுனைதான் மணப்பேன் என்று ஏதும் கூறி விடுவாளோ என்று பயந்து இருந்த வேதாவின் முகமும், ஜோடியாக நின்ற மணமக்களைப் பார்த்து, "நூறு வருஷம் நல்லா வாழனும்" என்று ஆனந்தமாகக் கண்கலங்க, "என்ன அண்ணே இது. சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்தில எதுக்கு கண்ணுல தண்ணி? அந்த வன பத்ரகாளியும், உங்க நண்பரும் நம்ம பிள்ளைக கூடவே இருந்து, பாத்துக்குவாகண்ணே. இன்னையோட எல்லா கண்ணும் போய், புள்ளைக சீரும் சிறப்புமா இருப்பாக. கவலையை விடுங்கண்ணே" என்று மருமகளின் கன்னம் வழித்து நெட்டி முறித்தார் மீனாட்சி.
செழியன் மற்றும் சிற்பிகாவின் திருமண வைபவம், நல்ல முறையில் நடந்து முடிந்ததில் அங்கு இருந்ததிலே மிகவும் குதூகலமாக இருந்தவர் என்றால் அது செழியனின் அன்னை மீனாட்சி தான்.
மற்றயவர்களுக்கும் இது மகிழ்ச்சியான வைபவம் தான் என்றாலும், இத்திருமணம் நடப்பதற்குக் காரணமான நிகழ்வுகளின் நினைவில், இன்றைய மகிழ்ச்சி சற்றே மட்டுப்பட்டிருக்க, மகனின் மனைவி என்ற தன்னுடைய நீண்ட காலத் தேடலுக்குக் கிடைத்த பரிசாய் மட்டுமே சிற்பியைப் பார்த்த மீனாட்சி தான் தலைகால் புரியாமல் சுற்றி வந்து கொண்டிருந்தார்.
திருமணத்திற்குப் பிடி கொடுக்காத மகனிற்கு சட்டென்று திருமணம் முடிந்தது மீனாட்சிக்கு மகிழ்ச்சி என்றால், தன்னுடைய உயிர் தோழியே அண்ணியாக வந்து விட்டதில், யாழினியின் மகிழ்ச்சிக்கும் அளவில்லாமல் தான் இருக்க, தோழியின் அருகாமையே சிற்பியை கண்ட கண்ட நினைவுகளில் இருந்தும் பாதுகாக்கப் போதுமானதாகி இருக்க, அதைக் கண்டு கொண்ட செழியனும் தங்கையை மனைவியின் அருகிலேயே இருக்கும்படிக் கூறி இருந்தான்.
பின் மணமக்களோடு சென்று கடவுளையும் வணங்கி விட்டு, உள்ளூரில் மட்டுமே அழைப்பு விடுத்திருந்த ஒரு சில உறவுகளுக்கும், கோவில் மண்டபத்திலே, விருந்தும் போட்டு முடித்தவர்கள், அனைவரிடமும் சொல்லிக் கொண்டு அன்று மாலையே தங்கள் வசிப்பிடமும் வந்து சேர்ந்தனர்.
எப்படி எல்லாமோ கோலாகலமாய் நடக்க வேண்டிய தன் பெண்ணின் திருமணம் இப்படி ஒரு அவசர கதியில் நடந்து விட்டதை எண்ணி, மனமும் உடலும் மிகவுமே சோர்ந்து போய் காணப்பட்ட வேதாச்சலம், மகளைக் கொண்டு வந்து, செழியன் வீட்டில் விட்டவர், மகளை தனியே சந்தித்தார்.
"இனி இதுதான் உன்னோட வீடு. செழியன் மாதிரி ஒரு புருஷன் கிடைக்கிறது எல்லாம் மிகப்பெரிய வரம். இனியாவது ஒழுங்கா இருந்து, அந்த வரத்தை வாழ்க்க முழுசும் தக்க வச்சிக்க" என்று மட்டும் கூறிவிட்டு வெளியே வந்தவர், மறுவீட்டு விருந்து, சீர் செனத்தி போன்ற மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம் சில பல நாட்கள் கழித்து செய்து விடுவதாகவும் மீனாட்சியிடம் வருத்தம் தெரிவித்தார்.
அதைக்கேட்ட மீனாட்சியும், "அதெல்லாம் எதுக்குண்ணே. தங்க விக்ரகம் போல பொண்ணையே தூக்கி கொடுத்து இருக்கீங்க. எங்களுக்கு சீரா முக்கியம்? நீங்க முத உடம்பை பாருங்க" என்று அக்கறையாகவே கூறி இருக்க, அதில் நெகிழ்ந்து, செழியனின் கரம் பற்றி, நன்றி உரைத்த வேதாவும், மகளைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்த மனைவியையும் சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு தன் வீடு சென்று சேர்ந்து இருந்தார்.
விடைபெறும் பொழுது, "நைட்டு தம்பி மனசு கோணாம நடந்துக்க சிற்பி! அப்போ தான் ஆம்பளக நம்ம கைக்குள்ள இருப்பாங்க!" என்றும் மகளின் செவியில் கிசுகிசுத்துச் சென்றார் சுசீலா.
இத்தனை நேரமும் அன்னையும் தந்தையும் கண் முன்னே இருந்ததாலோ என்னவோ, அதுவரை அந்நியமாகத் தெரியாத, செழியனின் வீடு, இப்பொழுது ஏதோ ஒரு காட்டு குகை போல் காட்சி அளித்தது.
கூடவே, பெற்றோர் கூறிச் சென்ற அறிவுரைகளும் சேர, 'கடவுளே இதை எப்படி மறந்தேன்? திருமணம் என்றாலே அடுத்த கட்டம் இதுதான் என்பதை நான் எப்படி யோசியாமல் போனேன்? இத்தனை தினங்கள் குருவாகப் பார்த்த ஒருவருடன் ஒரே அறையில் எப்படி ஒன்றாக?' என்று ஏதேதோ சிந்தித்து இருந்தவளுக்கு, காரணமே இல்லாமல் அன்று திருவிழா நாளில், உரிமையாய் கை பிடித்த, அர்ஜுனின் முகமும் சிந்தையில் உதித்தது.
அதில் அவளையும் மீறி தானாகவே உடைப்பெடுத்த கண்ணீர்,பஞ்சுக் கன்னங்களில் இறங்க, 'இவரோட தான் என் வாழ்க்கைணு முடிவு செஞ்ச பின்ன, அப்றம் எதுக்காக அர்ஜுன்ங்கற ஒருத்தன என் பின்ன சுத்த வச்சு, என்னவெல்லாமோ நடக்க வச்ச? அவன் முகத்தைக் கூட சரியாகப் பார்க்காத எனக்கு, எதுக்கு அன்னிக்கு அவ்ளோ பெரிய தண்டனையும், இப்படி ஒரு அவசரக் கல்யாணமும்? குறைஞ்ச பட்சம் என்னுடைய மனம் தேறி வர்ற வரையில கூட என்னைப் பெத்தவங்க மேரேஜ்கு பொறுக்கலையே? பெத்தவங்களே என் உணர்வுகளை மதிக்காதப்போ, கட்டின வீடு மட்டும் மத்ததெல்லாம் தள்ளிப் போடவா போகுது?' என்று தன்னைப் படைத்த இறைவனிடம் மானசீகமாக பேசிக் கொண்டிருந்தவளின் கண்ணீர் முகம் கண்டு, எதையோ கொடுக்க வேண்டி, அவளை நெருங்கிய செழியனின் முகமோ, அந்திநேரப் பூவாய் சட்டென கூம்பியது.
அவள் கண்ணீருக்கான காரணம் தெரியாவிடினும், 'இவளை இப்டி அழவிட்டு இந்த யாழி எங்க போனா?' என்று பல்லைக் கடித்தவன், "ஏய் யாழி, யாழி" என்று தங்கையை கத்தி அழைத்தவன், "ண்ணா" என்று வந்தவளிடம், "உன்ன சிற்பி கூடவே இருக்க சொன்னேன்ல எங்க போன?" என்று காட்டமாய்க் கேட்க,
"அது அது, அது வந்துண்ணா உன் ரூம்ல இருக்க பெட் பில்லோவ் எல்லாம் அம்மா சேஞ்ச் பண்ண சொன்னாங்க. அதான்" என்றாள்.
திடீரென்று கேட்ட செழியனின் குரலிலே உடல் தூக்கிப்போட்டு எழுந்து நின்றவளுக்கு, யாழினி கூறிய படுக்கை மாற்றமும், அவள் விழியில் அச்சத்தைக் கூட்டியது.
பெண்ணின் அந்த அச்ச விழிகளே அதற்கான காரணத்தையும் கூறி விட, 'இப்ப எதுக்கு மெத்தை எல்லாம் மாத்திட்டு இருக்காங்க இந்த அம்மா?' என்று மென்மேலும் பற்களை நறநறத்தவன் இப்பொழுது அன்னையை கூவி அழைத்தான்.
கையில் ஏந்திய பால் டம்ளரோடு அவர்களை நெருங்கிய மீனாட்சியும், "இன்னும் படுக்க போகாம இங்க நின்னு என்னை ஏன்பா ஏலம் போட்டுட்டு இருக்க?" என்று மகனிடம் கேட்டவர், கையிலிருந்த பாலையும் சிற்பியிடம் கொடுத்து, "நீயும் போய் படுமா" என்று சொன்னார் சாவதானமாக.
அதில் கசாப்புக் கடைக்காரனிடம் சிக்கிய ஆடுபோல் பயந்த முகத்தோடு, செழியனையே மருகளாய் பார்த்தவள், கால்கள் வேரோடியதைப் போல் அசையாமல் நின்றிருக்க,
அவளைப் பார்த்தவாறே யாழினியை உள்ளே அனுப்பி விட்டு, அன்னையிடம் திரும்பியவன்,
"ம்மா, அவ அவ, சிற்பிய கொஞ்சம் நாளைக்கு உங்க கூடவே படுக்க வச்சுகோங்க" என்று சற்றே தயங்கினாலும் ஒருவாறு சொல்ல வந்த விஷயத்தை அன்னையிடம் அழுத்தமாகவே சொல்லி இருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
அதில் சற்றே ஆசுவாசமடைந்தவளும், மகனின் கூற்றிற்கு மீனாட்சி என்ன சொல்லுவாரோ என்று மருண்டு போய் அவரைப் பார்க்க,
"பின்ன, அதத்தான தம்பி நானே உன்கிட்ட சொல்ல வந்தேன்." என்ற மீனாட்சியும், "படிக்குற பிள்ளைக்கு இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சதே பெரிய கொடுமை. இதுல மத்ததெல்லாம் இன்னிக்கே நடக்கும்னெல்லாம் நீ ஆசை பட்டுறாத. அதுக்கெல்லாம் கொஞ்சம் நாள் போகட்டும். உன் ரூம்ல இருக்க மெத்தை தான் கொஞ்சம் புதுசுன்னு, அதை எடுத்து மருமகளுக்கு போட்டிருக்கேன். நாளைக்கு பாத்து ஒரு புது மெத்தை வாங்கிரு" என்று அவன்தான் அவசர அவசரமாக திருமணம் செய்தது போலவும், மற்ற விஷயங்களுக்கும் ஏங்கிக் கொண்டிருந்தது போலவும் கண்டிப்பாகக் கூறினார் மீனாட்சி.
அதில் "ஊப்..." என்று ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு, அவன் முறைத்த முறைப்பை எல்லாம் சட்டை செய்யாதவர், அங்கு பால் டம்ளரோடு மருகி நின்ற சிற்பியையும் பார்த்து, "இன்னும் பாலை குடிக்காம கைலயே வச்சுட்டு என்னமா பண்ற? சீக்கிரம் குடிச்சிட்டு போய் யாழி கூட படுமா" என்று அந்த நிமிடம் மீனாட்சி கூறிய அந்த வார்த்தைகள் கணவன் மனைவி இருவருக்குமே எந்த அளவிற்கு நிம்மதியை கொடுத்தது என்று கேட்டால் அதை இருவராலுமே அளவிட முடியாது.
பெண்ணின் அந்த நிம்மதி பாவத்திலே, ஆணின் அதரங்கள் அன்னிச்சையாக விரிய, சிறு தலையசைப்போடு, 'போய் படு' என்று சைகை செய்தவனிடம், அவளும் நன்றியாக ஒரு பார்வையை செலுத்தி விட்டு தோழியோடு வந்து படுத்துக் கொண்டவள், பல நாட்களுக்குப் பிறகு நிம்மதியான உறக்கத்தைத் தழுவினாள் சிற்பிகா தேவி.
பெண்ணின் மனம் உணர்ந்த அந்த நிம்மதியும், அதைப் பெற்றுக் கொடுத்த ஆணின் பண்புகளும் இருவரையும் இணைத்து வைக்கும் பாலமாக மாறுமா???
Comments
Post a Comment