நூலகம் -11.1
ஆழ்கடலில் மூழ்க இருக்கும் நிலையில், உயிருக்குப் போராடி களைத்துப் போயிருக்கும் ஒருவருக்கு, கட்டையோ கம்போ கிடைத்தால் எப்படிப் பற்றிக் கொள்வார்களோ அப்படித்தான் இருந்தது செழியனின் கரத்தைப் பற்றி இருந்த வேதாச்சலத்தின் கைப்பிடி அழுத்தம்.
அவனின் பதின் பருவ வயதிலிருந்து கம்பீரமாகவும், சில சமயங்களில் கனிவாகவும் கேட்டுப் பழகி இருந்த வேதாச்சலத்தின் குரலும், இன்று வெகுவாக கலங்கி விட்டிருக்க, "என் பொண்ண, என் பொண்ண, நீ நீ கல்யாணம் பண்ணிக்கிறியாப்பா?" என்று தழுதழுத்த குரலில் கேட்டவரின் வார்த்தைகளை ஒரு நிமிடம் நம்பக்கூட இயலவில்லை செந்தமிழ்ச் செழியனால்.
அவனுக்கும் மேலான அதிர்ச்சியிலும் கலக்கத்திலும், "ப்பா..." என்று சிற்பிகாவும் அலறி இருக்க,
அவர்களை முழுதாக அதிரக்கூட விடாமல், மென்மேலும் அவன் கையை இறுக்கிப் பற்றியவர்,
"எந்த ஊரு, உறவு முன்ன என் பொண்ணோட மானமும், என்னோட மரியாதையும் சந்திக்கு வந்துச்சோ அந்த ஊரு முன்னவே என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும் செழியா. அதுவும் இப்போவே!" என்று அவனை மென்மேலும் அதிர்ச்சியின் உச்சிக்குத் தள்ளி இருந்தார்.
அதைக்கேட்டு, "சா சார், நா நா எப்டி சார்? அவ அவ என்னோட மாணவி!" என்று அழுத்தக் குரலில் மறுப்புத் தெரிவித்தவனை, "அவ அவ என்னோட மகளும் தான் பா. எனக்காக இதைப் பண்ணு!" என்று பரிதாபமாகப் பார்த்து வைத்தார் பெரியவர்.
"பாவப்பட்டு வாழ்க்கை கொடுக்குற அளவு, உங்க பொண்ணு அப்டி ஒன்னும் குறைஞ்சு போயிடல." என்று இன்னுமே அழுத்திக் கூறியவன், "அத்தோட, அவ இன்னும் காலேஜ் கூட முடிக்காத சின்னப்பொண்ணு சார். அவ படிக்கவும், சாதிக்கவும் இன்னும் எவ்ளவோ இருக்கு" என்று செழியனும் பொறுமையாகவே எடுத்துக் கூறினான்.
அதைக்கேட்டு, "சின்னப்பொண்ணா?" என்று மகளைத் திரும்பிப் பார்த்தவரும்,
"என் பொண்ணு சின்னப் பொண்ணுன்னு உன்னப் போலத்தான் செழியா இவ்ளோ நாளா நானும் நம்பிட்டு இருந்தேன். ஆனா அவ்ளோ பெரிய திருவிழா கூட்டத்தில, யாரோ ஒருத்தன் கையைப் பிடிச்சி நின்னு, அவன் அப்பன்ட்ட கேக்காத பேச்செல்லாம் கேக்க வச்சி, எனக்கு கல்யாண வயசு வந்துருச்சுப்பான்னு எனக்கு சொல்லாம சொல்லிருக்கா." என்று விரக்திக் குரலில் சிரித்தார் வேதாச்சலம்.
அதில், "அப்பா, அப்டிலாம் சொல்லாதீங்கப்பா. நானா எந்தத் தப்பும் பண்ணலைப்பா." என்று மென்மேலும் உடைந்து கதறினாள் சிற்பிகா தேவி.
"ஆமம்மா, நீ எந்தத் தப்பும் பண்ணலை. நான்தான் நம்ம பொண்ணு எப்பவும், எவ்ளோ வயசு ஆனாலும், நம்மளை தாண்டி யோசிக்க மாட்டான்னு தப்பா நினைச்சுட்டேன்" என்று வலி மிகுந்த பார்வை ஒன்றை அவளை நோக்கி வீசிவிட்டு, மீண்டும் செழியனின் கரத்தைப் பற்றியவர், "அவ படிக்கணும், சாதிக்கணும், இது எல்லாத்தையும் விட, முதல்ல ஒரு மரியாதையான இடத்தில, அவ உயிரோட இருக்கணும் செழியா. அந்த ஆளு கொஞ்சம் முன்ன மிரட்டிட்டுப் போனதை நீயும் கேட்டதான? எனக்கு ஏதோ ஒன்னு ஆனா, அப்றம் அவளோட நிலைமை?" என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கப் பேசியவரைக் கண்டு, அவஸ்தையாய் விழிகளை மூடித் திறந்தான் செந்தமிழ்ச் செழியன்.
அதற்குள் செவிலிப் பெண்ணும் ஊசியோடு வந்து விட, "சிற்பிகா, உங்களுக்கு மட்டும் பொண்ணு இல்ல சார். அவ என்னோட ரொம்ப நல்ல ஸ்டுடென்ட் உம் கூட. நீங்க சொன்னாலும் சொல்லலன்னாலும், அவளோட நல்லது கெட்டதுல எனக்கும் பங்கிருக்கு. உடம்பு தேறவும் வீட்டுக்குப் போய் மத்ததை பேசிக்கலாம். இப்போ ரெஸ்ட் எடுங்க." என்று பற்பல ஆறுதல்களை சொல்லிவிட்டு, இன்னுமே அழுது கரைந்திருந்த சிற்பியையும் அழைத்துக் கொண்டு வெளியேறி வந்திருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
அத்தனை நேரம் இடைவிடாது பேசியதும், செழியனிடமிருந்து கிட்டிய சமாதான வார்த்தைகளும், துளியளவு நிம்மதியும், பெருமளவு உடல் சோர்வும் கொடுத்திருக்க, செவிலிப்பெண் செலுத்திய ஊசி மருந்தின் உபயத்திலும், மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லத் துவங்கினார் வேதாச்சலம்.
கண்ணாடிக் கதவிற்கு வெளியே நின்று, அவர் கண்மூடும் வரையிலும் பார்த்து, பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன், அடுத்து வந்த இரண்டு நாட்களும், ஆண்பிள்ளை இல்லாத அந்த குடும்பத்திற்கு, ஆணுக்கு ஆணாய், மகனுக்கு மகனாய், ஆசானுக்கு ஆசானாய், அனைத்திலும் உதவி, வேதாவை டிஸ்சார்ஜ் செய்து, அவர்களின் கிராமத்து வீட்டிற்கும் அழைத்து வந்திருந்தான்.
என்னதான் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், இதுபோன்ற இன்னொரு சூழல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளும்படி அறிவுரை கூறியே மருத்துவர் அவரை அனுப்பி இருக்க, வீடு வந்த பின்னும் கூட, சிற்பியின் அந்த சிட்டுக் குருவிக் குடும்பம் களைத்துப் போட்ட குருவிக் கூடாகத் தான் மாறிவிட்டு இருந்தது.
உயிரிருந்தும், உஸ்வாரின்றி, தொய்ந்து போன தோற்றத்தோடு அப்பொழுது தான் வீடு வந்தவரை, நலம் விசாரிக்கிறேன் பேர்வழி என்று வந்த ஒரு சில உறவுகளும், "இத்தனை நடந்தப் பின்னும் இனி உன் மகளை நம்ம சாதி சனத்துல எவன் கட்டுவான் வேதா? பொம்பளப் புள்ளைய கொஞ்சம் அடக்க ஒடுக்கமா வளர்த்துருக்கக் கூடாதா?" என்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிச் சென்று இருக்க, கடந்த இரண்டு தினங்களாகவே அதே அச்சத்தில் தவித்திருந்தவரும், மீண்டும் செழியனின் கரத்தைப் பற்றி, மகளை திருமணம் செய்ய வேண்டிக் கேட்டார்.
அதில் சற்று கண்டனமாகவே அவரைப் பார்த்தவனும், "சார், கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க. நடந்து முடிஞ்ச சம்பவத்துல இருந்தே இன்னும் யாரும் வெளிய வராம இருக்கப்போ, சிற்பி கல்யாணத்துக்கு என்ன அவசரம் சார்? அவ படிப்பெல்லாம் முடியவும், நானே அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பாத்து மேரேஜ் பண்ணி வைக்கிறேன். ஒருவேளை அந்த அர்ஜுனே கூட அவளைத் தேடி வந்தா சிற்பியோட விருப்பத்தையும் கேக்கணும் நாம!" என்று நடைமுறைச் சிக்கலையும் எடுத்துக் கூறினான் செந்தமிழ்ச் செழியன்.
"ஆனா ஆனா, என்னோட பயமே அதுதானே செழியா!" என்று இன்னும் உடல் நடுங்கக் கூறியவர், "ஒருவேளை அந்த எம் பி பையனே திரும்பி வந்து, என் பொண்ணை கட்டிக் குடுங்கன்னு கேட்டு, இவளுமே, அவனை கட்டிக்கிறேன்னு நின்னாக்கூட, என் பொண்ணை அவ்ளோ கேவலமா பேசின அந்த ஆளோட மகனுக்கு நா எப்டி கட்டிக்கொடுப்பேன் செழியா? அப்டியே கட்டிக் கொடுத்தாலும் அவங்க ரெண்டு பேரையும் அந்தாளு சந்தோசமா வாழ விடுவான்னு நீ நினைக்கிறியா?" என்று கேட்டவர், "என் பொண்ணு சந்தோசமா இல்லாட்டிக் கூட பரவாயில்லை. மரியாதையான ஒரு இடத்தில, உயிரோட இருந்தாலே போதும். இந்தக் கைய காலா நினைச்சு கேக்குறேன். அவளை நீயே கட்டிக்கப்பா" என்று அவன் கையைப் பற்றிக் கும்மிட்டார் வேதாச்சலம்.
அங்கிருந்த யாருமே எதிர்பாராத வேதாவின் அந்தப் பேச்சில், "சார், ஏன் சார் இப்டிலாம் பேசுறீங்க? நீங்க போய் என்ன கை எடுத்து கும்மிட்டு, கஷ்டமா இருக்கு சார்!" என்று அவர் கையை கீழே இறக்கியவன், "சிற்பிகா என்னோட மாணவி சார்.
நா அவளை வழி நடத்த வேண்டிய ஆசிரியன். நா எப்டி சார் அவளை மேரேஜ்?. இது தப்பு சார். பெரிய தப்பு. நம்ம காலேஜ்ல நாளைக்கு இதையே காரணம் காட்டி, இன்னும் ரெண்டு பேர் இந்தத் தப்பை பண்ண நா எப்டி ஆரம்பமா இருக்க முடியும்? எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு சார். ஆசிரியனுக்கும் மாணவிக்கும் இடையில இருக்க உறவு, தாய் பிள்ளை உறவு போல புனிதமானது. அதுக்கு கலங்கம் வர்ற போல எந்த காரியமும் நா செய்ய மாட்டேன். ப்ளீஸ் என்ன மன்னிச்சுடுங்க" என்று அவனும் அவன் மனதில் உள்ளதெல்லாம் மறைக்காமல் சொன்னான்.
ஆனால் மகளைப் பற்றிய கலக்கமும், அவளின் எதிர்கால பயமும் மட்டுமே, ஆட்கொண்டு இருந்ததில், செழியனின் அந்த கொள்கைகள் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
மாறாக தன் குடும்பத்தையும், தங்களையும் நன்கு அறிந்த செழியனே, தன் மகளை மணம் புரிய இத்தனை யோசிக்கிறான் என்றால், உண்மை எல்லாம் அறிந்த வேறு ஒருவன் நாளை எப்படி அவளை ஏற்றுக் கொள்வான் என்று, ஏதேதோ எண்ணிக் குழம்பியவர், "அன்னிக்கு சிற்பி, அந்த பையன் கையை பிடிச்சி நின்னதை மனசுல வச்சித்தான் ஏதேதோ சொல்லி என் பொண்ணை மறுக்கிறியா செழியா? நீயும் என் வளர்ப்ப சந்தேகப்படுறியா? வேற ஒருத்தன் கையைப் பிடிச்சி நின்ன என் பொண்ணு உனக்கு வேணாம்னு நினைக்கிறியா?" என்று குரல் உடையக் கேட்டார் வேதாச்சலம்.
சில தினங்கள் முன்னர், அர்ஜுனின் தந்தை அவளை தவறாகப் பேசியதற்கே அத்தனை ஆவேசம் கொண்டு, அவரை அடிக்கப் பாய்ந்தவன் அவன். ஏன் காவல்துறையில் புகார் அளித்து, அவரை ரெண்டில் ஒன்று பார்க்கலாம் என்று இன்று வரை துடித்துக் கொண்டிருப்பவன். அப்படிப்பட்டவனா அவளைத் தவறாக எண்ணுவான்?
"அய்யோ, என்ன வார்த்தை சார் இது? ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?" என்று செழியன் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே,
"செழியா..." என்று ஓடி வந்து மகனின் முன்னால் நின்ற மீனாட்சி, "செழியா, நானும் சிற்பி, சின்னப்புள்ள, உனக்கு எப்படி முடிக்கிறதுன்னு தயங்கிட்டு தான் இவ்ளோ நேரம் அமைதியா இருந்தேன். ஆனா அண்ணா இவ்ளோ தூரம் கேக்குறப்ப முடியாதுன்னு சொல்றது அவ்ளோ நல்லா இல்லப்பா." என்றார் அவனைப் பெற்றவர் என்ற உரிமையில்.
"ம்மா புரியாம பேசாதீங்க. சிற்பி சின்னப்பொண்ணு மட்டும் இல்ல. என்னோட ஸ்டுடென்ட் உம் கூட, நா எப்டிமா அவளை?" என்று செழியன் அன்னையிடமும் மறுப்புத் தெரிவிக்க,
"என்னப்பா, அப்ப இருந்து இதையே சொல்லிட்டு இருக்க, மிஞ்சி மிஞ்சிப் போனா இன்னும் ரெண்டரை வருஷம் அவ உன் மாணவியா இருப்பாளா? அதுக்கப்புறம் அவ நம்ம வேதா அண்ணே பொண்ணு மட்டும் தானே. இந்த ரெண்டரை வருசத்துக்காக, நம்ம சிற்பியோட ஒட்டு மொத்த வாழ்க்கையும் சிக்கல்ல தள்ளனுமா?" என்று மீனாட்சியும் மகனுக்கு இணையாக பதில் கேள்விகள் எழுப்பினார்.
அதில் பெரியவர்கள் இருவரையும் மாறி, மாறி பார்த்தவனுக்கு, ஏனோ அவர்கள் கூறும் அந்த சாக்கு போக்குக்களை எல்லாம் ஏற்கவே இயலவில்லை.
ஆசிரியப் பணி மீதும், கற்றுக் கொடுத்தலின் மீதும், மிகப்பெரிய மரியாதை வைத்து, மிகுந்த பய பக்தியுடனே செய்து வருபவன், கல்லூரியில் உடன் பயிலும் தோழ, தோழியரைக் கூட தவறான நோக்கோடு பார்க்கக் கூடாது என்று தன் மாணவர்களுக்கு எல்லாம் சொல்லி சொல்லி வளர்க்கிறான்.
அவனே எப்படி தன்னிடம் பயிலும் மாணவியை, மனைவியாய் பார்ப்பான்? இது ஆசிரியப் பணிக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் அல்லவா? இப்படி என்னென்னவோ எண்ணிக் கொண்டிருந்தவனை, "தம்பி" என்று களைத்தவர், "உன் அப்பா மட்டும் இந்நேரம் உயிரோட இருந்திருந்தா, அன்னிக்கு வேதா அண்ணே அவமானபட்டு நின்ன இடத்திலயே, உன்கிட்ட தாலியைக் கொடுத்து சிற்பிமா கழுத்துல கட்ட சொல்லிருப்பாருப்பா" என்று அலுங்காமல் குழுங்காமல் ஒரு குண்டை தூக்கிப் போட்டார் மீனாட்சி.
அதில் இன்னுமே அதிர்ந்து போய் அன்னையை ஏறிட்டவனை, "ஆமப்பா கொஞ்சம் வருஷம் முன்ன நீ காலேஜ் படிக்கிற சமயம், சிற்பிமாவ அண்ணா முதமுதலா நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வந்தப்போ, பொண்ணு ரொம்ப அழகா இருக்கா. உனக்கு மட்டும் வயசு கொஞ்சம் கம்மியா இருந்தா, என் நண்பன் மகளை தான் என் வீட்டு மருமக ஆக்கிருப்பேன்னு அப்பா ஆசையா சொன்னாரு" என்று சத்தியம் செய்யாத குறையாய் மகனிடம் கூறினார் மீனாட்சி.
அதைக்கேட்டு அனைவருமே அதிர்ந்து போய் அவரைப் பார்க்க, அன்னையை நெருங்கிய யாழினியும், "ம்மா உண்மையாமா? என்கிட்ட சொல்லவே இல்லை?" என்று கிசுகிசுப்பாகக் கேட்க,
"ஏய் எனக்கே இப்பதான் டி சொன்னாரு" என்ற மீனாட்சியும் மேலே பார்த்து கண்ணைக் காட்டினார்.
அதில் இன்னுமே அதிர்ந்த யாழினி,
"ம்மா பொய் சொல்றியா?" என்று பல்லைக் கடித்து வினவ,
"பொய்மையும் வாய்மையிடத்து நன்மை பயக்குமெனில்ணு நீ கேள்விப்பட்டது இல்லியா?" என்று மகளிடம் முணுமுணுத்த மீனாட்சி,
"இந்த சந்தர்ப்பத்தை விட்டா உன் அண்ணன கைல பிடிக்க முடியும்ணு தோணலடி எனக்கு. அத்தோட சிற்பி புள்ள மாதிரி ஒரு மருமகள யாருக்கோ விட நா தயாராவும் இல்ல. ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்லாம் சொல்லிருக்காங்க பெரியவங்க. ஆனா நா சொல்லிருக்கது ஒன்னே ஒன்னு தான்டி. அவன் வேற நம்மளையே பாக்குறான். நீ கொஞ்சம் பேசாம இரு." என்று விட்டு மற்றவர்களிடம் திரும்பியவர்,
"யாழி அப்பாவோட ஆசைதானோ என்னவோ, அண்ணே வாயாலே வெளிப்பட்டு இருக்கு. பெரியவங்க எங்களுக்கு பின்னயும், நம்ம ரெண்டு குடும்பமும் சேர்ந்தே இருக்கணும்னு தான் அந்த வனபத்ரகாளியும் ஆசைப்படுறா போல. அதான் என்னென்னவோ நடந்து, இப்டி வந்து முடிஞ்சிருக்கு" என்று கணவனிடம் தொடங்கி கடவுளிடம் முடித்தவர், "நா சொல்றது சரிதானே சிற்பி அம்மா?" என்று சுசீலாவிடமும் கேட்டு வைத்தார்.
என்னதான் கணவனின், நண்பன் மகனாக இருந்தாலும், பெரிதான வசதி வாய்ப்புகளும், சொத்து சுகங்களும், இல்லாத செழியனிடம், பெரிதான அபிப்ராயம் எதுவும் இதுவரை இருந்ததில்லை சுசீலாவிற்கு. ஆனால், தான் ஆசையாசையாய் பெற்று வளர்த்த மகள், தங்களுக்கு இத்தனை பெரிய அவமானத்தை தேடித் தந்திருக்க, தற்போதைய கணவனின் நிலையும், இந்த அவசரத் திருமணத்திற்கு அவர் கூறும் காரணங்களும், அவரையும் கணவன் முடிவிற்கே கட்டுப்பட வைத்தது.
கூடவே வசதியில்லாத கணவன் தன்னை காதலித்து மணந்து, தன் சொத்து பத்துக்களை எல்லாம் பாதுகாத்தது போல், பின்புலம் இல்லாத செழியனும், தங்களை முன்னிலைப் படுத்துவான்
என்ற நம்பிக்கையும் சேர,
"ஆமா அண்ணி, எது நடக்கணும்னு இருக்கோ, அது தானே நடக்கும்!" என்று மகளைப் பார்த்து மூக்கை உரிந்தார் சுசீலா.
அனைவரும் மாறி மாறி அவர்கள் விருப்பத்தைச் சொல்லவும், செழியனுக்கும் என்ன கூறுவது என்று மிகவும் தடுமாற்றமாய் இருக்க, சிற்பியை ஏறிட்டுப் பார்த்தான் செந்தமிழ்ச் செழியன்.
அனைத்து உரையாடல்களையும் கேட்டிருந்தாலும், எந்த எதிர்வினையும் ஆற்றாது, விழியில் வழியும் நீரை மட்டும் அவ்வப்போது துடைத்தபடி நின்றிருந்தவளைக் கண்டு, ஏனோ அன்று அவள் அர்ஜுனின் கரம் பற்றி நின்றிருந்த காட்சி தான் சிந்தையில் உதித்தது.
'ஒருவேளை அர்ஜுன் மேல் அவளுக்கு விருப்பம் இருந்தால்?' என்ற கேள்வியும் எழ,
"முதல்ல சிற்பிகிட்ட இந்த மேரேஜ் கு சம்மதமான்னு கேளுங்கம்மா. அவளுக்கு விருப்பம் இல்லங்கிற பட்சத்தில், யாரும் இந்தப் பேச்சையே எடுக்கக் கூடாது!" என்று கண்டிப்புக் குரலிலே கூறினான் செழியன்.
அதில் பெரியவர்கள் அனைவரின் பார்வையும் ஒரு வேண்டுதலோடு பெண்ணவள் மேல் படிய,
செழியனின் விழிகள் மட்டும், எந்த உணர்வையும் வெளிக்காட்டாது அவளையே பார்க்க, ஒரே ஒரு கணம் மட்டும் அவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டவள், "ட்ரைனர் சாருக்கு, என்ன மேரேஜ் பண்றதுல, எந்த மறுப்பும் இல்லைன்னா, எனக்கும் சம்மதம் தான்" என்று உடைந்த குரலிலே கூறி இருந்தாள் சிற்பிகா தேவி.
அவள் இப்படி உடனே சம்மதம் கூறுவாள் என்று செழியன் எதிர் பார்க்கவே இல்லை.
வேகவேகமாக அவளை நெருங்கியவன், "இதப்பாரு கேர்ள். யாருக்காகவும் யோசிச்சோ, எதுக்காகவும் பயந்தோ, அவசரப்பட்டு அப்டி சொல்லாத. உன் மனசுல வேற எதுவும் இருந்தாலும், வெளிப்படையா சொல்லுமா? அதை நா நடத்தி வைக்கிறேன்" என்று சிறு தவிப்புக் குரலில் அழுத்தியே கேட்டான்.
அன்று நடந்த நிகழ்வுகளின் தாக்கத்திலிருந்து இன்னுமே வெளி வராதவளிடம், 'அர்ஜுனை விரும்புகிறாயா?' என்று நேரடியாகக் கேட்க இயலாமல், சுற்றி வளைத்துக் கேட்டிருந்தான்.
அதில் அவளுக்கு என்ன தோன்றியதோ, "என்னை கல்யாணம் செய்ய உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லைன்னா, எனக்கும் சம்மதம் தான் சார்." என்று அவன் விழிகளை நேருக்கு நேராய்ப் பார்த்தவள், "ஆஃப்ட்டர் மேரேஜ் என்ன படிக்க மட்டும் அல்லோ பண்ணீங்கன்னா போதும்" என்றும் சொல்லி முடித்தாள் சிற்பி.
அதற்குப் பின் செழியன் பேசுவதற்கு எந்த வார்த்தைகளுமே இல்லாது போக, அடுத்து வந்த ஒரு சுபயோக சுபதினத்தில் அன்று எந்தக் கோவிலின் முன் வைத்து, ஆவுடையப்பர் சிற்பியையும், அவள் தந்தையையும் அவமானப்படுத்திச் சென்றாரோ, அக்கோவிலின் சன்னிதியிலே, செழியன் மற்றும் சிற்பிகாவின் திருமணம் நல்ல முறையில் நடந்தேறியது.
Comments
Post a Comment