நூலகம் -10.2

இங்கு அவளுக்கு மேல் அவள் தந்தையும் அவமானத்தில் குன்றி, கைகால்கள் எல்லாம் விரைத்துப் போய் அமர்ந்திருக்க, ஆவுடை பேசிய வார்த்தைகளை அதற்கு மேல் கேட்க இயலாமல், "அடச்சீ நிறுத்து! நீ பெரிய அரசியல்வாதியா இருந்தா எங்க வீட்டுப் பொண்ணை என்ன வேணா பேசுவியா? இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா, ஒருத்தன் கூட உயிரோட வீட்டுக்குப் போக மாட்டிங்க" என்று அங்கிருந்த கரும்புக் கட்டு ஒன்றை ஓங்கிக் குத்தினான் செழியன்.

தான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் வேதாவையும், அவர் மகளையும் ஆவுடை பேசிய பேச்சில், அமைதியே உருவான செழியனின் பொறுமையே எல்லையைக் கடந்தது.

ஆவேசமாக அவன் குத்திய அந்தக் குத்தில், கரும்புக்கட்டில் இருந்த பாதிக்கும் மேலான கரும்புகள்  இரண்டிரண்டாக ஒடிந்து நாலாபுறமும் தெறித்து விழுந்தது.

அதைப்பார்த்து சற்றே நிதானித்த ஆவுடை, "என்னய்யா அந்தப் பெண்ணுக்காக அவ அப்பாக் கூட இவ்ளோ துடிக்கல. ஆனா உன் சத்தம் பலமா இருக்கே. என்னய்யா விஷயம்? உன்னையும் மயக்கிட்டாளோ அந்த சின்னக் குட்டி?" என்று ஒரு மாதிரியாகக் கேட்டார்.

அதைக்கேட்ட சிற்பி, "அய்யோ" என்று காதுகள் இரண்டும் மூடிக் கொள்ள, வேதாவும், "செழியா, செழியா வந்துருப்பா. அவன்லாம் மனுஷனே இல்லப்பா. அரசியல்வாதிப்பா" என்று கம்மிய குரலில் அவனை அழைத்துக் கொண்டிருக்க, நடந்தேறிக் கொண்டிருந்த களேபரத்தில் கோவினுள்ளிருந்த உறவுகள் மொத்தமும் வெளியே கூடி இருந்தனர்.

நடப்பதை எல்லாம் கவனித்தபடியும், அவர்கள் பேச்சை எல்லாம் செவியில் வாங்கியபடியும் கணவரிடம் ஓடிய சுசீலா, "என்னங்க, இங்க என்னங்க நடக்குது? இவங்கல்லாம் யாருங்க? ஏன் இப்டிலாம் பேசுறாங்க? நம்ம பொண்ணு என்னங்க தப்பு பண்ணினா?" என்று அழுகுரலில் பதறியடித்துக் கேட்டார்.

அதில் இன்னுமே, உடலும் உள்ளமும் துடிக்க, "நாம, நாம, நம்ம பொண்ணை சரியா வளக்கல போல சுசீ. சரியா வளக்கல. நம்ம பொண்ணு நமக்கு தெரியாம எதுவும் பண்ண மாட்டான்னு, எவ்ளோ சுதந்திரம் கொடுத்து வளர்த்தோம். ஆனா ஆனா அவ, அவ பொருந்தாத இடத்தில ஆசைப் பட்டுட்டாளே. அவனோட கையப் பிடிச்சிட்டு ஊர் நடுவுல நிக்கிறா சுசீ" என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அலறினார் வேதாச்சலம்.

அதைக்கேட்டு சுசீலாவும், "அய்யோ, என்னங்க, என்னென்னவோ சொல்றீங்க? நம்ம பொண்ணு அப்டிலாம் பண்ணிருக்க மாட்டாங்க. நீங்க அப்டி அவளை வளக்கலங்க" என்று தலையில் அடித்துக் கொண்டு மகளிடம் ஓடியவர், "ஏன்டி இப்டி மரம் போல நிக்குற? சொல்லுடி, சொல்லுடி. அப்பா சொன்னபோலல்லாம் எதுவும் இல்லன்னு சொல்லுடி. நாங்க உன்ன அப்டியாடி வளர்த்தோம்?" என்று அவளின் முதுகிலும் கையிலும் சரமாறியாக அடிக்கத் துவங்கினார்.

அதைப் பார்த்துப் பதறி, "அய்யோ மேடம்..." என்று செழியன் அவரை நெருங்குவதற்குள், "சிற்பி அம்மா. உங்களுக்கு என்னாச்சு? யாரோ சொல்றதை கேட்டு, புள்ளைய போட்டு அடிக்கிறீகளே. விடுங்க புள்ளைய" என்று சிற்பியை அவர் புறம் இழுத்துக் கொண்டு அவள் முதுகை நீவி விட்டார் மீனாட்சி. யாழினியும் அவரோடு சேர்ந்து தோழிக்கு ஆறுதல் உரைக்க, "யாழி" என்று அவளைக் கட்டிக் கொண்டவளின் கண்ணீர் வற்றாத ஊற்றாய் கன்னத்தில் இறங்கியது.

அதற்குள் ஆவுடையை நெருங்கிய ஊர் பெரியவர்கள் சிலரும், "நீங்க எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், ஒரு காலேஜ்க்கே சேர்மனான மரியாதைக்குரிய மனுஷனை இப்டி வீதில நிக்க வச்சி அசிங்கமா பேசுறது ரொம்பவே தப்புங்க. பொண்ணு புள்ள காரியம், ஆற அமர உக்காந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம். வாங்க உள்ள" என்று கோவிலைக் காட்டிப் பேச அழைத்தனர்.

அதைக்கேட்டு, "வாங்கய்யா ஊர்ப் பெரியவங்களா. யாரு கூட, யாருயா உக்காந்து பேசுறது? எனக்கு சமமா நின்னு பேசக்கூட தகுதி இருக்கா அந்த ஆளுக்கு? மகளுக்கே மாமா வேலை பாக்குறவன், அங்க காலேஜ் நடத்துறானா இல்ல ஹோட்டல் நடத்துறானான்னு யாருக்குய்யா தெரியும்" என்று இன்னும் ஏதேதோ பேசி, ஊர் மக்கள் மத்தியில், சிற்பியின் மொத்த குடும்பத்தையும் பெருத்த அவமானத்திற்கு ஆளாக்கி இருந்தார் ஆவுடையப்பர்.

ஒரே ஒரு ஒற்றை மகனை அருமை பெருமையாகப் பெற்று வளர்த்து ஆளாக்கி இருந்தவர், அவனைக் கொண்டு தான் தன் அரசியல் வாழ்வின் எதிர்கால வெற்றிக்கு பெரிய பெரிய கனவுகள் எல்லாம் கண்டு கொண்டிருந்தார்.

படிப்பில்லா அரசியல்வாதியாக இன்னமும் எம் பி நிலையிலே இருந்து வருபவர், மகனாவது ஏட்டுக் கல்வியோடு அரசியலும் கற்று, தன்னை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்துவான், என்று அவன் மேல் அளப்பரிய நம்பிக்கை வைத்து இருப்பவர், அன்று மகனுக்கு மின் விபத்து ஏற்பட்ட நாளிலே சுதாரித்து அனைத்தும் தெரிந்து கொண்டார்.

அர்ஜுனுக்கான மருத்துவம் கூட இன்னும் முடியாத நிலையில், அவன் சிற்பியைத் தேடி, இத்தனை தூரம் வந்திருக்கும் விஷயமும், சற்று முன்னர் அவன் அவள் கையைப் பற்றி நின்றிருந்த காட்சியும், அவர் கண்டு கொண்டிருக்கும் கனவுகளில் எல்லாம் கூடை மண்ணை அள்ளிக் கொட்டி இருந்தது.

இன்று, தான் பேசும் பேச்சிலும், அவர்களுக்கு இழைக்கும் அவமானத்திலும், அவர்கள் யாரும் தன் மகன் இருக்கும் திசையைக் கூட இனி திரும்பிப் பார்த்துவிடக் கூடாது, நாளை அவனே சிற்பியைத் தேடி வந்தால் கூட, அவனை விட்டு காததூரம் தெறித்து ஓட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர், தன் மகனின் மனதைப் பற்றி இம்மியும் யோசியாமல், எந்தத் தவறும் செய்யாத சிற்பியின் மேலும், அவளைச் சார்ந்தவர்கள் மேலும் சேற்றை வாரிப் பூசினார்.

இதுவரை பேசியது எல்லாம் போதாமல், இறுதியாக வேதாவை நெருங்கியவர், "இதப்பாருய்யா, இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. என் பையன் உன் பொண்ணைத் தேடி வராம நா பாத்துக்குறேன். உன் பொண்ணு
உன் ஒருத்தனுக்குதான் பொறந்தாங்குறது உண்மையா இருந்தா, ஒழுங்கு மரியாதையா என் மகன் நினைப்ப தூக்கிப் போட்டு, போய் வேற ஆளைப் பிடிக்க சொல்லு. இல்ல, கண்ணுல பாக்கக் கூட உன்மக உயிரோட இருக்க மாட்டா.
நா மோசமான ஆளு. என்கிட்ட வச்சிகிட்டா கொன்னு புதைச்சுட்டு போயிட்டே இருப்பேன்" என்று இடுப்பில் மறைத்து இருந்த துப்பாக்கியையும் எடுத்துக் காட்டி அப்பட்டமாக மிரட்டி விட்டே அங்கிருந்து களைந்து சென்றனர் ஆவுடையின் அராஜகக் கும்பல்.

அவர்கள் சென்று நிமிடங்கள் பல கடந்தும், ஆவுடை அள்ளி இறைத்துச் சென்ற வார்த்தை கங்குகளும், இறுதியில் அவர் விடுத்துச் சென்ற  கொலை மிரட்டலும், சிற்பியை மட்டுமல்லாது அவளின் பெற்றோரின் நெஞ்சத்தையும் நடுநடுங்கச் செய்ய, அதை மென்மேலும் ரணமாக்கும் விதமாக, அங்கிருந்த உறவுகள் சிலரும், சிற்பியைப் பற்றி ஏதேதோ கிசுகிசுக்கத் துவங்கினர்.

அத்தனை நேரம் ஆவுடை அத்தனை பேசிய போதும், ஏதோ ஒரு தைரியத்தில் தாங்கிக் கொண்டு நின்றிருந்தவர், அவர் அக்காள் முறையுள்ள ஒரு பெரியவரே,
"கங்கில்லாமப் பத்தாது, நெருப்பில்லாம புகையாதுன்னு அந்த கட்சிகாரன் பேசுறப்பவே நினைச்சேன் மங்களம். ஆனா இது நம்ம நினைச்சதுக்குலாம் மேல பெரிய சங்கதியா தான் இருக்கும் போல. அதேன் மொத்த குடும்பமுமே பதில் சொல்ல முடியாம மருகி நிக்கிது. மக சோடை போயிட்டான்னு தெரிஞ்சிதான், என் பையனுக்கு பொண்ணு கேட்டதுமே படிப்பு முடிய கட்டி தர்றேன்னு ஒத்துக்கிட்டான் போல என் தொம்பி" என்று நாக்கில் பல்லைப் போட்டுப் பேசவும், அதற்கு மேலும் தாள முடியாமல், 
"செ செ செழியா..." என்று கத்தியபடி, நெஞ்சை பிடித்துக் கொண்டு மூர்ச்சையாகிச் சரிந்தார் வேதாச்சலம்.

வேதாச்சலம் மயங்கிச் சரியவும், செழியன் உட்பட அங்கிருந்த அனைவரும் அடித்துப் பிடித்து அவரைத் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்க்க, அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மைல் அட்டாக் என்று கூறினார்கள்.

அதைக் கேட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்ட சுசீலா, "போதுமாடி உனக்கு. போதுமா? நீ ஒத்த பொண்ணா நின்னு போனன்னு உன்ன தரையில கூட இறக்கி விடாம அப்டி செல்லம் கொடுத்து வளர்த்த மனுசன, இப்டி அட்டாக் வர்ற வரை கொண்டு வந்து விட்டுட்டியே உனக்கு இப்ப சந்தோசமாடி? என்ன கல்யாணம் பண்ணி, காலேஜ் பொறுப்பை கையில எடுத்த நாள் தொட்டு, சின்னதாக் கூட எந்தத் தப்பும் நடந்துராம, உயிரைக் கொடுத்து அவரு சாம்பாரிச்சு வச்ச நல்ல பேரை எல்லாம் இப்டி ஒரே நாள்ள சந்தி சிரிக்க வச்சிட்டியே, இப்ப நிம்மதியாடி உனக்கு? போடி, போ என் கண் முன்ன நிக்காத" என்று மகளின் முதுகிலும் சேர்த்தே அடித்துக் கொண்டு கதறினார் சுசீலா.

ஏற்கனவே அர்ஜுனின் அழைப்பிற்குச் சென்று அவனுடன் பேசிச் சிரித்து, தான் அறியாது செய்த சிறு பிழையினால் தன் மொத்த குடும்பமும் ஊராரின் முன் அசிங்கபட்டு நின்றதிலே, அரை உயிராகிப் போனவள், இப்பொழுது தந்தையின் உடல்நிலையும் எண்ணி, "அப்பா, நீங்க நினைக்கிற போல நா எந்தத் தப்பும் பண்ணலைப்பா. நா உங்க பொண்ணுப்பா" என்று அப்படியே ஐ சி யூ வார்டின் முன்னேவே மடங்கி அமர்ந்து,
அழத் துவங்கினாள் சிற்பிகாதேவி.

உள்ளே உடலும், உயிரும் துடித்துக் கொண்டிருக்கும் தன் மதிப்பிற்குரிய  குரு, வேதாச்சலத்தைப் பார்ப்பதா, வெளியே அழுது கரையும், அவர் வீட்டுப் பெண்களைத் தேற்றுவதா? என்று அங்கிருந்த செழியனுக்குத் தான் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

வெளியே திடமுள்ள ஆணாய், ஒரு கல்லூரியின் பேராசிரியனாய் தோற்றம் கொண்டிருந்தாலும், சிற்பியின் வயதிலேயே தங்கையை கொண்டிருக்கும் அவனுக்கும் அச்சூழலை எப்படி எதிர்கொள்வது என்று  தெரிந்திருக்கவில்லை.

நடந்து முடிந்த சில மணி நேர நிகழ்வுகளும், "அப்பா, அப்பா, நா,
நா தப்பான பொண்ணு இல்லப்பா. என்ன வெறுத்துடாதீங்கப்பா. என்கிட்ட திரும்பி வந்துடுங்கப்பா. என்கூட பேச மாட்டிங்களாப்பா" என்று அழுது கரையும் பெண்ணின் வார்த்தைகளும் அந்த ஆறடி ஆடவனின் உள்ளத்தை வெகுவாகப் பிசையத் துவங்கியது.

"இப்டியெல்லாம் எந்த அசம்பாவிதமும் நடந்துடக் கூடாதுன்னு தானே, நான் அன்னிக்கு அவ்ளோ சொன்னேன் கேர்ள். ஆனா நீ என் பேச்சை கேக்கலியே!" என்று சொல்லொணாத துயரோடு 
விழிகளை மூடித் திறந்தவன், அன்னை தங்கையிடம் கண்காட்டி விட்டு வெளியேறிச் சென்றிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து ஆழ்ந்த மூச்சுக்கள் விட்டு, தன்னை சமன்படுத்திக் கொண்டு அவன் திரும்பி வந்த பொழுது, சுசீலாவின் ஆவேசம் ஓரளவு அடங்கி மகளோடு தேம்பியபடி அமர்ந்திருக்க, அந்த மகளின் விழிகள் மட்டும் விடாமல் கண்ணீரை வெளியேற்றிக் கொண்டே இருந்தது.

அதைக்கண்டு அவன் நெஞ்சிலும் இறங்கிய பாரம் மீண்டும் வந்து ஏறிக்கொள்ள, அப்பொழுது ஐ சி யூ வைத் திறந்து வெளியே வந்த மருத்துவரோ, செழியனிடமும், சிற்பியிடமும், வேதாச்சலம் ஏதோ பேச விரும்புவதாகக் கூறியவர்,
"இன்னும் அவருக்கு ஹார்ட் பீட் நார்மல் ஆகலை. அதனால பாத்து பதமா பேசுங்க. இன்னொரு அட்டாக் வந்தா அவரைக் காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்" என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஒன்றாக ஐ சி யூ வினுள் நுழைந்து, அருகருகே நின்றாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாத இருவரின் பார்வையும், கட்டிலில் வேரறுந்த மரம் போல் கிடந்த வேதாவிடமே நிலைத்திருக்க, அங்கிருந்த ஈஸிஜி கருவியில் சீரற்ற நிலையில் தான் அவரின் இதயத் துடிப்பும் சென்று கொண்டிருந்தது.

செழியனின், "சார்" என்ற மெலிதான அழைப்பில், மெல்ல மெல்ல விழிகளை விரித்து, "செ செ ழி ழி யா யா" என்று தன் நடுங்கும் கரங்களால் செழியனின் கரத்தைப் பற்றிக் கொண்டார் வேதாச்சலம். 

பின் தழுதழுத்த குரலில், "இப்டி இப்டி ஒரு சூழல்ல இ இதை கேக்குறது சரியா, தப்பான்னு கூட எனக்கு தெரியல செழியா. நா சொல்றதக் கேட்டு, உனக்கு அநியாயம் பண்ணுறதா நீ நினைச்சாக் கூட, எனக்கு வேற வழியும் தெரியல்ல" என்ற பெரிதான பீடிகையோடு அவர், முன் வைத்த கோரிக்கையில், "சார்..." என்று அதிர்ந்த செழியன்  சிற்பிகாவைத் திரும்பிப் பார்க்க, தன் அழுகையையும் மீறி, "அப்பா" என்று வெடித்தவளும் அவனைத்தான் ஏறிட்டுப் பார்த்தாள்.


Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️