நூலகம் -10.1
கோவிலில் சாமி தரிசனம் முடிந்து, அனைவரும் பொங்கல் வைக்கவும் ஆயத்தமாக, இங்கே யாழினிக்கோ, உள்ளம் படபடக்கத் துவங்கியது.
அர்ஜுனை பேசி அனுப்பி விட்டு வருகிறேன் என்ற சிற்பி இன்னும் வரும் தடயமே இல்லாததால், அவளது பெற்றோரோ, அல்லது தன் அண்ணனே கூட அவளைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது என்ற பதட்டத்தில், இடித்துக் கொண்டிருந்த மண்ட வெல்லத்தை நாலாபுறமும் சிதற விட்டுக் கொண்டிருந்தாள் யாழினி.
"ஏய் யாழி, என்னடி ஆச்சு உனக்கு. ஏன் வெல்லத்தை எல்லாம் இப்டி சிந்த விட்டுட்டு இருக்க? உனக்கு இடிக்க நோவுச்சுன்னா, கீதாட்ட கொடு. சக்கரப் பொங்கல, மண் பொங்கலா ஆக்கிறாத" என்று கடிந்தவர், அப்பொழுது தான் அவர்களுடன் சிற்பி இல்லாததையும் கவனித்து அவளைப் பற்றிக் கேட்டார் மீனாட்சி.
அதில் யாழினியும், கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
"அவ அவ, ஹான், அவ வேதா அங்கிள் கூப்பிட்டாங்கன்னு கொஞ்சம் முன்ன தான் போனாம்மா" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,
"ஏம்மா யாழினி, சிற்பி எங்கமா? அவங்கப்பா கூட்டிட்டு வரச் சொன்னாங்க" என்று கேட்டுக் கொண்டு அவர்களை நெருங்கினார் சுசீலா.
"என்ன சொல்றீங்க சிற்பி அம்மா?. கொஞ்சம் முன்ன தான் சிற்பி புள்ள அண்ணனை பாக்க வந்துச்சாமே? யாழினி சொன்னா" என்று மீனாட்சியும் குழப்பமாகக் கேட்டார்.
"இல்லியேங்க, அவுரு ரொம்ப நேரமா, அவரோட மெட்ராஸ் பெரியப்பாட்டத்தான் பேசிட்டு இருக்காரு. அவங்க தான் பேத்தியை பாக்கணும்னு சொல்லவும், கூட்டிட்டு வரச் சொன்னாரு" என்ற சுசீலாவோடு சேர்ந்து, மீனாட்சியும் இப்பொழுது யாழினியைத் தான் கேள்வியாகப் பார்த்தனர்.
அதில், 'தடிமாடு தடிமாடு, அந்த அர்ஜூன் எருமை மாட்ட, சீக்கிரம் அனுப்பிட்டு வாடின்னா இன்னும் வந்துருக்காளா பாரு!' என்று சிற்பியை வாய்க்குள்ளே திட்டிக் கொண்டவள், பேந்தப் பேந்த விழித்து நிற்க,
அவர்களின் சம்பாசனை எல்லாம் கேட்டபடியே, அங்கு அடுப்பைக் கூட்டிக் கொண்டிருந்த செழியனோ,
"ரெஸ்ட்ரூம் எங்கயாவது போயிருப்பாம்மா. நான் போய் பாக்குறேன்" என்று அனைவருக்கும் பொதுவாகச் சொன்னவன், யாழினியையும் அழைத்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியேறி வந்திருந்தான்.
தங்கையின் திருதிருத்த விழியைக் கண்டு, "என்ன யாழி? ஏன் என்னவோ போல இருக்க? ஏதும் பிரச்சனையா?" என்று கேட்டவன், "சிற்பிகா எங்க?" என்றும் கேட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்கு எதிரில் இருந்த வளையல் கடையின் மீதே பார்வை பதித்திருந்தவளோ, பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள்.
அதைக்கண்ட செழியனின் பார்வையும், அந்தப்புறம் படிந்து கண்டனமாக மாற, அப்பொழுது தான் மனைவி மூலம் விஷயமறிந்து, "செழியா, எங்கப்பா இந்தப் பொண்ணு? ரொம்ப நேரமா கண்லயே படல?" என்று மகளைத் தேடிக் கொண்டு வந்த வேதாச்சலத்தின் விழிகளும் மகளின் கையைப் பற்றி நின்றிருந்த அர்ஜுனைக் கண்டு அதிர்ந்து விரிந்தது.
தன் மகளுக்கு பத்தொன்பது வயது நிரம்பி இருந்தாலும், அவர் இன்னும் சிறு பிள்ளை என்றே எண்ணிக் கொண்டிருக்கும் செல்லப் பெண்ணவள், யாரோ ஒரு ஆடவனின் கரம் பற்றி நிற்கும் காட்சியதை எந்த தந்தையால் தான் ஜீரணித்துக் கொள்ள முடியும்?
விழிகள் இரண்டும் சினத்தில் சிவக்க, "இது, இது, அந்த எம் பியோட பையன் தானே செழியா? அவன் எப்டி இங்க வந்தான்? அவனோட சிற்பிமாக்கு என்ன வேலை?" என்று கேட்டபடி, செழியனோடு சேர்ந்து சாலையைக் கடந்தவர், தங்கள் முன்னே வந்து நின்ற நான்கைந்து பொலீரோ வாகனங்களைக் கண்டு மென்மேலும் அதிர்ச்சியாகி நின்று இருந்தார்.
அதில் இருந்து வேகவேகமாக இறங்கிய எம் பியின் கையாள்கள் சிலர், அர்ஜுனின் தந்தைக்கும் கதவைத் திறந்து விட, வெள்ளை வேஷ்டி சட்டையில், தெனாவெட்டாக வாகனத்தில் இருந்து இறங்கிய அர்ஜுனின் தந்தையும், "அர்ஜுன், இங்க என்ன நடக்குது?" என்று அழுத்தக் குரலில் கேட்டவாறே மகனை நெருங்கினார்.
இருவரின் தந்தைகளும், தன்பக்க ஆட்களோடு அவர்களின் இருபக்கமும் நின்று இருக்க,
அதைப்பார்த்த சிற்பிக்கோ,
"அப் அப் அப்பா, ட்ரைனர்" என்று அச்சத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
சிற்பி அளவிற்கு அச்சமில்லை என்றாலும், இரு தந்தைகளையும் ஒன்றாய் பார்த்த அர்ஜுனுக்கும்
"டாட், நீங்க, நீங்க, எப்டி இங்க?" என்று வார்த்தைகள் தடுமாறியது.
"நான் வந்தது இருக்கட்டும். இன்னும் கைகூட சரியாகாத நிலையில, நீ இங்க என்ன பண்ற அர்ஜுன்? யார் இந்தப் பொண்ணு?" என்று திருப்பிக் கேட்டவர், அவனருகில் நின்ற சிற்பிகாவையும் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு பார்த்தார்.
தந்தையின் அந்தப் பார்வையில் சட்டென சிற்பியின் கரத்தைப் பற்றி அவரிடம் அழைத்துச் சென்றவன்,
"டாட், இது இது, நம்ம வேதா அங்கிள் பொண்ணு தான் டாட். பேரு சிற்பிகாதேவி. நான் நான் அவளை உயிருக்குயிரா லவ் பண்றேன்.
அவ இல்லாம எனக்கு எதுவுமே இல்லன்னு இந்த கொஞ்ச நாள்ளயே நல்லா உணர்ந்துருக்கேன் டாட். எனக்கு மனைவின்னு ஒருத்தி வந்தா அது சிற்பியாதான் இருக்கணும் டாட். நான் இதுவரை எதக் கேட்டும் நீங்க இல்லைன்னு சொன்னதில்ல. அந்த நம்பிக்கையோட என் லைஃப் பாட்னரையும், நானே சூஸ் பண்ணிட்டேன். நீங்க தான் வேதா சார்கிட்ட பேசி எங்க லவ்க்கு அப்ரூவல் வாங்கணும்" என்று கண்ணில் பூத்த மின்னலோடு பேசிக்கொண்டே சென்றான் அர்ஜுன் தேவதாஸ்.
அவன் அத்தனை பேசியும் மகனுக்கு எந்த பதிலும் கொடுக்காது, சில பல நிமிடங்களுக்கு அவனையும், சிற்பியையும் மாறி மாறி பார்த்தவர், "இட்ஸ் ஓகே மை சன்" என்று சட்டெனச் சிரித்து இருந்தார்.
பின், "ஆனா அப்பா உன் ஆசையை நிறைவேத்தி வைக்கணும்னா, நான் சொல்ற கண்டிஷன்கு எல்லாம்
நீ ஓகே சொல்லணும்" என்று சொன்னவர், "இப்ப பஸ்ட் கிளம்பி நம்ம ஆட்களோட நீ நம்ம ஊருக்குப் போ. உனக்கு கரண்ட் அடிச்சிட்டுணு சொன்னதில இருந்தே, உன்ன பாக்கணும்னு அம்மா ஒரே நச்சரிப்பு.
அப்றம் உடம்பு நல்லா தேறவும், வெளிநாட்டுல மிச்ச படிப்பும், பிராக்ட்டீஸும் முடிஞ்சு மத்ததைப் பாக்கலாம். நான் சம்பந்திகிட்ட பேசி எல்லா ஏற்பாடும் செய்றேன். சரியா?" என்று விழிகளை எட்டாத முறுவலோடு சொன்னார் அர்ஜுனின் தந்தை.
அவர் சிற்பியின் தந்தையை சம்பந்தி என்று கூறியதே, 'இனி அனைத்தும் தந்தை பார்த்துக் கொள்வார்' என்று மிகப்பெரிய நம்பிக்கையை அர்ஜுனுக்குக் கொடுத்திருக்க, "தேங்க்யூ சோ மச் டாட். தேங்க்ஸ் அலாட்." என்று சிற்பியின் கரத்தை விட்டு, தந்தையைக் கட்டிக் கொண்டவன், "நீங்க என்னோட விருப்பத்துக்கு அப்ஜக்சன் சொல்ல மாட்டிங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும் டாட். ஐ லவ் யூ லாட்ஸ் டாட்." என்று நெகிழ்ந்த குரலில் நன்றி கூறியவன், அங்கிருந்த வேதாச்சலத்திடமும் ஓடினான்.
இருபத்து ஒரு வயதே நிரம்பியிருக்கும் வளர்ந்து கெட்ட சிறுவன் போல், எதிர்கால சாதக பாதகங்கள் எதையும் யோசியாமல், மூச்சு வாங்க வேதாச்சலத்தின் முன்னால் நின்றவன், கெட்டதிலும் ஒரு நல்லதாய், சிற்பியின் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், தான் தான் அவளை விரும்புவதாகவும், அவள் படித்து முடியவும் திருமணம் செய்து கொள்வதாகவும், அவர் அதற்கு மறுக்கக் கூடாது என்றும் ஏதேதோ கூறிவிட்டு, பின் தந்தையிடம் திரும்பி, "நீங்க சொல்ற எல்லாம் நான் கேக்குறேன் டாட். சிற்பியை மட்டும் என்னோட சேர்த்து வச்சிடுங்க. போதும்" என்று அருகில் நின்ற சிற்பியையே பார்த்தவாறு சொன்னான்.
தந்தை உடனே தன் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்ட மகிழ்ச்சியில் அர்ஜுனின் விழிகள் இரண்டும் வைரமாய் மின்னியது.
அதைப்பார்த்து உள்ளே பற்கள் அரைபட்டாலும், மகனின் முன்னால் எதையும் காட்டிக் கொள்ள விரும்பாதவர், "ம்ம்ம், அதெல்லாம் நா பாத்துக்குறேன் கண்ணா. நீ இப்பக் கிளம்பு. அங்க அம்மா ரொம்ப கவலைப்பட்டுக் கிடக்கா. நா எல்லாம் பேசி முடிச்சுட்டு பின்னாடியே வர்றேன்" என்று அவனை அங்கிருந்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தார் ஆவுடையப்பர்.
தான் கேட்டதும் தன் காதலுக்கு உடனே ஒப்புதல் அளித்த தந்தையின் பேச்சை அதற்கு மேலும் தட்ட விரும்பாதவன், மீண்டும் சிற்பியிடம் ஓடி, "எல்லாம் டாட் பாத்துப்பாங்க ஸ்வீட் ஹார்ட். டோன்ட் வொர்ரி.
சீக்கிரம் படிப்ப முடிச்சுட்டு உன்னத் தேடி வருவேன். அதுவரை உன் அர்ச்சுனருக்காக வெயிட் பண்ணு" என்று மட்டும் கூறியவன், தந்தை கூறியது போல் அவர் கையாள்களோடு சேர்ந்து வாகனத்திலும் ஏறிக் கிளம்பியிருந்தான்.
அனைத்தும் தங்கள் கண் முன்னே நிகழ்ந்தாலும், சிற்பி அர்ஜுனின் கரம் பற்றி நின்ற காட்சியில் இருந்தே இன்னும் வெளிவந்து இராதவர்கள், அர்ஜுன் மற்றும் அவன் தந்தையின் கூற்றிலும் அரண்டு போய் தான் நின்று இருந்தனர் வேதாவும் செழியனும்.
அர்ஜுன் சென்ற வாகனம் கோவில் எல்லையைக் கடந்து, அங்கிருந்த வளைவில் திரும்பி கண்ணை விட்டு மறையும் வரை கூட அதிர்ச்சியில் உறைந்தபடி, அவ்வாகனத்தையே பார்த்து இருந்தவளுக்கு, ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டது போலவும், அல்லது நடக்கப் போவதாகவும் உள்ளம் கொட்டு முரசாய் மத்தளம் கொட்டியது.
அவளைப் போலவே, அந்த வாகனம் சென்று மறைவதற்காகவே காத்து இருந்தவரும், மகன் ஊர் எல்லையைத் தாண்டி விட்டதையும் உறுதி செய்து கொண்டு, அடி
மேல் அடி வைத்து சிற்பிகாவை நெருங்கியவர், "எவ்ளோ நாளா இந்தத் தொழில் பண்ற?" என்று தான் கேட்டிருந்தார் ஆவுடை.
சிற்பிக்கு மட்டுமல்ல, அங்கிருந்த அவள் தந்தை மற்றும் செழியனிற்குக் கூட அவர் கேள்வியின் சாராம்சம் இம்மியும் புரியவில்லை.
ஆனால் அவரது உடல் மொழியே சற்று முன்னர் மகனிடம் கூட அவர் உண்மையாகப் பேசவில்லை என்று சொல்லாது சொல்லி இருக்க, அவர் அடுத்த வார்த்தையைப் பேசுவதற்குள், "சிற்பிகா, வா போலாம்" என்று பெண்ணவளை நெருங்கி அழைத்தான் செந்தமிழ்ச் செழியன்.
அதில் அவனையும் திரும்பி தீவிழி விழித்தவர், "என்னப்பா அவசரம். இரு செஞ்ச வேலைக்கு பேமன்ட் வாங்கிட்டு வரட்டும்!" என்று சொன்னவர், "நீ மட்டும் தான் இந்தப் பொழப்பு பொழைக்கிறியா? இல்ல உன் காலேஜ்ல இருக்க எல்லா பொண்ணுங்களும் இப்படித்தானா? நாள் கணக்கா, மணிக்கணக்கா?" என்றும் அடிக்குரலில் கேட்டார்.
அப்பொழுதும் மலங்க மலங்க விழித்தவளைக் கண்டு, "என்னடி ஒன்னும் தெரியாதா பாப்பா மாதிரி பாக்குற? நல்ல பெரிய இடத்துப் பையனா ஒருத்தனப் பாத்துட்டாப் போதுமே, உங்களுக்கு எல்லாம் காதோல் பொத்துக்கிட்டு வந்துடுமே" என்றவர், "ஏன்டி உன் காலேஜ்லயே இல்லாத வீட்டு பசங்க எல்லாம் எத்தினி பேர் படிக்கிறாங்க. அவங்கள்ள ஒருத்தன வளைச்சுப் போட வேண்டியது தான. ஏன்
நீ எதிர்பாக்கிற வசதிக்கு அவனுகளுக்கு வக்கில்லையோ?" என்று நாக்கூசாமல் ஏதேதோ பேசினார் ஆவுடையப்பர்.
தன்னை உயிராய் நேசிக்கிறேன் என்று சொன்ன அர்ஜுனின் தந்தையிடம் இருந்து இப்படி ஒரு குற்றச்சாட்டை எதிர்பாராதவள், "அய்யோ இல்ல. நா நா அப்டிப்பட்ட பொண்ணு இல்ல. உங்க பையன் தான் என்ன!" என்று அழத் தொடங்கினாள் சிற்பிகாதேவி.
அதற்குள், "சார் நீங்க பேசுறது ரொம்ப தப்பா இருக்கு!" என்று செழியனும், "யோவ் யாரைப் பார்த்து என்னையா பேசுற நீ?" என்று வேதாச்சலமும், அடித்து விடுவது போல் கையை முறுக்கிக் கொண்டு அவரை நெருங்கினர்.
ஆனால் அவர்மேல் சுட்டுவிரல் கூட படவிடாதபடி, நான்கைந்து கையாள்கள் வந்து இருவரையுமே தடுத்துப் பிடிக்க, "என்னய்யா உண்மையை சொன்னா உனக்கு ரோசம் பொத்துக்கிட்டு வருதோ?
நீ அவ்ளோ நல்லவன்னா உன் பொண்ணை ஒழுக்கமா வளத்திருக்கணும்யா. நல்ல பெரிய இடத்துப் பையனாப் பார்த்து வளைச்சுபோடுன்னு ஏவிவிட்டுட்டு, இப்ப என்னையே அடிக்க வர்றியா? கொஞ்சம் முன்ன நீயும் பாத்ததான. உன் பொண்ணு என் பையன் கையை பிடிச்சி நின்னத?" என்றவர், "இந்தப் பொழைப்புக்கு வேற தொழில் செய்யலாம்யா?" என்று வேதாச்சலத்தைப் பார்த்து விட்டு இடப்பக்கம் திரும்பி தூ என்று துப்பினார்.
அதைக்கேட்டு, "செழியா" என்று அலறிய வேதாச்சலம், "இந்தாளு என்ன சொல்றாரு செழியா?" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த கல்லில் அமர்ந்து விட,
"சார், சார், ரிலாக்ஸ். ரிலாக்ஸா இருங்க. அவருகிட்ட நா பேசுறேன்" என்று அவர் நெஞ்சை நீவி, அருகில் இருந்த கடையில் நீர் எடுத்துக் கொடுத்துவிட்டு, அர்ஜுனின் தந்தையை நெருங்கிய செழியனும்,
"உங்களுக்கு அவ்ளோ தான் மரியாதை. யாரு முன்ன நின்னு யாரு பொண்ணப் பத்திப் பேசுறீங்க. சிற்பிகா கறந்த பாலுக்கு இணையானவ!" என்று கர்ஜித்தவன், "கொஞ்சம் முன்ன உங்க பையன் சொல்லிட்டுப் போனதை எல்லாம் கேட்டிங்கல்ல. எங்க பொண்ணு ஒன்னும் உங்க பையனைத் தேடி வரல. உங்க பையன் தான் காலேஜ்ணு கூடப் பாக்காம ஒன்ற மாசமா சிற்பி பின்ன சுத்தி இருக்கான். கோவிலுக்கும் வந்து இருக்கான்." என்று பல்லைக் கடித்துச் சொன்னான் செழியன்.
அதைக்கேட்டு, "பார்ரா" என்று குரூரமாக சிரித்துக் கொண்டவரும்,
"ஊசி இடம் கொடுக்காம, நூல் என்னிக்கு நுழைஞ்சிருக்கு? புரியாமப் பேசுறியேப்பா . அந்தப் பொண்ணுக்கு என் பையன் பின்னாடி வர்றது பிடிக்கலைன்னா அப்பவே அவ அப்பன்கிட்ட சொல்லி, அவரும் அவனை கண்டிச்சி இருப்பாருள்ள? ரெண்டு பேரும் செஞ்சாங்களா அத?" என்று கேட்டார் ஆவுடை.
அதில் வேதாவும், செழியனும், சிற்பியைப் பார்க்க, அவன் அன்று அத்தனை கூறியும், அர்ஜுனோடு பேசிச் சிரித்து, மிகப்பெரிய மடத்தனத்தை செய்து விட்டதில் தலை குனிந்து நின்றவளைக் கண்டு, "பையன் பெரிய இடம். அரசியல் வாரிசு வேற. யாருக்குமே ஆசை இருக்கும் தான். அதான் பொண்ணை நல்லா பழக விட்டு வேடிக்கை பாத்திருக்காரு இந்த பெரிய மனுஷன். அதும் என்னென்னத்த காட்டி என் பையனை மயக்கிச்சோ?. கட்டுனா இவளைத்தான் கட்டுவேன்னு அவன் என்கிட்டயே சொல்லிட்டுப் போறான். இருபது வருஷ அரசியல் வாழ்க்கையில உங்களை போல எத்தனை பேத்த பாத்திருப்பேன்." என்று அடிக்குரலில் உறுமியவரின் கூற்றில் உடல் எல்லாம் வெடவெடவென்று நடுங்கியது சிற்பிகாவிற்கு.
Comments
Post a Comment