ஏகாந்தம் 2. 2
அவனது அந்த குழறலிலே அவன் குடித்து விட்டு வந்திருப்பதை உணர்ந்து கொண்டவர்கள், அப்படியே சாப்பிடுவதை விட்டுவிட்டு
அவனை அருவருப்பாக நோக்கியபடி எழுந்து நிற்க...
"உன்ன, என்ன சொல்லி நான் இங்க அனுப்பி வச்சா நீ இங்க உன் குடும்பத்தோட சேர்ந்து கும்மாளம் போட்டுன்னு இருக்கியா? கறியும் சோறும் சும்மா களை கட்டுது லன்ச் டைம்ம்." என்று அங்கிருந்த உணவுத்தட்டையும் ஒரு எத்து விட்டான்.
அதில் சினம் கொண்ட திகழ்விழியோ,
"மாமா உங்களுக்கு மண்டைல ஏதாச்சும் இருக்கா? சாப்பிடுற சாப்பாட்டைப் போய் எத்தி விடுறீங்க. இந்த அரிசியும், கறியும் வாங்க அக்கா எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு?" என்று துடுக்கான பெண்ணாக எகிறிக் கொண்டு செல்ல...
"வாடி வா மொளச்சு மூனு இலை விடாத பொட்டக் கழுதை நீயி. என்கிட்டயே எகிறிட்டு வர்றியா? அப்டிலாம் எந்தக் கஷ்டமும் படாம, எல்லாரும் ஒன்னா சுகமா இருக்கத்தான நானும் ரொம்ப நாளா போராடிட்டு இருக்கேன். எங்க உன் அக்கா பிடி கொடுக்க மாட்டிராளே" என்றவனின் பார்வை அங்கிருந்த தேன்கமலியின் மேல் ஒருவித போதையோடு படிந்தது.
அப்பேச்சில் அவர்கள் இருவரையுமே மறைத்துக் கொண்டு முன்னே வந்த பூங்குழலி, "இப்போ எதுக்கு குடிச்சிட்டு வந்து இங்க சலம்பல் பண்ணிட்டு இருக்கீங்க. நான்தான் சூழ்நிலை பாத்து நீங்க கேட்டதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வீட்டுக்கு வந்துடுறேன்னு சொன்னேனே" என...
"நீ என்னடி சூழ்நிலை பாத்து கேக்குறது. எனக்கு வேணும்கிறத நானே கேட்டுக்கறேன்" என்று லேசாக தள்ளாடியவாறு, அங்கே முந்தானையால் வாயைப் பொத்தியடி அழுது கொண்டிருந்த மாமியாரை நெருங்கியவன், தொழில் தொடங்குவதற்காக பெரிய தொகை ஒன்று வேண்டும் என்று ஏதோ கொடுத்து வைத்தவன் போல் சட்டமாகக் கேட்டான்.
அதில் மென்மேலும் அழுது அரற்றிய குமுதா, "வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை நீங்க. தேனு பொம்பளப் புள்ளையா இருந்தும் ஒத்தை ஆளா நின்னு எல்லாம் பாக்குறான்னு தெரிஞ்சும் இப்டி அடிக்கடி காசு கேக்குறது உங்களுக்கே நல்லா இருக்கா? திடுதிப்புன்னு வந்து இவ்ளோ பெரிய தொகை வேணும்னா நாங்க எங்க போவோம்" என்றார்.
பெண்களைப் பெற்ற வயிறு பற்றி எறிந்தது. வரதட்சணை எனும் கொடும் நோயால்.
அதில் அசூசையாக அவரைப் பார்த்தவனும், "ச்சே ச்சே. இப்டி சும்மா அழுது சீன் போடுறது மொதோ நிறுத்துத்த. ஆறு வருசம் முன்னயும் இப்படித்தான் அழுது நடிச்சி இந்த கருவாச்சியை என் தலைல கட்டிட்ட. தூரத்து சொந்தமாச்சேன்னு டவுரி கூட பெருசா வாங்காமா நானும் இத்தனை வருசமா இவளோட குப்பை கொட்டி ரெண்டு புள்ளையும் பெத்துட்டேன். இப்போ தான் மாமாவும் போய் சேந்துருச்சுல்ல. வயசுப் பொண்ணுகள வச்சுட்டு நீ ஏன் தனியா கஷ்டப்படணும்னு நல்லதா ஒரு யோசனை சொன்னா எல்லாரும் என்ன வில்லன் போல பாக்குறீக." என்று எட்டு முழத்திற்குப் பேசியவன், "ஒன்னு பொண்ணைக் கொடு. இல்லை அதுக்கு ஈடா பொருளைக் கொடு" என்று வாய்கூசாது இரக்கமே இல்லாமல் கட்டிய மனைவியின் முன்னிலே அவளுடைய தங்கையைப் பார்த்து நாய் போல் ஜொல்லை வடித்தான் சேகர்.
அதைக்கேட்டு, "யோவ்... உனக்கு அவ்ளோ தான் மரியாதை" என்று திகழ் சீறிக் கொண்டு கிளம்ப...
அவள் கையைப் பற்றி நிறுத்திவிட்டு, "அய்யோ அய்யோ உனக்கு ஏன்யா புத்தி இப்டிப் போகுது. அது வாழ வேண்டிய புள்ளையா. அத்தோட வாழ்க்கையை நாசமாக்க நினைக்காத. காலம் முழுசும் நான் உனக்கு செருப்பா கெடக்கேனே. அது போதலையா?. என் தங்கச்சியை விட்டுடு" என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் பூங்குழலி.
வாழ்வின் இறுதிவரை தன்னை கண்கலங்காது பார்த்துக் கொள்வான் என்று எண்ணி கை பிடித்த கணவன் தன் தங்கையையும் தாரமாக்கத் துடிக்கிறான் என்ற வேதனையை விடவும், அவனிடம் இருந்து எப்படியாவது தன் தங்கையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே குழலியின் மனமெங்கும் புண்ணாய் அரித்தது.
அவள் அழுகையில் மேலும் கடுப்பாகியவன், "ஏய் என்னடி... ஆத்தா வீட்டுக்கு வந்து கறியும் சோறும் திங்கவும் பலம் கூடிப் போச்சோ?. பிஸ்னஸ் ஆரம்பிக்க காசு வாங்கிட்டு வாடின்னா, நல்லா மூக்கு முட்ட தின்னுபுட்டு என்கிட்டயே எகிறிகிட்டு வார" என்று அவள் கன்னத்திலும் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான்.
சற்று முந்தைய அவனின் அருவருப்புப் பார்வையிலே கூசிப் போனவளாய் அத்தனை நேரமும் அவன் முன்னே வராது ஒதுங்கி நின்றிருந்தவள், தமக்கையை அரைந்ததும் சீறும் பாம்பாய் முன்னே வந்து, "போதும் நிறுத்துங்க. உங்களுக்கு என்ன பிஸ்னஸ் பண்ண பணம் தானே வேணும். கூடிய சீக்கிரம் ரெடி செஞ்சு தர்றேன். இனிமேல் அக்கா மேல கை வைக்கிற வேலை எல்லாம் வேணாம் சொல்லிட்டேன்" என்று தமக்கையின் கையைப் பற்றி பின்னே இழுத்துக் கொண்டு கடுமையாக எச்சரித்தாள் தேன்கமலி.
அதில் அவளை தலையூடு பாதம் ஒரு மாதிரியாகப் பார்த்தவன், "இவ்ளோ பெரிய தொகையை நீ எப்டி ரெடி பண்ணுவ கண்ணு. அதுக்கு பதிலா மாமா சொல்றபடி கேளு. எல்லாரும் ஒன்னா ஒரே வீட்டுல சந்தோசமா" என்று பேசிக்கொண்டே சென்றவனை முடிக்கக் கூட விடாமல்...
"ச்சீ... நிறுத்து. இவ்ளோ நாளா அக்கா புருஷன்னு கொஞ்ச நஞ்சம் இருக்க மரியாதையும் கெடுத்துராத. நீ என்ன குட்டிக்கரணம் போட்டாலும் நீ நினைச்சது நடக்காது. உனக்கு பணம் தான வேணும். நான் ரெடி பண்ணிட்டு போன் பண்றேன். வந்து பொருக்கிட்டு போயிக்க. இப்போ மொதோ கிளம்பு" என்று வாசலை நோக்கிக் கை காட்டினாள்.
அவனோ அப்பொழுதும் அசராது,
"ஊரெல்லாம் சுத்திட்டு தான் மாமன்கிட்ட வருவேன்னு சொல்லுற. ம்ம்ம்ம்... சரி வெயிட் பண்ணுறேன்." என்று அவளைப் பார்த்து ஈ என்று இளித்து நிற்க, அவனைப் பார்வையாலே சுட்டெரித்தப்படி தங்கையை நெருங்கிய பூங்குழலியும்,
"தேனு நான் நான். என்னால உனக்கு ரொம்ப கஷ்டம்லடி. என்ன மன்னிச்சுடுடி. இது பிணம் தின்னிக் கழுகுகள் வாழுற உலகம்டி எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் உனக்குன்னு ஒரு வாழ்க்கையத் தேடிக்கடி." என்று தங்கையை அணைத்துக் கொண்டு கதறியவள், இனியும் கணவனை இந்த வீட்டிற்குள் நிற்கவிடக் கூடாது எனபது போல், "வாங்க போலாம்." என்று அவன் கையையும் பற்றி இழுத்துக் கொண்டு குழந்தைகளோடு விறுவிறுவென வெளியேறி இருந்தாள்.
முழுதாக மூன்று மணி நேரம் கூட அன்னை வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க இயலாது நைந்து போன உள்ளத்தோடு ஓடோடிச் சென்றவளின் முதுகையே பார்த்து இருந்தவளுக்கு அவள் பின்னோடே கணவன் என்று போனவனை அப்படியே கழுத்தை நெறித்து கொன்று விடுமளவு அப்படி ஒரு ஆத்திரம் பொங்கிப் பெறுகியது.
இருந்தும் கணவன் குடிகாரனாய், பொம்பளைப் பொறுக்கியாய் எப்பேர்ப்பட்ட கேடுகெட்டவனாக இருந்தாலும் அவன் மனைவியின் வாழ்க்கையில் ஒரு கணவனுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை தங்கள் தந்தையின் இழப்பிலே உணர்ந்து கொண்டவள் தமக்கையோடு சேர்த்து தன் எதிர்காலத்தையும் எண்ணி கண்ணீர் கோடுகள் கன்னத்தில் இறங்க ஓய்ந்து போய் அமர்ந்து இருந்தாள் தேன்கமலி.
சற்று முன்னர் கலகலப்பாக இருந்த அந்த சின்னஞ்சிறிய வீடோ இப்பொழுது இருள் சூழ்ந்த கூடாரமாய் தோற்றம் அளிக்க, அவர்கள் தாய் குமுதா ஒரு பக்கம் அமர்ந்து அழுது இருமலையும் இழுத்துக் கொள்ள, அவருக்கு வெந்நீர் கொடுத்து படுக்க வைத்து தமக்கையிடம் வந்த திகழ்விழியோ, "இப்டி ஒரு ஆளு கூட இருக்குறதுக்கு அக்கா நம்ம வீட்லயே இருக்கட்டும்க்கா. அந்த ஆள் மேல போலீஸ்ல கேஸ் கொடுக்கலாம்ல" என்றாள் ஆத்திரம் மிகுந்த குரலில்.
வயதில் சிறியவளானாலும் சூழ்நிலையும், சுற்றி நடப்பவையும் பெரிதாய் பேச வைத்தது அவளை.
அதில் சற்றே தெளிந்து, தங்கையின் முகத்தை ஏறிட்டவள், "இதெல்லாம் பேசவும் கேட்கவும் தான் நல்லா இருக்கும் திகழ். ஆனா இங்க நிதர்சனம் ரொம்பவே கொடுமையானது. அப்டி சட்டுன்னு உறவை முறிச்சிக்கிற சமூகத்தில நாம வாழலை. நீ சின்ன பொண்ணு உனக்கு சொன்னாலும் புரியாது. இதெல்லாம் மனசுல போட்டு உலப்பாம போய் படி. எல்லாம் நான் பாத்துக்கறேன்" என்று தங்கையையும் அனுப்பி வைத்தவள் கீழே சிதறிக் கிடந்த சாதத்தையும் அள்ளி கோழிகளுக்கு போட்டுவிட்டு, பணத்திற்கு என்ன செய்வது என்று சிந்தனையாய் அமர...
அவளது கைபேசி, "கமழினிம்மா" என்ற பெயரைத் தாங்கி பெரிதாக அதிர்ந்தது.
கைபேசி அழைத்தும் கூட அதை எடுக்கத் தோணாது அமர்ந்திருந்தவள், அது மீண்டும் மீண்டும் அழைக்கவும் சற்று கடுப்புடனே உயிர்பித்து செவியில் பொருத்தினாள்.
அந்தப்புறம், "ஹேய்... தேனு..." என்று அதிகாரமாக அழைத்த வயதான பெண்குரலோ, "நான் சொல்றது கொஞ்சம் கவனமாக் கேளு. உனக்கே தெரியும் நாங்க எல்லாரும் என் பெரிய பொண்ணு வீட்டுக்கு வந்துருக்கோம்னு. ஆனா இன்னிக்குன்னு பார்த்து இனிம்மாக்கு பாத்துருக்க மாப்பிள்ளை அவளை பொண்ணு பார்க்க வர்றாராம். நாங்க உடனே கிளம்புனாலும் அவர் வீட்டுக்கு வர்றதுக்குள்ள நாங்க வந்து சேர முடியாது. அதனால" என்று சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்தவர்,
"நீ உடனே கிளம்பி நம்ம வீட்டுக்கு போ. அங்க எல்லாம் போட்டது போட்டபடி கெடக்கும். மளமளன்னு சுத்தம் பண்ணி முடிச்சிட்டு, ஏதாவது ஸ்வீட்டும், காரமும், ஜூசும் செஞ்சு வச்சுடு. அதுக்குள்ள மாப்பிள்ளை வந்தாருன்னா அவரை நல்லபடியா வரவேத்து கவனி. நாங்க டூ அவர்ஸ்ல வந்து சேர்ந்துடுவோம். துணைக்கு பெருமாயிய கூப்பிட்டுக்கோ. அப்றம் முக்கியமான விஷயம். மாப்பிள்ளை ரொம்பப் பெரிய இடம். நகைக் கடையே நாலு இருக்கு. கொஞ்சம் நல்ல உடுப்பா உடுத்திட்டுப் போ. மரியாதையா பேசு. நாங்க வந்துட்டே இருக்கோம்னு சொல்லு. என்ன புரிஞ்சுதா? சரி நான் வைக்கறேன். சீக்கிரம் கிளம்பு" என்று அவள் பதிலைக் கூட எதிர்பாராமல் படபடவென்று பற்பல கட்டளைகளை இட்டு விட்டு வைத்து இருந்தார் வைஜெயந்தி.
தேன்கமலி சமையல் மற்றும் இதர வீட்டுப் பணிகள் செய்யச் செல்லும் மொக்கு வீட்டின் குடும்பத் தலைவி.
அவரது மகள் கமழினியைத் தான் பெண் பார்க்க மாப்பிள்ளை வருவதாகக் கூறி அவனை வரவேற்கப் பணித்திருந்தார் வைஜெயந்தி.
ஏற்கனவே சற்று முன்னர் தன் வீட்டில் நடந்து முடிந்த களேபரங்களை நினைத்தே பெரும் கவலையில் இருந்தவளுக்கு இந்த அலைபேசிச் செய்தி வேறு அதீத எரிச்சலைக் கொடுத்தது.
இன்று தமக்கை வரும் காரணத்தால் அவள் நேற்றே விடுமுறை சொல்லி விட்டுத்தான் வந்து இருந்தாள்.
அவர்களும் மகள் வீட்டிற்குச் சென்று இருந்தவர்கள் இதோ அழைத்து வேலை சொல்லி விட்டார்கள். அதுவும் அவளால் முடியுமா என்று கேட்கக் கூட இல்லை. செய்து விடு என்ற கட்டளை மட்டும் தான்.
தன்னைப் போல இல்லா நிலையில் இருப்பவர்கள், முடியும் முடியாது என்று தன் விருப்பம் கூறும் வாய்ப்பை எதிர்பார்க்க முடியுமா என்ன???
அவர்கள் கொடுக்கும் சம்பளம் தான் தன் குடும்பத்திற்கே வாழ்வாதாரம் எனும் பொழுது, அவர்கள் போடும் இதுபோலானா உத்தரவுகளையும் நிறைவேற்றித் தானே ஆக வேணும்.
சிறிதான பெருமூச்சை வெளியேற்றியபடி தன் கவலைகளை ஒதுக்கி எழுந்தவள், கமழினியின் அன்னை கூறியது போல முன்பு கமழினி கொடுத்திருந்த நல்லதொரு உடையை எடுத்து அணிந்து ஆயத்தமாகினாள் தேன்கமலி.
"இன்னிக்கு லீவுன்னு சொன்னியேம்மா?" என்று கேட்ட தாயிடம் காரணமும், தங்கையிடம் பத்திரமும் கூறிவிட்டு வீதியில் இறங்கியவள் தான் பணி செய்யும் கமழினியின் வீட்டை நோக்கி விறுவிறுவென்று நடக்கத் துவங்கினாள்.
அதேசமயம், "ம்ம்ம்ம் ஓகேம்மா. டெஃபனட்டா இன்னிக்கு போய் பொண்ணை பாத்துடுறேன். இல்லையில்ல நீங்க வொர்ரி பண்ண வேண்டாம். அட்ரஸ் மட்டும் வாட்சப் பண்ணிடுங்க. பொண்ணு பேர் என்ன சொன்னீங்க... கமலியா?" என்று அலைபேசியில் பேசியபடி தன் நகை மாளிகையில் இருந்து பெண் பார்க்கச் செல்ல ஆயத்தம் ஆகினான் அகத்தியன் கிருஷ்ணா.
Andha kamali thaenkamali agathiyan
ReplyDelete