ஏகாந்தம் 2. 1

 "விநாயகனே வினை தீர்ப்பவனே." என்ற காலை நேரத்து பக்திப் பாடல் அந்த சிங்காரச் சென்னையின் நடுத்தர வாசிகள் வசிக்கும்  பகுதியில் இருந்த ஒரு பெரிய கோவிலின் ஒலிப்பெருக்கியில் சப்தமாக ஒலித்துக் கொண்டிருக்க,

"அச்சோ, விநாயகனே வினைதீர்க்க கிளம்பிட்டாரே. பொங்கல் தீரப் போகுது" என்று பதறியபடி ஓட்டமும் நடையுமாக அந்த கோவில் வளாகத்தினுள் நுழைந்தாள் தேன்கமலி.


அங்கோ சன்னிதியின் வலது புறம் பெரிதான வரிசையில் பக்தர்கள் நின்று, அங்கு கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சக்கரைப் பொங்கலை வாங்கிச் சென்று கொண்டிருக்க, அதை திருப்தியாகப் பார்த்துவிட்டு சந்நிதியின் உள்ளே நுழைந்தவள் இரு நிமிடங்கள் நின்று வேகவேகமாக வணங்கி, இரண்டு உக்கியும் போட்டுவிட்டு ஓடிச்சென்று அந்த வரிசையின் ஊடாலே நைசாக நுழைந்து கொண்டாள்.


அதில் அவளுக்குப் பின்னே வரிசையில் நின்றிருந்தவர்கள் எல்லாம், "ஏம்மா பின்னாடி நிக்கிற நாங்க எல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலையா. வந்ததும் ஊடால புகுர்ற" என்று சப்தமிட, அது செவியில் விழாத வண்ணம் சுற்றியும் முற்றியும் வேடிக்கை பார்ப்பது போல் நின்று கொண்டவளுக்கு இப்படியான திட்டுக்கள் எல்லாம் வெகு பரிட்சயம் என்று சொல்லாது சொல்லியது அவள் நின்று இருந்த தோரணை.


ஒருவழியாக சில தகிடு தத்தங்கள் செய்து ஆவி பறக்கும் சூட்டோடு இருந்த அந்த சக்கரைப் பொங்கலை பயபக்தியோடு இரண்டு பேப்பர் கிண்ணங்களில் வாங்கிக் கொண்டவள், அதன் சூடு தாளாது சுடிதார் சாலின் முனையை எடுத்து அதன் அடியில் வைத்துக் கொண்டவாறே கோவில் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.


அத்தனை நேரம் அவளையே பார்த்து இருந்த ஒரு பெரியவரும்,

"ஏ பொண்ணு... அடிச்சு பிடிச்சி ஊடால புகுந்து பொங்கலை வாங்கிட்டு, சாப்பிடாம எங்க போற. சூடு ஆறுறதுக்குள்ள உக்காந்து சாப்பிட வேண்டியதான?" என்றார்.


அதில் அவரைப் பார்த்து அசடு வழிந்து சிரித்தவளும், "இல்லம்மா இது நான் சாப்பிட வாங்கல்லை. என் அக்காக்கு இந்த பொங்கல்னா ரொம்ப பிடிக்கும். அவ இன்னிக்கு ஊர்ல இருந்து வர்றா. அதான் வாங்கினேன்." என்றவள் அந்தப் பெண்மணியின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் வந்த வேகத்தை விட விறுவிறுவென கோவிலை விட்டு வெளியேற...


"அக்காக்காகவா அடிச்சு பிடிச்சி பொங்கல் வாங்குச்சு இந்தப் பொண்ணு. இந்தக் காலத்தில இப்டி ஒரு பொண்ணா?" என்று ஆச்சர்யம் காட்டியவரும் தன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.


சூடு ஆறும் முன் வீட்டிற்குச் செல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில், வந்தது போலவே ஓட்டமும் நடையுமாக வியர்க்க விறுவிறுக்க ஓடிச் சென்றவள், அடுத்த பத்து நிமிடத்தில் கோவிலுக்கு மூன்று வளைவுகள் தள்ளி இருக்கும் தங்களின் சிறிய வீட்டை அடைய, "ஐ... சித்தி..." என்று ஓடிவந்து அவள் காலைக் கட்டிக் கொண்டதுகள், ஐந்து மற்றும் மூன்று வயதுகளில் இருந்த இரண்டு பெண் பூஞ்சிட்டுக்கள்.


அவர்களுக்குப் பின்னேயே, "தேனு..." என்று அழைத்தபடி அவள் அக்காள் பூங்குழலியும் நின்று இருக்க...


"அக்கா... குட்டிகளா... வந்துட்டிகளா?" என்று அழைத்தபடி கையிலிருந்த பொங்கல் கிண்ணங்களை வீட்டினுள் விரித்திருந்த பாயின் மேல் வைத்தவள், "இங்கன இருக்க ஊர்ல இருந்து எங்களை பாக்க வர்றதுக்கு, உனக்கு இத்தனை நாள் ஆச்சா?" என்று தமக்கையை தோள் அணைத்து விடுவித்தவள் குழந்தைகளையும் கொஞ்சிக் கொண்டாள்.


தமக்கை காலை வருவதாக நேற்று இரவே கூறி இருந்ததால், விடிந்தும் விடியாத காலைப் பொழுதிலே எழுந்து, அவளுக்கு மிகவும் பிடித்த அந்த கோவில் பிரசாதத்தை வாங்கி வந்திருந்தாள் தேன்கமலி.


பக்கத்து ஊரில் இருந்தாலும் வருடத்தில் சில முறை மட்டுமே அன்னை வீட்டிற்கு வந்து செல்லும் தமக்கைக்கு ஏதோ அவளால் முடிந்த ஒரு சின்ன கவனிப்பு. 


தங்கையின் அந்தக் கேள்வியில் கண்ணை எட்டாத முறுவல் ஒன்றைப் பூத்தவள் அவள் கேள்வியை தவிர்த்தபடி, "எப்டிடி இருக்க தேனு?

விழி ஒழுங்கா காலேஜ் போறாளா? அம்மாக்கு இப்போ பரவாயில்லையா?" என்று உள்ளறையில் படுத்திருந்த தன் தாயையும் பார்த்தவாறே வினவ...


"நாங்க இருக்கது இருக்கட்டும். நீயும் பிள்ளைகளும் ஏன் இப்டி எலும்பு தோளுமா இருக்கீங்க? மாமா வேலைக்கு எல்லாம் ஒழுங்கா போறாரு தான?" என்றாள். குரல் அத்தனையாய் கவலை காட்டியது.


"அதெல்லாம் போகதான் செய்றாரு" என்றவள், "பிரசாதம் நம்ம விநாயகர் கோவில்லையா?" என்று கேட்டு பாயில் அமர்ந்து, பிள்ளைகளையும் அமர்த்தி பொங்கலை எடுத்து ஊட்டலானாள்.


தமக்கை பேச்சை மாற்றுகிறாள் என்று புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையில் சில நொடிகள் பார்த்து நின்றவள்,

"பாப்பாக்கு எத்தனை நாள் ஸ்கூல் லீவுக்கா? அதுவரை இருப்பல்ல?" என்று வினவியபடி அவளும் தமக்கை குழந்தைகளுக்கு பொங்கலை எடுத்து ஊட்டிவிட்டாள். அப்படியே தமக்கைக்கும். 


சிறியவளின் அந்தக் கேள்வியில் வலி நிறைந்த பார்வை ஒன்றைச் செலுத்தியவள், "அதுக்கு நீ இவ்ளோ அழகா பிறக்காம இருந்துருக்கணும். இல்லைன்னா என் புருஷனாவது ராமானா இருந்துருக்கணும் தேனு" என்று சிரித்தவளைப் பார்த்து,


"க்கா... அவரு, அவரு... இன்னும்?" என்று தொடங்கியதை முடிக்க இயலாது வெகுவாகக் கலங்கினாள் தேன்கமலி.


அதில் "ப்ச்..." என்று உச்சுக் கொட்டியவளும், "அதுலாம் நாய் வால் டி. நிமித்த முடியாது.

அது நடு வீட்டுல வந்து கொலைக்கறதுக்குள்ள உனக்கு ஒரு நல்லது நடந்திட்டா தான் எனக்கு நிம்மதி" என்று தங்கையின் தலையைத் தடவினாள் பூங்குழலி.


அதில் தமக்கையின் கையைப் பற்றிக் கொண்டவளும், "இந்த ஆம்பளைங்க மட்டும் ஏன்க்கா இப்டி இருக்காங்க. அழகான, அன்பான பொண்டாட்டி, ரெண்டு பிள்ளைகன்னு இருக்கும் போது எப்டி இவங்களுக்கு அடுத்த பொண்ணு மேல ஆசை வருது?" என்று ஆதங்கமாகக் கேட்க...


"பொட்டச்சிக ஆம்பிளை துணை இல்லாம ஊருக்குள்ள தனிச்சி நின்னா எல்லாருக்குமே வாலாட்டி பாக்கதான் தோணும் போல." என்றவள், "ஆனா ஆம்பிளைகள்ளையும் நல்லவங்க இருக்கத்தான் செய்றாங்க தேனு. செத்து போன நம்ம அப்பா போல. கணவன் அமைறதும் இறைவன் கொடுக்கற வரம்தான். அது என்னப்போல ஒரு சில பெண்களுக்கு சாபமா ஆகிடுது" என்றவள், "ம்ம்ம்ம்... என் கதையைப் பேசிட்டு இருந்தா இன்னிக்கு நாளே பத்தாது. நீ என்ன செய்ற?. இப்பவும் அந்த மொக்கு வீட்டுக்கு தான் வேலைக்குப் போறியா? காலேஜ் படிப்ப முடிக்க ஏதும் வழி இல்லியா? அம்மாவை எப்போ டாக்டர்ட்ட காட்டுன? மொழிக்கு பீஸ்லாம் எப்படி சமாளிக்கற?" என்று கேள்விக் கணைகளை அடுக்க...


உள்ளே படுத்திருந்த அவர்களின் தாய் குமுதா இரும ஆரம்பித்தார்.


அதில் சகோதரிகள் இருவரும், "அம்மா..." என்று அவரிடம் விரைய,

அங்கிருந்த பிளாஸ்கில் இருந்த சுடுநீரை ஊற்றி அன்னையிடம் கொடுத்த கமலி தமக்கையின் கேள்விகளுக்கும் பதில் கூறி முடித்தாள்.


அப்பொழுது தான் உறக்கத்தில் இருந்து விழித்த குமுதாவும் பெரிய மகளின் வருகையை உணர்ந்து, "குழலி..." என்று மலர்ந்து சிரித்து மகளின் கையைப் பற்றிக் கொண்டார்.


"ம்ம்மா..." என்று அவர் தோளில் சாய்ந்து கொண்டவளும், "இப்போ எப்டிம்மா இருக்கு. வீசிங் குறைஞ்சிருக்கா?" என்று வினவ...


"ம்ம்ம்ம்... பரவாயில்லைமா. சும்மா படுத்துருந்தா ஒன்னும் பிரச்னை இல்லை. ஆனா வேலை வெட்டி பாத்து, தண்ணில புழங்கினா அன்னிக்கு முழுசும் இருமலும் வீசிங்கும் அதிகமா இருக்குடா. உன்னைப்போல உங்கப்பாரு இருந்தப்பவே தேனுக்கும் ஒரு நல்லது பண்ணாம இப்போ அவளுக்கே பாரமா படுத்துக் கிடக்கேன்" என்றவர் அழுகையினூடே மீண்டும் இருமத் தொடங்கினார்.


சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த நடேசனின் மனைவிதான் குமுதவள்ளி.


திருமணம் ஆன நாளில் இருந்தே கணவன் மனைவி இருவருமாகச் சேர்ந்து, காலை மாலை உணவுகளும், பலகாரங்களும் சமைத்து வெளியில் சென்று விற்று தங்கள் வயிற்றுப் பாட்டை ஓட்டியவர்களுக்கு பூங்குழலி, தேன்கமலி, திகழ்விழி என்று மூன்று பெண் குழந்தைகள்.


குமுதாவின் கைபக்குவம் நன்றாக இருந்த காரணத்தால் அவர்களின் உணவுக்கு என்று வாடிக்கையாளகள் பெறுக, ஓரளவு வருவாயும் கிட்டியது.


மூன்றுமே பெண் குழந்தையாகி விட்டதால், குறைவான வாடகையில் வீடு, பசிக்கு மட்டுமே உணவு என்று சிக்கனமாக குடும்பம் நடத்தி, பூங்குழலியை தூரத்துச் சொந்தமான சேகருக்கு மணம் முடித்துக் கொடுத்தார்கள்.


அவளை விட நான்கு வயது இளையவளான தேன்கமலி அருகில் இருந்த கல்லூரியின் முதல் வருடத்திலும், அவளை விட மூன்று வயது இளையவளான திகழ்விழி பள்ளியிலும் பயின்று கொண்டு இருந்த தருணத்தில், தந்தை நடேசனை ஒரு விபத்தில்

பறி கொடுக்கும் வரை மிகவும் மகிழ்ச்சியாகவே சென்று கொண்டு இருந்தது அவர்களின் வாழ்க்கை.


என்னதான் ஆணுக்குப் பெண் நிகர் என்று கூறி வந்தாலும், நடேசனின் மறைவுக்குப் பின்னர் தலைவன் இல்லாத வீடு, வேலி இல்லாப் பயிர் போலத்தான் காட்சி படுத்தப்பட்டது இந்த சமூகத்தின் மத்தியில். 


பருவ வயதுப் பாவையாய் ஒரு பெண்ணையும், வாயைக் கட்டத் தெரியாத வயதில் ஒரு பெண்ணையும் வைத்துக் கொண்டு வயிற்றுப் பாட்டிற்கே திண்டாடத் தொடங்கிய அன்னையைப் பார்த்து தானாகவே படிப்பைக் கைவிட்டு அன்னைக்கு உதவியாக இருந்து கொண்டாள் தேன்கமலி.


சிறிய மகளின் படிப்பாசையை அறிந்து இருந்த குமுதாவிற்குத் தான் மகள் படிப்பை பாதியிலே விட்டுவிட்டு குடும்ப பாரத்தை ஏற்றுக் கொண்டதில் ஏக வருத்தம் என்றாலும், உணவு, உடை, மருந்து மாத்திரைகள், உடன்பிறப்புக்களின் தேவைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளே இங்கு ஆட்டம் கண்டு நிற்க, கல்வி என்பது எட்டாக்கனியாகத் தான் மாறிப் போனது அந்த ஏழைப் பெண்ணிற்கு.


அன்றிலிருந்தே தந்தை இழந்த தன் துக்கத்தை அடக்கி, பொருளாதார ரீதியாகவும் அவர் இடத்தில் இருந்து அன்னைக்கு பக்கபலமாக இருப்பவள், பூங்குழலியின் இரண்டாவது பிரசவத்தைக் கூட தான் தான் முன்னின்று பார்த்து அனுப்பி வைத்தாள்.


கூடவே இப்பொழுது தான் கல்லூரியில் அடி எடுத்து வைத்திருக்கும் தங்கைக்கும் உணவு, உடை, கல்லூரிக் கட்டணம் அனைத்தும் செய்பவள், உடல்நிலை குன்றிப் போன அன்னைக்கும் சேர்த்து அன்னையாக இருக்கின்றாள் என்று சொன்னால் அது துளியும் மிகையில்லை.


ஒரு வருடம் முன்னர் வரை நன்றாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த குமுதாவிற்கு  நுரையீரலில் தொற்று ஏற்பட்டு உடல் சுகவீனம் கொண்டு விட, பலகாரம் செய்து விற்பதும் நிறுத்தப்பட்டு தெரிந்தவர் மூலம் வீட்டுப் பணிகள் செய்யும் பணிப்பெண்ணாய் மாறிப் போனவள் தன் ஒட்டு மொத்த குடும்பத்திற்குமான ஆதாரமாய் தன்னை மாற்றிக் கொள்ள...


இரண்டு மாதத்திற்குப் பிறகான தமக்கையின திடீர் வரவு அவளது வயிற்றில் சற்று புளியையும் கரைக்கச் செய்தது.


கணவனுக்கு தன் தங்கையின் மீது தவறான எண்ணம் என்று தெரிந்த நாளில் இருந்தே அன்னை வீடு செல்வதை குறைத்து கொண்ட குழலி, இறுதியாக வந்து சென்றதும் கூட கணவனின் பணச் சுரண்டல் இம்சை தாளாமல் தானே.


பலவித கவலைகளும், கலக்கங்களும் இருந்தாலும், ஏழைகளுக்கும் வயிறு என்ற ஒன்றை படைத்துள்ளானே இறைவன்.


மக்களைப் பற்றிய கவலையோடு இருமலும் சேர்ந்து, அழுது அரற்றிய அன்னையை அதட்டி அமைதி படுத்தி உணவு மற்றும் மாத்திரைகளும் கொடுத்தவள், வெகு நாட்கள் கழித்து வந்திருக்கும் தமக்கைக்கும், குழந்தைகளுக்கும் ஆட்டுக்கறி எடுத்து வந்து ,அவளோடு அளவளாவியபடியே மதிய விருந்தும் சமைத்து முடித்தாள் தேன்கமலி.


மூன்று மாதங்கள் முன்னர் வந்து சென்ற தீபாவளிக்குப் பிறகு இன்று தான் அவர்கள் வீட்டில் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டது.


பெரிய தமக்கை வரும் செய்தி அறிந்ததால் திகழ்விழியும் கல்லூரிக்கு அரை நாள் விடுப்பு எடுத்து வீட்டிற்கு வந்து விட, வெகு நாட்கள் கழித்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட மதிய உணவு வேளை சற்று கலகலப்பாகவே நகர்ந்தது. 


ஏழைகளின் அந்த கலகலப்பிற்குக் கூட ஆயுள் மிகவும் கம்மிதான் போல.


அவர்கள் முக்கால்வாசிச் சாப்பாட்டில் இருக்கும் பொழுதே, "ஏய் குழ்ழல்லி ..." என்று குழறலாக அழைத்தபடி அங்கே வந்து சேர்ந்து இருந்தான் அந்த வீட்டின் மூத்த மருமகன் சேகர்

Comments

Post a Comment

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக