நூலகம் -13.2
என்னதான் நாட்களின் ஓட்டத்திலும், கணவன் வீட்டினரின் அனுசரணையிலும் அன்றைய நிகழ்வுகளை ஒதுக்கி ஓரளவு சகஜமாகி இருந்தாலும், அர்ஜுன் என்ற பெயரைக் கேட்டாலே, இப்பொழுதும் கூட அவள் உடலும் மனதும் ஒருவித அதிர்வுக்கு உள்ளாவதை அவளாலே தடுக்க இயலவில்லையே. வெறுமனே ஒரு மாதம் மட்டுமே காதல் என்று பின்னே சுற்றிவிட்டு மாதக் கணக்கில் மாயமாகிப் போயிருக்கும், அர்ஜுனின் நினைவுகளே தன்னை இவ்வளவு பாதிக்கும் பொழுது, தோழியின் நிலையை அவளால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிய, "உன்னோட பீலிங்ஸ் எனக்குப் புரியுதுடி. ஆனா உனக்கு எப்படி ஆறுதல் சொல்லன்னு தான் எனக்குத் தெரியல" என்று யாழினியின் கையைப் பற்றினாள் சிற்பி.
அவள் குரலில் தெரிந்த மாற்றத்தில் தான், அர்ஜுன் பெயரைக் கூறி சிற்பியை சிரமப்படுத்தி விட்டதை உணர்ந்து, "ஹேய் சாரிடி. ஏதோ ஒரு நினைப்புல, அந்த அர்ஜுன் பேரைச் சொல்லி, உன்ன வருத்தப்பட வச்சுட்டேன். ரியலி சாரிடி" என்று தோழியின் கையை அழுத்திக் கொடுத்தாள் யாழினி.
"ஹேய் அதெல்லாம் ஒன்னும் இல்லடி. நீ பீல் பண்ணாத" என்றவள்,
"முன்ன எனக்கு நடந்த விஷயங்களும், இப்ப நீ ஃபீல் பண்றதும் பாக்குறப்போ தான், அன்னிக்கு ட்ரைனர், நமக்கு எவ்ளோ நல்லதை சொல்லி இருக்காங்கன்னு புரியுது. இது படிக்கிறதுக்கு மட்டுமான ஸ்டேஜ். கண்ட நினைப்பும் வேண்டாம்னு அவ்ளோ சொன்னாங்களேடி. ஆனா நாமதான் கேக்கவே இல்ல. காலேஜ் லைஃப்னா காதலும் தான் இருக்கணும்னு, லூசுத்தனமா பிளாசபி பேசி, இப்ப கிடந்து அவஸ்தை படுறோம்" என்றவள், "ராம்சாரை வழிக்குக் கொண்டு வர இப்ப எந்த சோர்சும் இல்லியா?" என்றும் கேட்டாள்.
"இருந்த ஒரு சோர்சான உங்க மேட்டர கூட சொல்லிட்டேன்டி. ஆனா அவரு எதையும் நம்ப மாட்டிக்கிறாரு" என்றவள், செழியனும் சிற்பியும் காதலர்கள் என்று ராமிடம் கூறியதை தோழியிடமும் கூற,
"என்னது லவ்வர்ஸா? உனக்கென்ன பைத்தியமாடி? எதுக்கு இப்டிலாம் சொல்லி வச்ச? அய்யயோ ட்ரைனருக்கு தெரிஞ்சா நாம ரெண்டு பேரும் அவ்ளோதான்" என்று அவள் பாட்டில் திட்டத் தொடங்கி விட்டாள் சிற்பி.
"ஏய் ஏய் சிற்பி, பதறாதடி ப்ளீஸ். அண்ணாக்கு பயந்து தான் உங்களுக்கு மேரேஜ் ஆனதை சொல்லாம, சும்மா லவ்வர்ஸ்னு மட்டும் சொல்லி வச்சேன்டி. அப்டி சொன்னாவாச்சும் ராமும் என் லவ்வை ஏத்துப்பாருன்னு நினைச்சேன். ஆனா அவரு, கொஞ்சம் கூட நம்பலடி" என்று கரகரத்த குரலில் கூறினாள்.
அதில் அவளை முறைத்துப் பார்த்தவளும், "ட்ரைனர் சார் ஒரு மிஸ்டர் பர்ஃபின்னு இங்க இருக்க எல்லாருக்குமே தெரியும். அவங்க போய் ஒரு ஸ்டுடென்ட்ட லவ் பண்றாங்கன்னு சொன்னா யாருடி நம்புவா?" என்றாள் சிற்பி.
அவள் கரத்தை சட்டென்று பற்றிக் கொண்ட யாழினியும், "ஹேய் ஹேய் சிற்பி, நீ நினைச்சா அவங்களை நம்ப வைக்க முடியும்டி. ப்ளீஸ் எனக்காக உதவி பண்ணுடி" என்றாள் கெஞ்சலான குரலில்.
"என்ன உதவிடி?. எங்க மேரேஜ் விஷயத்தை ராம்சார்ட்ட சொல்ல சொல்றியா?" என்று சிற்பியும் கேட்க,
"அதெல்லாம் வேணான்டி. மேரேஜ் ஆனதை சொன்னாக்கூட, அவரோட ஸ்விச்சுவேஷன் அப்டின்னு ஒதுக்கிருவாங்க. ஆனா நீ அண்ணாகூட அப்பப்போ க்ளோஸா பேசி, சிரிச்சுன்னு ஏதாவது பண்ணன்னா, நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னு ராம்சார நம்ப வைக்கலாம்டி. அப்டி நம்பிட்டா, என் லவ்வையும் அக்சப்ட் பண்ணிப்பாரு" என்று சிற்பி நினைத்துக்கூடப் பார்த்திராத ஒன்றை செய்யச் சொன்னாள் யாழினி.
அதைக்கேட்டு, "ஏய், என்ன யாழி, விளையாடுறியா? நா எப்டிடி ட்ரைனர் கூட? அதுவும் க்ளோசா. வாய்ப்பே இல்லை. இதெல்லாம் தெரிஞ்சா
ட்ரைனர் என்ன க்ளோஸ் பண்ணிருவாங்க" என்று பதறியவளை, "நீங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் வொயிஃப் தானேடி. அதனால இதெல்லாம் தப்பில்லடி. இப்ப இல்லாட்டியும், கொஞ்சம் நாள் கழிச்சுக்கூட, நீங்க ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணதானடி போறீங்க. அதுக்கான ட்ரையல் மாறி இதை நினைச்சுக்கோ. ப்ளீஸ்டி. ப்ளீஸ்டி" என்றெல்லாம் ஏதேதோ கூறி சிற்பியை சம்மதிக்க வைத்தாள் யாழினி.
அவள் கூறியதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியாகி நின்று விட்டவளுக்கு, பின்னாளில் தங்களுக்குள் காதல் மலரும் என்பதில் எல்லாம் சிறிதும் நம்பிக்கை இருக்கவில்லை தான்.
ஆனால் தன்னால் தன் தோழியின் காதல் நிறைவேறும் என்றால், அதைவிட தனக்கு வேறு என்ன வேண்டும்? தெரிந்தோ தெரியாமலோ, அர்ஜுன் என்ற ஒருவன் மூலம், தன் வாழ்க்கை தான் ஏனோ தானோவென்று அமைந்து விட்டது. தோழியாவாது, விரும்பியவனை கரம் பிடித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள், "சரி யாழி. உனக்காக நீ சொல்ற போல செய்றேன். முதல்ல ஃபீல் பண்றத விட்டு, நா இப்ப என்ன செய்யனும்னு சொல்லு?" என்று கேட்டாள் சிற்பி.
அதில் அகமகிழ்ந்து போனவளும், "தங்க்யூ தங்க்யூ, தங்க்யூ சோ மச்டி. இந்த உதவிய நா எப்பவும் மறக்க மாட்டேன். நாளைக்கு எனக்கு பொம்பள புள்ள பொறந்தா உன் பேரையே வைக்கிறேன்டி" என்றெல்லாம் தோழியின் கரத்தைப் பற்றி உணர்வுகள் பொங்கப் பேசிவிட்டு, சுற்றியும் முற்றியும் பார்க்க, அவள் நேரத்திற்கு சரியாக கூப்பிடும் தொலைவினில் தான் செழியனும், ராமும் ஒரு மர நிழலில் நின்று எதையோ தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த யாழினிக்கும் சட்டென்று ஒரு யோசனை தோன்ற,
"ஹேய் சிற்பி, சிற்பி வேகமா வாடி. இந்தா இதப்பிடி" என்று அவள் கரத்தில் ஒரு கைக்குட்டையை வைத்தவள், "இது அண்ணாவோட கர்ச்சீப் தான் சிற்பி. அங்க ராமோட நிக்கிற அண்ணாகிட்ட போய், உங்க கர்ச்சீப் கீழ விட்டுட்டீங்கன்னு கொடுத்து, அப்டியே லவ் பண்ற போல ஏதாவது பேசு. அண்ணா போக சொன்னாக்கூட நகராம அங்கயே நின்னு, அவங்களையே சைட் அடிக்கணும் நீ. ஏதாவது பாடத்துல டவுட் கேட்டுக்கூட அண்ணாவையும் உன்னோட பேச வையி. இன்னிக்கு அளவுக்கு இவ்ளோ போதும்" என்று கதை எழுதும் எழுத்தாளர் போல் காட்சியை விவரித்தாள் யாழினி.
தோழிக்கு உதவ வேண்டும் என்கிற வேகத்தில், அவள் சொல்வதை எல்லாம் கேட்டு தலையை ஆட்டியபடி வந்து விட்டாலும், செழியன் நிற்கும் இடத்தை நெருங்க நெருங்க, சிற்பியின் இதயம் அதிவேகமாகத் துடித்தது.
பத்து மாதங்கள் முன்பு அவன் கையால் தாலி வாங்கி, இப்பொழுது உறவால் அவன் மனைவியாக, அவன் வீட்டிலே வசித்தாலும், தன் மாணவி என்ற எல்லைக் கோட்டினுள் வைத்தே அவளிடம் பேச்சு வார்த்தை நடத்துபவனிடம், ஒரு காதலி போல் என்ன பேசுவது என்ற யோசனையுடனே செழியனை நெருங்கியவளை, "என்ன கேர்ள்?" என்ற கேள்வியோடே அவளை ஏறிட்டான் கணவன்.
ஆணின் அந்தப் பார்வையிலே, இவளுக்கு கை கால்கள் எல்லாம் பரத நாட்டியம் ஆட, "உங்க உங்க கர்ச்சீப், கர்ச்சீப் கீழ" என்று வாக்கியத்தை முடிக்கக்கூட முடியாமல் கையிலிருந்த கைக்குட்டையை அவன் முன்னே நீட்டினாள் மனைவி.
அவள் நீட்டிய கைகுட்டையையும், அவள் முகத்தையுமே சில நொடிகள் மாறி மாறி பார்த்து விட்டு, தன் காற்சட்டைப் பையிலும் கை நுழைத்து, சற்று சிந்தித்தும் பார்த்தவன், "நா இன்னிக்கு அவசரத்துல கர்ச்சீப்பே எடுத்துட்டு வரல கேர்ள். இது யாரோடதுன்னு நல்லா பாரு?" என்றான்.
'அய்யோ ட்ரைனர் என்ன இப்டி சொல்றாங்க? யாழி இவங்க கர்ச்சீப்னு தானே சொன்னா? இப்ப
என்ன சொல்றது?' என்று ஆடு திருடியவள் போல் விழித்தவள், அருகில் இருந்த ராமையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, "இல்ல ட்ரைனர். நல்லா பாருங்க. இது உங்க கர்ச்சீப் தான். நீங்க இந்த கர்ச்சீப் யூஸ் பண்ணி நானே நிறைய வாட்டி பாத்துருக்கேன். இந்தாங்க" என்று சட்டென அவன் கையைப் பற்றி அந்த கைகுட்டையை அவன் கரத்திலும் வைத்தாள்.
எதிர்பாராத மனைவியின் அந்தச் செயலில் அவன் அதிர்ந்து நிற்கும் பொழுதே, "வெயில்ல நின்னு நின்னு, ரொம்ப வேர்த்து போயிட்டிங்க ட்ரைனர். கர்ச்சீப் வச்சு ஃபஸ்ட் முகத்தை துடைங்க!" என்று பதட்டத்தில் அவனுக்குக் கட்டளையும் இட்டாள் சிற்பி
அவனின் கூரிய விழிகளோடு பிணைய மறுத்து, நாட்டியமாடும், பெண்ணின் ஆழி விழிகளில் என்ன கண்டானோ, அவள் சொன்னது போல் துடைத்து விட்டு, "போயிருச்சா கேர்ள்?" என்றான், அவளையே ஆழ்ந்து பார்த்து.
தான் சொன்னதை தன் கணவன் உடனே செய்வான் என்று எதிர்பாராது விழித்தவளுக்கு ஏதாவது பேசி பேச்சை வளர்க்க சொன்ன யாழினியின் நினைவும் எழும்ப, "இல்ல ட்ரைனர், நெத்தி ஓரத்தில இன்னும் இருக்கு" என்றாள் அவன் முகத்தை ஏறிட்டுப் பாராமலே.
அதில் சற்றே அவள் புறம் நெருங்கி வந்தவனும், "எங்க கேர்ள்? இங்கயா?" என்று தீவிரமாகக் கேட்க,
இல்லாத வியர்வையை எங்கிருந்து கூறுவாள் பெண்ணவள்.
அங்கே இங்கே என்று அவன் முகத்தின் அனைத்து இடங்களையும் துடைக்க வைத்து இறுதியில், "ம்ம்ம் வேர்வை போயிருச்சு ட்ரைனர்" என்று அசடு வழிந்து சிரித்தவளுக்கு, தான் செய்து கொண்டிருக்கும் காரியத்தில் அவனுக்கு விடவும் வியர்க்கத் தொடங்கியது.
அவளின் அந்த அவஸ்தையான செயல்களில், 'என்னாச்சு இந்த பொண்ணுக்கு. ஏன் இன்னிக்கு ஒரு மாதிரி டிஃப்ரெண்ட்டா நடந்துக்குறா?' என்று யோசித்தவன், தன் ஆழ்ந்த பார்வையை ஆராய்ச்சிப் பார்வையாய் மாற்ற, சற்று முன்னர் அவன் முகத்தில் இருப்பதாகக் கூறிய வியர்வைத் துளிகள் இப்பொழுது அவள் முகத்தில் அளவின்றி இருந்தது.
அதைப் பார்த்த உடனே, அவன் ஆராய்ச்சி எல்லாம் நின்று போக, "இவ்ளோ வெயில்ல இந்த கர்ச்சீப்ப தூக்கிட்டு ஓடி வரணுமா கேர்ள்? இப்பபாரு உனக்கும் நல்லா வேர்த்துப் போச்சு" என்று சிறு குரலில் கடிந்தவன்,
"இந்தா நீயும் துடைச்சுக்கோ" என்று கையிலிருந்த கைகுட்டையை இப்பொழுது அவளிடம் நீட்டினான்.
அதில் சற்று முன்னர் அவன் அந்த கைக்குட்டையில் முகம் முழுதும் துடைத்தது ஞாபகம் வந்து,
'அவர் துடைத்த கர்ச்சீப்பில் நான் எப்படி?' என்று மலங்க மலங்க விழித்தவள், "இல்ல ட்ரைனர் இருக்கட்டும். உங்க கர்ச்சீப் என்கிட்ட கொடுத்துட்டா அப்றம் நீங்க என்ன செய்வீங்க?" என்று நாசுக்காக மறுக்க முயன்றாள் மனைவி.
அதில் சற்றே முறைத்து, "அட பிடிங்கறேன்!" என்று அதட்ட,
அவளும் கைகுட்டையை வேகமாக வாங்கிக் கொள்ள, "நல்லா முகத்தை துடைச்சுட்டு கர்ச்சீஃப நீயே கொண்டு போ கேர்ள். எனக்கு வேணும்னா நா உன்கிட்ட வந்து துடைச்சிக்கிறேன். சரியா?" என்றும் இறுதி வார்த்தைகளை மட்டும் சிறு மென்னகையோடு, கிசுகிசுப்பாகக் கூறிவிட்டு அங்கிருந்த ராமிற்கும் தலையசைத்தபடி, ஆசிரியர் அறைக்குள்ளும் சென்று மறைந்திருந்தான் செந்தமிழ்ச் செழியன்.
ஆணின் அந்த வார்த்தையில், 'என்ன சொல்லிட்டுப் போறாங்க இந்த ட்ரைனர்? அவங்களுக்கு வேணும்னா வந்து துடைச்சிப்பாங்களா? எங்க வந்து, எதுல துடைப்பாங்கலாம்? நா துடைக்கப்போற கர்ச்சீப்லயேவா?' என்று அவன் சென்ற திசையையே பார்த்தவாறு, மெல்ல மெல்ல அந்த கைகுட்டையை உயர்த்தி, தன் முகத்தில் இருந்த வியர்வையை துடைக்க முயன்றாள் பெண்.
ஆனால் கைக்குட்டையை நாசியருகில் கொண்டு செல்லும் பொழுதே, அதில் இருந்த, அவள் கணவனுக்கே உரிய பிரத்தியேக வாசனையில், "அய்யோ ட்ரைனரோட பர்ப்யூம் ஸ்மெல்!" என்று கரத்தை கீழே இறக்கிக் கொண்டவளுக்கு, மேனியெல்லாம் இனம் விளங்கா சிலிர்ப்பு ஒன்றும் ஓடி மறைய, "ம்ஹும்! நா துவைச்சுட்டு துடைச்சுக்கறேன்" என்று தலையை மட்டும் ஆட்டி, கைகுட்டையை கைகளுக்குள் பத்திரப்படுத்தியபடியே, வகுப்பிற்கும் ஓடி மறைந்தாள் சிற்பிகாதேவி.
இருவருமே சென்று மறையும் மட்டும், அவர்களையே விழிகள் விரித்து பார்த்து நின்ற ராம்சரணோடு, வேறு இரு வன்ம விழிகளும், "காலேஜ் ட்ரைனர், சேர்மன் பொண்ணுக்கு, வேற மாறி ட்ரைனிங்கும் சேர்த்தே கொடுக்குறாரு போலவே! சரிதான்" என்று குரூரமாகப் புன்னகைத்துக் கொண்டது.
Comments
Post a Comment