நூலகம் -13.1
அழகான ஒரு காலைப் பொழுதில், பிங்க் வண்ண வாகனத்தை யாழினி தான் ஓட்டி வர, சிற்பி பின்னே அமர்ந்து வந்து இருக்க, வாகனம் நிறுத்துமிடத்தில் ஸ்கூட்டியை நிறுத்தி பூட்டி விட்டு, பேசிச் சிரித்தபடியே வகுப்பறைகள் நோக்கிச் சென்ற தோழிகளை, வைத்த கண் வாங்காது பார்த்து இருந்தார் அக்கல்லூரியில் பல வருடங்களாக படிப்பித்துக் கொடுக்கும் மூத்த விரிவுரையாளர் ஒருவர்.
அப்பொழுது, "உங்கள, வைஸ் பிரின்சிபல் கூப்பிடுறாரு சார்" என்று அவரைத் தேடி வந்த ராம்சரணும், அவர் பார்வை சென்ற இடத்தைக் கண்டு, "என்ன சார், சேர்மன் பொண்ணையே பாத்துட்டு இருக்கீங்க?" என்று கேட்டான்.
"அந்த பிரின்சி கெடக்கு. சொட்ட தலை. நீ ஒன்னு கவனிச்சயா ராம்? சிலபல மாசமாவே, சேர்மன் பொண்ணும், செழியன் சிஸ்டரும் ஒன்னாவே ஸ்கூட்டில வர்றாங்க. போறாங்க. சரியா சொல்லனும்னா, சேர்மன் சொந்த ஊர்ல, அந்த எம்பி பையனால ஏதோ பிரச்சனைணு கேள்விப்பட்டோம்ல. அப்ப இருந்து தான். அங்க என்னமோ பெருசா நடந்துருக்குமோன்னு தோணுது ராம். அந்த எம்பி பையனும் அப்பவே காலேஜ விட்டே போய்ட்டானே" என்றவர், "நீதான் அந்த செழியனுக்கு தொடுப்பு ஆச்சே. உனக்கு ஏதும் தெரியுமாயா?" என்று ராம்சரணிடமும் கேட்டார்.
வேதாவின் மாமனார் காலத்தில் இருந்தே அங்கே பணிபுரிபவருக்கு, சில வருட அனுபவங்களே கொண்ட செழியனுக்கு, வேதா கொடுக்கும் முக்கியத்துவத்தில் சற்று பொறாமையும் உண்டு போலும்.
அவர் கேள்வியில் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவனுக்கும், கொஞ்சம் நாட்களாக அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்தது.
ஆனால் அதைப்போய் இந்த ஆல் இந்திய ரேடியோவிடம் கூறினால், அவர் கண் காது மூக்கு வைத்து கதை கட்டிவிடுவார் என்று அறிந்தே இருந்ததால், "சார், அவங்க ரெண்டு பேரும் ஃபேமிலி பிரண்ட்ஸ் சார். சேர்மன் சார் பொண்ணுக்கு நியூ பைக் வாங்கி கொடுத்துருப்பார் போல. அதுல பிரண்ட்ஸ் ஒன்னா வர்றாங்க. இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு?" என்று கேட்டவன், "அத்தோட இது அவங்களோட பர்சனல் மேட்டர் சார். நமக்கு எதுக்கு? போங்க சார் போய் பிரின்சிய பாருங்க" என்று நேக்காக கலன்று கொண்டவன், ஒரு பெருமூச்சையும் வெளியேற்றிபடி, ஆசிரியர்கள் அறை நோக்கி நடக்கத் துவங்கினான்.
"என்னவோ இருக்கு. ஆனா என்னனு தான் தெரியல!" என்று சொல்லிக் கொண்ட மூத்த விரிவுரையாளரும் அங்கிருந்து சென்று விட,
ஆசிரியர்கள் அறை நோக்கிச் சென்ற ராம்சரணோ அங்கிருந்த மரத்தைக் கடந்து செல்லும் சமயம், அவன் முதுகில் சிறிதான கல் ஒன்று வந்து விழுந்தது.
அதில் திடுக்கிட்டு நின்றாலும்,
அந்த கல்லை யார் எரிந்திருப்பார்கள் என்ற ஊகம் இருந்ததால், "இந்தப் பொண்ணோட!" என்று பல்லைக் கடித்துத் திரும்பிப் பாராமலே மேலும் ஒரு எட்டு வைத்தவனை, "ராம்சார். ஒரு நிமிஷம்" என்ற அழகான பெண் குரல் தடுத்து நிறுத்தியது.
அப்பொழுதும் திரும்பிப் பாராமலே நின்று இருந்தவனின் முன்னே வந்து நின்ற யாழினியோ, "நா கூப்பிட்டா சார் திரும்பிக் கூடப் பாக்க மாட்டிங்களா?" என்று சலுகையாகக் கேட்டவள், "நா, அன்னிக்கு சொன்னது பத்தி என்ன முடிவு எடுத்திருக்கீங்க ராம் சார்?" என்றாள் அவன் முகத்தையே ஆவலாகப் பார்த்து.
அதில் முகம் இறுகிப் பார்த்தவனும்,
"அதுக்கான பதிலை அன்னிக்கே நானும் சொல்லிட்டதா எனக்கு ஞாபகம்." என்றான்.
"ஆனா அந்த பதில்ல உண்மை இல்லை ராம்சார். நம்மளோட பஸ்ட் மீட் உங்களுக்கு ஞாபகம் இருக்கா தெரியல. ஆனா என்னால எப்பவும் மறக்க முடியாது. அன்னிக்கு சிக்னல்ல என்ன முதல் முதல்ல பாத்ததும் உங்க முகத்துல இருந்த ஒரு ரசனையும், சிரிப்பும், அப்பவே உங்களுக்கும் என்ன பிடிக்கும்னு எனக்கு நல்லா புரிய வச்சுருச்சு." என்று யாழினியும் கூற,
"அதெல்லாம் உன்னோட வீணான கற்பனை யாழி. நீ என்னோட ஸ்டுடென்ட். நா உன்னோட லெக்சரர். நமக்குள்ளான உறவு அவ்ளோதான். அதை எப்பவும் மனசில வச்சுப் பேசு." என்று எச்சரிக்கை போல் சொன்னான் ராம்சரண்.
"இல்ல ராம் யோசிக்க வேண்டியது நா இல்ல. நீங்கதான். எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்குற குருவாவே நீங்க எனக்கு அறிமுகம் ஆகி இருந்தா, நானும் உங்களை லெக்சரரா மட்டுமே பார்த்து இருப்பேனோ என்னவோ. ஆனா ரோட்டுல சிக்னல்ல, முன்ன நின்ன பைக்காரன திட்டிட்டு இருந்த என்ன வச்ச கண்ணு வாங்காம பாத்து வச்சு, உங்க பார்வையை எதிர்கொள்ள முடியாம, நா பிரண்ட் வண்டிய போஸ்ட்ல இடிச்சி, மண்டை உடைஞ்சு ஆக்சிடண்ட் ஆனப்போ, என்ன பதறி அடிச்சு தூக்கிப்போய், ஹாஸ்பிடல்ல சேர்த்து, கண்ணு முழிக்கிற வர கூடவே இருந்து பார்த்து, அண்ணா வந்த பின்னயும் கூட, போக மனசே இல்லாம திரும்பி திரும்பி பாத்துட்டே போனது இன்னுமே என் கண்ணுலயே நிக்கிது ராம். அவ்ளோ ஏன், நான் காலேஜ்ல சேர்ந்து இந்த ரென்றரை வருசமா, நா உங்ககிட்ட எப்படி எல்லாமோ நடந்துகிட்டாலும் நீங்க என்கிட்ட ஹார்சா ஒரு வார்த்தை கூட பேசினது இல்ல. அதுல இருந்தே நீங்களும் என்ன விரும்புறீங்கன்னு எனக்கு புரியுது ராம். ப்ளீஸ் அதை அக்சப்ட் பண்ணிக்கோங்க." என்று கரகரத்த குரலில் சொன்னாள் யாழினி.
"ம்ம்ம், இவ்ளோ சொல்ற நீ மிச்சத்தையும் சொல்லிரு யாழி. உன் லவ்வை அக்சப்ட் பண்ணிட்டு, என்ன செய்யனும் சொல்ற?. உன் அண்ணாகிட்ட போய் பொண்ணு கேக்க சொல்றியா?" என்று புருவத்தை ஏற்றினான் ராம்சரண்.
அதற்கு ஆம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல் அவள் அமைதியே உருவாக நின்றிருக்க,
"எனக்கு தெரியும் யாழி. நீ சுத்தி முத்தி அதைதான் செய்ய சொல்லுவன்னு எனக்கு தெரியும். ஆனா நீ நினைக்கிறத என்னால கனவுல கூட செய்ய முடியாது. உன்னோட அண்ணா போலவே நானும் இந்தத் துறைய விரும்பிதான் ஏத்து இருக்கேன். நம்ம முதல் சந்திப்புல நீ யாரோவா இருந்தாலும், இப்ப நீ என்னோட மாணவி. நீ சொன்ன போல உன் அண்ணாகிட்ட போய் நா பொண்ணு கேட்டா, குருவா இருந்து வழி நடத்த வேண்டிய நீயே என் தங்கச்சி மனச கெடுத்துருக்கியே, நீலாம் ஒரு டீச்சரான்னு, உன் அண்ணன் என் மூஞ்சில காரி துப்புனா, நா என்ன செய்வேன் யாழி? அதுக்கப்புறம் உன் அண்ணா முகத்தை தான் என்னால பாக்க முடியுமா? இந்த காலேஜ்ல லெக்சரரா தான் தொடர்ந்து ஒர்க் பண்ண விடுவாங்களா?" என்று அவனும் அவன் பக்க நியாயத்தை பொறுமையாகவே எடுத்துக் கூறியவன், "போமா போ, போய் முதல்ல படிச்சி பட்டம் வாங்குற வழியைப் பாரு. அப்பப்போ வந்து சின்னப்பொண்ணுனு ப்ரூப் பண்ணிட்டு இருக்காத!" என்றும் சொல்லிவிட்டு, மீண்டும் எட்டு வைத்து நடக்கத் தொடங்கினான்.
"ராம் ராம் ராம் அய்யோ நில்லுங்க ராம்" என்று வேகமாக ஓடி மூச்சிரைக்க அவன் முன்னே நின்றவளும், "அப்போ உங்களுக்கு என் அண்ணா ஓகே சொல்லிட்டா எந்த அப்ஜக்சனும் இல்லதான?" என்று கேட்டாள்.
"ப்ச் நடக்குறத பேசு யாழி" என்று சலித்தவனும், "செகண்ட் பெல் அடிக்கப் போகுது. நீயும் கிளாஸ்கு போ. என்னையும் போகவிடு" என்று அவளை சுற்றிக் கொண்டு செல்லப்போக,
அவனை எப்படி தடுத்து நிறுத்துவது என்ற வேகத்தில், "நம்மளை போலதான் என் அண்ணாவும், ஒரு ஸ்டுடென்ட் கேர்ள லவ் பண்றாங்க. அதனால நம்ம லவ்வையும் கண்டிப்பா அக்சப்ட் பண்ணிப்பாங்க" என்று பெரிய குண்டையே தூக்கி அவன் தலையில் போட்டாள் யாழினி.
அவள் ஏதோ வேற்றுமொழி பேசியது போல், அவளை உறுத்து விழித்தவன்,
"ப்ளீஸ் போ யாழி. உன் பேச்சு கேக்கணும்னு லூசு மாறி உளறிட்டு இருக்காத. கோவத்துல ஏதாவது சொல்லிடப் போறேன்" என்று உறுமியவனின் கையைப் பற்றி,
"அய்யோ நா பொய் சொல்லல ராம். உண்மைதான். என் அண்ணாக்கும் நம்ம சேர்மன் பொண்ணு சிற்பிக்கும் பத்து மாசம் முன்ன இருந்தே காதல். அவ படிப்பு முடியட்டும்னு தான் ரெண்டு பேரும் வெயிட் பண்றாங்க" என்று தன் இரண்டரை வருட காதலை அவனை ஏற்றுக் கொள்ள வைக்க வழி தெரியாமல், செழியனையும் சேர்த்து மாட்டி விட்டாள் யாழினி.
நம் காதலுக்காக அண்ணனின் வார்த்தைகளை மீறுகிறோமே என்ற உறுத்தல் இருந்தாலும், செழியன் திருமணம் முடிந்ததைத் தானே கூற வேண்டாம் என்று சொன்னான். என்றும், ராம் யாரிடமும் இதை எல்லாம் கூற மாட்டான் என்ற நம்பிக்கையும் சேர்ந்து, தனக்குத் தானே சப்பை கட்டு கட்டிக் கொண்டாள்.
ஆனால் அவள் கூறிய எதையும் துளிகூட நம்ப மறுத்ததோடு அவளை எரித்து விடுவது போல் பார்த்து வைத்தவனும், "இவ்ளோ நாளா
நல்லா படிக்கிற பொண்ணு. ட்ரைனரோட தங்கச்சின்னு உன்மேல நிறைய மதிப்பு இருந்தது யாழி. ஆனா நீ உன் சுயநலத்துக்காக உன் அண்ணாவோட பேரையே ஸ்பாயில் பண்ணப் பாக்குற. நீ சொல்ற போல ஒரு காரியத்தை, உயிரே போனாலும் அவரு பண்ண மாட்டாரு." என்றெல்லாம் மூச்சு வாங்கப் பேசியவன் இன்னும் ஏதேதோ சொல்லி அவளை நன்றாகவே திட்டிவிட்டும் வகுப்புகள் எடுக்கச் சென்று விட்டான்.
அச்சமயம் யாழினியின் தோழிகளும் அவளைத் தேடி வந்ததில், அவளும் முகம் சுணங்கியவளாய் அவர்களோடு வகுப்பிற்குச் சென்றவள், பெயருக்கு பாடங்களை கவனித்தாலும் எதுவுமே மனதில் பதியவில்லை யாழினிக்கு.
அப்படியே சில நாட்கள் சென்று இருக்க, அன்றைய வகுப்பிற்கும் அவர்களின் வகுப்பு ஆசிரியரான ராம்தான் பாடம் எடுக்க வந்து இருக்க, யாழினியின் பார்வை மொத்தம் அவன்மீது மட்டும் தான்.
அதை உணர்வுப்பூர்வமாய் உணர்ந்து இருந்தாலும், இந்த உறவு சொர்க்கத்தில் சேராது என்று எண்ணிக் கொண்டவன், கருமமே கண்ணாக பாடங்களை மட்டும் நடத்தி முடித்து, "ரெகார்ட் நோட்ஸ் சப்மிட் பண்ணிடுங்க ஸ்டுடென்ட்ஸ். ஹாபனவர்ல நோட்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி ஸ்டாப் ரூம் கொண்டு வந்துடு விஷ்ணு" என்று விட்டு அங்கிருந்து வெளியேறியவன், அடுத்த வகுப்பிற்குச் சென்று இருந்தான்.
இங்கு யாழினிதான், அவன் கூறிய ரெக்கார்ட் நோட்சையும் முடிக்க முடியாமல், யாருடனும் பேசவும் பிடிக்காமல், முகம் வாடி அமர்ந்து இருக்க, அவளை கவனித்த சிற்பியோ, "என்ன யாழி? என்னடி ஆச்சு உனக்கு? ஏன் ரெக்கார்ட் நோட் முடிக்கல? ராம்சார் கூட ஏதும் பிரச்சனையா?" என்று கேட்டாள்.
தோழியின் பல மாதக் காதலதை, பத்து மாதங்கள் முன்பு அவள் அண்ணனின் மனைவியானப் பின்பு தான் முழுமையாகத் தெரிந்து கொண்டாள் சிற்பிகாதேவி.
எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கும் யாழினி, முகம் வாடினாலே அது ராம்சரணிற்காகத் தான் என்றும் கடந்த மாதங்களில் அறிந்து இருந்தவள், "என்னனு சொல்லு யாழி? ராம் சார் கூட என்ன பிரச்சனை?" என்று அவள் அருகினில் அமர,
"எல்லாம் வழக்கம் போலதான்டி" என்று சோகமாகச் சொன்னவளும்,
"உனக்கே தெரியும்ல சிற்பி. அம்மா ப்ரோக்கர்கிட்ட, ரிலேசன்ஸ்கிட்டன்னு எனக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லிட்டிருக்காங்க. படிப்பு முடிச்ச உடனே கல்யாணம் பண்ண, இப்ப இருந்தே பேசி முடிச்சு வைக்கணும்னு பேசிட்டு இருக்காங்க. ஆனா இங்க ராம் என்னன்னா, ரெண்டரை வருஷம் ஆகியும் எங்க லவ்வை அக்சப்ட் பண்ணிக்கவே மாட்டிக்கிறாங்கடி" என்று அவனோடு நடந்த உரையாடல் எல்லாம் கூறினாள் யாழினி.
"இப்ப என்னடி செய்யிறது? ராம்சார் உன்ன லவ் பண்ணவே இல்லியா?" என்று சிற்பியும் கேட்க,
"அப்டி ஒன் சைடு லவ்வா இருந்தாலோ, இல்ல உன்ன லவ் பண்றேன்னு படம் காட்டி, அவங்கப்பா வச்சு அவமானம் படுத்தினானே அர்ஜுன், அதுபோல பொருந்தாத இடமா இருந்தாலோ, நானும் மனச தேத்திட்டு உன்னப்போல வீட்ல பாக்குற மாப்பிள்ளையை மேரேஜ் பண்ணிப்பேன்டி. ஆனா ராம் சார் விஷயம் அப்டி இல்லை. அவங்கதான் எனக்கானவங்கன்னு ரெண்டரை வருசமா, மனசுக்குள்ளவே அவங்களோட வாழ்ந்துட்டு இருக்கேன். அவங்களுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும்டி. ஆனா அண்ணா தப்பா நினைச்சுடுவாங்களோன்னு தான் அக்சப்ட் பண்ண மாட்டிக்கிறாங்க" என்று வருந்திய குரலில் கூறினாள் யாழினி.
அவள் அர்ஜுன் என்று கூறவும், சிற்பிக்கும் ஒரு நொடி பழைய நினைவுகள் எல்லாம் அவள் சிந்தையில் தோன்றிவிட்டு இருந்தது
Comments
Post a Comment