நீயே காதல் நூலகம்-1



ஊட்டி மேட்டுப்பாளையத்திலிருந்து பத்து நிமிடப் பேருந்துப் பயணத்தில்   காண்போர் விழிகளை எல்லாம் விரிய வைக்கும் வகையில் வானளாவ உயர்ந்து நிற்கவில்லை என்றாலும், அப்பொழுது தான் பள்ளிப் படிப்பை முடித்து இருக்கும் மாணவ மாணவிகள் எல்லாம், அடுத்து என்ன படிப்பது, மேற்படிப்பிற்கு எங்கு சேர்வது என்று யோசிக்கும் சமயம், நிச்சயம் அவர்களின் எண்ண அடுக்குகளில் வந்து நிற்கும் அளவு, அப்பகுதி முழுவதும் பிரசித்தி பெற்ற கல்லூரிகளுள் ஒன்றாக, பல ஏக்கர் பரப்பளவில் ஒய்யாரமாகவே வீற்றிருந்தது தேவி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகம். (Devi Engineering college of Technology)


பச்சை பசுமை நிரம்பிய இயற்கை மிகும் சூழலில், பரந்து விரிந்த தளமதில், வாயிலைத் தாண்டிய பத்து நிமிட நடையில், கல்லூரியின் நிர்வாக அலுவலகமும், அடுத்தடுத்த பல கட்டிடங்களில், கல்லூரியின் மூன்றடுக்கு வகுப்பறைகளும், பெரிதான செமினார் ஹாலும்,  கேண்டினும், ஆய்வகம், நூலகம், போன்ற இன்னும் சில பகுதிகளும், கண்ணையும் கருத்தையும் நிறைப்பதாக இருக்க, அந்த பிரமாண்ட கல்லூரி வளாகமோ வழக்கத்தை எல்லாம் விட இன்று மிகவுமே பரபரப்பாகக் காட்சி தந்தது.


கல்லூரி வளாகத்தின் முக்கிய இடங்களில் எல்லாம், '50th annual day celebration' என்ற கொட்டை வடிவ எழுத்துக்களில் பேனர்களும் வைக்கப்பட்டு இருக்க, கல்லூரியின் பரந்து விரிந்த ஆடிட்டோரியத்தில் விழா நிகழ்வுகளுக்கான அலங்காரங்களும், ஏற்பாடுகளும் சிறப்பாகவே செய்யப்பட்டு இருந்தது.


கோல்டன்  ஜுப்ளி என்று கொண்டாடப்படவிருக்கும் அந்த ஆண்டு விழாவில் பங்கேற்கவென்றே, கல்லூரியின் முக்கிய அங்கத்தினர்கள் சிலர் வருகை புரிவதாக இருக்க, பல பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியரும் தத்தமது தனிப்பட்ட திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டி, ஒத்திகைகளோடு காத்துக் கொண்டிருந்தனர்.


மெக்கானிக்கல், சிவில், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக் கம்யூனிகேஷன் எலக்ட்ரானிக்ஸ், ஆர்ட்டிபிஸியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் என்று பல பிரிவுகளில் அங்கு பொறியியல் பாடங்கள் படிப்பித்துக் கொடுக்கப் படுவதால், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மணிகள் அக் கல்லூரியின் திடல் எங்கும் பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து அவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்க, அவர்களை எல்லாம் கட்டுக்குள் வைக்க முயன்று தோற்றபடி, விரிவுரையாளர்கள் அனைவரும் சற்றே அதிருப்தியாகத்தான் அளவளாவிக் கொண்டிருந்தனர்.


"ப்ளீஸ் லிசன் ஸ்டுடென்ட்ஸ். இன்னும் சற்று நேரத்தில் நமது கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு விழா கோலாகலமாகத் துவங்க உள்ளது. அதை உங்களோடு கண்டு களிக்க வேண்டி நமது கல்லூரியின் சேர்மன் திரு வேதாச்சலம் அவர்கள் இன்னும் சில நிமிடங்களில் நம்மோடு கலந்து கொள்ளப் போகிறார். ஆகையால் அனைவரும் அமைதி காத்து, விழாவை சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அச்சுக்குழையாத ஆங்கிலத்தில், அங்கு விழா மேடையில் இருந்த ஒலிப்பெருக்கியில், மூச்சு வாங்கப் பேசி முடித்தான், அக்கல்லூரியின்  விரிவுரையாளன் ராம்சரண்.


ஆனால் அப்படி ஒருவன் மேடையில் ஏறி நிற்பதைக் கூட சட்டை செய்யாது மாணவர்கள் எல்லாம் தங்கள் போக்கிலே சலசலத்துக் கொண்டிருக்க, "இதுங்களை எல்லாம் ஒரு ஆளுங்கன்னு மதிச்சு, இவ்ளோ பெரிய விழாவ நடத்தணுமான்னு சொன்னா யாரு கேக்குறா? கொஞ்சம் கூட அமைதியே இல்லை" என்று சலித்தார் இன்னொரு விரிவுரையாளர்.


"இப்ப நாம நினைக்கிற போல, நாம ஸ்டுடென்ட்ஸா இருந்தப்போ நம்மளோட லெக்சரர்ஸ் நினைச்சு இருந்தா நாம, இங்க, இப்டி நின்னுருப்போமான்னு யோசிச்சுப் பாருங்க சார்.  உங்களுக்கு இவ்ளோ சலிப்பு வராது. அவங்க வயசைத் தாண்டி தானே சார் நாமளும் வந்துருக்கோம்." என்று சிறு புன்னகையை உதிர்த்தவன், "ஹேய் ஹேய் பாய்ஸ், அங்க என்ன கலாட்டா?" என்றபடி மாணவர்கள் கூட்டத்தினை நோக்கிச் சென்று இருந்தான்.


அவன் கூறியது போலவே அடுத்த சில நிமிடங்களில், "ஹலோ பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ். திஸ் இஸ் 50th அனுவல் டே பங்க்சன் இன் தேவி இன்ஜினியரிங் காலேஜ் ஆப் டெக்னாலஜி. இந்த விழாவிற்கு அனைவரையும் மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்" என்று ஒரு பெண் விரிவுரையாளர் நிகழ்ச்சியைத் துவங்கி வைக்க,


அதைக்கேட்டு, "ஹேய், ஹேய், ஹேய்" என்ற செவியைப் பிளக்கும் கூச்சல்களோடு மாணவர்கள் எல்லாம் இன்னுமே சப்தங்களைக் கூட்டி, தங்களது மகிழ்ச்சியை ஆரவாரமாக வெளிப்படுத்தத் துவங்கினர்.


அவர்களுக்கு மத்தியில் பேசுவதற்குத் திணறிய அந்த விரிவுரையாளரை அனுப்பிவிட்டு, மீண்டும் மேடையில் தோன்றிய ராமோ, "நிகழ்ச்சியின் அறிமுக நடனமாக கிளாசிக்கல் டான்ஸ் பர்ஃபாமன்ஸிற்காக, சிவில் பிரிவைச் சேர்ந்த மாணவி ப்ரியாவை மேடைக்கு அழைக்கிறேன்" என்று கையிலிருந்த காகிதத்தைப் பார்த்து ஒலிப்பெருக்கியில் பேசிவிட்டு இறங்க,


அடுத்து வந்த பத்து நிமிடங்களுக்கும் அந்த பிரியா என்கிற மாணவியின் நடனம் தான் மேடையில் அரங்கேறிக் கொண்டிருந்தது.


பரதநாட்டியம் என்று அழைக்கப்படும் நடனமதை பல மாணவ மாணவிகள் அமைதியாகக் கண்டு ரசித்தாலும், குறும்புகள் செய்வதற்கென்றே இருக்கும் மாணவர்கள் சிலரோ, "ஏம்மா ப்ரியா... காலைல நாஸ்ட்டா துன்னலியா? நல்லா ஒரு குத்து டான்ஸ் போடலாம்ல" என்றெல்லாம் கேலிகள் செய்து கலாய்த்துக் கொண்டிருக்க,


அவர்களை எல்லாம் பார்த்து, "ஸ்டுடென்ட்ஸ் கீப் சைலன்ஸ்." என்று சொல்லி சொல்லியே ஒரு வழி ஆகிவிட்டு இருந்த ராம்சரணோ, "அடேய் அப்ரசன்டிகளா, சேர்மன் வந்துட்டு போற வரையாவது கொஞ்சம் அமைதியா இருங்கடா. நீங்க எல்லாரும் செய்றதுக்கு, இன்னிக்கு நான்தான் ட்ரைனர் கிட்ட நல்லா வாங்கிக் கட்டப் போறேன்" என்று வாய்விட்டே புலம்பிக் கொண்டிருந்தான்.


அந்த மாணவி ஆடி முடிந்ததைத் தொடர்ந்து, "மோஸ்ட் பியூட்டிபுல் வெல்கம் இன் அவர் காலேஜ் சேர்மன் மிஸ்டர் வேதாச்சலம் சர். அண்ட் பிரின்சிபல் ரங்கராஜன் சர். அண்ட் கரஸ்பாண்டட் முரளி சர்" என்று மேடையில் ஒலித்த தொகுப்பாளரின் குரலைக் கேட்டு, ஒட்டு மொத்த மாணவக் கூட்டங்களோடு விரிவுரையாளர்களின் விழிகளும் ஆட்டிட்டோரியத்தின் வாயிலில் படிந்தது.


அங்கோ முப்பதுகளில் இருந்து ஐம்பந்தைந்து வயது வரை மதிக்கக் கூடிய, மூன்று ஆண்கள் கோட்சூட் உடையில் நடந்து வந்து கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரையும் விட சற்றே கூடுதல் உயரத்தில், இருபத்தி எட்டு வயதை இருபத்தி ஐந்தாய் காட்டும் இளமையும், அதேநேரம் ஒரு ஆசிரியனுக்கே உரிய அழுத்தமும் ஒருங்கே பெற்ற தோற்றத்தில், கருப்பு வண்ண கால்சராயும், வெள்ளை நிற முழுக்கைச் சட்டையும் பார்மலாக டக் இன் செய்து அணிந்து பித்தான்கள் எல்லாம் பூட்டி இருந்தவன், இடது கை மணிக்கட்டில் இருந்த டைட்டன் கைக் கடிகாரத்தை உயர்த்தி நேரத்தைப் பார்த்தபடியே, வேதாச்சலத்தின் செவியில் எதையோ கூறியபடி வந்து கொண்டிருந்தான்.


அவன் செந்தமிழ்ச் செழியன்.


இன்னும் இரண்டு இன்ச் வளர்ந்து இருந்தால் ஆறடியை தொட்டிருக்கும் உயரத்தில், அதற்கு ஈடான உடற்கட்டோடு தென் தமிழர்களுக்கே உரிய புது நிறமும், அடர்த்தியான மீசையும், அம்சமான முக வெட்டும் கொண்டு கம்பீரமே உருவாய் நடந்து வந்தவனைக் கண்டு, அவனோடு வந்த மற்றவர்களைக் கூட மறந்தவர்களாய், "ஹேய் செழியன் சார்டி. செழியன் சார் வந்துட்டாரு." என்று அங்கிருந்த மாணவ மாணவியருக்கெல்லாம் தன்னைப் போல ஒரு மரியாதை தோன்றி விட்டு இருந்தது.


அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அழுத்த எட்டுக்களுக்கும், ஒரு இன்ச் உயரத்திற்கு தவ்வித் தவ்வி எழுந்தும், அச்சுக் குழையாத அலை அலையான கேசமதும், அது மறைக்க முயன்று தோற்ற அகலமான பிறை நெற்றியில் அவன் துளியளவு இட்டிருந்த விபூதி குங்குமமும், அவன் மீதான நன் மதிப்பை மென்மேலும் கூட்டியிருக்க, "ஹேய் சான்ஸே இல்லைடி. ட்ரைனருக்கு அந்த பொட்டுத் தான்டி ஹைலைட்டே. அதிலயும் அந்த குங்குமம், ஸ்டாப் ஸ்னாட்ச் தான்" என்று சில மாணவிகள் எல்லாம் வெளிப்படையாகவே அவனை ரசிக்கத் துவங்கினர்.


அந்த அரங்கில் இருந்த அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவியருக்குமே, அவனது கண்டிப்பும், வழிநடத்தலும் நன்றாகவே பழக்கம் என்பதால், அத்தனை நேரம் தங்கள் போக்கில் சலசலத்துக் கொண்டிருந்தவர்கள், அவன் விழா மேடையை நெருங்க நெருங்க, அமைதியே உருவாகி, சேர்மனோடு அவனுக்கும் சேர்த்தே மரியாதை கொடுத்து எழுந்து நின்றனர்.


அதைக்கண்டு, "இவ்ளோ நேரம் நா காட்டுக் கத்து கத்துனனே. ஒரு பய திரும்பிப் பாத்தானா?. ஆனா செழியன் சார் என்ட்ரி ஆனா மட்டும் பூராப் பயலுகளும் கண்ணை நகர்த்த மாட்டானுகளே. அதிலயும் கேர்ள்ஸ சொல்லவே வேணாம்" என்று தன்னைப் போல் புலம்பிக் கொண்டவன், மேடையை நெருங்கி இருந்த செழியனின் கண்காட்டலில், அங்கிருந்த பூங்கொத்தை எடுத்து வந்து, "வெல்கம் சார்" என்று அனைவரையும் வரவேற்று வி ஐ பி இருக்கைகளில் அமர வைத்தான் ராம்சரண்.


அவர்கள் சென்று அமர்ந்து கொள்ளும் இடைவெளியில், "செழியன் சார், பிளாக் அண்ட் ஒயிட் காமினேசன்ல, வழக்கத்தை விட இன்னிக்கு செம்மையா இருக்கீங்க. அங்க பாருங்க எல்லா டிபார்மென்ட் கேர்ள்ஸ்கும் உங்க மேலதான் கண்ணு" என்று அவனை பாராட்டுகிறேன் என்ற பெயரில் மனதில் தோன்றியதை வழக்கம்போல் உளறி வைத்தவனைப் பார்த்து கடுமையாக முறைத்த செழியனோ, "முதல்ல சட்டை பட்டனை சரியா போடுங்க ராம். பொம்பளப் பசங்க இருக்க இடத்தில தப்பு தப்பா பேசுறதோட, அரைகுறையா டிரஸ்சும் பண்ணிக்கிட்டு" என்று கடிந்து, தன்னைப் போலவே அவனையும் காலர் பித்தான்கள் முதற்கொண்டு அனைத்தும் பூட்ட வைத்தவன்,
"ஆரம்பிக்கலாம் செழியன்" என்ற வேதாச்சலத்தின் அழைப்பில், "வித் ப்ரொஸ்ஸி சர்" என்று ஒரே தாவாகத் தாவி மேடையில் ஏறி இருந்தான்.


அகல எட்டுக்கள் வைத்து ஒலிப் பெருக்கியையும் நெருங்கி இருந்தவன் அதிகமெல்லாம் இல்லாமல், இரண்டே இரண்டு  நிமிடங்கள் மட்டும், கல்லூரியையும், அதன் அங்கத்தினர்களையும் பற்றி ஓரிரு வார்த்தைகள் பெருமையாகப் பேசி, "லெட்ஸ் ஸ்டார்ட் அவர் கல்ச்சுரல் ப்ரோக்ராம்ஸ். லெட்ஸ் என்ஜோய் ஸ்டுடென்ட்ஸ்" என்றும் கூறிவிட்டு ராமோடு இணைந்து கீழே சென்று நின்று கொள்ள,


அவனுக்கே உரிய அழகிலும் அழகான ஆடவனின் அந்த ஆங்கில உச்சரிப்பை, இன்னும் சில நிமிடங்கள் கேட்க மாட்டோமா என்பது போல் ஆவேன்று பார்த்து இருந்த மாணவ மணிகள் எல்லாம், அந்த ஆடிட்டோரியுமே அதிரும் அளவு  கரகோசங்களை தெறிக்க விட்டனர்.


அதில் மூன்றாமாண்டு மாணவர்களில் ஒருவன், "எப்பாடுபட்டாவது செழியன் சார் மாதிரி ஸ்டைலிஷா இங்கிலிஷ் பேச கத்துக்கிட்டோம்னா, கேம்பஸ்லயே செலக்ட் ஆகிருவோம்லடா?" என்று தன் நண்பனிடம் கேட்டுக் கொள்ள, "ஆமாடா, செம்மையா பேசுறாரு மனுஷன். பேச்சு மட்டுமில்ல. லாஸ்ட் வீக் அப்டிடூட் கிளாஸ் எடுத்தாரு பாரு. ஒன் அவர் போனதே தெரிலடா." என்று இன்னொருவனும் சேர்ந்து தங்கள் போக்கில் சிலாகித்துக் கொண்டனர்.


மேடையில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் அதுபாட்டில் நடந்து கொண்டிருந்தாலும், மாணவர்களின் ஆரோக்கியமான கேலி கிண்டல்களுக்கு மத்தியில், அங்கிருந்த மாணவியர் கூட்டமும் செழியனைப் பற்றிப் பேசித்தான்  சில்லறைகளை சிதறவிட்டுக் கொண்டிருந்தார்கள்.


ஆனால் இந்த கொண்டாட்டங்கள் எதிலும் கலக்காமல் கையில் ஒரு வெள்ளைத்தாளை வைத்துக் கொண்டு சோகமே உருவாக  மூலையில் அமர்ந்திருந்தாள் சிற்பிகா தேவி. AIDS (Artificial Intelligence and Data Science) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி.

Comments

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக

❤️நீயே காதல் நூலகம்❤️