ஏகாந்தம் 1. 1



இரவின் கருமையில் இருந்து மெல்லிய கோடு போன்ற வெய்யோனின் வெண்மை பரணி எங்கும் பரவிய காலை வேளையிலே துலக்கி வைத்த பீங்கான் பாத்திரம் போல பளபளப்பாகக் காட்சி அளித்தது அந்த பிரமாண்ட சாந்திமதி இல்லம்.


கை அகல இடம் வாங்கக் கூட யானை விலை கொடுக்கப்படும் சென்னையின் முக்கிய நகருக்குள் பல ஏக்கர் பரப்பளவைக் கொண்டு மூன்று அடுக்குகளில் உயர்ந்து நின்ற வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் அங்கு வாசம் செய்வோரின் பணச் செழுமையையும், பகட்டையும் பறைசாற்றிய வண்ணம் இருக்க,
முதல் தளத்தில் இருந்த பெரியதோர் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் சாந்திமதி.
அவ்வீட்டின் குடும்பத் தலைவி.


அறையின் உள்ளே படுக்கையில் அவர் கணவர் ராமகிருஷ்ணன் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, அவர் விழித்து விடாத வகையில் துளி சப்தமும் எழுப்பாது மெதுவாக வெளியே வந்து கதவை மூடியவர் சற்று மெல்லவே படிகளில் இறங்க ஆரம்பித்து தரை தளத்தை அடைந்து இருந்தார்.


நன்றாகவே வெளுத்து விட்டிருந்த முதுகை உரசும் தலை முடியும், நடையில் வெளிப்பட்ட வேகமின்மையும் அவர் ஐம்பதின் இறுதியில் இருப்பதை அப்பட்டமாக எடுத்துரைக்க, அந்த அதிகாலை வேளையிலும் அவர் உடலைத் தழுவி இருந்த சன்னக் கரைவைத்த காஞ்சிபுரம் பட்டுப்புடவையும், பத்து பவுனிற்கும் மேலான அளவையில், கழுத்தை நிறைத்து இருந்த மாங்காய் மாலையும், செவிகளில் மின்னிக் கிடக்கும் ஒன்பது கல் வைரத் தோடும், பட்டையான ரோஜாப்பூ வளையல்களும் என்று, அந்தக் கால ராணியர்கள் போல் ஒய்யாரமாக இறங்கி வந்தவரைக் கண்டு முன்னறையைச் சூழ்ந்து இருந்த வைகறையின் இருள்கூட நில்லாது நகரத் தொடங்கியது.


நடையில் முதுமையும் முகத்தில் சுருக்கமும் வெளியே தெரிந்தாலும், பார்வையில் அழுத்தமும், தோற்றத்தில் மிடுக்கும் அவரது சொத்தாகக் கொண்டவர், சமையல் அறையை ஒட்டி இருந்த பின்பக்க கதவை நோக்கிச் சென்று அதன் தாழ்ப்பாளை விலக்கி விட்டார்.


கதவு திறக்கப்படவும், "வணக்கம் சாந்திமா" என்று அவர் வயதை ஒட்டிய வயதில் அவ்வீட்டில் பல வருடங்களாகவே சிற்றூழியம் செய்து வரும் பொன்னம்மாள் நின்று இருக்க, அவருக்குப் பின்னேயே எடுபிடி வேலை செய்யும் முனியனும் வள்ளியும் கூட மத்திம வயதில் இருந்தவர்கள் கை கூப்பி நின்றனர்.


பணியாட்ளின் வணக்கத்திற்கு வெறும் தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தவர் திரும்பி வீட்டிற்குள் நடந்து சென்று அங்கிருந்த இருக்கையில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து கொள்ள,
தினப்படி வழக்கமாய் முனியனும் வள்ளியும் அங்கே சமையல் கட்டின் அருகிலே நின்று கொண்டனர்.


பொன்னம்மாள் மட்டும் சாந்திமதியின் பின்னோடே சென்று அவர் முன்னே பவ்யமாக நிற்க, அவரை ஏறிட்டு நோக்கிய சாந்திமதியும், "முனியனை தோட்டத்துக்கு எல்லாம் தண்ணி பாய்ச்ச சொல்லிட்டு, அப்டியே களையும் பிடிங்க சொல்லிடு பொன்னு. பொடிசுங்க ரூமை மட்டும் தினைக்கும் ரெண்டு வேளைக்கு  துடைக்க சொல்லிடு வள்ளியை.  அப்றம் இன்னிக்கு பூஜைக்கு வெறும் சாமங்கி மட்டும் பறிச்சுட்டு வந்து வச்சுட்டு முன் வாசல்ல மாக்கோலம் போட்டுடு." என்று அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை வரிசையாக அடுக்கியவர் அப்படியே காலை உணவிற்காக பொங்கலும் பூரியும் செய்யச் சொல்லி முடித்தார்.


அதுவரை அவர் கூறியது அனைத்தும் கவனமாகக் கேட்டிருந்த பொன்னுவும், "சாந்திமா..." என்று தயக்கமாக அழைத்து, "உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு டாக்டர் சொல்லிருக்காரு. பூரி பொங்கல்லாம் சாப்பிட்டா சேராதுல்லமா. உங்களுக்கு மட்டும் ஓட்ஸ் கஞ்சி வைக்கட்டுமா?" என்று அக்கறையாகவே வினவினார்.


ஆனால் பதிலுக்கு அவரை முறைத்த சாந்திமதியோ, "உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன் பொன்னு. உன் எல்லையைத் தாண்டி பேசாதன்னு. நான் எப்போ என்ன  சாப்பிடணும்னு நீ சொல்ல தேவை இல்லை. போ போய் நான் சொன்னதை மட்டும் செய்" என்று  அனுப்பி வைத்தவர், "ச்சை இதுக்குத்தான் சொந்தக்காரவங்களை எல்லாம் வேலைக்கு வைக்க வேணாம்னு தலபால அடிச்சுகிட்டேன். எங்க கேட்டாரு அந்த மனுஷன்" என்று தன் கணவனையும் திட்டிக் கொண்டார்.


அதைக்கேட்டு வாடிய முகத்தோடு சென்ற பொன்னம்மாள், சில நிமிடங்களில் தயாரித்து எடுத்து வந்து பில்டர் காபியையும் வாங்கிக் கொண்டவர், "ம்ம்ம் மலமலன்னு வேலை ஆகட்டும்" என்று கட்டளையும் இட்டுவிட்டு இப்பொழுது அங்கிருந்த மின் தூக்கியின் வழியாக மீண்டும் தன் அறையை அடைந்து இருந்தார்.


தனக்கும் கணவனுக்கும் ஆன காபியை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவர், கணவனையும் எழுப்பி விட்டு குளித்து முடித்து வேறு ஒரு பட்டுப்புடவையும், அலங்காரமுமாக ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் தரை தளத்திற்குச் செல்ல, அவர் கூறிச் சென்ற வேலைகள் எல்லாம் கச்சிதமாக முடிந்து இருந்தது.


அதில் பணியாட்களை மிடுக்காக ஒரு பார்வை பார்த்துக் கொண்டவர், பொன்னம்மாள் பறித்து வைத்திருந்த பூக்களை எடுத்துச் சென்று காலை பூஜையை ஆரம்பிக்க, அதற்காகவே காத்து இருந்த ராமகிருஷ்ணனும் பயபக்தியாக கண்களை மூடி கடவுளின் முன்னால் நின்று கொண்டார்.


மனிதருக்கு கடவுள் பக்தி சற்றே அதிகம்.


கணவனுக்காகவே நாள் தவறாது பூஜை செய்து விடும் சாந்திமதி பத்து நிமிடத்தில் பூஜையை முடித்தவர் வீடு முழுதும் ஆரத்தி காட்டி விட்டு கணவனுக்கு மட்டும் விபூதி குங்குமம் கொடுத்தவர், அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாட்களின் பக்திப் பார்வையை உணர்ந்தும், உணராதவர் போல் பூஜை அறையை மூடி வைத்தார்.


அவர் வீட்டு திருநீரை இட்டுக் கொள்ளக் கூட அந்த ஏழை மக்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லாமல் சொல்லியது அவரின் செயல்.


மனைவியின் அந்தச் செயலில் ராமகிருஷ்ணனுக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்றாலும், கடந்த முப்பந்தைந்து வருட திருமண வாழ்வில் அவரை நன்றாக புரிந்து கொண்டவருக்கு அவரின் அந்த குணத்தை மாற்றும் வழிதான் இம்மியும் தெரிந்திருக்கவில்லை.


இறைவன் பூஜை அறையில் மட்டுமே இருப்பதாக எண்ணம் கொண்ட சாந்திமதி பூஜை முடித்து ஹால்  சோபாவில் வந்து அமர, மனைவியை ஒட்டியவாறு அவர் பக்கத்திலே வந்தமர்ந்தவர், "இன்னிக்காச்சும் பசங்களை எல்லாம் கொஞ்சம் வெள்ளன எந்திரிக்க சொல்லக் கூடாதா மதிமா?" என்றார் ராமகிருஷ்ணன். வெயில் வந்தும் வெறுமையாக இருந்த வீட்டைப் பார்த்தவாறே.


அதற்கு சிறு சலிப்போடு கணவரைப் பார்த்த சாந்திமதியும், "வெள்ளன எந்திரிச்சி எங்க கூலி வேலைக்கா போகப் போகுதுக?. மாமாவும்,  நீங்களும் சேர்த்து வைச்ச சொத்தே கணக்கில்லாம இருக்குது. போதாதுக்கு அகத்தியும் அதை பல மடங்கு பெருக்கிருக்கான். அப்றம் எதுக்கு எல்லாரும் வெள்ளன எந்திரிக்கணும்?" என்றார் சாந்திமதி.


அளவுக்கு அதிகமான பணமிருந்தால் சோம்பேறித்தனம் கூட தவறில்லை போல. அவரைப் பொறுத்தவரை.


அவர் இப்படித்தான் பதில் கூறுவார் என்று தெரிந்தும் கேள்வி கேட்ட தன்னைத் தானே நொந்து கொண்டவர், "சரிமா... நான் அப்டியே காலார நடந்துட்டு வர்றேன். பசிச்சா நீ சாப்பிட்டுடு. எனக்காக வெயிட் பண்ணாத" என்று சொல்லிவிட்டு எழ முயன்றார்.


அதில் ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டவரும், "நான் உண்மையை தானே சொன்னேன். உடனே பேச்சை கட் பண்ணிட்டு கிளம்பிடுவீங்களே. அகத்தி மேரேஜ் பத்தி பேசணும்ணு நேத்தே சொன்னேன்ல" என்று கணவரின் கரத்தைப் பற்றி அமர வைக்க,


"குட் மார்னிங் ப்பா. ஹாய்... மாம்." என்றவாறு மாடிப்படிகளில் தடதடத்து இறங்கினான் அவர்கள் பேச்சின் நாயகன் அகத்தியன் கிருஷ்ணா. நம் கதையின் நாயகனும் தான்.


ராமகிருஷ்ணன் சாந்திமதியின் மூன்றாவது மகன்.


"ஏ கே ஜுவல்லர்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ்" என்றால் சென்னையில் தெரியாதவர்களை, விரல்விட்டே எண்ணி விடுமளவு பிரபலம் வாய்ந்த பாராம்பரியம் மிகுந்த பரம்பரை பணக்காரர்கள் தான் ராமகிருஷ்ணன் சாந்திமதி தம்பதி.


ராமகிருஷ்ணனின் தந்தை கிருஷ்ணய்யர் அந்தக் காலத்திலே நகை வியாபாரம் செய்வதில் சிறந்து விளங்கியவர். வசதியான பின்புலத்தில் இருந்ததால் பெரிய அளவில் முதல் போட்டு உரிய இடத்தில் இருந்து தங்கங்களை வாங்கி வந்து நகை செய்து வியாபாரம் செய்தவரிடம் தரமும், பொருளும் திருப்தியாக இருக்க, மேல் தட்டு மக்கள் பலரும் அவருக்கு வாடிக்கையாளர்கள் ஆகிப் போயினர்.


தந்தையைத் தொடர்ந்து ராமகிருஷ்ணனுக்கும் நகைத் தொழிலே பிடித்தமாகிப் போக, தந்தை சிறிய அளவில் செய்து வந்த தொழிலை சென்னையிலே முக்கியப் பகுதியில் பெரிய அளவில் சோரூம் ஆரம்பித்து விரிவு படுத்தி இருந்தார் ராமகிருஷ்ணன்.


அப்படி அவர் ஆரம்பித்த நகைக் கடைக்கு மூத்த பெண்ணின் திருமணத்திற்கு நகை வாங்க வந்த குடும்பத்தின் இளைய பெண்தான் சாந்திமதி.


இருவருக்கும் பார்த்த உடனே பிடித்துப் போக, அழகு, அந்தஸ்து, ஆடம்பரம் என்று அனைத்திலும் ஒன்று சொன்னார் போல் இருந்தவர்களை வீட்டினரே வாழ்க்கையிலும் இணைத்து இருந்தனர்.


சாந்திமதி பெயரில் மட்டுமே சாந்தியைக் கொண்டவராக இருந்தாலும், அவர் கணவர் ராமகிருஷ்ணன் அமைதியும், அரவணைப்பும், விட்டுக் கொடுத்தலும் மனைவியின் மேல் அளவுக்கதிகமான அன்பும்  கொண்டவராக இருக்க, சொர்க்கத்தின் இருப்பிடமாய் மாறிப் போனது அவர்களின் திருமண வாழ்வு.


அந்த சொர்க்க வாழ்விற்குச் சான்றாக இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் என்று ஐந்து பிள்ளைகள் அவர்களுக்கு வாரிசாகப் பிறந்து இருக்க, முதல் மகள் வானதியை அவர்களைப் போலவே பணமும் பாரம்பரியமும் மிகுந்த ஒன்று விட்ட அத்தை மகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தவர்கள், மகன் காதலிக்கிறேன் என்று கூட்டி வந்த தொழிலதிபர் வீட்டுப் பெண்ணான சித்ரா தேவியை தன் இரண்டாவது மகன் ஆனந்த் கிருஷ்ணாவிற்கு ஜோடி சேர்த்து வைத்திருக்க, இரு ஜோடிகளுக்குமே ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர்.


சாந்திமதியின் நான்காவது பிரசவத்தில் அஜித் கிருஷ்ணாவும், அதற்குப் பின் மூன்று வருட இடைவெளியில் சுகன்யாவும் பிறந்து இருக்க, உடன் பிறப்புக்கள் நால்வருக்கும் இடையில் மூன்றாவதாகப் பிறந்திருந்தான் முத்து மகன் அகத்தியன் கிருஷ்ணா.


ஆறடி என்றும் ஆறடிக்கும் குறைவு என்றும், கணிக்க முடியாத உயரத்தில் அதற்கு ஏற்ற உடற்கட்டோடு, தாயின் களையும், தந்தையின் கம்பீரத்தையும் தனதாக்கிப் பிறந்து வளர்ந்தவன் உண்மைக்குமே அவர்களுக்குக் கிடைத்த முத்துப்பிள்ளை என்று தான் கூற வேண்டும்.


ஆண்களில் மூத்தவன் ஆனந்த் கிருஷ்ணாவாய் இருந்தாலும், ஏனோ அகத்தியன் தலை எடுத்தப் பின்னர் தான் அவர்களின் நகை வியாபாரத் தொழில் வேறொரு பரிணாமத்தை அடைந்து இருந்தது.


விற்பனைப் படிப்போடு விளம்பரப் படிப்பும் சேர்த்தே முடித்து, தங்கள் தொழிலில் கால் பதித்தவன், ஆன்லைன் விற்பனை, சோசியல் மீடியாவில் விளம்பரம் போன்றவைகளையும் பயன்படுத்தி விற்பனையைக் கூட்டி, இன்று மூன்று வருடங்களின் முடிவில் தங்களின் ஏகே ஜுவல்லர்ஸ் நகை மாளிகைக்கு, சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல கிளைகளை தொடங்கி, வீட்டினரோடு அவைகளை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறான்.


அடுத்து அடுத்து என்று ஓடிக்கொண்டே இருப்பவன், தங்கள் தொழில் வெறும் நகை விற்பனையோடு நின்றிருப்பது போதாது ஜவுளி உற்பத்தியிலும் கால் பதிக்கத் தொடங்கி இருக்க, பணமும், படிப்பும், புத்திசாலித் தனமும் சுறுசுறுப்பும் கொண்டவனுக்கு தொட்டதில் எல்லாம் ஏகாந்தம் அவன் வசம் தான்..


ஆடவனின் சொந்த வாழ்விலும் அவனிடம் சேருமா அவ்வேகாந்தம்?????


அப்பொழுது தான் உறங்கி எழுந்தான் என்று சொன்னால் நம்ப இயலாத அளவு உற்சாகம் வழிந்தோடும் குரலில் காலை வணக்கம் கூறியபடி, ஜாக்கிங் சூட்டிலும் கூட ஒரு அரசக் குமாரனின் ஈர்ப்போடு தங்களை நெருங்கி வந்த மகனையே என்றும் போல் இன்றும் பெருமையாகப் பார்த்த சாந்திமதி கணவனோடு இணைந்தே அவனுக்கு காலை வணக்கத்தினை உரைக்க, "என்னவாம்... ரெண்டு பேருக்கும். காலையிலே ரொமான்ஸ் போல?" என்று பெற்றோரின் இணைந்திருந்த கரங்களைப் பார்த்துச் சிரித்தபடி அன்னையின் அருகில் சென்று அமர்ந்தான் அகத்தியன்.


"சேட்டைப் பையா... ரொமான்சும் இல்லை ஒன்னுமில்லை. உன் மேரேஜ் விஷயம் தான் பேசிட்டு  இருக்கோம்" என்று சிரித்த சாந்திமதியும், "இரு கண்ணா எனர்ஜி ட்ரிங்க் எடுத்துட்டு வர்றேன். குடிச்சிட்டு அப்றம் ஜாக்கிங் போவியாம்" என்று எழும்ப முயன்றார்.


தன் திருமணப் பேச்சை கண்டும் காணாது ஒதுக்கியவன், தாயின் கரத்தைப் பற்றி அமர வைத்து விட்டு, "லவ் பேர்ட்ஸ் ரெண்டு பேரும் ரொமான்ஸை கன்ட்னியூ பண்ணுங்க. இங்க பக்கத்துல தான் போறேன். வந்து குடிச்சிக்கறேன். பாய் டாட்" என்று சிறு கண்ணடித்தலோடு வெளியேறிச் சென்று விட...


"இனிமேல் ஹால்ல பொண்டாட்டி பக்கத்துல உக்காந்து பேசக் கூட முடியாது போல." என்று மனைவியிடம் சோகமாய்ச் சொல்லிய ராமகிருஷ்ணனும் நடைப்பயிற்சிக்குக் கிளம்பி இருந்தார்.


சரியாக அரைமணி நேரம் கழித்து ஜாக்கிங் முடித்த அகத்தியன் வீட்டிற்குள் வந்த வேளை அவனுக்காகக் காத்திருந்த சாந்திமதியும், "இப்பவாவது இதைக் குடிச்சிடு கண்ணா" என்று ஒரு தம்ளரை நீட்டியவர், "தேங்க்ஸ் மா" என்று அதை வாங்கி அருந்தி முடித்த மகனின் மீசை மறைத்த உதடுகளையும் தன் சேலைத் தலைப்பால் துடைத்து விட்டார்.


பின் அவன் குளித்துவிட்டு வருவதாய்க் கூறி அவன் அறை நோக்கிச் சென்றுவிட, மின்தூக்கியில் அவனைப் பின் தொடர்ந்து சென்றவரும், "மாம்... உங்க சன் இன்னும் லிட்டில் சாம்ப் இல்லை. ஐம் 27 இயர்ஸ் ஓல்ட்" என்ற மகனின் கூற்றையும் பொருட்படுத்தாதவராய் அவனுக்கு வேண்டியவை எல்லாம் செய்து கொடுத்தவர், "பசங்க எவ்ளோ பெருசானாலும் அம்மாக்கு சின்ன பசங்க தான் கண்ணா" என்று அவனுக்கு குளியலில் முதுகும் தேய்த்து விட்டே கீழ்தளம் வந்தார்.


ஆனந்த் கிருஷ்ணா பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு சாந்திமதியின் வயிற்றில் உதித்த அகத்தியன் குறை மாதத்தில் பிறந்து பதினைந்து நாட்கள் இங்குபெட்டரிலே இருந்து சிறு போராட்டத்திற்குப் பிறகு தங்கிய பிள்ளை என்பதாலோ என்னவோ மற்ற பிள்ளைகளை விட சாந்திமதிக்கு அவன் மேல் எப்பொழுதும் சற்றே கூடுதலான பாசம் தான். விவரம் தெரிந்த நாளிலிருந்து அன்னையின் அளவில்லாத அன்பை அனுபவித்து வரும் மகனுக்கும் அன்னை என்றால் அத்தனை உயிர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக