ஏகாந்தம் 1. 2

மகன் தேவைகளை முடித்துவிட்டு கீழே வந்தவர் தன் வீட்டுப் பணியாளர்களுக்கு அடுத்த கட்ட வேலைகளைச் சொல்லி, அவர்கள் எடுத்து வைத்த காலை உணவினையும் திருப்தியாகப் பார்த்துக் கொள்ள, அடுத்த ஒரு மணி நேர முடிவில் அகத்தியனைத் தொடர்ந்து அவனுக்கு மூத்தவனான ஆனந்தின் குடும்பமும் உணவு மேஜைக்கு வந்து சேர, வெளியே சென்று இருந்த ராமகிருஷ்ணனும் வீட்டிற்குள் நுழைந்தார்.


கடைக்குட்டிகளான அஜித்தும், சுகன்யாவும் இன்னும் எழும்பிய அரவமே இல்லாது இருக்க, அஜயின் குட்டி வாண்டுகளோடு மற்றயவர்கள் மட்டும் ஒன்றாக இணைந்து காலை உணவை உண்டு முடிக்க,
"ப்பா..." என்று தந்தையை அழைத்த ஆனந்த் மனைவி மக்களோடு ஒரு வாரம் மாமனார் வீடு செல்வதாக அறிவித்தான்.


ஆம் அறிவிப்புத்தான்.


அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தாலும், பணத்திற்கும் பகட்டிற்கும் அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் இடத்தில் அனைவரும் தனித்தனித் தீவுகள் தான்.


ஆனந்தின் அந்தக் கூற்றில் ராமகிருஷ்ணன் மட்டுமல்லாது அகத்தியனும் தன் அண்ணனை அதிருப்தியாகப் பார்த்து இருக்க,
"இன்னிக்கு நம்ம தாம்பரம் பிரான்ச்கு ஆளுங்கச்சி எம் பி மகளோட மேரேஜ்க்கு ஜ்வெல் கலேக்சன் பாக்க வர்றதாவும் நாம கூடவே இருக்கணும்னு சொன்னியேப்பா. இப்போ இப்டி சொல்ற?" என்று வினவினார் ராமகிருஷ்ணன். இளைய மகனின் பார்வைக்குமாய் சேர்த்து.


அது ஆனந்திற்க்குமே தெரிந்து இருந்தாலும் இக்கணம் மனைவியின் பேச்சை நிராகரிக்க வழி இல்லாது தந்தையின் புறம் திரும்பியவன், "அதுக்கு, அகத்தியை வச்சு மேனேஜ் பண்ணிக்கோங்கப்பா. நாங்க சுயரா இப்போ போகணும்" என்றான் ஆனந்த்.


"அப்போ தி நகர் பிரான்ச்ச அம்போன்னு விட்டுடலாமா?" என்ற தந்தை அதிருப்தியாக அமர்ந்து கொள்ள...


"சித்ரா என்ன இது? இப்டி சொல்லாம கொள்ளாம திடு திப்புன்னு கிளம்புனா அகத்தி எப்டி ஒத்தையா சமாளிப்பான்? நீ வேணா இன்னொரு நாள் அம்மா வீட்டுக்குப் போயேன்" என்று மருமகளிடம் சென்றார் சாந்திமதி.


"இதென்ன வம்பா போச்சுத்தை. சமாளிக்க முடியாதவரு இத்தனை கடை எதுக்கு திறந்தாரு?" என்றவள், "இதுபோல சில்லி ரீசனுக்கு எல்லாம் நான் என் பிளானை மாத்த முடியாது." என்றாள்.


தன் கணவனால் சாதிக்க இயலாததை கொழுந்தன் சாதித்துக் கொண்டு இருப்பதில் சற்றே பொறாமையும் உண்டு போலும்.


மருமகளின் அந்தப் பேச்சில், "என்ன சித்ரா... இப்டி பேசுற. இத்தனை பிரான்ச் என்ன அவன் தனக்குன்னு சொந்தமாவா திறந்துருக்கான். எல்லா கடை வருமானத்திலும் எல்லாருக்கும் சேர் ஒதுக்கிட்டு தானே இருக்கு" என்று சாந்திமதி சற்றே குரல் உயர்த்திச் சொல்ல...


"அதுக்காக... நாங்க இருப்பத்தி நாலு மணி நேரமும் அந்த கடையையே கட்டிட்டு அழணுமா? எங்களுக்குன்னு வேற வேலையே இருக்காதா?" என்று அவளும் பதிலுக்குப் பேசினாள்.


"இப்போ போறது பிரச்சனை இல்ல. முன் கூட்டியே சொல்லி இருந்தா அதுக்கு ஏத்த போல  பிளான் பண்ணிருப்பான்ல அகத்தி" என்று சாந்திமதியும் கண்டனக் குரலில் கூற...


"ம்ம்மா... விடுங்க" என்று அவரைத் தடுத்த அகத்தியனும், "அண்ணா அண்ணி போகட்டும்மா. ஐ வில் மேனேஜ்" என்றவன், தன்னைப் பார்த்து சிரித்த அண்ணனின் பிள்ளைகளையும் தூக்கிக் கொஞ்சிவிட்டு அண்ணன் குடும்பத்தை சந்தோசமாகவே அனுப்பி வைத்தான்.


இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி அவ்வீட்டில் நிகழ்வது தான் என்றாலும், இப்பொழுது ஏகே குழுமத்தில் தொழில்களின் எண்ணிக்கை கூடிவிட்ட நிலையில் அகத்தியன் தான் அதிகமான திண்டாட்டத்திற்கு உள்ளானான்.


இருந்தும் அண்ணன் மனைவியிடம் கூட தன் அன்னை தனக்காக இறங்கிப் போவது தாளாது அப்பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்திருந்தான்.


கூடவே தன்னால் இயன்ற அளவு உறவுகளுக்குள் எந்த பிரச்சனையும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள முயலுபவன், தன்னையே பார்த்திருந்த தாயிடம், "நத்திங் மா" என்றும் கண்சிமிட்டிச் சிரித்துக் கொள்ள...


"ராஜமாதா...ஆ... ஆ... இந்த மங்கிகிட்ட இருந்து என்ன காப்பாத்துங்க" என்று கத்தியபடி மேல் தளத்தில் இருந்து படிக்கட்டின் கைபிடி வழியாக சரிகிக் கொண்டு கீழ் இறங்கினான் அவ்வீட்டின் செல்லப்பிள்ளை அஜித் கிருஷ்ணா.


பார்ப்பதற்கு இளம் வயது அஜித் போல இல்லை என்றாலும், ஓரளவு அதர்வா போல ஜில்லென்று இருந்தவனை, "நல்லா ஸ்லீப் பண்ணிட்டு இருக்கவ மேல தண்ணி ஊத்துனது போதாதுன்னு மங்கின்னு வேற சொல்றியா? இருடா உன்ன" என்று அவன் தங்கை சுகன்யா துரத்திக் கொண்டு வர...


அவனோ, "தாய்க்குலமே காப்பாத்து, டாடி ப்ளீஸ் சேவ் யுவர் சன்" என்று ஹாலைச் சுற்றி ஓடியவன், அகத்தியைக் கண்டவுடன், "ண்ணா... இந்த ஸ்மால் சைஸ் அணகோண்டாவைப் பிடிங்க ப்ளீஸ். மணி பத்தாச்சே. பாவம் சாப்பாட்டு ராமி டிபன் கூட சாப்பிடாம தூங்குறாளேன்னு கொஞ்சமே கொஞ்சம் தண்ணி ஊத்தி எழுப்பி விட்டேன். இது தப்பா?" என்று அகத்தியனின் பின்னே சென்று ஒளிந்து கொள்ள...


"அரை பக்கெட் தண்ணி ஊத்தி என்ன பெட்லயே குளிப்பாட்டி விட்டு, கொஞ்சமே கொஞ்சமா. உன்ன என்ன பண்றேன் பாரு" என்று அங்கிருந்த பொருள்களை எடுத்து அவன் மீது வீசினாள் சுகன்யா.


நடுவில் அகத்தியனை வைத்துக் கொண்டு இருவரும் நாயே பேயே என்று சண்டையிடத் தொடங்கியவர்களின் வழக்கமான அக்கப்போரில் அவர்களின் பெற்றோரோ, 'இதுகளோடு தினைக்கும் இதே ரோதனையா போச்சே' என்று ஆயாசமாக அமர்ந்து விட...


தம்பி தங்கையின் சண்டையில் சிறிதாக சிரித்துக் கொண்டவனோ, "ஆக மொத்தம் ரெண்டு பேருக்குமே மனுசனா இருக்க ஆசை இல்லியா?" என்றவன், "இன்னும் ஹாஃபனவர்ல ரெண்டு பேரும் பிரஷப் ஆகிட்டு பிரேக்பாஸ்ட் முடிக்கலைன்னா இந்த மந்த் பாக்கெட் மணி கட்" என்று அறிவித்தான் அகத்தியன்.


அதில் அடித்துப் பிடித்து ஓடியவர்கள் அடுத்த இருபது நிமிடத்தில் குளித்து முடித்து வந்து காலை உணவையும் ஒரு கை பார்த்திருக்க, மடிக்கணினியும் கையுமாக அகத்தியனும் கடைகளுக்குச் செல்ல ஆயத்தமாகி வந்திருந்தான்.


தினமும் பாடம் எடுக்கும் தந்தையின் அறிவுரைகளால் கூட சாதிக்க இயலாததை அண்ணன் கூறிய பாக்கெட் மணி சிறப்பாகவே செய்திருக்க, வேகவேகமாக உணவை முடித்த சுகன்யா, "ண்ணா... இந்த மாசம் ஒரு டொன்ட்டீ தவ்ஸண்ட் அதிகமா போட்டு விடுங்கண்ணா. பிரண்ட்சோட பார்ட்டி இருக்கு" என்றாள் அண்ணனைப் பார்த்துச் சிரித்து.


"ஃபிரண்ட்சோட வெட்டியா ஊர் சுத்துறதுக்கு எதுக்குடி அவ்ளோ பணம். மாசம் முப்பதாயிரம் போதாதா உனக்கு" என்று அஜித் அவள் தலையில் ஒரு குட்டு வைக்க...


"ஆமா நாங்க பிரண்ட்ஸோட வெட்டியா சுத்துறோம் இவரு பில்கேட்ஸ்க்கு பி ஏ வேலை பார்க்கறாரு. போடா வி ஐ பி" என்று அவனைத் துரத்திச் சென்று பதிலுக்கு குட்டியவளும், "ம்மா பாருங்கம்மா இவனை." என்று அன்னையிடம் சிணுங்க...


 "படிக்கிற புள்ளைக்கு எதுக்குமா அவ்ளோ பணம். இப்பவே என்ன பார்ட்டி?" என்றார். மகளை ஏறிட்டார் ராமகிருஷ்ணன்.


'இவருகிட்ட பிடிக்காததே இது ஒன்னு தான். கோடி கோடியா சம்பாரிச்சு வச்சுருக்காரு. ஆனா இருபதாயர ரூவாக்கி மககிட்ட கணக்கு கேக்குறாரு' என்று நொடித்த சாந்திமதி, "காலேஜ் போற புள்ளைக்கு ஆயிரம் செலவு இருக்கும். இதுக்கெல்லாம் கணக்கு கேப்பாங்களா? இப்ப ஜாலியா இல்லாம வேற எப்போ என்ஜாய் பண்றது?. நீ அனுப்பி விடுப்பா" என்று கணவனிடம் தொடங்கி மகனிடம் முடித்தவர் செல்ல மகளுக்கு ஒரு முத்தத்தையும் தந்து பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.


அதைப்பார்த்தபடி, "ராஜமாதா..." என்று அன்னையை நெருங்கிய அஜித் கிருஷ்ணாவும், "அப்டியே எனக்கும் ஒரு பிப்ட்டி தௌஸண்ட் ரெகமன்ட் பண்றது" என்று அவர் காதோரம் கிசுகிசுக்க...


"பிப்ட்டிலாம் அப்றம் கொடுக்கலாம். நீ மொதோ கடைக்கி வந்து தொழிலை கத்துக்கற வழியைப் பாரு" என்றார் ராமகிருஷ்ணன்.


அதில், "ஆத்தாடி ஆத்தா... ஒரு ஐம்பதாயிரம் கேட்டதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா? இதுக்கு நான் ஐடி கம்பெனிக்கே வேலைக்கு போயிருவனே" என்று நெஞ்சில் கை வைத்தவன், சகோதரனைப் பாவமாகப் பார்க்க...


அதில் பக்கென்று சிரித்து விட்டவனும், "இருக்கட்டும்ப்பா. இப்போதானே பி ஜி பண்ணிருக்கான். கொஞ்ச நாள் ஃப்ரீயா என்ஜாய் பண்ணட்டும். ஐ வில் மேனேஜ்ப்பா" என்று தம்பியின் வயிற்றில் தேனை வார்த்தவன் அன்னையிடமும் கூறிவிட்டு கைப்பையோடு வெளியேறினான் அகத்தியன்.


நினைவு தெரிந்த நாளில் இருந்தே அண்ணனின் இதுபோன்ற அனுசரனையில் அகம் மகிழ்ந்து போனவனும் என்ன நினைத்தானோ,
"ஓகே ண்ணா. ஒரு த்ரீ மந்த்ஸ் உன்னோட நம்ம பிஸ்னஸ்சை பாக்கறேன். ஆனா பிடிச்சா தான் கண்டினியூ பண்ணுவேன்." என்றவன் அகத்தியனோடு இணைந்தே மகிழுந்தில் ஏறிக் கொள்ள...


அங்கோ தோட்டப்பகுதியில் ஒரு மரத்தின் பின்னே இருந்து அழுது கொண்டே ஓடி வந்தாள் அவர்கள் வீட்டுப் பணியாள் வள்ளி.


அதைப் பார்த்ததும் இருவரும் மகிழுந்தை விட்டுக் கீழே இறங்கி என்னவென்று விசாரிக்க...


அவள் பின்னோடு வந்த அவர்கள் வீட்டு மேனேஜரைக் கை காட்டி அவன் தன்னிடம் தப்பாக நடக்க முயன்றதாகக் கூறினாள் வள்ளி.


அதில் பல்லைக் கடித்த அகத்தியனோ, "யூ ஸ்கௌண்டர்ஸ்" என்று அவனை அடிப்பதற்குப் பாய...


அவனோ, "சார் சார்... அந்தப்பொண்ணு பொய் சொல்லுது சார். நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தவனைக் கூப்பிட்டு போய், இந்த மாசத்துல இருந்து பெரியம்மாட்ட சொல்லி சம்பளம் சேர்த்து வாங்கிக் கொடுங்கன்னு என்ன இங்க தடவுது சார்" என்று நெஞ்சை தொட்டுக் காட்டியவனின் பேச்சில், "அய்யோ அய்யோ பொய் சார். நான் அப்டியாப்பட்ட பொண்ணு இல்லை சார்" என்று அகத்தியனிடம் அழுது அரற்றினாள் வள்ளி.


ஏனோ அகத்தியனிற்கு வள்ளியின் அழுகையில் உண்மை இருப்பது போல் தோன்ற, "கூட வேலை செய்ற பொம்பள பிள்ளை கிட்ட தப்பா நடந்ததுமில்லாம, என்கிட்டயே பொய் வேற சொல்றியா?" என்று அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட...


அதற்குள் சப்தம் கேட்டு அங்கே வந்துவிட்டிருந்த சாந்திமதியோ என்னவென்று விசாரித்தவர், "இவளைப் போல அன்னாடங்காச்சிங்க பேச்சை நம்பிகிட்டு நம்ம மேனேஜரப் போய் அடிச்சுட்டியே தம்பி. நாலு வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கிறவதான செஞ்சாலும் செஞ்சிருப்பா" என்று வள்ளியை முறைத்தவர், "இங்க பாரு வள்ளி தொடர்ந்து இங்க வேலை பாக்கணும்னா ஒழுக்கத்தை உயிரா மதிக்கணும். காசுக்காக இப்டி அழைஞ்சிட்டி இருந்தா சீட்டை கிழிச்சி அனுப்பி விட்டுருவேன்" என்று அவள் செய்யாத தவறை நேரிலே பார்த்தவர் போல் பேசிக்கொண்டே சென்றவர், "அந்த தம்பியை விடு அகத்தி. உள்ள போய் கணக்கை பாக்கட்டும்" என்று மேனேஜரையும் போகக் கூறினார்.


இல்லாதவர்கள் என்றால் அத்தனை இளக்காரம் சாந்திமதிக்கு.


சாந்திமதியின் பேச்சில் கூனிக் கூறுகிப் போய் வீட்டிற்குள் ஓடிய வள்ளியையே பார்த்து இருந்த அகத்தியனுக்கு தாயின் அந்தச் செயல் சற்றே உறுத்தினாலும் அன்னையின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுப் பழக்கப்பட்டவன் பொங்கி வந்த சினத்தை அடக்கியபடியே அந்த மேனேஜரையும் ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டவன், "ம்மா..." என்று ஏதோ கூற வந்த தம்பியையும் இழுத்துச் சென்று மகிழுந்தில் ஏறினான்.


அவனுக்கு சிறிதும் குறையாத சினத்தோடே அவனருகில் ஏறி அமர்ந்த அஜித்தும், "ண்ணா நீங்க செஞ்சது உங்களுக்கே நல்லா இருக்கா? அம்மாதான் ஏதோ புரியாம பேசினாங்கன்னா நீங்களும் அந்த மேனேஜரரை எதுவும் செய்யாம விட்டுட்டீங்களே? உங்களுக்கே தப்பு யாரு மேலன்னு தெரியுது தானே?" என்று ஆதங்கமாகக் கேட்க...


"நீ என்ன பேசுற அஜி?. தப்பு யாரு மேல இருந்தாலும் அம்மா பேச்சை மீறி நான் எப்டி மேனேஜரை பனிஷ் பண்ண முடியும். அம்மா எது செஞ்சாலும் சரியாதான் இருக்கும். இந்த பேச்சை இத்தோட விடு" என்றான் சற்றே கண்டிப்பான குரலில்.


அதைக்கேட்டு அவனை அதிர்ச்சியாகப் பார்த்த அஜித்தும்,
"நீங்க இதே மைண்ட் செட்டோட இருந்தா ரொம்ப கஷ்டம் ணா. அம்மா மேல பாசம் இருக்க வேண்டியதான். அதுக்காக இப்டியா?" என்றவன்,  "என்னோட பியூச்சர் அண்ணி ரொம்பப் பாவம்" என்றும் சேர்த்துச் சொல்ல...


அதைக்கேட்டு, "ஹா ஹா ஹா..." என்று சிரித்துக் கொண்டவன், "எனக்கு வரப்போற ஒயிஃப் என் அம்மாக்கு பிடிச்ச பொண்ணா இருந்தா  எனக்கும் பிடிச்சவளா இருப்பா அஜி. தட்ஸ் இட்." என்று மட்டும் கூறியவன் இன்னும் சிறிதொரு நாளில் சந்திக்கவிருக்கும் பெண்ணைப் பற்றி அறியாமலே தங்கள் நகை மாளிகையை நோக்கி மகிழுந்தைச் செலுத்த துவங்கினான் அகத்தியன் கிருஷ்ணா.


Comments

Post a Comment

Popular posts from this blog

அகத்தை அடைக்காதே அசுரதேவா

ஏகாந்தம் எனதாக